வன்னி முகாம்களின் சாட்சியங்கள் : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி
வன்னி முகாம்களின் நிலை தொடர்பாக பல்வேறு விதமான செய்திகள் வெளிவருகின்றது. அம்மக்கள் சார்பாக பேசுவதாகவும் எழுதுவதாகவும் கற்பிதம் செய்கின்ற பலர் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளுடன் அவற்றை திரிபுபடுத்தி அங்குள்ள யதார்த்தத்தில் இருந்து புலம்பெயர் மக்களை அந்நியப்படுத்தி வைத்துள்ளனர். வன்னி முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தங்கள் அரசியல் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற கோரிக்கைகள் அம்மக்களின் சார்பில் முன்வைக்கப்படுகின்றன. நாடுகடந்த தமிழீழம் முதல் வன்னி முகாம் மக்களுக்கும் வன்னி மக்களுக்கும் உதவுவது துரோகத்தனம் என்பது வரை புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் பரந்துவிரிந்தள்ளது.
ஆகவே அங்குள்ள மக்களின் வாழ்நிலையின் உண்மைத்தன்மையை அறிவது மிக மிக முக்கியமானது. அதனை அறிந்து கொள்வதன் மூலமே மக்களுக்கான தேவைகளையும் கோரிக்கைகளையும் அறிந்து கொள்ள முடியும். அதைவிடுத்து புலம்பெயர்ந்தவர்களின் போராட்டத்திற்காக அம்மக்களை ஆட்டிப்படைக்க முடியாது. அதனைக் கருத்திற்கொண்டு அண்மைக் காலமாக வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள பலருடனும் வவுனியாவில் வதிபவர்களுடனும் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். இவர்களில் சிலருடன் பல மணித்தியாலங்களாக பேசுவதும் வழக்கமாகிவிட்டதொன்று. அவர்களது உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொண்டுவரவே இவற்றை வெளியிடுகிறோம்.
ஓக்ரோபர் 6ல் மூன்று நாட்கள் வெளியே வந்து தங்கும் அனுமதியுடன் வந்தவருடன் தொலைபேசி மூலம் உரையாடும்போது அவர் தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் தொடர்ந்தார்.
இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வவுனியாவிலும் முத்தையன் கட்டிலும் வியாபாரியாக இருந்தவர். தனது இரண்டு வயது குழந்தையுடன் தான் தப்பி வந்து இடையில் ஏதும் நடந்தாலுமென்று, அங்கேயே நின்று பின்னர் புலிகளினால் ஒட்டுமொத்தமாக எடுத்துச் செல்லப்பட்ட மக்களுடன் முள்ளிவாய்க்கால்வரை சென்றார். பின்னர் மே மாதம் பத்தாம் திகதியளவில் பெருந்தொகையாக இடம்பெயர்ந்தவர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்தவர். தனது முகாம் வாழ்க்கை பற்றி இவ்வாறு சொன்னார்.
”நான் செட்டிக்குளம் ராமநாதன் காம்பில் இருக்கின்றேன். செட்டிக்குளம் டிஸ்றிக்கில் ஆனந்தகுமாரசாமி முகாம், ராமநாதன் முகாம், அருணாசலம் முகாம், Zone 4, வீரபுரம், கதிர்காமர் முகாம், Zone 5 என காம்ப்புகள் இருக்குது. ராமநாதன் காம்பில் 65 000 பேர் இருக்கிறோம். அங்கு பெரும்பாலான கட்டுப்பாடு பொலிஸ்தான். ஆமியும் வந்து போவார்கள்.
சாப்பாடு, தண்ணி, ரொய்லெட் வசதி வந்த புதிதில் மிகமோசம். இப்ப பிரச்சினை இல்லை. முந்தி நாங்கள் கொஞ்ச கொஞ்சப் பேராகச் சேர்ந்து ரேன் வைத்து மாறி மாறி எல்லாருக்குமாய் சமைப்போம். இப்ப எல்லாரும் தனித்தனிய குடும்பமாய்த்தான் சமைக்கிறோம். ஓவ்வொரு வியாழனும் World food சமையல் சாமான்கள் தருவார்கள். தண்ணீர் பைப் வசதி இருக்குது. ரியூப் வெல் அடிச்சு வைத்திருக்கிறார்கள். குடி தண்ணீர் கிடைக்கிறது. மரங்களை வெட்டி மண்றோட்டுகள் போட்டிருக்கிறாங்கள். கறண்ட் இருக்குது. பிள்ளைகள் படிக்கப் போகினம். ரென்ட்டுகளை வீடுகளாய் கட்டிவிட்டால் மாதிரிக் கிராமம்தான். ரென்ட் சரியான வெக்கையாய் இருக்கும். நாங்கள் பெரியஆட்கள் சமாளிப்பம். குழந்தைகள்பாடு சரியான கஸ்டம். மழை வந்தால் பெரிய சிக்கல் இந்த ரென்டுகள் தாங்காது. அதுதான் தொல்லை. வெய்யில் நேரங்களில் ரென்ட்டுக்குள் இருக்கேலாது அவ்வளவு வெக்கை.
மெனிக்பார்ம் பிரச்சினைகள்பற்றி கேட்டபோது ”நீங்கள் சொல்லுமாப்போல பெரிய பிரச்சனையாக நான் கேள்விப்படவில்லை. வன்னிக்குள் நடந்ததை விடபெரிசாய் என்ன நடக்கப் போகுது. காம்புக்குள்ளே சின்னச் சின்னதாய் பிரச்சினைகள நடக்கும்தானே. சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்கிற சனத்துக்கு வேற வேலை இல்லைத்தானே. என்ன செய்வதென்று தெரியாமல் சண்டை வரும்தானே. நீ புலி. அவன் புலி எண்டும் சண்டை வரும். சனங்கள் உங்கை சும்மா சும்மா கதைக்கினம்போல.
ஆமிக்காரன் ஆட்களை பிடிக்கிறது ஏத்திக்கொண்டு போறாங்களாமே எனக் கேட்டபோது ”எனக்குத் தெரிய நான் அப்படி எங்கட காம்பில் கேள்விப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விசயங்கள் நடந்திருக்கும்.
புலிகள் பற்றி ஒருத்தரும் கதைப்பாரில்லை. இலக்க்ஷன் பற்றி ஒருத்தருக்கும் அக்கறையில்லை. நான் நினைக்கிறேன் ரணில்தான் வருவாரெண்டு. காம்புக்கு டக்ளஸ்தான் ரெண்டு மூண்டுதரம் வந்தார். உதவிகள் கேட்டால் செய்வார். அந்த ஆள் யாழ்ப்பாணத்துக்கு நிறையச் செய்கிறார். எங்களுக்கு தேவை அபிவிருத்தி. அதை அவர் செய்கிறார் அது எங்களுக்கு நல்லது தானே.”
”எப்படி நீங்கள் வெளியே வந்தீங்கள்” என கேட்டபோது: ”அரசாங்கத்தின் லெட்டரோடை காம்புக்கு வெளியே வந்து மூன்று நாள் தங்கலாம். பிறகு திரும்ப வேணும். நான் அப்படி ரெண்டு மூண்டு தரம் வந்தனான். அடிக்கடி வந்தால் சந்தேகப்படலாம் என்பதால் ஏதும் தேவைக்காக வந்துபோவேன். அப்படி எல்லாரும் வரலாமோ இல்லையோ எனக்குத் தெரியாது. எனக்கு வந்து தங்க இடமிருக்குது சொந்தக்காரர் இருக்கினம் வாறேன். எல்லாருக்கும் அப்படி யாரையும் தெரிந்திராதுதானே. வந்தும் என்ன செய்வது. நான் வெளியே வந்து எனது குடும்பம் தங்க இடம் வேலை ஒன்று கடையில் எடுக்க அலுவல் பார்க்கிறேன். காம்பை விட்டு வெளியே போக கச்சேரியில் போர்ம் கொடுத்திருக்கிறேன். ஆமி கொமாண்டர் சைன்பண்ணி வந்ததும் போகலாம். சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கினம். எனக்குத் தெரிந்த சொந்தக்காரர் போனகிழமை போய்விட்டார். நான் இரண்டு வயதுப் பிள்ளையுடன் இருக்கிறேன். இந்த மாதக் கடைசிக்குள் நானும் போய்விடுவேன். ஊரில் தங்க இடம் இருக்கு. அங்கும் விதானையார் கையெழுத்துப் போட்டால் எங்களை விடுவினம் இப்படி பலர் போய்விட்டார்கள்.
குழந்தைகளோடை இருக்கிறவை முதல் ஊனமுற்றோர் இரண்டாவது கர்ப்பிணியாட்கள் மூன்றாவது என படிப்படியாய் ஒவ்வொரு காம்பிலும் இருந்து வெளியேபோக விடுகிறார்கள். அவர்களை வேறை காம்பில கொண்டு போய் வைத்திருப்பதாக நான் அறியவில்லை. எல்லாரையும் ஒரேயடியாக வெளியே விட ஏலாதுதானே. ஆட்களை விசாரிச்சு விசாரிச்சுத்தான் விடுவாங்கள்.
வெளியில் உதவிக்கு ஆட்கள் இருக்கிறவை போவினம். இல்லாதவை வெளியே வந்து என்ன செய்வது. எப்படிச் சீவிப்பது. வெளியில வாடகைவீடு 10 000, 15 000 என்று கேட்பார்கள். சாப்பாட்டுச் செலவு வேலை என்று எல்லாத்துக்கும் எங்கை போவது. இவ்வளவு காசு கொடுக்க இயலாத, அப்படியான ஆட்கள்தான் பெரும்பாலான ஆட்கள். அவர்கள் போனால் வன்னிக்குத்தான் போவம் இல்லாவிட்டால் எங்கும் போகமாட்டம் என்று பின்னடிக்கினம்.
என்னிடம் கைத்தொலைபேசி இல்லை. வைத்திருக்க விடமாட்டாங்கள். வைத்திருப்பவையும் ஒழித்து வைத்துத்தான் கதைப்பது. நான் உங்களுக்கு மற்றைய காம்பில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்கள் எடுத்துத்தாறன் கதையுங்கோ” என்றார்.
”ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குப் போவதில் தடையில்லை. சில பிள்ளைகள் ஒரு முகாமில் இருந்து மற்றமுகாமுக்குப் போய்ப் படிக்கிறார்கள்” என்றார்.
(இந்த தொலைபேசி அழைப்பில் எம்முடன் பேசியவர் ஒக்ரோபர் 12ம்திகதி முகாமிலிருந்து வெளியேறி தற்போது யாழ் கோவில்ப்பற்று பகுதியில் தனது பிறந்து வளர்ந்த வீட்டில் தனது உறவினர்களுடன் இணைந்துள்ளார்)
கதிர்காமர் முகாமின் உள்ளே இருக்கும் ஒருவருடன் ஓக்ரோபர் 8ல் தொடர்பு கொண்ட போது….
தனது கைத் தொலைபேசியை மற்றவர்களுக்கு கொடுத்து எம்முடன் கதைக்க உதவுபவர்களில் ஒருவர் மாவீரர் குடும்பமொன்றைச் சேர்ந்தவர் (அவரே சொன்னார்). ஜுன் மாதத்தில் எம்முடன் கதைக்கும்போது அவரின் பார்வையில் - இப்படித்தான் புலி வீழ்ந்தாலும் காலத்துக்கு காலம் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் தென்பட்டது. இவர் சரளமாக கதைக்கமாட்டார். அது அவர் தன்மை என்பதே என் அனுமானம். ஒக்ரோபரில் கதைக்கையில் அவர் எதுவுமே கதைக்கப் பிரியப்படவில்லை. ”என்னத்தை அண்ணை சொல்ல” என்று மிகவும் மனச் சோர்வுடன் சலித்துக் கொண்டார். ”எனக்குப் பக்கத்தில் இப்ப நிக்கிறவர் நல்லாய்க் கதைப்பார். அவரிடம் கொடுக்கிறேன். கதையுங்கோ” என்றார்.
அந்த புதியவர் என்னிடம் ”நீங்கள் யார்? என்ன செய்கிறியள்?” என்று விபரம் கேட்டபோது நாம் என்ன செய்கிறோம் என்று சொன்னேன். ”ஏன் அண்ணை தேசம் எண்டு சொல்லுறியள். கோதாரி எண்டு சொல்லுங்கோ. இவ்வளவு காலமும் நடந்தது கோதாரி இல்லையோ?. கண்டறியாத போராட்டம். சனம் பற்றி யார் நினைச்சது. தாங்கள் தாங்கள் தங்கட நலனுக்குப் போராட்டம் என்று சனத்தைச் சாகடிச்சுக் கொண்டு தங்கட குடும்பத்தைப் பார்த்தவை. போராட்டம் நடத்தியிருந்தால் இப்பிடியா முடிஞ்சிருக்கும். என்ன பிள்ளைகளுக்கு சாப்பாடு உடுப்பு படிப்பு இதுக்குத்தான் அண்ணை இப்ப போராட்டம். எங்களுக்கு மொழி, சாதி இது என்னண்ணை?. சிங்களமொழி, சனங்கள் என்ன பிழை எண்டு சொல்லுங்கோ. சனங்கள் - மனிசர் எண்ட நினைப்பு இல்லாமல் எல்லாம் நடத்தியவையள். நடந்ததுகள் நினைவுக்கு வந்தால், திருப்பி யோசிச்சால் அழுகை வருகிறது. இளம் குழந்தைகள் பொடியன்கள் பிள்ளைகள் எல்லாம் அநியாயம். இயற்கைக்கு ஒத்து வராமல்தான் இப்படி இந்த திருவிழாவை இயற்கை முடிச்சு வைச்சது” என்றார்.
முன்னர் ஈபிஆர்எல்எப் ஆதரவாளராக இருந்த 42 வயதான வசாவிளானைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளுடன் வன்னிக்கு இடம்பெயர்ந்தவர். இவர் தற்போது கைவசம் எதுவுமேயில்லாமல் எதிர்காலம் என்ன என்று நிச்சயம் இல்லாமல் தற்போது கதிர்காமர் முகாமில் இருக்கிறார்.
”தனிநாடு யார் அண்ணை கேட்டது. எல்லாமே புலிகளின் பம்மாத்தும் சுத்துமாத்தும் தானே. வன்னியில் இருந்த சாதாரண சனத்திடம் தனிநாடு என்ற நம்பிக்கை எண்டைக்குமே இருந்ததில்லை. புலிகளின் தொடர்ச்சியான கெடுபிடிகளே இருந்தது. புலிகள் கோவில் திருவிழா செய்வது போலவே எல்லாம் செய்தார்கள். யாரும் ஏன், எது, எப்படி என்று கேட்கமுடியாது. சொல்லும் எல்லாத்துக்கும் ஓம் சொல்ல வேணும்.
எப்பசரி மக்களின் கருத்துக்களைக் கேட்டார்களா? தாங்கள் செய்வது சரியா என்று யாரிடமும் கேட்கவில்லையே? யாருக்கும் எதுவும் தெரியாது. தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்டு இப்ப தெரியுது இவையளுக்கு என்ன தெரியும் எண்டு” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
”முகாம்களுக்கு வெளிநாட்டு ஆட்கள் வந்து பார்த்ததாக கேள்விப்பட்டேன்” என்று நான் பேச்சை வளர்த்தேன். ‘நான் சந்திக்கவில்லை. டக்ளஸ் இப்பவும் வந்து மக்களின்ரை அபிப்பிராயத்தைக் கேட்கிறார். அவர் ஓ.கே. வளைந்து கொடுத்து செயல்படுகிறார். இப்ப எங்களுக்குத் தேவை உதவிகள். அதைப்பற்றி அபிப்பிராயம் கேட்கிறார். அரசியல் கதைப்பதேயில்லை. எல்லாம் வெளியே வந்தபின் அரசியல் கதைப்போம். இப்ப என்ன அவசரம் என்றார். அவர் சொல்லுறது சரிதானே இப்ப உள்ளது எங்கட பிரச்சினைகள்.
நான் வன்னியில் இருக்கும்போது 2 சாரம் 2, 3 சேட்டு இதைவிட ஒரு துவாய்; வேற எதுவுமில்லை. பிள்ளைகளுக்கு கொஞ்ச உடுப்பு. பழைய கொட்டில்தான் எங்கட வீடு. வேலையில்லை. புலிகளுக்கு வேலை செய்தா சம்பளம். கூலி வேலை. இப்ப வேலையில்லை. காம்பில் சாப்பாடு உடுப்பு தண்ணீர் எல்லாம் கிடைக்கிறது. பிள்ளைகள் படிக்கினம். ஆனால் அகதிமுகாம் எண்டு பெயர். பிள்ளைகள் எப்ப சரி ரெயினை புது பஸ்களை கண்டவையோ?
வன்னியில் நான் புலிகளுக்கு பதிவுக்கு கொடுத்தது சொந்தப் பெயரல்ல. ஊரில் இருந்து வரும்போதே நானும் எனது மனைவியும் இப்படித்தான் எண்டு யோசிச்சு கொடுத்தம். இல்லாவிட்டால் என்னை ஈபிஆர்எல்எப் என்று சுட்டுப் போட்டிருப்பாங்கள். இப்ப ராணுவத்திடம் எல்லாம் சொல்லி உண்மையான பெயர் கொடுத்துள்ளேன். என்னுடைய அரசாங்க அடையாள அட்டையை திண்ணை மண்ணுக்குள் புதைத்து மெழுகிவைத்திருந்தேன். இப்பத்தான் அதைப் பாவிக்கிறம்.
எனக்கு வேறு இடத்திலும் ஆட்கள் இல்லை. வேறு இடங்களுக்கு போக முடியாது. போனாலும் சாப்பாடு வீடு எல்லாத்துக்கும் என்ன செய்வது. எனது யாழ்ப்பாண வீடு இருந்த இடம் இப்ப இராணுவ முகாம். வீடு எல்லை அடையாளமே இல்லாமல் உள்ளது. திரும்பிப் போக அங்கு இடமில்லை. என்ன செய்யலாம் திடீரென்று போ என்றாலும் எங்க போறது ஒண்டுமே தெரியாத நிலவரம்.
வன்னிக்கு திரும்பப் போகமாட்டேன். புலிகளிடமிருந்த மிதிவெடிகளின் அளவு எனக்கல்லோ தெரியும். அவ்வளவும் ஊர் தேசம் எல்லாம் புதைச்சாங்கள். எல்லாம் மழை வெள்ளத்துக்கு மூடுப்பட்டிருக்கும். யாரோ துப்பரவு பண்ணித்தான் தீரவேணும். இனிமேல் வன்னிக்குள் போய் காலை கையை உயிரை இழப்பது புத்திசாலித்தனம் இல்லை. என்னை வெளியே விட்டாலும் வன்னிக்குப் போகமாட்டேன். நான் என்ன மடையனோ வன்னிக்குள்ள குடும்பத்தைக் கொண்டுபோய் கால் கையை முறிக்க. வன்னிக்குத் திரும்பப் போனால் அந்த கொலை மரண சம்பபவங்கள்தான் எங்களுக்கும் எங்கட பிள்ளையளுக்கும் திரும்ப திரும்ப நினைவுவரும். நான் வவுனியா மதவாச்சி அல்லது அனுராதபுரம் போய் இருப்பனே தவிர திரும்ப வன்னிக்குப் போகமாட்டேன். எங்கட சொந்த பந்தங்கள் எங்கே எண்டு தெரியாது எப்படி கண்டுபிடிக்கிறது.
முகாம்கள் மூடவேணும். மூடுவது என்றால் எல்லோருக்கும் எப்படி வசதிகள் செய்து கொடுக்கப் போகினம். யார் பொறுப்பு. புலி இல்லை. அரசாங்கத்திடம் எப்படிக் கேட்பது. அவனை - சிங்களவனை - கொல்ல திட்டம் போட்ட இனம் எண்ட பெயர் எங்களுக்கு. எப்படிக் கேட்க முடியும். 25 வருஷம் சனத்தின்ரை வாழ்க்கை அனியாயம். 3 வருஷம் இந்த அகதிமுகாமில இருக்கலாம். பிரச்சினையில்லை. இருக்கிற வீடு ரென்ட் சரியில்லை. மழை காத்து எண்டால் பிரச்சினை. மற்றும்படி தண்ணி கக்கூசு பிரச்சினை.
முன்னர் கொழும்பில் விவேகானாந்தா மேட்டில் கொஞ்சநாள் இருந்தனான். அங்க பொதுக் கக்கூசு தான் அண்ணை பாவித்தனான். அப்பிடியும் சீவித்த எங்களுக்கு இது என்ன புதிசோ?. இப்ப கக்கூசு அது இது எல்லாம் எங்களுக்கு பழகிப்போச்சு. அதைவிட கக்கூசு எல்லாம் திருத்தியாச்சு.
காம்பிற்கு வந்த புதிசில மன அழுத்தம் - மனப்பிரச்சினை - பெரிதாக இருந்தது. இப்ப அப்படியில்லை. வெளிநாட்டில் உள்ள புலிகள் ஆட்கள் என்ன செய்கினம். புலி முடிஞ்சா போராட்டம் முடிஞ்சுதாமோ? எங்களைப்போல சனங்கள் கஸ்ரப்பட்ட நாடுகளில் எப்பவுமே போராட்டம்தான். இந்தியாவில் சேரிப்புற மக்கள் வாழ்வது என்ன வாழ்க்கையோ?. அது போராட்டம்தானே. அதோடை பார்க்கையில் நாங்கள் இருக்கிற முகாம்களில் சாப்பாடு கிடைக்கிறது.
அவரிடம் ”உங்கள் அனுபவங்கள் கண்டது கேட்டவை எல்லாத்தையும் எழுதமாட்டீங்களா” எனக்கேட்டதற்கு எனக்கு அப்படி எழுத பெரிசாய் வராது. பேசுவேன். 30 வருஷமாக உலகத்தில் என்ன நடந்ததென்றே தெரியாது. எல்லாம் ஒரு இருண்ட காட்டில் இருந்த மாதிரி ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வாழ்ந்திட்டோம்.
(இந்த நண்பர்கள் இன்றும் அகதிமுகாமில் இருக்கிறார்கள்)
இவர்களது வாக்கு மூலங்கள் மட்டுமல்ல இன்னும் பலவும் தேசம்நெற் இல் வெளிவரும். உள்ளதை உள்ளபடி அவர்களுடைய மொழியிலேயே பதிவு செய்ய முயற்சிக்கின்றோம். அவர்களுடன் உரையாடும் போது அவர்கள் பட்டதுன்பங்களையும் இயலாமையையும் வெளிப்படுத்தும் போது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வார்த்தைகள் இன்றி திக்குமுக்காட வேண்டியுள்ளது. குற்ற உணர்வில் மனம் குமைகின்றது. அவர்களிடம் கேள்விகளைக் கேட்கின்ற மனத்துணிவு வருவதில்லை. அவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதனை அவதானமாக கேட்டுக்கொண்டோம்.
Thesamnet
0 விமர்சனங்கள்:
Post a Comment