ஓசியன் லேடி கப்பல் புலிகளுடையது
இலங்கையில் இருந்து கனடா சென்ற 76 அகதிகள் பயன்படுத்திய ஓசியன் லேடி கப்பல், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இந்த கப்பலில் வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை கடத்தப் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் யுத்தத் தோல்விக்கு பின்னர், விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட போராளிகள் இந்த கப்பலில் பதுங்கியிருக்கலாம் என சில பாதுகாப்பு நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கனடாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இலங்கை தமிழர்கள் இருப்பதால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பாரிய நிதி வழங்கல்களை வழங்கியுள்ளமையாலும், புலிப் போராளிகள் கனடாவில் தஞ்சம் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஓசியன் லேடி கப்பல் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது எனவும், அவர்கள் அதனை பயன்படுத்தியுள்ளனர் என்பதும் உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சர்வதேச பயங்கரவாதம் மற்றும் அரசியல் வன்முறைகள் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ரொஹான் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கப்பல்களும், ஆட்களை பரிமாற்றப் பயன்படுத்தப்படாத நிலையில், ஓசியன் லேடி கப்பல் மாத்திரமே இந்த ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓசியன் லேடி கப்பல் கடந்த 16ம் திகதி கனடாவில் வைத்து கனேடிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, அதில் பயணித்த 76 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கைதானவர்களுள் ஒருவரை கனேடிய குடிவரவு ஆராய்வு சபை விடுதலை செய்தது.
இதற்கிடையில் அவர்களுடன் இலங்கையில் தேடப்பட்டு வருகின்ற புலி உறுப்பினர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக ரொஹான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் அவருடைய உடலில் புலிகளின் முத்திரை பச்சை குத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்ற போதும், உண்மையில் இலங்கையில தேடப்பட்டு வருபவர் அவர்தானா என்பது குறித்து தெளிவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment