எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! (புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரை 2009)
முதலில்.. கடந்த 37வருடமாக எதிரிகளிடமிருந்து நமது மண்ணை மீட்பதற்காகவும், மீட்கப்பட்ட மண்ணை காப்பதற்காகவும் தங்கள் இன்னுயிர்களை நீர்த்து யாருக்குமே விலைபோகாமல், வீரகாவியம் படைத்த நமது தமிழீழ மாவீர செல்வங்களை நாம் உயிர் உள்ளவரை சிரம் தாழ்த்தி வணங்கி நிற்போமாக.. நமது தமிழீழதேசத்தை எதிரியிடமிருந்து மீட்டு ஒரு சுதந்திர தமிழீழ தேசமாக உங்கள் கைகளில் தருவதற்காக நமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் எண்ணிலடங்காதவைகள். அந்த மாவீர புருசர்களை கருவில் சுமந்த அன்னையர்களின் கண்ணீர் கதைகளும் எண்ணிலடங்காதவைகள் வார்தைகளிலோ, எழுத்துக்களிலோ வடிவமாக்கி காட்ட முடியாதவைகள். நாம் நமது தாய் மண்ணை எதிரியிடமிருந்து காப்பதற்காகவும், நமது மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காகவும் எதிரியோடு நமது உயிரையும் நம்மிடமிருந்த எல்லா வழங்களையும் பயன்படுத்தி தனித்து நின்று நம்மால் முடிந்தவரை போராடினோம்.
துன்பங்களின் சுமைகளிலிருந்து ஒவ்வொரு கணமும் மீள்வதற்காய் தாயக மண்ணில் எம்மோடு வாழ்ந்த ஓவ்வொரு போராளியும், அந்த போராளிகளோடு வாழ்ந்த மக்களும் போராடினார்;கள், போராடி மடிந்தார்கள். நாங்கள் முழைத்து, முழைத்து எழுந்த பொழுதெல்லாம் ஈவு, இரக்கம் ஏதுமின்றி எதிரியானவன் விமானக் குண்டுவீச்சின் மூலமும், செல்கள் மூலமும் நம்மை நீர் மூலமாக்கினான். எதிரியானவன் நம்மோடு போராடி வெற்றி பெறவில்லை வல்லாதிக்க சக்திகளை தனது வஞ்சக வலையில் வீழ்த்தி, அவர்கள் கொடுத்த நாசகார ஆயுதங்கள் மூலம் நம்மையும், நமது மக்களையும் அழித்தார்கள் என்பது தான் உண்மை. உலகத்தில் எந்தவொரு தேசத்திலும் நடக்காத ஓர் மனித பேரவலத்தை சிங்கள தேசமும், இந்திய, சீன தேசங்களும் ஒன்று சேர்ந்து நடத்தினார்கள்.
மரணத்தின் அவல ஓலங்கள் நம் தாயக பிரதேசம் எங்கும் ஒலித்த போதும் இந்த மானிடவுலகம் ஏன் நம்மை திரும்பிக்கூட பார்க்கவில்லை? காரணம் யாதென்று நாம் அறிந்து கொண்டதே நம்முடைய கடைசிக்கட்ட போரில் தான் நாம் உணர்ந்து கொள்ள கூடியதாக இருந்தது. அதற்குள் நாம் முழுவதுமாய் அழிக்கப்பட்டு விட்டோம்.
நமக்கு எதிரியானவன் இவன் என்று யாரை நினைத்து அவனுடன் சண்டை பிடித்தோமோ அவன் எங்களுக்கு உண்மையான எதிரியில்லை. நாம் எப்படி நமது தேசத்தை மீட்பதற்காககவும், நமது இறமையை நிலைநாட்டுவதற்கும் போராடினோமோ அதே நிலையிலிருந்து தான் அவனும் நம்முடன் போராடினான். நம்முடைய எதிரி நமுக்குள்ளேயும், நமது பக்கத்து நாட்டிலும் தான் இருந்தான். அவன் நம்மோடு நண்பனாக இருப்பதாகவும், நமக்கு எதாவது நடந்தால் நம்மை காப்பாற்ற ஓடி வருவதாகவும், உங்களினமான தமிழர்கள் நமது நாட்டிலே ஆறரைகோடி பேர் இருக்கின்றார்கள் என்றும், நமது தமிழீழத்தை தாங்கள் அங்கீகரித்தால் மட்டுமே மற்றைய நாட்டவர்களும் உங்களை அங்கீகரிப்பார்கள் எனவும் சொல்லி 37வருடமாக எங்கள் போராட்டத்துக்கு பக்கபலமாக இருப்பதாக பாசாங்கு காட்டி கடைசியில் நமது காலையே வாரி கடலுக்குள் மூழ்கடித்து விட்டான். அவன் யார்; என்று உங்களுக்கு புரிகிறதா? அவன்தான் நமது பக்கத்து நாட்டுக்காரனான இந்தியர்கள்.
அன்றே நம்மவர்கள் அறியாமலா சொன்னார்கள் ‘வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பாதே” என்று அது நூற்றுக்கு நூறுவீத நான் கண்ட உண்மையாகும். இந்தியா என்கின்ற தேசத்தவனால் தான் எங்கள் தேசத்தை அங்கீகரிக்க இருந்த மேற்குலகத்தினர்களே அங்கீகரிக்க மாட்டோம் என கடைசியில் கைவிரித்து மறுத்து விட்டார்கள். சிங்களவர்கள் தமிழர்களுக்கு மாவட்ட சுயாட்சியை கொடுக்க நினைத்தால்கூட இந்திய தேசத்தவன் ஒருகாலமும் சம்மதிக்க மாட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ள தவறி விட்டோம்.
எனி வருங்காலங்களில் நமது விடுதலைப் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்றால் பக்கத்து நாட்டவனான இந்திய துரோகிகளை நாங்கள் ஒருகாலமும் நம்முடன் கூட்டுச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. முக்கியமாக வெளிநாடுகளில் நமது மாவீரர் தினவிழாவுக்கு இந்திய தமிழக அரசியல்வாதிகளை நீங்கள் அழைத்து அவர்களை முன்னிறுத்தி, அவர்களை கௌரவப்படுத்தி எதாவது செய்வீர்களானால் அது எங்கள் மண்ணுக்காக உயிர் நீர்த்த மாவீரர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமாகும் என்பதை புலம்பெயர் தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
புலம்பெயர் தேசத்து தமிழ் மக்களே!
நீங்கள்தான் இந்த தமிழீழ தேசவிடுதலை போராட்டத்துக்கு முதுகெலும்பாக இருந்து இதுவரை காலமும் உதவி புரிந்தீர்கள். அதனால் தான் நாம் இந்த விடுதலை போராட்ட இயக்கத்தை உலகிலேயே இவ்வளவு ஓர் பலம்பொருந்திய இயக்கமாக கட்டி எழுப்ப முடிந்தது. உங்களுடை ஒவ்வொரு துளி இரத்ததின் உழைப்பானது வீணாகி போய் விட்டது என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்.. இன்று உங்களால் தான் மேற்கத்திய தேசத்தினர் நமது போராட்டத்தின் நியாயத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள பேரினவாதிகள் என்றுமே நமக்கு எந்தவுரிமையையும் தரபோவதில்லை என்பதை சர்வதேசத்தினர் மிகவும் நன்றாக இன்று புரிந்து வைத்துக் கொண்டுள்ளார்கள்.
நம்மிடம் மிகுந்த பணபலம், ஆள்பலம், ஆத்மபலம், ஆயுதபலம் இருந்தும் நாம் இன்று தோல்வியின் உச்சத்தில் இருக்கினறோம் என்றால் நானும் இந்த இயக்கத்தை வழிநடத்தியவன் என்ற ரீதியில் பல பிழைகள் விட்டிருக்கலாம், எனக்கு தெரியாமல் நமது இயக்கத்திலிருந்தவர்கள் பல பிழைகள் செய்திருக்கலாம், நாம் நல்லவர்கள் யார்;? கெட்டவர்கள் யார்;? ஏன தெரியாமல் எல்லோரையும் நம்பி நடந்திருக்கலாம். ஓவ்வொரு மனிதனும் அவனின் வாழ்நாள் முழுவதும் எதாவது தவறுகள் செய்யது கொண்டு தான் இருக்கிறான். செய்த தவறுகளை மீண்டும் சீர்செய்து பார்ப்பதும் அதை திரும்பவும் செய்யாமலிருப்பதும் மனித இயல்பு தானே.
இதைவிட நமது இயக்கத்துக்குள்ளே பல காட்டிக் கொடுப்புகளும், துரோகத்தனங்களும், துதிபாடுதல்களும் நிறையவே இருந்ததாலும், நமது இயக்கத்தின் பணபலத்தை சுரண்டுவதற்காக வெளிநாடுகளிலும், தமிழ் நாட்டிலும் எங்களுக்காக உதவி செய்வதாக சொல்லி எங்களை ஏமாற்றியவர்களும் தான் முக்கியமாக நமது போராட்டம் தோல்வி அடைய காரணமாகும்.
நாம் தோற்றதில் கூட ஓர் நற்செய்தி கிடைத்திருக்கிறது. அதாவது இதை நாம் ஓர் படிப்பினையாக எடுத்துக் கொண்டு எனி வருங்காலங்களில் எல்லோரையும் நல்லவர்கள் என்று நம்பாமல், குறிப்பாக வெளிநாடுகளில் நமது இயக்கத்துக்குள்ளே புகுந்திருக்கும் களைகளை நீக்கி புலம்பெயர் புத்திஐPவிகளையும், புலம்பெயர் தேசத்து நமது இளம் சமூதாயத்தினரையும் ஒன்றிணைத்து, தமிழர்களாகிய நாம் எல்லோரும் சகோதரர்கள் என்றாகி சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகி விட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக..
மேற்குல நாடுகளும், ஐ.நா. சபையினரும் கூட மனிதவுரிமைகள் மீறல்கள் சம்பந்தமாகவும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள், தீர்வு திட்டம் சம்பந்தமாகவும் சிங்கள தேசத்துக்கு எதிரான ஓர் நிலைபாட்டை எடுத்துள்ளார்;கள் என்பது இப்பொழுது தெளிவாக தெரிகின்றது. இத்தருணத்திலே நமக்கு ஆதரவாக உள்ள சர்வதேசத்தினரை அரவணைத்துக் கொண்டு நமது போராட்டத்தை புலம்பெயர் தமிழர்களாகிய நீங்கள் தான் தொடர்ந்து நமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்
நமது தேசத்தில் வாழும் மக்கள் இப்பொழுது வாழ்வா அல்லது சாவா என்ற நிலையில் உள்ளார்கள் அவர்கள் முடிந்தவரை போராடிக் களைத்துவிட்டார்கள். அவர்களிடம் எனிமேல் போராடுவதற்கு உடல் ரீதியாவும், உள ரீதியாவும் எந்தவித சக்தியும் இல்லை. 37வருடங்களாக நாம் நடத்திய தேசவிடுதலைப் போராட்டம் இறந்து விடவில்லை இப்பொழுது தான் பிறந்துள்ளது.
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நமது சுதந்திர விடிவிற்காகத் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என மனதில் உறுதிகொண்டு நிற்போமானால் வரலாற்றை புதுபித்துக் காட்டலாம். விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை போராடுவோம்.
எனிமேல் எந்த ஒருகாலத்திலும் சீமான் சொல்லுகிறான், நெடுமாறன், கோபாலசாமி சொல்லுகிறான் என்று நம்ப வேண்டாம். நான் நேரடியாக உங்களுக்கு சொல்லுகிறேன் இந்தியனை எனிமேலும் நீங்கள் நம்பி நடப்பீர்களானால் பல இலச்சம் நமது இன்னுயிர்களை நாம் இழந்தாலும் நமக்கு கிடைக்க போவது ஒன்றுமில்லை. இது நான் நடத்திய 37வருட போராட்டத்தின் அனுபவத்தில் கற்றுகொண்ட ஒரு உண்மையாகும். அவர்களால் தான் நாம் முள்ளிவாய்கால் பிரதேசத்தில் நமது பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களையும், பல ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களையும் வீணாக இழந்தோம். நாம் நம்மை மட்டும் நம்பி போராடினால் நிச்சியமாக நமது போராட்டம் வெற்றியடையும்.
நமது தமிழீழ தாய் நாட்டுக்காக போராடி உயிர் நீர்த்த அத்தனை ஆத்மாக்களும் இறந்து விட்டதாக நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு உன்னதமான இலட்சியத்திற்காக உயிர் நீர்த்தவர்கள் நம்முடைய மாவீரர்கள் அவர்கள் எந்த இலட்சியத்துக்காக எம் மண்ணில் மரணித்தார்களோ அந்த இலட்சியத்தை அவர்கள் அடையவில்லை. அவர்கள் எதற்காக தங்களின் உயிர்களை மாய்த்தார்களோ அந்த இலட்சியம் நிறைவேறவில்லை என்கிற பொழுது அவர்களின் ஆத்மாக்கள் நம்மோடு, நமது உயிர் மூச்சோடு கலந்து நம்மிடையே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்;கள் என்பது தான் உண்மை. அவர்களின் ஆத்மாக்களை நாம் உயிர்பிக்க வேண்டும் என்றால் அவர்கள் கண்ட கனவை நாம் நிறைவேற்றி காட்ட வேண்டும்.
இந்த மானிடவுலகத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் உயிர் வாழும்வரை எமது வீரமறவர்களைப் நேசித்து, பூசித்து வணங்குவீர்களானால் அவர்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வருவார்;கள். மீண்டும் அவர்கள் கொண்ட இலட்சியம் நிறைவேறும் என்பது உறுதி.
எமது மாவீரர்கள் இந்த மண்ணிலேதான்; பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணில் தான் தங்கள் உயிரை துறந்தவர்கள் இந்த மண்ணின் ஒவ்வொரு அணுவிலும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்;கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் இங்கேதான் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக, கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்த பூமியை இன்று அன்னியர்கள் அபகரித்துக் கொண்டுள்ளார்;கள். நாம் அவர்களின் பூமியின் ஒரு அங்குலத்தை கூட அபகரித்துக் கொள்ள முற்படவில்லை.
இலங்கை தீவானது சிங்களவர்களுக்கோ, தமிழர்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ உரித்தானதல்ல. பழைய புராணக்கதைகளையும், பழைய சரித்திரக் கதைகளையும் நாம் இங்கே பேச முற்படக் கூடாது. இந்த இலங்கை தாய் நாட்டில் யார்;, யார் பிறந்து இந்த இலங்கைதீவின் காற்றை சுவாசித்து வாழ்ந்தார்களோ அல்லது வாழ்கின்றார்களோ அவர்கள் யாவருக்கும் இந்த நாடு சொந்தமானது என்பதை சிங்களம் எப்பொழுது புரிந்து கொள்கின்றதோ அன்று தான் இந்த அழகிய இலங்கை தீவில் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
.எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து, சரித்திரமாகி விட்ட எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.. (இதனை உங்களுக்கு புலிகளின்குரல் வானொலி ஊடாகவோ தொலைக்காட்சி ஊடாகவோ அன்றில் நேரடியாகவோ உரையாற்ற முடியவில்லை.. ஆயினும் உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமெனும் நோக்கில் மேலுலகத்திலிருந்து எனது ஆத்மாவின் ஊடாக உரையாற்றி உள்ளேன்.)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தலைவர் வே.பிரபாகரன்
ஆக்கம் - கபிலன்
அதிரடி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment