அமெரி. ராஜாங்க செயலாளர் திணைக்களம்:எமது படைவீரர்கள் குறித்து தெரிவித்த கூற்றை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது
உண்மையை கூறியமைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
அமெரிக்க ராஜாங்க செயலாளர் திணைக்களம் எமது படை வீரர்களுக்கு எதிராக தெரிவித்த கூற்றுக்களில் உண்மையில்லையென்பதை அத்திணைக்களமே ஏற்றுக்கொண் டுள்ளது.
தவறை சரி செய்து உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளமைக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள குறிப்பில் தமது தவறை நிவர்த்தி செய்துள்ளதுடன் எமது படை வீரர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமைக்கான பின்னணி அல்லது நிலைமைகள் தொடர்பாகத் தம்மிடம் எவ்வித தகவல்களும் இல்லையென்ப தையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அக்குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாகவும் மேற்படி திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தம்மால் இடம்பெற்றுள்ள தவறை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று காலிநகர் சமனல விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, ரிசாட் பதியூதீன், திஸ்ஸ விதாரண, பியசேன கமகே உட்பட அமைச்சர்கள், மாகாண முதல்வர்கள், ஆளுநர்கள், தென் மாகாண சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
எந்தவகையான பொறுப்புக்கள் எமக்கிருந்தபோதும் தென் மாகாண சபைக்கென பலமான மாகாண சபையொன்றை நிறுவுவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியுள்ளது. பலமுள்ள பாராளுமன்றம் அமைவதையும் பலமான மாகாண சபைகள் அமைவதையும் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சி விரும்பியதில்லை. பணத்தைக் கொடுத்து அரசியல் இலாபத்திற்காகவே அக்கட்சி சூழ்ச்சிகளை மேற்கொண்டது. எல்லாக் காலங்களிலும் இதை எம்மால் காணமுடிகிறது.
இது சர்வதேச சமூகம் இலங்கையை அவதானிக்கும் காலகட்டமாகும். தென் மாகாண சபைத் தேர்தலின் வெற்றி இத்தருணத்தில் முக்கியம் வாய்ந்ததாகும். 85 வீத மேலதிக வாக்குகளால் நாம் தென் மாகாண சபையில் வெற்றிபெறவேண்டும். அந்த நம்பிக்கை எமக்குண்டு.
காலி மாவட்டம் எமது அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத மாவட்டமாகும். அமரசிறி தொடங்கொட முதலமைச்சரான காலம் நினைவில் உள்ளது.
ரிச்சர்ட் பத்திரண போன்றோரின் செயற்பாடுகள் நாம் மறக்க முடியாதவை. அமரசிறி தொடங்கொட முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்வதைத் தடை செய்யவும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாம் போராடியே அதனை வெற்றிகொண்டோம்.
அரசாங்கம் தென் மாகாணத்தில் பல பாரிய அபிவிருத்திகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. எனக்குக் கீழ் உள்ள ஒரு அமைச்சினால் மட்டும் காலி மாவட்ட அபிவிருத்திக்காக ஒரு வருடத்தில் 328 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாதவாறு அமைச்சுக்கள் பல இப்பகுதியில் தமது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
எதிர்வரும் 10ம் திகதி தென் மாகாண மக்கள் வெற்றிலையை 85 வீத மேலதிக வாக்குகளால் வெற்றிபெறச் செய்து எமது பலத்தை சர்வதேசத்திற்கு நிரூபிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நேற்றைய இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னால் பத்தேகம பாராளுமன்ற உறுப்பினர் சேபால அக்குறுகொட அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதுடன் ஜனாதிபதியைச் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Thinakaran






0 விமர்சனங்கள்:
Post a Comment