ஈசி(Easy)அரசியல் புரிந்து பழக்கப்பட்டு போன சில த.தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், சம்மந்தரும்-அர்ச்சுணன்!
மகிந்த அரசிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவுள்ளதாக சம்மந்தர் பி.பி.சி சிங்கள் சேவைக்கு தெரிவிப்பு!
குறுகிய மனபோக்குடையவர்கள் இலகு அரசியல் புரிவதற்கு இனவாதத்தையும், மதவாதத்தினையும் பயன் படுத்துவதில் பழக்கப்பட்டு போனவர்களாகும். தமது பதவிகளுக்காகவும் , சுகபோக வாழ்க்கைக்காகவும் தமது சொந்த மக்களுக்கு முன்னாள் உணர்ச்சி வாசகங்களை பேசி உசுப்பேற்றி விடுவதில் இவர்கள் வல்லவர்களாகும்.இத்தகைய மனப்போக்குடையவர்கள் தமது இனம் அழியும் தறுவாயில் இருக்கையில் கூட தமது சுயலாபங்களுக்காக அவர்களை பயன்படுத்துவதற்கு தயங்கமாட்டார்கள். அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து இன்றைய தமிழ் தேசிய கூட்டமைபு வரையில் இத்தகைய போக்குடைய சில பாராளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் அவதானிக்கலாம்.
மானமுள்ள தமிழா பொங்கி எழடா, விழித்தெழு தமிழா நாளை விடியுது தமிழ் ஈழம் என்றெல்லாம் இவர்கள் பேசுவார்கள். மக்களும் இதனை கேட்டுவிட்டு வாக்கு சாவடிகளுக்கு சென்று வீட்டிற்கு முன்னாள் புள்ளடி போட்டு விட்டு விடுதலைக்கான தமது பங்க்கினை செலுத்திவிட்டோம் என்ற பெருமிதத்தோடு தமது வீடுகளுக்கு தூங்க சென்றுவிடுவார்கள். வீர வசனம் பேசிய தலைவர்களோ பாராளுமன்ற பதவியினை பெற்று விட்டு இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டினை(diplomatic passport) பெற்றுக்கொண்டு வெளிநாடுகளில் படிக்கும் தமது பிள்ளைகளையும் மனைவிகளை பார்பதற்கு பயணித்து விடுவார்கள். மீண்டும் அடுத்த தேர்தலுக்கு வந்து பேரினவாத அரசுடன் பேரம் பேசுவதா, மானமுள்ள தமிழன் சிங்கள அரசுடன் பேசுவாதா என்பார்கள். மாவை சேனதிராஜாவும், சுரேஸ் பிரேமசந்திரனும் இதனையே கடந்த நான்கு வருடங்களாக செய்து கொண்டு இருக்கின்றார்கள். தற்போது இருக்கும் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்மந்தர் அரசுடன் சில விடயங்களை பேச முற்படுகின்ற போதெல்லாம் மாவை மற்றும் சுரேஷ் போன்றவர்கள் அவரை சுயமாக செயற்பட அனுமதிப்பதில்லை.
மகிந்தவிற்கு ஆதரவளிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு !
இடம்பெயர்ந்துள்ள மூன்று லட்சம் மக்களை மீள கூடியமர்த்துவதிலும், நீண்ட காலமாக இருந்துவரும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயங்களிலும் மகிந்த அரசிற்கு ஆதரவளிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இராசவரோதயம் சம்மந்தர் அவர்கள் திங்கட்கிழமை(31.Aug.3009) பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். ( We said we were prepared to support the President in his efforts to resolve the longstanding conflict,” Mr. Sampanthan said.) புலி அமைப்பு அழிந்ததோடு இலங்கைக்குள்ளேயே தீர்வு என்பது முடிவானதின் பின்னர் அரசுடன் எப்படியும் பேசிதானே ஆகவேண்டும். இனப்பிரசனைக்கான ஒரு தீர்வு ஒன்றினை மிகவிரைவில் கண்டாக வேண்டும் என்கின்ற அழுத்தம் சர்வதேச அளவிலும், பிரதானமாக இந்திய தரப்பில் இருந்தும் இலங்கை அரசிற்கு கொடுக்கப்படுவதினால் அரசு அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பேசவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது . ஆனால் இனவாதம் எனும் இலகு அரசியலை செய்தவாறு தமது பதவிகளை காப்பாற்ற முனையும் மாவை, சுரேஷ் போன்றவர்கள் சம்மந்தரை சுதந்திரமாக செயற்பட விடுவார்களா என்பதே கேள்வியாகும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களை அனைத்து தமிழ் கட்சிகளும் சென்று பார்ப்பது என்று முடியுசெய்யப்பட்டது. இதற்கு முன்னர் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக சென்று ஜனாதிபதியை பார்த்து அதற்கான அனுமதியை பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னர் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக சந்தித்து இருந்தனர். இதில் தமிழர் விடுதலை கூடணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ,பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா பிரிவின் செயலர் சிறீதரன், ஈ.பி.டி.பியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தர் ஆகியோர் வந்திருந்தார்கள்.
இடம் பெயர்ந்த மக்களை ஒன்றாக அனைத்து தமிழ் கட்சிகளும் சென்று பார்பதற்கான அனுமதியை ஜனாதிபதியிடம் சென்று கேட்பதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் கைய்யொப்பம் இடுவது என முடிவு செய்யப்பட்டது. தான் அரசில் அங்கம் வகிப்பதால் இதில் கைய்பொப்பம் இடமுடியாது என அமைச்சர் டக்களஸ் தயங்கிய போது, தம்பி நீரும் கைய்யெழுத்தை போடும் என சம்மந்தர் அமைச்சர் டக்கிளஸ் அவர்களை கேட்டிருந்தார். பின்னர் அமைச்சருக்கு பதிலாக அவரின் கட்சியினை சேர்ந்த ஒருவர் கைய்யொப்பம் இட்டது வேறு விடயம். அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து ஜனாதிபதியை பார்க்கவேண்டும் என்பதில் சம்மந்தர் எவ்வளவு அக்கறையாக இருந்தார் என்பதினை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக இந்த சந்தர்ப்பத்தினை இங்கு கூறுகின்றேன். இவ்வாறு சம்மந்தர் கையொப்பம் இட்டுவிட்டு அடுத்த தினம் அவர் ஜனாதியை பார்பதற்கு செல்லவில்லை. ஏனெனில் மாவை, சுரேஷ் ஆகிய இருவரும் இவரை அனுமதிக்கவில்லை.
எப்பொழுதுமே எதிர்மறை அரசியல் (Negative politics)செய்து பழக்கப்பட்டு போன எமது சிலர் தலைவர்கள்!
அரசு எதனை கூறினாலும் அதனை எதிர்க்கவேண்டும், எதற்கு பேச அழைத்தாலும் அதனை மறுக்க வேண்டும் எனபதினையே அன்று தொடக்கம் இன்று வரையில் கூட்டமைப்பினரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அரசுடன் பேசுபவர்கள் தமிழின துரோகிகள் என்று புலிகள் தமது காலத்தில் மக்கள் மத்தியில் போதித்து இருந்தார்கள். இந்த பதம் இலகு அரசியல் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு பெரிதும் உதவியதினால் அதனை அவர்கள் வளர்த்து எடுத்து வந்தார்கள். (புலிகள் ரணில் விக்கிரமசிங்காவை தோற்கடிப்பதற்கு திரை மறைவில் பல கோடிகளை பெற்றதும், தமது சொந்த தேவைகளுக்காக சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச தலைவர்களை பின் கதவால் சென்று சந்திப்பதும், பாவம் அப்பாவி மக்களினால் அறிய முடிவதில்லை).
மறைந்த மலையக தலைவர் தொடண்டமான் கூறுவார், உங்கள் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதில் அல்ல வாதம் செய்வதில் மட்டுமே வல்லர்கள் என்பார். (Your leaders are good advocates but not negotiators) அவர் ஆங்கிலத்தில் கூறியதினை நான் இங்கு மொழி பெயர்ந்து இருக்கின்றேன். எதிர் மறை அரசியல் இலகு அரசியல் என்பதினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சிலருக்கும் இது பெரிதும் பிடித்து போனது. பேரினவாத அரசுடன் பேசி பயனில்லை. தமிழ் ஈழமே தமிழர்களுக்கு ஒரு தீர்வு என இவர்கள் கூறிவிட்டு வெளிநாடுகளில் படிக்கும் தமது பிள்ளைகளை பார்க்க சென்று விடுவார்கள். பாராளுமன்றத்திற்கு கூட பல மாதங்கள் இவர்கள் செல்வதில்லை. வெளிநாடுகளில் இருந்து மருத்துவ விடுமுறை கடிதம் அனுப்பியவாறு இருப்பார்கள். இலங்கைக்குள்ளேயே தீர்வு என்றதின் பின்னர் அரசுகளுடன் பேசாது எவ்வாறு தீர்வு காண்பது. ஆனால் பேசுவது எனபது எமது தனித்துவத்தை இழக்காது உரிமைகளை விட்டு கொடுக்காது வரையறை ஒன்றிக்குள் இருந்து பேச முற்பட வேண்டும். இதனைதான் 31 ஆம் திகதி ஆகஸ்ட்மாதம் லண்டன் நகரில் அண்ணண் அமீர் அவர்களின் 82 ஆவது பிறந்த தின மற்றும் ஞாபகார்த்த நிகழ்வில் பிரதம பேச்சாளராக கெளரவிக்கப்பட்டு இருந்த முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கூறியிருந்தார்.
குருட்டுதனமான தேசிய வாதம் பேசுவதினையும், அரசின் காலடியில் சரணாகதி போக்கில் போவதினையும் தவிர்த்து , தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து பேரிணவாத அரசுகளிடம் இருந்து எமது உரிமைகளை பேசி பெற்றெடுக்க வேண்டும் என கூறியிருந்தார். தமிழர்களுக்கு பயன் தரக் கூடிய சில கருத்துக்களை கூட ,அதனை அரசு கூறுவதினால் அதற்கு காரணம் கற்பித்து நிராகரித்து வருவதிலேயே சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஏனெனில் இது இலகு அரசியல் ஆகும்.
சம்மந்தரா?தனது இளம் வயதில் சிறந்த கல்வி வாதியாக விளங்கிய இராசவரோதயம் சம்பந்தர் அவர்கள் 21 வயதிலேயே வழங்கறிஞராக சித்தி எய்தியிருந்தார். 1976 ஆம் ஆண்டளவில் வழக்கறிஞராக பணி புரிவதில் சம்மந்தர் மிகவும் ஆர்வமாக இருந்தவேளை அவரின் ஆங்கில ஆழுமையையும், கல்வி திறனையும் கண்டறிந்த தந்தை செல்வா அவர்கள் 1977ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் இவரை போட்டியிட வைத்திருந்தார்.இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிகளாகவும், புலிகளின் தலைவரை தமிழர்களின் தேசிய தலைவராகவும் ஒப்புக்கொண்டே இவர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தார். தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அமீர் உட்பட , பல தமிழ் தலைவர்களும் மாற்றுக் கட்சி உறுப்பினர்களும் புலிகளினால் கொல்லப்பட்ட போது இவர் அதனை ஒரு போதும் கண்டித்தது இல்லை.
வன்னிக்குள் இறுதிக் காலகட்டதில் புலிகள் தமது படையில் சிறார்களை இணைப்பதற்காக வலுக்கட்டாயமாக இழுத்து செல்கையில்,அப்படி ஏதும் நடக்கவில்லையென ஏனைய த.தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுத்திருந்தார்கள். இவர் இதற்கு மெளனம் கடைப்பிடித்து இருந்தார். சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா (CBK) ஜனாதிபதியாக இருக்கையில் நீலன் திருச்செல்வம் அவர்கள் ஒரு தீர்வு திட்டத்தினை தாயரித்து இருந்தார். அவர் அதனை தயாரிக்கையில் அவருக்கு ஊக்கம் கொடுத்து ஒத்துழைப்பும் கொடுத்துவிட்டு சம்மந்தர் பின்னர் காலை வாரியிருந்தார். இவரும் கூட்டணியினரும் ஆதரவு கொடுத்து இருந்தால் அந்த தீர்வு பொதியினை சந்திரிகா பாராளுமன்றத்தில் சமர்பித்து இருந்திருப்பார். மேலும் அண்மையில் இடம் பெயர்ந்த மக்களை அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து பார்ப்பதற்கும் அது தொடர்பாக ஜனாதிபதியை சென்று சந்திப்பதற்கும் அனைத்து கட்சிகளுடன் இணைந்து கைய்யொப்பம் இட்டுவிட்டு அடுத்த தினம் அவர் ஜனாதிபதியை சென்று பார்க்கவில்லை. இப்படியாக பல தடைவைகள் காலை வாரியிருக்கின்றார்.
இருந்த போதும் தமிழ் மக்களுக்கு ஒரு முறையான நிரந்தர தீர்வு ஒன்றினை தனது கால கட்டதில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்ற ஏக்கம் அவருக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது. எனது 40 வருட அரசியல் வாழ்வில் தமிழ் மக்களுக்கு நான் ஒன்றும் செய்யவில்லையென வெளிநாட்டு தூதுவர் ஒருவருக்கு மனம் திறந்து சம்மந்தர் கூறியிருக்கின்றார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினரும், கொன்சவேட்டிவ் கட்சியின் உறுப்பினருமான லியாம் வொக்ஸ் (Liam Fox) அவர்கள் இலங்கை சென்ற பொழுது சம்மந்தர் அவரை சந்தித்து பேசியிருந்தார்.
இலங்கையின் தேசிய இனங்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மஹிந்த எடுக்கும் முயற்சிகளுக்கு நீங்கள் ஆதரவளியுங்கள் என அவர் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க ஜனாதிபதியுடன் ஒத்துழைப்பதென தமது கட்சி முடிவெடுத்தாக சம்மந்தர் பி.பி.சி சிங்கள சேவைக்கு கூறியிருந்தார். ஜனாதிபதியை இம்மாதம் 7 (2009-09-07) ஆம் திகதி சந்திப்பதற்கு அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
சம்மந்தர் இவ்வாறு பல முறை கடந்த காலங்களில் சிங்கள அரசுகளுடன் பேசி ஒரு இணக்கம் கால முற்பட்ட வேளையில் எல்லாம் புலிகளினாலும், இலகு அரசியல் செய்து பழக்கப்பட்டு போன மாவை, சுரேஷ் போன்றவர்களினால் தடுக்கப்பட்டு வந்துள்ளார். இலங்கைக்குள்ளேயே தீர்வு காணவேண்டும் என்று இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் கூறும் பொழுது அரசுடன் எப்படியாவது பேசியே ஆகவேண்டும். ஆனால் மாவை மற்றும் சுரேஸ் போன்றவர்களின் சொல்லை மீறி சம்மந்தரால் செயற்பட முடியுமா என்பது ஒரு கேள்வியாகும். தனது காலத்தில் தமிழர்களுக்கு ஏதும் இவரால் பெற்றுக்கொடுக்க முடியுமா ? அல்லது இலகு (easy politics) அரசியலுக்குள் இவர் இழுக்கப்பட்டு விடுவாரா? இதனை பொறுத்திருந்துதான் பார்கவேண்டும்.






0 விமர்சனங்கள்:
Post a Comment