கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு ‘இந்தியத் துரோகம்’ - பாரிஸ் ஈழநாடு
சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இன்றைய பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள்.
ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்து கொண்டார்.
கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர்.
கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். தமிழகம் அமைதியானது.
அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள்.
நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது.
இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறிய போது தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார். தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர்.
வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.
நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது.
புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது. இது இதுவரை இந்தியா மேற்கொண்டு வந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது.
மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய இலங்கை தொடர்பான கொள்கை மாற்றம், ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.
இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. – காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும், மேனனும் இலங்கை சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.
தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள்.
இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது.
சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக் கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார்.
தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும்.
இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment