கருணாவைச் சந்தித்துப் பேச இந்திய எம்.பிக்கள் மறுப்பு!அதனாலேயேஅவர்களின் கிழக்கு விஜயம் ரத்து
அமைச்சரும், ஆளும் கூட்டமைப்பின் பிரதான கட்சியான ஸ்ரீல.சு.கவின் உப தலைவருமான வி.முரளிதரனை (கருணாவை) சந்தித்துப் பேசுவதற்கு,
இலங் கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மறுத்து விட்டது. அதனாலேயே அக்குழுவினரின் கிழக்கு விஜயம் ரத்துச்செய்யப்பட்டது என இந்தியத் தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
இக்குழுவினரின் யாழ். விஜயத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடமும் கிழக்கு மாகாண விஜயத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு அமைச்சர் முரளிதரனிடமும் அரச உயர் மட்டத்தினரால் ஒப்படைக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
ஆனால், அமைச்சர் கருணாவுடன் ஒட்டுறவு, தொடர்பாடல்களைத் தாங்கள் இந்த விஜயத்தின்போது மேற்கொண்டால் அதுபற்றிய செய்திகள் தமிழகத்தில் வெளியானால் அது தங்களுக்கு பெரும் அரசியல் சங்கடங்களை ஏற்படுத்தும் எனக்கருதி, கருணாவுடன் எந்தத் தொடர்பாடலையும் வைக்கத் தாங்கள் விரும்பவில்லை என்று இந்திய எம்.பிக்கள் குழுவினர் சார்பில் எடுத்துரைக்கப்பட்டதாம்.
இந்தியக் குழுவினரின் இந்த நிலைப்பாட்டால் இலங்கை அரச உயர் பீடத்துக்குச் சீற்றம் ஏற்பட்டது எனத் தெரிகின்றது.
"கருணா வேண்டாம் என்றால் கருணாவின் பிரதேசத்துக்கும் (கிழக்குக்கும்) அவர்கள் போகத் தேவையில்லை" என்று குறிப்பிட்டு அக்குழுவினரின் கிழக்கு விஜயத்தை அரசத்தலைமை அடியோடு இரத்துச் செய்துவிட்டது எனத் தெரியவருகிறது. நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய எம்.பிக்கள் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற \ந்திப்பின்போதும், கருணா பங்குபற்றவில்லை என்று தெரிகின்றது.
இந்தியக் குழுவினர் இன்று காலை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட எம்.பிக்கள் குழுவினரையும் சந்திப்பர் எனத் தெரிகின்றது.
இன்று மாலை 3.45 மணிக்கு அவர்கள் விமானத்தில் சென்னை புறப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
Uthayan
0 விமர்சனங்கள்:
Post a Comment