ஆனந்த விகடன் கூறும் மகிந்த & சரத் பொன்சேகா எதிரிக் கூட்டணிக்கதை….
குறுக்குவழி, அவசரவெறி கொண்டவர்களின் நட்பு கடைசியில் இப்படித்தான் போய்முடியும் என்பதற்கு இலங்கை பத்திரிகையாளர் ஒருவர் சுவாரஸ்யமான கதை சொன்னார். குளம் ஒன்று வறண்டுகொண்டே இருக்க, அதிலிருந்த நண்டுகள் தவிக்க ஆரம்பித்தன. அப்போது ஒரு கொக்கு வந்து சதித் திட்டம் தீட்டியது. 'உங்களை எல்லாம் நீர் ததும்பும் வேறொரு குளத்தில் கொண்டு போய் இறக்கி விடுகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளுங்கள்!’ என்று 'மறுவாழ்வு' வாக்குறுதி அளித்தது. அப்போது அந்த நண்டு கூட்டத்திடையே ஒரு நயவஞ்சக நண்டு, கொக்குக்கு சாதகமாக மற்ற நண்டுகளிடம் பேசியது. அவற்றை சம்மதிக்க வைத்து ஒவ்வொன்றாக கொக்கின் முதுகில் ஏற்றி அனுப்பியது. கடைசி டிரிப்பாக நயவஞ்சக நண்டும் கொக்கின் முதுகில் பறந்தது. கொண்டு சென்ற நண்டுகளை வேறொரு குளத்தில் விடுவதற்கு பதிலாக கொதிக்கும் பாறையின் மீது போட்டுவிட்டு தள்ளியிருந்தது கொக்கு. அவை தானாகவே வறண்டு காய்ந்து இறந்து போனபின் ஒவ்வொன்றாக தின்றுவிடுவதுதான் கொக்கின் திட்டம். கொக்குக்கு உதவியாக இருந்த நயவஞ்சக நண்டுக்கும் இது முதலிலேயே தெரியும். எனவே, கொக்கின் முதுகில் பறந்து சென்றபோதே, அதன் கழுத்தை தனது கொடுக்குகளால் கொடூரமாக இறுக்கிக் கொன்று, நீர் நிறைந்த குளத்துக்குள் விழச் செய்து தான் மட்டும் தப்பியது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் ராஜபக்ஷே - பொன்சேகா கூட்டணியின் தற்போதையை நிலையை சரியாகச் சொல்லக்கூடிய குறுங்கதைதான் இது. போர் முடியும் வரை ராஜபக்ஷே இட்ட கட்டளைகளை ஒன்றுக்குப் பத்தாக வெறியோடு நிறைவேற்றி ராஜவிசுவாசம் காட்டிவந்த சிங்கள ராணுவத் தளபதி பொன்சேகா, இப்போது முகாமில் வாடும் தமிழர்களுக்கு ஆதரவாக உலகமெங்கிலும் எதிர்ப்புக் குரல் எழத் தொடங்கிவிட்ட நிலையில்... ராஜபக்ஷேவின் கழுத்தை மெதுவாக இறுக்கத் தொடங்கியிருக்கிறார்! 'சர்வாதிகார மன்னருக்கும் சாகசத் தளபதிக்கும் இடையே தொடங்கிவிட்ட பனிப்போர், விரைவில் பெரும் நெருப்பாக திகுதிகுக்கத் தொடங்கினாலும் ஆச்சர்யத்துக்கில்லை!' என்று மணியடிக்கிறார்கள் விவரமான இலங்கைப் பத்திரிகையாளர்கள்!
இந்த பவர் பாலிடிக்ஸ் குறித்து கொழும்பில் உள்ள முக்கியஸ்தர்கள் சிலரிடம் கேட்டோம். '2005-ம் வருடத்தின் இறுதியில்தான் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராஜபக்ஷே தீவிரமாகக் கையிலெடுத்தார். அந்த சமயத்தில்தான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெறும் நிலையிலிருந்த சரத் பொன்சேகாவை ராணுவத் தளபதியாக நியமித்து பதவி நீட்டிப்பு வழங்கினார். புலிகளின் கொடூரத் தாக்குதலில் நூலிழையில் தப்பிய பொன்சேகா, புலிகளைப் பழி தீர்க்க துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த நேரமது. அதனால் ராஜபக்ஷே கொடுத்த வாய்ப்பை சரியான சந்தர்ப்பமாகக் கை கொண்டு, மிருக வெறித் தாக்குதலை நடத்தத் தொடங்கினார் பொன்சேகா. பாதுகாப்புத்துறைச் செயலாளரான கோத்தபய ராஜபக்ஷேயின் மிக நெருங்கிய நண்பரானார். உலகத்தின் மனித உரிமை அமைப்புகளின் கண்டனங்களை எல்லாம் தாண்டி, மரபு மீறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி புலிகளின் அத்தனை படையணிகளையும் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் சிங்கள மக்களிடத்தில் பொன்சேகாவுக்கு கிடைத்த மதிப்பும் மரியாதையும் ஒரு கட்டத்தில் ராஜபக்ஷே சகோதரர்களுக்கு நெருட ஆரம்பித்தது. இதனால், கல்யாணம் முடிந்ததும் கறிவேப்பிலை கதையாக பொன்சேகாவை கடந்த சில வாரங்களாகவே ஓரம்கட்டும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டனர்.
இதற்கு ஈடாகத் தாங்கள் கொடுத்த பரிசுகளை அள்ளிக்கொண்டு அவர் அப்படியே அடங்கி ஒதுங்கிவிடுவார் என ராஜபக்ஷே தரப்பு போட்டதுதான் தப்புக் கணக்காகிவிட்டது. சற்றும் எதிர்பாராத வகையில் பொன்சேகா தரப்பை வலுப்படுத்தும் விதமாக இலங்கையின் எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கி இருக்கின்றன. குறித்த காலத்துக்கு முன்பாகவே அடுத்த வருடம் தேர்தலை நடத்தி, சிங்கள மக்களின் ஆதரவோடு மறுபடி வலுவாக பதவியில் அமர ராஜபக்ஷே திட்டம் தீட்டி வர... அதையே தனக்கு சாதகமாக்கும் யோசனையில் இறங்கிவிட்டார் பொன்சேகா!' எனச் சொன்னவர்கள், மேற்கொண்டும் விளக்கத் தொடங்கினார்கள்.
'தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள்தான் பிரதானமானவை. அதேபோல் இலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதானம். இதில் ஐ.தே. கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் தீவிர அரசியல் களத்துக்குள்ளேயே நுழைந்தார் மகிந்தா ராஜபக்ஷே. இலங்கையின் அரசியல் கட்டமைப்பின்படி மூன்று தடவைகளுக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்க முடியாது. அதனால் தனக்கு பிறகு தனக்கு நம்பிக்கைக்குரியவராக ராஜபக்ஷேவை அரசியல் களத்துக்குள் கொண்டு வந்தார் அப்போதைய அதிபர் சந்திரிகா. அதிபரின் ஸ்பெஷல் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த சமயத்தில் பிரதமராக இருந்த ரணிலின் அமைச்சரவையை கலைத்து ராஜபக்ஷேவை பிரதமராக்கினார் சந்திரிகா. பிறகு தனது இறுதி அதிபர் காலம் முடிந்ததும் ராஜபக்ஷேவை அதிபர் வேட்பாளராக அறிவித்துவிட்டு அமெரிக்கா கிளம்பி விட்டார்.
அந்த சமயத்தில் அவரை எதிர்த்து ரணில் அதிபர் தேர்தலில் களத்தில் நிற்க, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு டன் ரணில்தான் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராவார் என எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால், அந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக புலிகள் தரப்பு அறிவித்ததால், ராஜபக்ஷே யிடம் ரணில் தோற்க வேண்டி வந்தது. முழுக்க முழுக்க சிங்களர்களின் வாக்குகளை வாங்கி ஜெயித்த ராஜபக்ஷே, அந்த செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளும் விதமாகவே புலிகளை அடியோடு ஒழிக்க முடிவெடுத்தார். அதற்காகவே பொன்சேகாவை தேர்ந்தெடுத்து ராணுவத் தளபதியாக நியமித்தார். அதன்பின், பொன்சேகாவின் ஆலோசனைப்படியே பசில் ராஜபக்ஷேவை தனது ஆலோசகராகவும், கோத்தபய ராஜபக்ஷேவை பாதுகாப்புத்துறை செயலராகவும் நியமித்தார் ராஜபக்ஷே. அவர்கள் இருவரையும் சேர்த்தே, தான் நடத்தும் போருக்குப் பொறுப்பாளர்களாக உலக நாடுகளைப் பார்க்கச் செய்யும் தந்திரம் அது.
உலக நாடுகளின் மொத்த அழுத்தத்தையும் எதிர்ப்பையும் மீறி கடுமையான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தி வெற்றியை வசப்படுத்திக் காட்டினார் பொன்சேகா. போர் முடிந்ததும் எதிர்பாராத திருப்பம்! சிங்கள சிப்பாய்கள் மத்தியில் பொன்சேகா மீதானஹீரோயிஸம் அதிகரித்தது. போர் வெற்றிக்கு தாங்களே காரணம் என ராஜபக்ஷேவும், அவரது சகோதரர்களும் பெருமிதமாக மார்தட்டி வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் எல்லாம் 'இது ராணுவத்துக்குக் கிடைத்த வெற்றி' என உசுப்பேத்தி னார்கள்.
'தாய் நன்றாக வாழ்ந்தால் மகளே பொறுக்க மாட்டாள்' என்பதுதானே அரசியலில் நடைமுறை. ஆட்டோமேட்டிக்காக பொன்சேகா மீது பக்ஷே சகோதரர்களுக்கு பயமும் பொறாமையும் கிளம்பிவிட்டது. அடுத்து வரும் அதிபர் தேர்தலுக்கு முன்பே திடீர் ராணுவப் புரட்சியை நடத்தி ஆட்சியை பொன்சேகா கைப்பற்றிவிடக் கூடும் என்கிற அளவுக்கு அவர்கள் உதறலில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். உலகம் முழுவதும், அதிக அதிகாரம் வழங்கப்பட்டு சர்வாதிகார வெறியாட்டம் போடும் வாய்ப்பு கிடைக்கிற பல ராணுவத் தளபதிகள் இப்படி புரட்சி நடத்தி ஆட்சியைப் பிடிக்கிற கதைகளைப் பார்த்தவர்கள்தானே அவர்கள்.
இதனாலேயே, அதிரடியாக ராணுவத் தளபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் சி.டி.எஸ். சட்டத்தை கொண்டு வந்துள்ளார் ராஜபக்ஷே. இந்த சட்டத்தின்படி தளபதியின் பெரும்பாலான அதிகாரங்கள் பாதுகாப்பு செயலாளருக்கு மாற்றப்பட்டன. இந்த சட்டத்துக்கு பொன்சேகா எதிர்ப்பு தெரிவிக்க, அவரை ராணுவத் தளபதி பதவியிலிருந்து நீக்கி, கூட்டுப்படைகளின் தலைமை தளபதி என்கிற டம்மி பதவியில் அமர வைத்துவிட்டனர். அவருக்கு வழங்கப்பட்டு வந்த பலஅடுக்கு பாதுகாப்பை அடியோடு குறைத்து விட்டனர். 'தளபதியை அரசாங்க கூலிப்படையே கொலை செய்துவிட்டு, புலிகளின் மிஞ்சியிருக்கும் தற்கொலைப் படை மீது பழி போட திட்டம் நடக்கிறது' என்று இயல்பாகவே கிளம்பிய ஒரு சந்தேகம், பொன்சேகா தரப்பை படுசூடாக்கிவிட்டதாகத் தெரிகிறது.
இதெல்லாம் ஒன்றுசேர... எதிர்க்கட்சிகளும் இதில் ஈடுபாடு காட்ட... அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக பொன்சேகாவை முன்னிறுத்தவும் எதிர்க்கட்சிகள் தயங்காது என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இதனால் கொந்தளித்துப் போன கோத்தபய ராஜபக்ஷே பொன்சேகா மற்றும் சில முக்கியத் தளபதிகளை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையட்டி 'பொன்சேகா மீடியாக்களிடம் அரசியல் ரீதியாக ஏதாவது பேசக்கூடும்' என்று பயந்த ராஜபக்ஷே அரசு, 'சர்வதேச வர்த்தகத்துறை மற்றும் ஏற்றுமதி அமைச்சகத்தின் செயலாளராக பொன்சேகாவை நியமிக்கத் தயார்' என்று சமாதானக் கொடியைப் பறக்கவிடும ராஜதந்திரத்தையும்அரங்கேற்றிப் பார்த்தது. ஆனால், இதெல்லாம் பொன்சேகாவின் மனதை மசிய வைக்கவில்லை.
இந்நிலையில்தான் ராணுவத்தின் 60-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்காக நாடு முழுக்க தளபதியின் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. திடீரென போலீஸார் அந்த கட்அவுட்கள் அத்தனையையும் அகற்றியுள்ளனர். கொழும்பு மத்திய வங்கியின் சார்பில் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்ட விழாவில் பொன்சேகாவின் படத்தை வெட்டிவிட்டு மீடியாக்களுக்கு அரசுத் தரப்பு வழங்கியது. இதைக் கண்டு கொந்தளித்துப் போன பொன்சேகா, ராணுவத் தரப்பில் நடத்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் தலைமையேற்காமல் புறக்கணித் தார். அதோடு ராஜபக்ஷேவுக்கு பதிலடி கொடுக்கவும் தயாராகி விட்டார்!' என மிக விவரமாக அங்குள்ள நிலவரங்களை விளக்கினார்கள்.
'கொஞ்சகாலம் முன்பு, மாத்தளையில் உள்ள அலுவிகாரை படையினரை கௌரவிக்கும் விதமாக முக்கியஸ்தர்களின் இல்லங்களுக்கு ராஜபக்ஷேயுடன் விசிட் அடித்தார் பொன்சேகா. அமைச்சர் ரோஹன குமார திஸ்ஸநாயக்கவின் வீட்டுக்குப் போனபோது, அமைச்சரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஓடோடி வந்து பொன்சேகாவின் காலில் விழுந்து வணங்கினர். ஆனால், இத்தகைய மரியாதையை அவர்கள் ராஜபக்ஷேவுக்கு வழங்கவில்லை. 'அமைச்சரவையில் உள்ளவர்களிடத்திலேயே தனக்கு எப்படியெல்லாம் சர்வபலம் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்காக பொன்சேகாவே செய்த ஏற்பாடுதான் அது' என்பது பிறகு தெரியவந்தபோது ராஜபக்ஷேவுக்கு முகம் கறுத்து விட்டது. மாத்தளையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் ராஜபக்ஷேயை கேரோ செய்து சங்கடம் ஏற்படுத்தினர். இதையெல்லாம் ராஜபக்ஷேயின் அருகிலேயே நின்று ரசித்துக் கொண்டிருந்தார் பொன்சேகா. கூடவே, 'இனி அரசியல் ரீதியான பதிலடியைப் பார்க்கத்தான் போகிறீர்கள்' என ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான சில ராணுவத் தளபதிகளிடம் வெளிப்படையாகவே சொல்லியும் இருக்கிறார்.
இதனால் பொன்சேகாவை சமாதானப்படுத்தும் நோக்கில் அதிபரின் செயலாளரான லலித் வீரதுங்கவை அனுப்பி ஆசை காட்டும் விதமாகப் பேசியது அதிபர் மாளிகை. ஹாம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடக் கிளம்பிய ராஜபக்ஷே அதற்காக பொன்சேகா வலிய அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் பொன்சேகாவுக்கு களனி ரஜமகா புத்த விஹாரையின் உபதலைவர் பதவியை வழங்கினார்கள். பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவுக்கும் முக்கியப் பொறுப்பு கொடுத்தார்கள். ஆனால், இது எதுவுமே பொன்சேகாவை சாந்தப் படுத்தும் என்று தோன்றவில்லை!' என அடுத்தடுத்த விவரங்களையும் அடுக்கினார்கள்.
இதுகுறித்து ராணுவ வட்டாரத்தில் பேசினோம். 'இலங்கை அரசியல் களத்தில் ராணுவ அதிகாரிகள் குதிப்பது புதிதல்ல. ஏற்கெனவே ராணுவத்தில் உயர் பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் லக்கி அல்கம, மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க போன்ற பிரபலமான ராணுவ அதிகாரிகள் அரசியலில் இருந்தபோதும், பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு கிட்டுமுன்பே அவர்கள் ஆயுள் முடிந்து விட்டது. பொன்சேகாவுக்கோ அந்த வாய்ப்பு பலமாக இருக்கிறது. ஒருபக்கம் தன்னை ஹீரோவாகக் கொண்டாடும் சிங்கள மக்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வதோடு, 'யுத்தத்தின் சில வியூகங்களை இன்னும்கூட சிறப்பாகத் தீட்டியிருக்கலாம். ஆனால், அதிபரின் அவசரம் மற்றும் வற்புறுத்தல் காரணமாக 40 ஆயிரத்துக்கும் மேலான சிங்கள வீரர்களை நாம் அநியாயமாக பலிகொடுக்க நேர்ந்தது' என்று ஒரு அணுகுண்டு பிரசாரத்தையும் அரசியல் களத்தில் பொன்சேகா முடுக்கிவிடக் கூடும். அதுவும் தவிர, சர்வதேச அமைப்பான ஐ.நா-வில் போரியல் குற்ற வழக்கு தொடங்கினால்... பொன்சேகா கொடுக்கும் வாக்குமூலத்தின் மூலம் ராஜபக்ஷே சகோதரர்கள் 'உள்ளே' தள்ளப்படும் அபாயமும் இருக்கிறது. இதையும் மனதில் கொண்டுதான் எதிர்க்கட்சிகள் அவருக்கு கொம்பு சீவி வருகின்றன. அடுத்த வாரம், இலங்கை நாடாளுமன்றத்தில் அவசர கால சட்ட நீடிப்பு மசோதா மீதான விவாதத்தின்போது ரணில் விக்கிரமசிங்கே, அனுர குமார திசநாயக்க உள்ளிட்டவர்கள் பொன்சேகாவுக்கு ஆதரவாக முழங்கப் போகிறார்கள். இதெல்லாமே புதிய காட்சிகளுக்கான திரையை உயர்த்தும்.
அடுத்த தேர்தல் வரை இலங்கையில் இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று எண்ணும் பொன்சேகா, இப்போதைக்கு அமெரிக்கா சென்று தங்கும் யோசனையிலும் இருக்கிறார். அவரை அமெரிக்கா செல்லவிட்டால், அங்கிருந்து ஏதேனும் தலைவலியை உருவாக்குவார் என்று அஞ்சுகிறது அதிபர் தரப்பு!' என வௌ;வேறு குண்டுகளையும் வெடிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய எம்.பி-யான லஷ்மண் கிரியெல்லவிடம் 'பொன்சேகாவைகளமிறக்கும் திட்டம் உண்டா?' என்று கேட்டோம்.
'அதிபர் தேர்தலில் எங்களுடைய வேட்பாளராக சரத் பொன்சேகா இருக்கலாம். வேறு யாராகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் தேர்தல் நெருங்கும்போதல்லவா சொல்லமுடியும்!' என்று பிடிகொடுக்காமல் பதில் தந்தார் அவர்.
எப்படியோ... வினை விதைத்தவர்கள் அதை அறுக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!
(மு.தாமரைக்கண்ணன், இரா.சரவணன்)
(விகடன்)
0 விமர்சனங்கள்:
Post a Comment