இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதால் பயன் என்ன? ஜெயலலிதா கேள்வி
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க. சார்பில் அண்மையில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவில், 1984 முதல் தமிழகத்துக்கு வந்துள்ள ஒரு லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதாக அறிவிப்பதால் அவர்களுக்கு கூடுதலாக எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
'நிரந்தரக் குடியுரிமை' என்ற தகுதி காரணமாக அவர்களுடைய தற்போதைய நிலைமையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா? 115 அகதிகள் முகாம்களில் இருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? தமிழ் நாட்டில் புதிதாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க நிதி உதவியோ அல்லது வெகுமதியோ அளிக்கப்படுமா? கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்ற சமூக உதவிஅவர்களுக்கு அளிக்கப்படுமா? உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு வரம்பு விதித்திருக்கின்ற நிலையில், யாருடைய ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படும்?
இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமைத் தகுதி என்ற முன்மாதிரி உருவாக்கப்பட்டால், வங்கதேசம், மியன்மர் மற்றும் திபெத் ஆகியவற்றில் இருந்து வந்துள்ள அகதிகள் கோரும் நிரந்தரக் குடியுரிமைத் தகுதி குறித்து இந்திய அரசு என்ன செய்யும்?
மற்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு இடம் பெயர்ந்த சமுதாயமும், தங்கள் சொந்த மண்ணில், மறுவாழ்வு அளிக்கப்படுவதையே விரும்பும். நிரந்தரக் குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற தன்னிச்சையான கோரிக்கை, இலங்கை அரசின் 'சிங்களர்கள் மட்டும்', மற்றும் 'தரப்படுத்தல்' கோட்பாடுகளுக்கு எதிராக துவங்கப்பட்ட தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment