தமிழ் ஊடகங்கள் ‘மூளி அலங்காரப் பந்தல்’ கட்டுவதை நிறுத்த வேண்டும்-
இன்று தமிழ் மக்கள் மிகவும் இக்கட்டானதும், துன்பகரமானதுமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கையில், இந்திய நாடாளுமன்ற குழுவினர் உண்மை நிலையை கண்டறிய இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
மேலும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வுமாகும். இங்கு இத்தகையவொரு நேரடியான பிரசன்னம் தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் என்ன கூறுகிறார்கள,; சிங்கள மக்கள் என்ன கூறுகிறார்கள,; தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நேரடியாக அறிவதற்கான வாய்ப்புமாகும்.
இதுவரை இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்நாட்டின் தலைவர்களுக்கும் இடையே ஒரு புரிதல், பரிச்சயம் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பற்றி ஒரு தேவையில்லாத அச்சம் சிங்கள மக்கள் மத்தியிலும் காணப்பட்டது. அந்த அச்சம் நீங்குவதற்கும் இந்த விஜயம் ஒரு பங்களிப்பு செய்ய முடியும். இலங்கை தமிழ் தரப்பினருடனும், அரசுடனும் பேசி தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் இந்த விஜயம் உதவலாம்.
இந்த ஒரு தடவை என்றில்லாமல் அடிக்கடி தமிழக தலைவர்களின் பல்வேறு தரப்பினரும் இங்கு விஜயம் செய்து உறவுகளை பலப்படுத்த முடியும்.
எப்போதும் தவறான புரிதல்களும் தேவையில்லாத சந்தேகங்களுமே பாரிய பிரச்சினைகளுக்கு வித்திடுகின்றன.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வவுனியாவில் உள்ள முகாம்களில் சொல்லொணா வேதனைகளுடனும், இழப்புக்களுடனும் துன்பங்களுடனும் வாழும் மக்களை நேரடியாக கண்டு பேசி அவர்களை சொந்த இடங்களில் குடியேறுவதற்கு வழிசமைப்பதற்கு முயல்கிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
அடுத்து அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமத்துவமான சகவாழ்வு இங்கு தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட வேண்டுமென அவர்கள் விரும்பியே இங்கு வந்துள்ளார்கள்.
ஒரு பெருமைமிகு ஜனநாயக நாட்டின் அரசியல் தலைவர்கள் என்ற வகையில் அவர்கள் இங்கு தமிழ்,மலையக, முஸ்லீம் மக்களின் பல்வேறு தரப்புப் பிரதிநிதிகளையும் சந்தி;த்து உரையாடியிருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல்கலைக்கழக் மாணவர் பிரிதிநிதிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து மக்களின் நிலைமைகளை கேட்டறிந்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து மக்களுடன் தமது உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் மக்களுடன் உரையாடும் போது முகாம்களில் வாடும் மக்கள் சொந்த ஊர் திரும்புவதற்கும், ஒரு ஜனநாயக சூழல் ஏற்படுவதற்கும,; அதிகாரப் பகிர்வு கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கும் தாம் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவிருப்பதாகவும் ஈழத் தமிழர்களின் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி இடப்படும் என்று உறுதி உரைத்திருக்கிறார்கள்.
வவுனியா ‘மெனிக் பார்ம்’ முகாமிற்கு விஜயம் செய்து அம் மக்களின் துயரக் கதைகளை, அவர்களின் ஆதங்கங்களை அவர்களோடு அமர்ந்து கேட்டறிந்திருக்கிறார்கள்.
மலையகத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகள், தொழில் நிலைமைகளை நேரடியாக அவதானித்திருக்கிறார்கள்.
அவர்களுடைய பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை. அவர்கள் இன்னும் பல்வேறு தரப்பினரை சந்திக்கவிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் வன்னியில், மலையகத்தில் மக்கள் பெரும் ஆர்வத்துடனும், ஆவலுடனும் அவர்களை வரவேற்றார்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் சில பத்திரிகைகள் உள்நோக்கம் கற்பித்தும், கிண்டல் கேலி செய்தும் சில ஆசிரிய தலையங்கங்களை எழுதியிருந்தன.
சமூகப்பொறுப்பற்ற ஊடகப் புலம்பல்
ஒரு பத்திரிகை இந்திய நாடாளுமன்ற குழுவினரின் வருகை உள்நோக்கம் கொண்டதா எனக் கேள்வி எழுப்பியிருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில வட்டாரங்களிலிருந்து அவ்வாறு கூறப்பட்டதாக எழுதியிருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் முன்கூட்டியே பேசி இந்த பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்றவாறெல்லாம் புலம்பியிருந்தது.
பிறிதொரு பத்திரிகையோ முன்னர் லங்காபுரிக்கு அனுமான் வந்தார். இப்போது ஒரு சனீஸ்வரன் வந்திருப்பதாக மிகவும் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும், கண்ணியமில்லாமலும் உளறியிருந்தது.
இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ஆயிரம் மில்லியன் மக்கள் கொண்ட நாட்டின் லட்சக்கணக்கான மக்களால் தெரிவு செய்யப்பட்ட அபிமானம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது இந்த தமிழ் ஊடகங்களின் தற்குறி எழுத்துக்களில் பிரதிபலிக்காதது ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான்.
எப்போதும் இந்தவகை ஊடகங்கள் “வெண்ணெய் திரண்டுவரும் வேளை தாழியை உடைக்கும்” கைங்கரியத்தை செய்து வந்திருக்கின்றன என்பதே உண்மையாகும். மக்களின் நலன்களுக்கு ஆதரவாக, சாதகமாக எப்போதும் இவை செயற்படுவதில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்.
சமூகத்துக்கு எப்போதாவது “அத்தி பூத்தாற் போல்”; நற்காரியம் ஏதும் நடைபெறுமானால் அதனை பஞ்சாக பறக்கச் செய்வதே இவற்றின் கைங்கரியமாக இருக்கும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி, இந்திய அமைதிகாப்புப்படை இங்கு பிரசன்னமாகி, ஒரு அதிகாரப் பகிர்வு கட்டமைப்பு உருவாகும் சூழல் ஏற்பட்ட போது அதனை நிராகரித்து அவ நம்பிக்கை வாதத்தை இந்த சமூகத்தினுள் விதைத்ததும் இத்தகைய ஊடகங்கள்தான்.
ஓவ்வொரு முறையும் ஆக்கபூர்வமான தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அந்த தீர்வு முயற்சிகள் மீது சேற்றைவாரி இறைத்தவையும் இத்தகைய ஊடகங்கள்தான்.
தவிர புலிகள் சகோதர படுகொலைகளை மேற்கொண்டபோது,சகோதர சமூகங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டபோது பாரதத்தின் இளம் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களை படுகொலை செய்தபோது நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த ஜனநாயக விரோத செயல்களை எமது மக்களுக்கும,; இந்தப் பிராந்தியத்திற்கும் பெரும் தீங்கிழைக்கும் கைங்கரியங்களை முன்னின்று நியாயப்படுத்தியவையவையும் இத்தகைய ஊடகங்கள்தான்.
ஏன் இறுதியாக புலிகள், படையினரை தமது பிரதேசத்தினுள்ளே விட்டு அடிக்கப் போகிறார்கள், அதிசயம் நிகழ்த்தப் போகிறார்கள் என்று எழுதி எழுதியே “புளியடி, புளியடி, எவடம் எவடம”; என்று முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டு வந்து ஏராளமான பொது மக்களும், ஏழைபாழைகளின் பிள்ளைகளான எமது சிறுவர் சிறுமியரும் இளைஞர்களும், பெண் பிள்ளைகளும் மரணிப்பதற்கு வழிவகுத்தவையும் இத்தகைய ஊடகங்கள்தான்.
யாரையும் புண்படுத்துவதற்காக இதனை நான் இங்கு கூறவரவில்லை. சமூகத்தில் அவநம்பிக்கையும் நிராகரிப்பு வாதத்தையும் வளர்த்து சமூகத்தின் அழிவுக்கும் தொடர்ந்து பாதை வகுப்பதுதான் இங்கு வேதனை தருகிறது.
‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’; என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைகள்தான் மனக் கண்ணில் நிழலாடுகிறது.
எமது மக்களின் துயரமும் கனவும்
மூன்று தசாப்தங்களாக ஒரு பிரளயம் நடந்து முடிந்திருக்கிறது. ஒரு லட்சம் மக்களின் உயிர்கள் யுத்தப் பிசாசினால் காவு கொள்ளப்பட்டு விட்டன. அதில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண் பிள்ளைகளும் அடக்கம்.
விதவைகளாக 50ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊனமுற்றவர்கள் 40 ஆயிரத்துக்கும் மேல். 2,50,000 இற்கு மேற்பட்ட மக்கள் தடுப்பு முகாம்களில் தமது வீடு திரும்பும் நாளை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து பார்த்திருக்கிறார்கள்.
இதைவிட இடம்பெயர்ந்தும், புலம் பெயர்ந்து சென்ற மக்களில் கணிசமானோர் ஊர் திரும்பும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அநேகமாக நம் எல்லோருடைய வாழ்விலும் இழப்புக்கள் இருக்கின்றன. துயரங்கள் இருக்கின்றன. பிரிவுகள் இருக்கின்றன. மனக்காயங்கள் இருக்கின்றன.
மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஆவலுடன் இருக்கிறார்கள். ஜனநாயக சூழலொன்றை எதிர்பார்க்கிறார்கள். பய பீதியான சூழலிலிருந்து விடுபட விரும்புகிறார்கள்.
தமது பாரம்பரிய வாழ்விடங்களில் தமது விவகாரங்கை தாமே பார்த்துக் கொள்ளுமளவிற்கு அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட்ட நிலையில் இந்த நாட்டினுள் ஐக்கியமாகவும், சமாதானமாகவும் வாழ விரும்புகிறார்கள்.
அந்த வாழ்க்கைக்கான கனவு மெய்ப்பட வேண்டும்!
மனிதர்களின் மகத்தான வாழ்வை மிஞ்சிய எதுவுமில்லை. இப்போது எமது வாழ்வு நேர்த்தியில்லாமல் கிழிந்து கிடக்கிறது.
இந்த வாழ்வு நேர்த்தியாக்கப்பட வேண்டும்.
இந்த நேர்த்தியாக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்திய நாடாளுமன்ற குழுவினரின் வருகையை நாம் கருத முடியும்.
அதுவொரு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைப்பதற்கான ஒரு ஆரம்பமும் ஆகும். ஆனால் எப்போதும் இடிபாடுகளாகவும், துயரங்களாகவும் எமது மக்களின் வாழ்வு தொடர வேண்டும் என்று உள்ளுரிலும், புலம்பெயர் தளத்திலும் சில பிழைப்புவாத சக்திகள் செயற்பட்டு வருகின்றன.
இங்கு மக்களின் வாழ்வு சுதந்திரமானதாகவும், சமத்துவமானதாகவும், சமாதானமானதாகவும் மாறிவிட்டால் தமது பிழைப்பில் மண் விழுந்து விடுமோவென அஞ்சுகின்றனர். தமிழக நாடாளுமன்ற குழுவினரின் வருகை இந்தியாவின் ,தமிழக மக்களின் நல்லியல்பின், நல்லெண்ணத்தின், உறவின் பிரதிபலிப்பாகும். மக்களின் மனக்காயங்களை ஆற்றும் தொடர் நிகழ்ச்சியின் ஓர் அம்சமாகும்.
எப்போதும் மரண ஓலமும், அவல ஓலமும் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் “மூளி அலங்காரப் பந்தல்” மனோ நிலையில் இருந்து எமது ஊடகங்கள் வெளிவர வேண்டும்.
மனித நல்லியல்பையும், மனிதாபிமானத்தையும் நட்பையும் பலப்படுத்தும் ஜனநாயக ஊடகங்கள் அவசியப்படுகின்றன.
ஏனெனில் எமது தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதியினரிடம் ஏகபிரதிநிதித்துவ சிந்தனை மறையவில்லை. அதனை ஏதோவொரு வடிவத்தில் எமது சமூகத்தில் தக்கவைக்க முயல்கின்றன.
நூறு மலர்கள் மலரட்டும்
தி. ஸ்ரீதரன்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
0 விமர்சனங்கள்:
Post a Comment