பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?..
"எல்லோரும் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு இலங்கையில் உள்ள நலன்புரி நிலையங்கள் மிருகக்காட்சிச் சாலைகள் அல்ல" என்று இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியது தமிழகத்திலிருந்து இந்தியத் தூதுக்குழுவினரைப் பொறுத்தவரை சரியானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டு மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து அந்த அவலங்களைப் போக்குவதற்கான எண்ணத்தோடு வந்தவர்கள் போல அவர்களின் செயற்பாடுகள் அமையவில்லை.ஒரு சுற்றுலாப் பயணக் குழுவைப் போலவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேரின் நிகழ்ச்சிநிரலும் அமைந்துள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களின் நம்பிக்கைகள் எல்லாம் புஷ்வாணமாகிப் போயுள்ளன.
முதற்கோணலே முற்றும் கோணல் என்பது போல, இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதலாவது நாள் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த கிழக்கு மாகாண விஜயம் எவ்வித காரணங்களும் கூறப்படாமலேயே இரத்துச் செய்யப்பட்டது. இன்னமும் இதற்குரிய காரணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் தெரிவிக்கப்படவேயில்லை. தமிழ்க் கட்சிகளோடு கலந்துரையாடியதோடு மட்டுமே இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதல்நாள் முடிவடைந்தது.
இரண்டாம் நாளில் (11.10.2009) காலை 8.30 இற்கு யாழ்ப்பாணத்திற்கு இந்திய நாடாளுமன்றக் குழு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவுக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியிருந்த யாழ். பொது நூலக கேட்போர் கூடத்திற்கு 8 மணிக்கு முன்னதாகவே குடாநாட்டின் முக்கியப் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சமூகசேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்போர் சென்று காத்திருக்கத் தொடங்கினர். காத்திருந்து காத்திருந்து விழிகள் பூத்ததுதான் மிச்சம். 10.30 மணிவரையும் நாடாளுமன்றக் குழுவினர் வரவேயில்லை.பொதுநூலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஏராளமான பொதுமக்கள் இதனால் மனம் வெறுத்துப் போய் திரும்பிச் செல்லத் தொடங்கி விட்டனர்.அந்தநேரத்தில் பெரியமனது பண்ணி வானத்தில் ஹெலிகள் வட்டமிட்டு வந்திறங்கின. அதிலிருந்து இந்தியக் குழுவினர் பரபரப்போடு இறங்கினர்.அவர்கள் இறங்கிய வேகத்தைப் பார்த்தபோது அடுத்த நொடியே மக்களின் அவலங்களை தீர்த்துவைத்து விடுவார்கள் போலத் தெரிந்தது! ஆயினும் அணிவகுப்பு மரியாதையோடு உள்நுழைவதில் காட்டிய அவசரமும் அக்கறையும் மக்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதில் அவர்கள் சிறிதள வேனும் காட்டவில்லை.எல்லாம் செய்கிறோம் என்ற ஒற்றைச் சொல் "மந்திரம்".
இந்தியக் குழுவினர் பொது நூலகத்துக்குள் உள்நுழையும் முன்னர் அவர்களைச் சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் கைகூப்பி, கண்ணீர்மல்கி "முகாம்களில் வாடும் எங்கள் உறவுகளை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள். இத்தனை நாளும் நாங்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் போதும். இனியும் அந்த வாழ்வு வேண்டாம்" என்று நெஞ்சுருகும் வகையில் நெகிழ்வுடன் இந்தியக் குழுவினரின் கைகளைப் பற்றியவாறு கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தையேதும் கூற மறந்த இந்தியக் குழுவினரின் முகங்கள் இயந்திரத்தனமாக இறுகியே இருந்தன.அவர்களின் இதயங்கள் மக்களின் அவலமொழி கேட்டு கொஞ்சமேனும் இளகியதாகத் தெரியவில்லை. "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு விடுவிடென்று வரவேற்பு நிகழ்வுக்காக நூலகத்துக்குள் சென்றுவிட்டார்கள்.
நூலகத்துக்குள் இந்தியத் தூதுக்குழுவினரின் வருகையை எதிர்பார்த்து இரண்டரை மணிநேரமாக அங்குள்ளவர்களின் காத்திருப்பு நிகழ்வு ஒருவாறு முடிவுக்கு வந்தது. "பராக்!! பராக்!!! இந்தியக் குழுவினர் வருகிறார்கள்" என்று கட்டியம் சொல்லாத குறைதான். அந்தளவுக்கு அதிகாரத் தோரணையோடு மேடையில் ஏறியமர்ந்தார்கள் அவர்கள்.அதன்பின் இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்து வந்திருந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு உரையாற்ற எழுந்தார்.
"ரைம் ஷார்ட்டா இருக்கிறதனால ஸ்ரைட்டா மேட்டருக்கு வாங்க"
(நேரம் குறைவாக இருப்பதால் நேரடியாக விடயத்துக்கு வாருங்கள் என்பதைத் தான் இப்படித் "தமிழில்" கூறினார்.)
என்று கூறி மக்களை நோக்கி அவர்களது பிரச்சினைகளைத் தனக்குக் கூறுமாறு வேண்டினார். அட! மக்கள் பிரச்சினைகளை அறிவதில் பாலு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாரே என்று அங்குள்ளவர்கள் அடைந்த ஆச்சரியம், மக்கள் பிரச்சினைகளை அவர் கேட்பதில் காட்டிய அசிரத்தையால் இருந்த இடம்தெரியாமல் மறைந்தோடி விட்டது. அங்கு பிரச்சினைகளை எடுத்துரைக்க முற்பட்ட பலரும் நலன்புரிநிலையங்களில் வாடும் மக்களைப் பற்றியும் அவர்களின் விடுவிப்புப் பற்றியுமே அதிகமாகப் பிரஸ்தாபித்தார்கள். மக்கள் எல்லோரும் ஒரே குரலில் இவ்வாறு நலன்புரிநிலைய மக்களைப் பற்றிக் கூறத்தொடங்கியது இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்த ரி.ஆர்.பாலுவுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
இன்றைய எரியும் பிரச்சினை பற்றி அறிய வந்தவர்கள்
மக்களின் மனஆதங்கத்தை அறிந்துகொள்ள விரும்பவில்லையே!
எரியும் பிரச்சனை குறித்து கண்டறிய வந்தவர்களின் போக்கு .....
"இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒரே விஷயத்தையே எல்லோரும் சொல்லாதீங்க. வேறு ஏதாவது சொல்லுங்க" என்று கிளிப் பிள்ளைபோல திரும்பத் திரும்ப சற்று அதிகாரத் தொனியில் அங்கு குழுமியிருந்தவர்களை வேண்டினார்.இப்போது இலங்கைத் தமிழர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய "எரியும் பிரச்சினை" நலன்புரிநிலையங்களில் வாடும் மக்கள்தான். எனவே அவர்கள் அனைவரும் அதைப் பற்றித்தான் அதிகம் பேசமுடியும். நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகளை அறியத்தான் இந்தியக் குழுவே இலங்கைக்கு வந்திருந்தது வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் நலன்புரி நிலைய மக்களைப் பற்றி எல்லோரும் கதைப்பதை ரி.ஆர்.பாலு ஏன் விரும்ப வில்லையென்பது புரியவேயில்லை. அத்துடன் அங்கு நிகழ்ந்த கருத்தாடலை வேறொரு திசைநோக்கி நகர்த்தவே அவர் பெரிதும் விரும்பினார்.
அத்துடன் பலர் தமது கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும்போதே பாலுவால் அதட்டும் தொனியில் அவர்களது கருத்து தொடர்ந்து தெரிவிக்கப்படாது தடுக்கப்பட்டது. வேறு விடயங்களைப் பேசுங்கள் என்று பாலு கூறியதால் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் நிதிப்பிரச்சினை பற்றியும், பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றியும் இப்போதைக்கு அவசரமோ அவசியமோ இல்லாத உப்புச் சப்பற்ற விடயங்களே அதன்பின்னர் அவர்களுக்கு கூறப்பட்டது. நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகள் பற்றி கூறப்பட்டபோது விட்டேத்தித் தனமாக இருந்த இந்தியக் குழுவினர் இத்தகைய சில்லறைப் பிரச்சினைகள் பற்றிக் கூறும்போது மிக அவதானமாக அவற்றைச் செவிமடுத்ததுதான் அன்றைய பெரும் வேடிக்கை!
நூலகத்தில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வு முடிவடைந்த பின்னர், யாழ்.பல்கலைக்கழகத்துக்குச் சென்று பல்கலைக்கழக மாணவர்களைகுறிப்பாக நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதே இந்தியக் குழுவினரின் அடுத்த நிகழ்வாக இருந்தது.ஆயினும் 8.30 மணிக்கு வரவேண்டிய இந்தியக் குழுவினர் ஆடியசைந்து 10.30 மணிக்கே வந்ததால் இந்நிகழ்வில் மாற்றம் செய்யப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பஸ்வண்டிகள் மூலம் நூலகத்துக்குக் ஏற்றி வரப்பட்டனர். அங்கு "இந்தியக் குழுவினர் கேட்போர் கூடத்தில் நடக்கும் வரவேற்பு நிகழ்வு முடிந்தபின்னர் வெளியே வரும்போது வீதியில் நீங்கள் அவர்களைச் சந்திக்கலாம்" என்று மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பத்துப்பத்து மாணவர்களாக உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர். இதனால் இந்தியக் குழுவைச் சந்திக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களில் அரைவாசிப் பேரே உள்நுழைந்து அவர்களைச் சந்திக்க முடிந்தது.அந்தச் சந்திப்பின்போது நலன்புரிநிலையத் திலிருந்து வந்த மாணவர்களைத் தனியே சந்தித்து அவர்களது கருத்துக்களை அறியவோ அல்லது அவர்களுக்கான கல்வி தொடர்பான உதவிகளை வழங்குவது பற்றியோ இந்தியக் குழுவினர் மறந்துபோயும் வாய்திறக்க வில்லை. ஆயினும் பல்கலைக்கழகத்துக்கு வராமல் தம்மை இந்தியக்குழுவினர் அவமதித்து விட்டமையால் மாணவர்கள் தமது பிரச்சினைகளைத் தயங்காமல் கேட்டார்கள்.
"ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்குப் பதிலீடாக இன்னும் எத்தனையாயிரம் தமிழ் மக்களைப் பலி கொள்ளப்போகிறீர்கள்?"
"வடக்குகிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம் தமிழர்களுக்குச் சுயாட்சியுடன் கிடைக்கும் தீர்வே அவசியம். அதற்கு இந்தியா என்ன செய்யப்போகிறது?"
"எம்முடைய குடும்பத்தவர்கள் நலன்புரி நிலையங்களில் வாடுகிறார்கள். அவர்களை எம்முடன் சேர்த்துவைக்க உதவுவீர்களா?" என்று கேள்விக் கணைகள் பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து இந்தியக் குழுவை நோக்கி ஏவப்பட்டன. அப்போதும் உரிய பதிலேதும் சொல்லாமல் விட்டேத்தித் தனமாக "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்தான் பதிலாக வந்தது.
கல்லும் கசிந்துருகும் கண்ணீர்க் கதையின் போது .....
அத்துடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியபடி நலன்புரிநிலையத்திலிருக்கும் தன் குடும்பத்தவர்கள் பற்றி கல்லும் கசிந்துருகும் வண்ணம் விவரித்துக் கொண்டிருக்கும்போது, மேடையில் அமர்ந்திருந்த இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், வலு "ஹாயாக" சிகரெட் ஒன்றை ரசித்து ரசித்துப் புகைத்துக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தத்தில் இந்தியக் குழுவினரின் யாழ்.விஜயம் எந்தவித அர்த்தப் பெறுமானத்தையும் கொண்டிராமல் பூஜ்ஜியமானதாகவே அமைந்துவிட்டது.
"இலங்கையிலுள்ள எல்லா நலன்புரிநிலையங்களையும் பார்வையிட்டு அங்குள்ள மக்களின் குறைகளை அறியவே இங்கு வந்துள்ளோம்" என்று நூலகத்தில் மார்தட்டினார் ரி.ஆர்.பாலு. ஆனால் குடா நாட்டிலுள்ள எந்த ஒரு நலன்புரிநிலையத்துக்கும் அவர்கள் செல்லவேயில்லை. இந்தியக் குழுவினர் வருவார்கள், தமது குறைகளைக் கேட்பார்கள் என்றெண்ணிக் காத்திருந்த பல நலன்புரிநிலைய மக்கள் இலவுகாத்த கிளிகளாக ஏமாந்து போனதுதான் மிச்சம். உல்லாசப் பயணிகள்போல "வந்தார்கள், சென்றார்கள்" என்ற ரீதியில் இந்தியக்குழு நடந்துகொண்டிருப்பதால் அவர்களின் இலங்கை விஜயத்தின் மூலம் இலங்கைத் தமிழர் களின் பிரச்சினையிலோ நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினையிலோ எவ்வித செயலூக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக கப்பலில்அனுப்பப்பட்ட பொருள்களையே உரிய முறையில் இறக்கி மக்களுக்கு வழங்கச் செய்வதில் கையாலாகாத்தனமாக இருக்கின்றது இந்திய அரசு. அப்படியிருக் கையில் வெறும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசரத்தனமான திட்டமிடலற்ற மேம்போக்கான விஜயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பினோமானால் மீண்டும் ஏமாறுவதைத் தவிர வேறேதும் நடக்கப்போவதில்லை. *
- ஒளண்யன் -
0 விமர்சனங்கள்:
Post a Comment