ஓசியில் ஒரு இந்திய எதிர்ப்பு ஓலம்! : வாசு
‘மறை களண்ட கோமளிகள்!’, ‘வெள்ளி பார்க்க வந்த வெங்காயங்கள்!’, ‘இந்தியா ஒரு வாந்தி!’, ‘சோனியா ஒரு சோந்தி!’, ‘வடக்கன் வம்பிலை பிறந்தவன்’ இது நான் சொல்வது அல்ல. இந்தியா பற்றி அண்மையில் புலம்பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த பதங்கள்! 1980களில் இந்தியாவையும் இந்திய அரசை மட்டும் நம்பி படையெடுத்த தேசிய விடுதலைப் போராட்டம் இன்று இந்தியாவை வாந்தி பேந்தி என்று திட்டுமளவிற்கு வந்த காரணங்கள் வெள்ளிடைமலை!. சுருங்ககூறின் புலிகளின் இருப்பை இந்தியா கேள்விக்கு உள்ளாக்கியமையும் புலிகளை அழிக்க சிறீலங்கா அரசிற்கு உதவியமையுமே இந்த இந்திய எதிர்பின் இன்றைய உச்சக் கட்டம். ‘ஆகாசவாணி’யின் செய்திகளை மெய்மறந்து கேட்ட யாழ்பாண மக்கள் இன்று அதே ஆகாசவாணியை அழிக்க வேண்டும் என்ற பார்வையில் கட்டுரைகள் பல எழுதப்பட்டு வருகிறது. அதாவது இந்தியா என்ற தேசம் இருக்கும் வரை தமிழீழம் கிடைக்காதாம். இதை எழுதியவர் ஒரு அரசியல் ஆய்வாளராம். இவர் பெயர் சபேசனாம்!. நாம் அனைவரும் இந்தியாவை அழிக்க சீனாவுடன் கூட்டுப் புணர்ச்சி செய்ய வேண்டும் என்று நாசூக்காக வேறு சொல்லுகிறார். அட முட்டாள் பயலுகளே இந்தியாவில் இப்ப பிரபலமாக விற்கப்படும் பிள்ளையார் சிலைகள் செய்யப்படுவதே சீனாவில்தான்.
இந்த ஆய்வாளர் திலகம் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி போற போக்கில இந்தியாவுக்கு விசா எடுப்பற்கு நாங்கள் ‘இந்தியாவின் இறைமைக்கு ஆதரவாக இருப்போம்’ என்று கற்பூரத்தில் அடித்து சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டி வந்தாலும் வரும்!. இதுதான் இந்த ஆய்வாளரின் இந்திய எதிர்ப்பின் பலாபலனாக இருக்குமே ஒழிய வேறு எதுவும் நடந்துவிடப் போவதில்லை. 1980களில் இருந்த நிலையில்தான் சர்வதேச அரசியல் இருப்பதாக இந்த பத்திரிகையாளர் நினைப்பதுதான் ‘மறை களன்ட கோமாளி’யின் சிந்தனை. இதை லண்டன் வாழ் தமிழ்மக்கள் ஓசியில் படிப்பது….. ???
இந்திய எதிர்ப்பை இன்று மிக மோசமாக நடாத்திவரும் இந்த பத்திரிகைகளும் வானொலிகளும் யதார்த்தத்தை மறந்து கற்பனை உலகில் இருக்கிறார்கள். 1986இல் சிறிலங்கா இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றபோது நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கல்வி கற்றுக்கொண்டிருந்த சமயம். புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட சமயம், நான் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த செங்கமலத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. அப்போது அவர்களின் மனநிலை மிகவும் குழம்பியதாக இருந்தது. ”இந்தியாவின் உதவியுடன் நாம் மிகவும் நல்லவிதமாக நமது போராட்டத்தை வென்றெடுக்க முடியும். ஆனால் தலைமை பிழை விடுகிறது. என்ன செய்வது தலைமையின் சொல்லை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என அவர் மன வேதனையுடன் கூறியது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.
இந்தியா தனது நலனை தவிர வேறு எந்த நலனுக்காகவும் இலங்கைக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை! ஆனால் இந்திய இராணுவம் தமிழ் மக்களின் காவலாளிகளாகவே அன்று தமிழ் மக்களால் பார்க்கப்பட்டார்கள். கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை இல்லாது செய்ய இந்தியா சில திட்டங்களை புலிகளுடன் தீட்டியது பலருக்கு தெரிய நியாயமில்லை. அது மட்டுமல்ல புலிகளின் தலைமைக்கு பல வாக்குறுதிகளை கொடுத்ததுடன் ”மாகாணசபையை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். சிங்கள இனவாத அரசு அதை நிச்சயம் மறுக்கும். அந்த நேரத்தில் நமது இராணுவம் வடக்கு கிழக்கில் உங்களிற்கு பயிற்சி அழித்து ஒரு தமிழ் தேசிய இராணுவத்தை ஏற்படுத்த அனைத்தும் செய்வோம்” என்று உறுதிமொழியும் வழங்கப்பட்டது.
ஆனால் ”வடக்கு கிழக்கில் புலிகள் மட்டுமல்ல மற்றைய குழுக்களும் இயங்க புலிகள் வழி சமைக்க வேண்டும்” என்றும் கோரப்பட்டது. இதுதான் புலிகளை உசுப்பேத்திய ஓரே ஒரு பிரச்சனை. இந்த நிபந்தனை இல்லாதிருந்திரதால் புலிகள் இந்திய இராணுவத்திற்கு நிச்சயம் சலாம் போட்டிருப்பார்கள். புலிகள் தம்மை தவிர எந்த ஒரு இயக்கமும் இருக்க கூடாது என்பதில் முனைப்பாக இருந்த ஒரே காரணம்தான் அவர்களை இந்தியாவுடன் மோத வைத்தது என்பதை புலிகளின் பல முன்னைநாள் போராளிகள் அன்றே ஒப்புக் கொண்டார்கள். மக்களின் நலனில் எந்தவித அக்றையும் கொள்ளாத புலிகள் தமது இருப்பை மட்டும் முன்நிறுத்தியது என்ன நியாயாம்? காலா காலமாக சிங்கள இனவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளான கிழக்குவாழ் தமிழ் மக்கள் இந்திய இராணுவ பிரசன்னத்தில் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தார்கள். புலிகள் மெதுவாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டார்கள். இதைக் கண்ணுற்ற புலிகள் இனியும் இந்த நிலை நீடித்தால் தாம் முழுவதுமாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டு விடுவோம் என்ற நிலையில் இந்திய இராணுத்துடன் மோதுவதே தம்மை காக்கும் என பிரபாகரன் உணர்ந்தார். புலிகளின் தலைவர் பிரபகாரனின் இந்த தனிப்பட்ட முடிவு தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியதுடன் இந்தியா தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக மாற்றப்பட்டது.
வடக்கு கிழக்கு மக்களிடம் எந்தவித அபிப்பிராயமும் கேட்காது தான்தோன்றி தனமாக யுத்த நிறுத்தத்தை மீறியது புலிகளே. இந்த முடிவை பல புலிப் போராளிகள் எதிர்த்தபோதும் தலைமைக்கு கட்டுப்பட்டு இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடினார்கள். இதே போராளிகள் பின்னர் இந்தியாவுடன் சேர்ந்து பிரபாகரனை அழிக்க சதி செய்ததாக கூறி போட்டுத் தள்ளப்பட்டார்கள். மாத்தையா, சுசீந்திரன், செங்கமலம் உட்பட 700 புலிப் போரளிகள் பிரபாகரனினாலும் பொட்டம்மானாலும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். இதன் பின்னர் இந்தியாவில் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்ட இந்திய முன்னைநாள் பிரதமரை எந்தவித அரசியல் காரணங்களும் இன்றி பிரபாகரனின் தனிப்பட்ட குரோத வெறிக்கு பலியாக்கியது தமிழ் மக்களை இந்தியாவின் நிரந்தர எதிரியாக்கியது. மிகவும் முட்டாள்தனமான இந்திய எதிர்ப்பு முடிவுகளை எடுத்தது புலிகள் அமைப்பும் அதன் தலைமையுமே!
ஒரு காலத்தில் சிறீலங்காவில் இருந்து இராணுவத்தால் துரத்துப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தபோது இந்த புலித் தலைமைக்கு பாதுகாப்பும் பயிற்சியும் கொடுத்தது இந்தியாவே.! இந்தியா தனது நலனுக்காக தான் இலங்கைக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அதை நமது அரசியல் இலாபத்திற்கு பாவிக்க தெரியாத முட்டாள்களாக இருந்த புலிகளின் தலைமை படு முட்டாள்கள் தான் என்பதை 22 வருடங்களின் பின் மீண்டும் நிரூபித்துள்ளார்கள். அன்று சமயோசிதமாக முடிவெடுத்திருந்தால் நாம் இன்று இந்த இழப்புகளை சந்தித்திருக்க தேவையில்லை. புலிகளின் பொய்யான பிரச்சாரங்கள் இன்று புலம்பெயர் மக்களை இந்தியாவிற்கு எதிராக திருப்பியதை ஏன் இந்த பத்திரிகையாளர்கள் உணர மறுக்கிறார்கள். அனைத்து தவறுகளையும் துரோகங்களையும் நாமே செய்துவிட்டு இன்று இந்தியா துரோகி அதை அழிக்க வேண்டும் என்பது என்ன நியாயாம்? வரலாறு தெரியாதவர்கள் ஓசியில் பத்திரிகை நடாத்தினால் இதைவிட வேறு எதைதான் எழுதுவார்கள்?
ஓசியில் பேப்பர் விடுவது இலகுவான விடயம் அல்ல. அதற்கு வர்த்தகப் பெருமக்களின் ஆதரவு வேண்டும்! அவர்களுக்கென்ன, என்ன விடயம் பத்திரிகையில் இருக்கிறது என்பது அவர்கள் கவலையில்லை. எத்தனை பேர் ஓசியில் படிக்கிறார்கள் என்பதே அவர்களின் கவலை! அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சிறீலங்காவின் போர்கால நிலவரம் தொடர்பாக வெளியிட்ட 72 பக்க அறிக்கையில் உள்ள பல தகவல்கள் நமக்கு தெரிந்தவையே! குறிப்பாக சிறீலங்கா அரசு செய்த அத்தனை மனிதஉரிமை மீறல் விடயம் முதல் மக்களை கும்பல் கும்பலாக ஷெல்லடித்து கொன்றது வரை, இந்த ஓசி பேப்பர்கள் இதை வரிக்குவரி எழுதியதோடு அதை ஊதிப் பெரிப்பித்து இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது என்று ஓலமிட்டு அழுதன.
ஆனால் அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கையில் வரிக்குவரி புலிகள் செய்த அக்கிரமங்கள் பற்றி இந்த ஊடகங்கள் ஒரு மூச்சுக்கூட விடவில்லை. மாறாக அங்கு நடப்பவை எல்லாம் சரியெனவும் மக்கள் ஒரு சில தியாகங்களை செய்தால்தான் விடுதலை பெறமுடியும் என்றும் இந்த சேயோன்களும் சபேசன்களும், கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிக் குவித்தார்கள். ஆனால் தப்பிச் செல்ல முனைந்த தமிழ்மக்களை புலிகள் சுட்டுக் கொன்றதையோ பத்து வயதுப் பாலகன்களை கடத்தி சென்றதை பற்றியோ எந்த மூச்சும் விடவில்லை. அது மட்டுமல்ல ஒரு சில முதுகெலும்புள்ள ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிட அவர்களை புலியெதிர்ப்பு ஊடகங்கள் என்று முத்திரை குத்தி அவர்களையும் துரோகிகளாக்கினர்.
இந்த பத்திரிகை ஒருகாலத்தில் பயோடேட்டா என்ற பெயரில் புலம்பெயர் வாழ் பெண் ஜனநாயகவாதிகளை புலியெதிர்ப்பாளர்கள் என்ற போர்வை சுமத்தி அவமானப்படுத்தினார்கள். ஆனால் புலிகள் மக்களை கொடுமைப்படுத்தியதை இன்று வன்னி தடுப்பு முகாம் மக்கள் கூறுவதைக் கூட தமது பத்திரிகையில் போட திரணியற்று நிற்கின்றனர். ஆனால் இந்த சேயான்களுக்கு ராஜேஸ் பாலாவையும் நிர்மலாவையும் உச்சரித்தால் மட்டும் கிக் வந்துவிடும். இவர்களுடைய அந்த எழுத்துக்களுக்கு இவர்கள் ஓசியில் பத்திரிகை அடிப்பதை விடுத்து காசுக்கு விற்பனை செய்யும் மஞ்சள் பத்திரிகையே நடாத்தி இருக்கலாம்.
அதற்குள் தாங்கள் சிவப்புச் சட்டைகாரராம் என்று சிலருக்கு தற்பெருமை. மம்மி ஜெயலலிதா தம்பிக்கு தமிழீழம் வாங்கித் தருவார் என்று அரசியல் ஆய்வு செய்தவர்கள், ஓபாமாவும் ஹிலரியும் கப்பல் அனுப்புவார்கள் என்று தலைவரை நந்திக்கடல் ஓரத்தில் வெள்ளி பார்க்கவிட்ட பெருமை ஒரு பேப்பர் உட்பட தேசிய ஊடகங்களையே சாரும். தலைவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி முருங்கை மரத்தில் ஏத்தி முள்ளிவாய்காலில் தள்ளிவிட்ட இந்த ஜம்பாவான்களுக்கு மாவீரர் தினத்தன்று தேசிய ஆய்வாளர் விருதுகைள வழங்கி கௌரவிக்க வேண்டும். அப்போது தான் தலைவரின் ஆத்மசாந்தி அடையும்.
Thesamnet
0 விமர்சனங்கள்:
Post a Comment