அகதிகள் படகு அவுஸ்திரேலிய கடலில் மூழ்கியதில் 20 பேர் பலி- இலங்கையராக இருக்கலாம் என அச்சம்
இலங்கையர் அடங்கலாக புகலிடம் கோருவோர் என நம்பப்படும் 39 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சட்டவிரோத படகு ஒன்று நேற்றைய தினம் அவுஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்பரப்பில் மூழ்கியதில் அதில் பயணித்தவர்களில் 20 பேர் நீரில் மூழ்கி மரணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 39 சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற மேற்படி படகே கடற் கொந்தளிப்பு காரணமாக கடலில் மூழ்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அந்த மார்க்கத்தால் பயணித்த வாடகைக் கப்பல் ஒன்றும், மீன்பிடிப் படகு ஒன்றும் மேற்படி படகிலிருந்தவர்களை மீட்க பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்ட போதிலும் 17 பேரையே உயிருடன் மீட்க முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும், திங்கட் கிழ மை பொழுது புலர்வதற்கு முன் எல் என்ஜி பயனியர் எண்ணெய்க் கப்பல் ஒன்று அந்தப் பிரதேசத்தில் தாய்வான் மீன்பிடி படகு ஒன்றுடன் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தைக் கண்டு உடனடியாக விரைந்து உயிர்காப்பு தெப்பங்களை வீசியதில் படகில் இருந்தவர்களில் 17 பேரை காப்பாற்ற முடிந்தது என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிதனர். அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு செல்லும் படகுகளில் இது ஒன்றாக இருக்குமோ என்று உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த வருடத்தில் இது வரை 1,700 பேர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் அநேகமானோர் ஆப்கானிஸ்தானையும் இலங்கையையும் சேர்ந்தவர்களாவர்..
கப்பல் கவிழ்ந்து பல மணிநேரம் சென்றுவிட்டதால் எஞ்சியோர் இன்னமும் உயிருடன் இருப்பார்களா என்ற கவலை எழுந்துள்ளதாக அவுஸ்திரேலிய கடல்சார்பாதுகாப்பு அதிகாரசபையின் பேச்சாளர் ஒருவர் ஏஎவ்பி செய்தி ஸ்தாபனத்திடம் தெரிவித்தார். எல்என்ஜி பயனியர் கப்பல் இன்னமும் அப்பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த பெண் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். மேலும் பலரை காப்பாற்றும் முயற்சியில் பயனியர் கப்பல் உயிர் காப்பு தெப்பங்களை வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது..
இதேவேளை அவுஸ்திரேலிய மீட்புக் கப்பல் ஒன்று 24 மணித்தியாலத்திற்கு மேலாக அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் பிரென்டர் ஓகோணோர் தெரிவித்தார். விமானப்படையின் வேவு விமானம் ஒன்றும் உடனடியாக அனுப்பப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.கடலில் தத்தளிப்பவர்களை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதேவேளை படகில் சென்றவர்கள் யார்? என்ன நோக்கத்துடன் எங்கு செல்ல புறப்பட்டார்கள்? என்பதும் ஆராயப்பட வேண்டுமென அமைச்சர் ஓகோணோர் தெரிவித்தார்..
முதலில் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். பின்னர் மற்ற விடயங்களை விசாரிக்கலாம் என்று கூறிய அவர், கிறிஸ்மஸ் தீவிலுள்ள அதன் பிரதான அகதிகள் முகாமை அவுஸ்திரேலியா இரட்டிப்பாக விஸ்தரிக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் கூறினார். இதற்கிடையில், ஏற்கனவே அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலால் காப்பாற்றப்பட்டு தற்போது இந்தோனேசியாவில் கப்பலிலிருந்து இறங்க மறுக்கும் 78 இலங்கை அகதிகள் தொடர்பாக இந்தோனேசியாவுடன் அவுஸ்திரேலியாவுக்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment