ஹபரணத் தாக்குதல், நாவற்குழி சம்பவம், கிட்டு மீதான தாக்குதல்!
குயில்களின் கூவல்களும் பட்டாசுகளின் ஓசைகளும் முற்றாக ஒய்ந்துவிடவில்லை.
தமிழ் - சிங்கள மக்களது வசந்த திருவிழா என்ற வகையில் பெயர் பெற்றிருக்கும் தமிழ் - சிங்களப் புத்தாண்டு நிறைவடைந்து சில தினங்கள் கடந்திருந்த நிலையில் இயற்கையின் தன்மையிலும் பொதுமக்களது மகிழ்ச்சியிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.
ஏப்ரல் மாதம் 17 ம் திகதி. நேரம் மாலை 3.10 இருக்கும். ஹபரண, கிதுல்ஒடுவ பகுதியில் சூரியன் மெல்ல, மெல்ல சாய்ந்து கொண்டிருந்தான்.
இதனிடையே ஹபரண – திருகோணமலை வீதியில் பஸ் வண்டி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ் வண்டி கிதுல்ஒடுவ இராணுவப் பிரிவைத் தாண்டி சுமார் 3 மைல் தூரம் ஹபரண பகுதி நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்நேரத்தில் சிகப்பு நிறக் கொடியொன்றை ஏந்தி அங்குமிங்குமாக அசைத்துக் கொண்டிருந்த ஒரு நபரை தீடீரென பஸ்ஸின் சாரதி கண்டு கொண்டார். பஸ் வண்டி அந்த நபரை அண்மிக்கும் போது அந்நபர் இராணுவ சீருடையை ஒத்த ஆடை அணிந்திருந்ததை பஸ்ஸின் சாரதி கண்டார்.
உடனடியாக பஸ் வண்டியை நிறுத்திய சாரதி வண்டியை பாதை ஓரமாக நிறுத்தினார். தீடீரென அருகில் காட்டுப்பகுதிக்குள் இருந்து வெளியேறிய ஆயுதங்களைத் தாங்கிய சுமார் 50 பேர் பஸ் வண்டியைச் சுற்றி வளைத்தனர். ஆயுதமேந்திய நபர்களில் ஒருவர் பஸ் வண்டியில் ஏறி “இயந்திரத்தை நிறுத்து…” என சாரதிக்குக் கூறினான்.
“இதனை நிறுத்தினால் மீண்டும் ஸ்டார்ட் செய்வது கடினம்….எனவே நிறுத்த இயலாது ஐயா…” என சாரதி கூறினார்…உடனே துப்பாக்கி முனையில் சாரதியின் தலையில் தாக்கப்பட்டது. சாரதி தனது ஆசனத்திற்கருகிலேயே சரிந்து வீழ்ந்தார். பின்னர் பஸ் வண்டியிலிருந்த பயணிகளின் பக்கமாகத் திரும்பிய அந்த ஆயுதந் தாங்கிய நபர்.
“ தமிழ் - முஸ்லிம்கள் இருந்தால் இறங்குங்கள் ” எனக் கத்தினான்.
இக்குரல் கேட்டவுடன் நான்கு அல்லது ஐந்து பேர் பஸ் வண்டியை விட்டு இறங்கினர்.
“பஸ்ஸை தள்ளுங்கோ” என பஸ் வண்டியில் இருந்து இறங்கியவர்களைப் பார்த்து இன்னுமொரு ஆயுதமேந்திய நபர் கூக்குரலிட்டான். பஸ் வண்டியிலிருந்தது இறங்கியவர்கள் பஸ் வண்டியைத் தள்ள முயன்றனர். எனினும் பஸ் வண்டி ஒரு அடியேனும் முன் நகரவில்லை.
இதனிடையே ஆயுதமேந்திய ஒருவன் தனது துப்பாக்கியால் பயணி ஒருவரைத் தாக்கினான். தாக்கப்பட்ட பயணி அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார். பின்னர், பஸ் வண்டியைத் தள்ள இயலாதவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. சூடு வாங்கிய அப் பயணிகள் கொல்லப்பட்டு ஒருவர் மீதொருவர் சரிந்து விழுந்தனர்.
இதற்குள் பஸ் வண்டியினுள் ஏறியிருந்த ஆயுததாரிகள் சிலர் பயணிகளின் பொதிகளை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். ஓரிரு பொதிகளை சோதிக்கும் போது அவற்றுள் இராணுவச் சீருடைகள் இருப்பதைக் கண்ட ஆயுததாரிகள் பற்களைக் கடித்தவாறு அப்பொதிகளை வெளியில் வீசி எறிந்தனர்.
பின்னர், பஸ்வண்டிக்குள் வைத்தே அப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் கொல்லப்பட்டு சரிந்து விழும் காட்சியை ஏற்கனவே தாக்கப்பட்டு விழுந்திருந்த பஸ் சாரதி பார்த்துக் கொண்டிருந்தார்.
பஸ் சாரதி இறந்துவிட்டாக் என்றே ஆயுததாரிகள் எண்ணி இருந்தனர் என்றே கருத வேண்டும்.
இந்த நிலையில் சற்று மௌனம் நிலவியது. கொல்லப்பட்டிருந்த பயணிகளுக்கிடையில் ஆசனமொன்றின் கீழ் கிடந்த பஸ் நடத்துநர், ஆயுததாரிகள் சென்று விட்டார்களா என்பதை அறிய தலையை நிமிர்த்தினார். இதனைக் கண்ட அருகில் இருந்த ஓர் ஆயுததாரி நடத்துநரின் தலை சிதறும் வகையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டான்.
பயணிகள் சிலர் காயமடைந்த நிலையில் முணங்கிக் கொண்டும் இருந்தனர். வேதனையால் முணங்கும் பயணிகளைக் கண்ட ஆயுததாரிகள் அப்பயணிகளது தலைகளை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனரஎனினும் பஸ் வண்டிக்குள் உயிர் தப்பிய பயணிகள் எவரும் உள்ளனரா என்பது குறித்து ஆயுததாரிகளிடத்தே சந்தேகமொன்று எழுந்திருந்தது. இதனால் மீண்டும் பஸ் வண்டிக்குள் ஏறினார்கள். இந்த நிலையில் மேலும் சில பயணிகள் மயக்கநிலை போய் வேதனையால் முணங்கிக் கொண்டிருந்தனர். இவர்களைக் கண்ட ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் லொறி ஒன்று அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்தது. இந்த லொறியைக் கண்ட ஆயுததாரிகள் உடனடியாகச் செயற்பட்டு லொறியை நிறுத்துமாறு சைகை காட்டினர். லொறியை நிறுத்துபவர்கள் பாதுகாப்புப் படையினர் என எண்ணிய லொறிச் சாரதி உடனே லொறியை நிறுத்த முற்பட்டார்.
லொறியை நிறுத்த எத்தணிக்கும் போது லொறியை நிறுத்திய நபர்கள் தொடர்பில் லொறிச் சாரதிக்கு சந்தேகம் வந்துவிட்டது. அவர் உடனடியாக லொறியை நிறுத்தாமல் வேகமாக முன்னே கொண்டு செல்ல முயற்சித்தார். இதை உணர்ந்து கொண்ட ஆயுததாரிகள் லொறியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
லொறிச் சாரதி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். ஏனையவர்களும் அவர்கள் இருந்த இடங்களில் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.
இவ்வாறு அன்றைய தினம் இந்த ஆயுததாரிகள் பஸ் வண்டியிலும் லொறியிலும் இருந்த மக்களைக் கொன்று குவித்தனர்.
இதன்பின்னர் அந்த இடத்தை நோக்கி வந்த இரு பஸ் வண்டிகளையும் ஒரு லொறியையும் நிறுத்திய இந்த ஆயுததாரிகள் அவற்றுள் இருந்தவர்களையும் குரூரமான முறைகளில் கொலை செய்தனர். இறந்தவர்களுக்கிடையில் மறைந்து ஓரிருவர் உயிர்த்தப்பினர்.
இந்தக் கொலைகளின் பின்னணியில் இருந்தவர் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த புலேந்திரன் என்பவர் எனக் கூறப்பட்டது.
இதன்பிரகாரம் அன்றைய தினத்தில் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த மூன்று பஸ் வண்டிகள் மற்றும் இரு லொறிகளில் இருந்து 126 பேர் புலிகள் இயக்கத்தினரால் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இன்னும் பலர் காயமடைந்த நிலையில் உயிர்த்தப்பினர். இதில் கொல்லப்பட்டவர்களுள் 75 பேர் சிங்களப் புத்தாண்டையொட்டி விடுமுறையில் தங்களது வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்த இராணுவச் சிப்பாய்களாவர்.
அப்பாவி பொதுமக்களையும் நிராயுதபாணிகளான இராணுவச் சிப்பாய்களையும் இலக்குவைத்து இத்தாக்குதல் நடாத்தப்பட்டிருந்த சமயம் இலங்கை அரசாங்கம் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யுத்த நிறுத்தமொன்றை பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், 1987 ம் வருட ஆரம்பம் முதல் தென்பகுதி அரசியலுக்கும் புலிகள் இயக்கத்துக்குமிடையில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
1987 ம் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தின் சிவில் நிர்வாகத்தை தங்களது கையில் எடுத்துக்கொண்டுள்ளதாக புலிகள் பிரகடனப்படுத்தி இருந்தனர். இதனடிப்படையில் புலிகளது காவல்துறையினர் யாழ்.நகரில் வாகனப் போக்குவரத்து ஒழுங்குப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
புலிகளது காவல்துறையினர் முதன்முதலில் அன்றுதான் களத்துக்கு இறக்கப்பட்டிருந்தனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
இதன்பிரகாரம் முதலில் யாழ்ப்பாணத்திற்கு எரிபொருள் அனுப்புவதை இலங்;கை அரசு கட்;டுப்படுத்தியது.
அத்துடன், யாழ்ப்பாணத்தை புலிகளிடம் இருந்து விடுவித்துக் கொள்ளும் நோக்கில் நடவடிக்கை ஒன்றையும் ஆரம்பித்தது.
இந்த நடவடிக்கையில் 17 இராணுவ முகாம்களைச் சேர்ந்த சிப்பாய்கள் கலந்து கொண்டதுடன் விமானப் படையினதும் பாரிய ஒத்துழைப்புக்கள் பெறப்பட்டிருந்தன. இதனால் பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகள் வேகமானதாக அமைந்திருந்தன.
இந்நிலையில் இலங்கை இராணுவத்தின் முன்னகர்தலை தடுக்கும் நோக்கில் புலிகள் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தனர்.
குறிப்பாக 1986 ம் வருடம் டிசம்பர் மாதம் வரையில் இந்தியாவில் இருந்த பிரபாகரன் 1987 ம் வருடம் ஜனவரி மாதம் இலங்கை வந்திருந்தார்.இதன் பிரகாரம் பிரபாகரனும் அறிந்திருந்த வகையில் பெப்ரவரி மாதம் 14 ம் திகதி யாழ்.நாவற்குழி இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டனர்.
நாவற்குழி இராணுவ முகாம் புலிகளுக்கு பாரியதொரு பிரச்சினையாகவே இருந்தது.
மேற்படி முகாமைத் தாக்குவது தொடர்பில் புலிகள் புதியதொரு தந்திரோபாயத்தைக் கையாண்டனர். அதாவது இத் தாக்குதலுக்கென தண்ணீர் பவுஸர் ஒன்றை உபயோகிப்பதெனத் தீர்மானித்தனர்.
அக்காலகட்டத்தில் இராணுவ முகாம் அருகில் அமைந்திருந்த என்டரீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான தண்ணீர் பவுஸர் ஒன்றின் மூலம் நாவற்குழி இராணுவ முகாமிற்கு நீர் வழங்கப்பட்டு வந்தது. முகாமிற்கு நீர் கொண்டு வருவதற்காக இந்த பவுஸர் சுமார் இரண்டு மைல்கள் தூரத்தில் உள்ள பகுதிக்குச் சென்று வரவேண்டும்.
அன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் தண்ணீர் நிரப்பிக் கொண்ட மேற்படி பவுஸர் முகாமை நோக்கிப் புறப்பட ஆயத்தமானது.
எனினும் இடைநடுவில் வைத்து இந்த பவுஸர் கடத்தப்பட்டது. இதன் பின்னர் பவுஸரினுள் புலிகளால் குண்டொன்று பொருத்தப்பட்டது.
தண்ணீர் பவுஸரின் தண்;ணீர் ஒரு மட்டத்திற்குக் குறைவடையும் போது குண்டுவெடிக்கும் வகையில் இத்திட்டம் தீட்டப்பட்டிருந்தது. எனினும் குண்டை பவுஸரில் பொருத்திக் கொண்டிருக்கும் போது புலிகள் எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்ந்தது.
அதாவது குண்டு பொருத்தப்பட்டு சற்றுநேரம் செல்கையில் பவுஸரில் இருந்து நீர் கசியத் தொடங்கிவிட்டது. இதனால் உடனடி செயற்பாட்டில் இறங்கிய புலிகள் பவுஸரை திருத்தும் நோக்கில் கைதடி பகுதியில் உள்ள ஓர் ஒழுங்கைக்குள் பவுஸரைக் கொண்டு சென்றனர்.
எனினும் புலிகள் எதிர்பார்த்ததைப் போல் அந் நீர்க்கசிவை தடுப்பதற்கு இயலாமற் போய்விட்டது.
இதனிடையே தண்ணீர் கசிந்த இடத்தில் வேல்டிங் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் நீர்குறைந்து குறிப்பிட்ட மட்டத்தை எட்டியிருந்ததால் குண்டு வெடித்துவிட்டது.
இதன்போது புலிகள் இயக்க உறுப்பினர்கள் 10 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். குகன், வாசு போன்ற புலிகளது முக்கிய உறுப்பினர்களும் இதில் அடங்குவர்.
அதேநேரம் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக அருகில் வீடுகளில் இருந்த அப்பாவி பொதுமக்கள் 40 பேரும் கொல்லப்பட்டனர்.
இதன்பின்னர் மார்ச் மாதத்தில், புலிகளின் முக்கியத்தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த கிட்டுவை இலக்கு வைத்து பயங்கர குண்டுத்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பிரபாகரன் இந்தியாவில் இருந்த கால கட்டத்தில் யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பாக கிட்டு தலைமையேற்று செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அக்காலகட்டத்தில் விஜயகுமாரணதுங்க (பிரபல நடிகர், இலங்கை மக்கள் கட்சியின் ஸ்தாபகர், தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவர்) வின்சன்ட் பெரேரா (முன்னாள் அமைச்சர்) பாதர் யொஹான் தேவானந்த போன்றவர்களுடன் கிட்டு நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார். இதனால் கிட்டுவும் கிட்டுவுக்கு அடுத்த நிலையில் இருந்த ரஹீமும் தென்பகுதி மக்களிடையே பிரபலம் பெற்றிருந்தனர்.
அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் இவர்களிடையே ஓரளவு அக்கறை இருந்ததாகவும் தென்பட்டிருந்தது.
1987 ம் வருடம் மார்ச் மாதம் 31 ம் திகதி கிட்டு தனது மெய்ப்பாதுகாப்பாளர்களுடன் மிட்சுபிஸி லான்ஸர் வண்டியில் யாழ்ப்பாணம், இரண்டாம் குறுக்குத் தெரு ஊடாக பயணித்துக் கொண்டிருந்தார்.
வாகனம் ஒரு வளைவுக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், கிட்டுவை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதலும் நடத்தப்பட்டது. குண்டு வெடித்து அந்த இடத்திலேயே கிட்டுவின் வலதுகால் பலத்த காயத்திற்குள்ளானது. இதனால் அவரது வலதுகால் முழங்காலுக்கு கீழ் அகற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு புலிகளால் கைது செய்யப்பட்டிருந்த சுமார் 70பேர் பின்னர் புலிகளால் கொல்லப்பட்டனர்.
கிட்டுவுக்கு நெருக்கமாக இருந்த அருணா என்பவரே இத்தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.
கிட்டுவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் எனப் புலிகள் கூறியிருந்தனர். எனினும் இது புலிகள் இயக்கத்தின் உள் விளையாட்டு என்பதை பலர் அப்போதே அறிந்திருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் ஏப்ரல் மாதம் பிறந்தது. இம் மாதத்தில் யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்துவது அரசின் நோக்கமாக இருந்தது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானும் யுத்த நிறுத்தம் தேவை என வலியுறுத்தியிருந்தார்.
இதனடிப்படையில் ஏப்ரல் மாதம் 11ம் திகதி முதல் 19 ம் திகதி வரை அரசு யுத்த நிறுத்தத்தை பிரகடனப்படுத்தியிருந்தது.
இந்த யுத்தநிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தியே புலிகள் மேற்படி ஹபரன – கிதுல் பகுதி தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இப்னு அசூமத்
-வெளிச்சம்-
0 விமர்சனங்கள்:
Post a Comment