பரமேஸ்வரன் சுப்ரமணியம் ‐ ஸ்கொட்லண்ட்யார்ட் ‐ UK பத்திரிகைகள் ‐ கறையை கழுவப் போவது யார்?
லண்டன் டெய்லி மெயில், த சண், ஈவினிங் ஸ்ரான்டர்ட் போன்ற பத்திரிகைகள் உட்பட லண்டன் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு செய்தி இன்று சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் நேற்று வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு தகவல்களைக் கொண்டதாக அந்தச் செய்தி இருந்தது.
முதலாவது பரமேஸ்வரன் சுப்ரமணியம் என்ற தமிழ் இளைஞர் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதிக்கான பொலிஸாருக்கான மேலதிகக் கொடுப்பனவு 7.1 மில்லியன் பவுண்கள் என்பது. பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரதம் இருந்த 72 நாட்களும் 24 மணிநேரமும் 29838 பொலிஸார் கடமையாற்றியதற்கான மேலதிகக் கொடுப்பனவே இது என்று அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இரண்டாவது பரமேஸ்வரன் சுப்ரமணியம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இரகசியமாக மக்டொனால்ட் பேகர் சாப்பிட்டார் என்பது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த யுத்தத்தை நிறுத்தக் கோரி புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர் போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள்.
லண்டனிலும் பாராளுமன்றிற்கு முன்பாக தமிழ் மக்கள் ஒன்றுகூடிப் போராட்டம் நடாத்தினார்கள். அதன் ஒரு அங்கமாக 28 வயதான பரமேஸ்வரன் சுப்ரமணியம் தொடர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டு வந்தார்.
பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதி மொழியைத் தொடர்ந்து ஜுன் 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கைவிடுவதாக அறிவித்தார். இன்று வரை பிரித்தானிய அரசு வழங்கிய உறுதி மொழி என்னவென்று எவருக்கும் தெரியாது.
பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில் ஸ்கொட்லண்ட்யார்ட் விசேட பொலிஸார் விசேட கண்காணிப்புக்கருவியைக் கொண்டு கண்காணித்ததில் பரமேஸ்வரன் ரகசியமாக மக்டொனால்ட்டின் பேகர் சாப்பிடுவதை தாம் அவதானித்ததாகவும் தம்மால் அதனை நம்பமுடியாமல் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த கூடாரத்துக்கு வெளியே மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்ததாலும், உடனடியாக அது பற்றிக் கருத்துத் தெரிவிப்பது வன்முறைக்கு வித்திடலாம் எனக் கருதியதாலும் தாம் அது பற்றி அப்போது எதுவும் பேசவில்லை என்றும் ஸ்கொட்லண்ட்யார்ட் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாகவும் அப்பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் இவ்விடயங்கள் தொடர்பாக ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் உத்தியோகபூர்வமாக கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை.
ஏப்ரலில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டுக்குப் பொலிஸாருக்குச் செலவிட்ட பணத்தை விடப் பலமடங்கு பணம் இந்தப் போராட்டத்தின் போது செலவிட நேர்ந்ததாகவும், 2006இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு செலவிட்ட பணத்தற்கு நிகரானது இந்தச் செலவு என்றும் அப்பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. அதன் போது 7.3 மில்லியன் பவுண்கள் செலவிடப்பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது பொலிஸாருக்கு 21. 7 மில்லியன் பவுண்கள் செலவிடப்பட்டிருந்தன என்றும் அப்பத்திரிகைகள் செலவுக்கணக்கு எழுதியிருந்தன.
இந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் எவையும் பரமேஸ்வரன் சுப்ரமணியத்துடன் தொடர்பு கொண்டு அவருடைய கருத்தை இது பற்றி கேட்டிருக்கவில்லை. ஆனால் இன்டிபென்டன்ட் மட்டும் இதில் விதிவிலக்கு.
இன்டிபென்டன்ட் இது பற்றி அவருடன் தொடர்பு கொண்ட போது அவர் இச் செய்தியை மறுத்திருக்கிறார். உண்ணாவிரத நேரத்தில் மக்டொனால்ட் பேகர் மட்டுமல்ல எந்த உணவையும் உண்ணவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது உண்ணாவிரதப் போராட்டத்தையும் அதன் பலத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு முயற்சி. ஓரு முழுமையான பொய் என்று குறிப்பிட்ட அவர் இது குறித்து தாம் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸாருடன் தொடர்பு கொண்டதாகவும் தாம் அவ்வாறான செய்தி எதனையும் வெளியிடவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இது இலங்கை அரசாங்கத்தின் ஒரு திட்டமிட்ட சதி என்று குறிப்பிட்ட அவர் இந்தப் பத்திரிகைகளுக்கு எதிராக தாம் வழக்குத் தொடர ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்குப் பின்னூட்டமிட்ட பிரித்தானியர்கள் பலர் இலங்கைத் தமிழர்கள் இதனூடாகத் தம்மை முட்டாள்களாக்கி விட்டதாகச் சினந்து கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமது வரிப்பணம் இன்றுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில் அநியாயமாகச் செலவழிக்கப்பட்டிருக்கிறது என்கிற கோபம் இருப்பது அவர்களது எழுத்தில் வெளிப்படுகிறது.
இன்னும் சிலர் பிரித்தானிய அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டை மிக மோசமானது என்று கண்டித்திருந்தார்கள். அவர்களிலும் தீவிரமான சிலர் இலங்கைத் தமிழர்களுக்கு இப்போது அங்கு பிரச்சினை தீர்ந்து விட்டது தானே. எனவே அவர்கள் எல்லோரையும் திருப்பி இலங்கைக்கு அனுப்பி விட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கு எதிராக வேறு சில அபிப்பிராயங்களும் இல்லாமல் இல்லை. ஸ்கொட்லண்ட்யார்ட் 7.1 மில்லியன் பவுண்களுக்குக் காட்டிய கணக்குத் தான் இது என்றும், போராட்டம் நடைபெற்ற போது வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு லண்டன் நகரப்பகுதி இடரை எதிர்கொண்ட போது இந்தப் போராட்டத்தை முறியடிக்க பொலிஸார் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். அதற்குப் பதிலாக அதன் போது இந்த உண்மையை வெளியிட்டிருந்தால் இவ்வளவு நீண்ட நாட்கள் வீதித்தடைகள் இல்லாமல் போராட்டம் எப்போது முடிந்து விட்டிருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்னும் சிலர் போக்குவரத்து விதிகளை மீறினாலே போக்குவரத்துப் பொலிஸாரிடமிருந்து படத்துடன் தண்டம் கட்டச்சொல்லி கடிதம் அனுப்பப்பட்டு விடும். ஆனால் இவ்வாறான ஒரு பாரிய பிரச்சினைக்கு வெறுமனே அவர் பேகர் சாப்பிட்டார் என்று சொல்லியிருப்பது ஏன்? அவர் பேர்கர் சாப்பிடுவதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு விட வேண்டியது தானே என்றும் கேட்டிருக்கிறார்கள். அது மட்டுமன்றி இவ்வாறான ஒரு விடயத்தை வெளிப்படுத்த ஏன் இவ்வளவு காலம் எடுத்திருக்கிறது என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.
ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் உத்தியோகபூர்வமாக இது குறித்து எதுவும் தெரிவிக்காத நிலையில் தாம் வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அப்பத்திரிகைகள் மேல் விழுந்து விடுகிறது.
அவர்கள் இதனை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இழந்தவர்களாகி விடுவது மட்டுமல்ல அப்பத்திரிகைகளுடைய ஊடக அறம் கறை படிந்ததாகவும் ஆகிவிடும்.
மறுபுறத்தில் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கறையைக் கழுவி தமிழ் மக்களுடைய போராட்டத்தின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டியது பணி பரமேஸ்வரன் சுப்ரமணியத்தின் கைகளில் இருக்கிறது.
- GTN
0 விமர்சனங்கள்:
Post a Comment