விட்டு விடுதலையான பின்னரும்... தொட்டுத் தொடர்கின்ற துயரங்கள்!
வன்னியில் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு விடுதலையான மக்கள் இயல்பு வாழ்வில் ஈடுபட முடியாத வண்ணம் அவர்களைப் பின்தொடர்கிறது துயரம். நலன்புரிநிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட 58,296 பேர் இதுவரை குடாநாட்டுக்கு வந்துசேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான நெருக்குதல்களையும், அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் நிதமும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களில் சிலர் இவ்வாறு பிரச்சினைகளால் சூழப்பட்ட தமது தற்போதைய அவல நிலைகளை உதயன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.
"இரண்டும் கெட்டான் வாழ்க்கை''
குடும்பஸ்தர் (வயது55, கடற்தொழிலாளிதற்போது கரவெட்டியில் வசிக்கிறார்)
நாங்கள் பல படகுகளை வைத்துத் தொழில் செய்து சீரும் சிறப்புமாகத்தான் இருந்தோம். ஆயினும் யுத்தம் எல்லா வற்றையுமே தலைகீழாக மாற்றி விட்டது. யுத்தத்தின் இறுதிநாள்களில் எம்முடைய உயிரைக் கடைசியாக எஞ்சியிருந்த ஒரேயொரு படகிலேயே சுமந்துவந்தோம். நாங்கள் தரை யிறங்கிய முனைப்பகுதியில் படகினைக் கைப்பற்றிய கடற்படையினர் எம்மை நலன்புரிநிலையத்தில் தங்க வைத்தனர். தாம் தடுத்துவைத்துள்ள எமது படகினை நாங்கள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டதும் எம்மிடமே மீள ஒப்படைப்பதாகவும் கூறினர். நாங்கள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் பூர்த்தியாகப் போகின்றது. ஆயினும் எம்முடைய படகு எம்மிடம் தரப்பட வேயில்லை. பல இடங்களுக்கும் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். எதுவுமே நடக்கவில்லை. அத்தோடு எம்முடைய சொந்த இடத்திற்குச் சென்று அங்கு மீளக்குடியமரவோ அல்லது கடற்தொழில் செய்யவோ இதுவரை அனுமதி தரப்படவேயில்லை. இதனால் இன்னமும் நாங்கள் உறவினர் ஒருவரின் வீட்டிலேயே ஒண்டிக்குடித்தனம் செய்துவருகிறோம். இதனால் பல சிக்கல்கள் எழவே செய்கின்றன. அவர்களது வீட்டிலும் ஏழெட்டுப் பேர். எமது குடும்பத்திலும் ஆறு பேர். மிகச் சிறிய வீட்டில் பத்துப் பன்னிரண்டு பேர் வசிப்பது மிகவும் சிக்கலான விடயம்தான். தண்ணீர், கழிப்பிடப்பாவனை, உணவு சமைத்தல் போன்ற விடயங்களில் இப்போதே சிறுசிறு முரண்பாடுகள் தோன்றத் தொடங்கிவிட்டன. போக்கிடமேது மின்றி தஞ்சமடைந்துள்ள நாம் எதுவுமே பேசாமல் ஒதுங்கித்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் இருக்கும் இடமும் இல்லாமல் போய்விடும். இப்படியாக இரண்டும் கெட்டான் நிலையில் எம்முடைய வாழ்க்கையை நகர்த்த வேண்டியிருக்கிறது. வன்னியிலிருந்தபோது எம்முடைய உறவினர்கள் அனுப்பிவைத்த பணத்தைத்தான் இத்தனைநாளும் வைத்திருந்த எம்முடைய செலவுகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். எத்தனை நாளுக்குத்தான் அதுவும் அப்படியே இருக்கும்? அந்தப் பணம் முடிந்த பின்னர்தான் எமக்கு தொழில் இல்லாததன் உண்மையான விளைவு தெரியவரும். அவ்வாறான நிலை வரமுன்னரே எம்முடைய படகினை மீளவும் தருவார்களாயின் இங்குள்ள கடற்தொழிலாளர் சங்கங்களோடு தொடர்புகொண்டு தொழில் செய்து வருவாய்க்கு ஏதாவது ஒருவழி செய்யலாம். முன்னரைப்போல செல்வச் செழிப்போடு வாழமுடியா விட்டாலும் வயிற்றைக் கழுவவாவது எமது தொழில் உதவும் என்று நம்புகிறோம். ஆனால் அவற்றுக் கெல்லாம் அடிப்படையாக எம்முடைய உயிரைக் கடைசிக் கணத்திலும் காவிவந்த படகினை உரியவர்கள் எம்மிடம் தருவார்களா?
அகதி முகாம்களில் இருந்து வெளியே வந்த போதிலும்
அவலங்களுடன் வாழும் மக்களின் ஆதங்கங்கள்
"எங்களுக்கு பிரபல கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா?''
மாணவன் (தரம்8, கொக்குவில்)
வன்னியிலிருந்தபோது குண்டு மழைக்கு நடுவிலும் ஏதோ படிக்க முடிந்தது. போர் பற்றிய யோசனையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு இருக்கவில்லை. முகாமிலிருந்தபோது எப்போது வெளியே வருவோம்? மற்றைய பிள்ளைகள்போல எப்போது கல்வி கற்கத் தொடங்குவோம்? என்று ஏங்கித் தவித்தோம். முகாமிலிருந்து வெளியே வந்த பிறகுதான் கல்வி கற்பதில் உள்ள பல பிரச்சினைகளை நாங்கள் தெளிவாக அறிய முடிந்தது.
நான் நன்றாகப் படிக்கக்கூடியவன் என்பதால் எனது பெற்றோர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான கல்லூரியொன்றில் என்னைச் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டனர். அவர்கள் ஆசைப்பட்டு என்ன பிரயோசனம்? கையிலே காசேயில்லாத எங்களிடம் மிகப்பெரியளவில் அன்பளிப்புத் தொகையொன்றைக் குறித்த பாடசாலை நிர்வாகம் கட்டுமாறு கோரியது. அவ்வாறு அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டால் மட்டுமே குறித்த கல்லூரியில் எனக்கு இடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அதற்கு எங்களது குடும்பப் பொருளாதார நிலைமை எள்ளளவும் இடம் கொடுக்காததால் கல்லூரி பற்றிய கனவுகளை மூடைகட்டி வைத்துவிட்டு எமக்கு அருகிலுள்ள ஒரு பாடசாலையில் இணைந்து கற்று வருகிறேன். மாணவர்களை இணைப்பதற்கு எவ்வித நிதியினையும் பாடசாலை அதிபர்கள் வசூலிக்கக் கூடாதென அறிக்கையொன்றை அனுப்பிய பின்னரும்கூட இவ்வாறான நிலைமை எனக்கு நேர்ந்துள்ளது. பணம் படைத்தவர்கள் மட்டும்தான் வசதிகள் நிறைந்த கல்லூரிகளில் கற்க முடியுமா? என்னைப்போல எல்லாவற்றையும் இழந்துவிட்டுத் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு இக்கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா?
"வன்னியிலிருந்து வந்தவள் என்பதால் வேலையில்லை''
குடும்பப்பெண் (கணவனையிழந்தவர்வயது 35 தற்போதுசங்கானையில் வசித்து வருகிறார்.)
நானும் கணவரும் எமது பிள்ளைகளை சுமந்துகொண்டு வரும்வழியில் ஷெல்பட்டு என் கண்முன்னாலேயே அவர் இறந்துவிட்டார். பிள்ளைகளின் வாழ்வுக்காக மனதைக் கல்லாக்கிக் கொண்டு முகாமுக்கு வந்துசேர்ந்தேன். முகாமிலிருக்கும்வரை பெரிதாக எந்தத் தேவையும் எமக்கு இருக்கவில்லை. உணவுக்குத் தேவையான பொருள்கள் கிடைத்தன. அத்தோடு தொண்டு நிறுவனங்களும் அன்றாடத் தேவைக்குரிய பாத்திரங்கள், உடுபுடைவைகள், பால்மா வகைகள், சத்துணவுப் பொதிகள் என்பவற்றை வழங்கியமையால் ஓரளவுக் கேனும் நிம்மதியாக இருக்கமுடிந்தது. முகாமிலிருந்து வெளியே வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றெண்ணி எப்போது விடுவிக்கப்படுவோம் என்று காத்திருந்தோம். ஆனால் இப்போது விடுவிக்கப்பட்டதை விடவும் முகாமிலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அந்தளவுக்கு நிலைமைகள் எங்களுக்கு எதிராகவே இருக் கின்றன. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை ஆயிரத் தெட்டுப் பதிவுகளை மேற்கொண்டு விட்டோம். எங்கும் ஒரே பதிவுதான். பிரதேச செயலகம், கிராம அலுவலர் அலுவலகம், தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் என்பவற்றுக்கு மாறி மாறி ஓடித்திரிந்து கால்கள் சோர்ந்து விட்டன. இத்தனைக்கும் எமது வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு ஒரு சைக்கிள்கூட இல்லை. கையிலும் போதிய காசு இல்லை. இவ்வாறான ஏழைகளுக்கு கால்நடைதான் தோழன். நடந்து கொண்டேயிருக்கிறோம். ஆயினும் நல்லது எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. கணவர் இல்லாததால் நான்தான் ஏதாவது வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய கட்டாயம். ஆயினும் வேலைக்குச் சென்றால் "வன்னியால் வந்தவள்" என்று எனக்கு எவருமே வேலைதர முன் வருவதில்லை. இப்படியே தொடர்ந்தால் பட்டினி கிடந்து சாவதைத் தவிர வேறு வழியில்லைத்தான்.
"குடியிருக்க வீடுதேடி அலைகிறோம்''
இளைஞன் (வேலையற்ற பட்டதாரிவயது 29 தற்போது கல்வியங்காட்டில் வசித்து வருகிறார்.)
படித்துப் பட்டம் பெற்றிருந்தும்கூட நான் இப்போது கூலி வேலைக்குத்தான் சென்று வருகிறேன். நாள் ஒன்றுக்கு முந்நூறு ரூபா கிடைக்கும். சிலவேளைகளில் ஐந்நூறு ரூபாவும் கிடைப்பதுண்டு. இந்தச் சொற்ப சம்பளத்தை வைத்துக்கொண்டுதான் ஐந்து பேர் கொண்ட எம்முடைய குடும்பத்தின் நாளாந்தச் சக்கரம் சுழல்கிறது. எல்லாவற்றுக்கும் பிறரிடம் கையேந்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். முன்னர் நாங்களும் நல்ல வசதியாகத் தான் இருந்தோம். வன்னியில் ஏக்கர் கணக்கில் காணியும், வசதியான வீடு வளவும் எங்களுக்கு இருந்தது. அவ்வளவற்றையும் தொலைத்து விட்டு இப்போது பிறரின் வீடுகளில் கூலி வேலை செய்ய வேண்டிய நிலைமை.
முன்னர் அப்பாதான் குடும்பத்தைச் சுமந்தார். வன்னியில் அப்பா வைத்திருந்த கடையில் எப்போதுமே நல்ல வியாபாரம்தான். அவர் ஒரு போதும் ஓய்ந் திருப்பதில்லை. எப்போதுமே பம்பரம் போல சுற்றிக் கொண்டிருப்பார். ஆனால் இப்போது ஒற்றைக் காலில்லாமல் மூலையில் முடங்கிக் கிடக்கிறார். இதனால் குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிலை என்னில் வந்து விட்டது. அதனால்தான் கௌரவத்தைப் பார்க்காமல் கூலித் தொழிலுக்குச் சென்று வருகிறேன். அங்கும் மிகக்குறைந் தளவு சம்பளத்தையே தருகிறார்கள். நாங்களும் வேறு வழியின்றி அவர்கள் தருவதை பேசாமல் வாங்கிக் கொண்டு வருகிறோம். தற்போது எம்முடைய உறவினர் ஒருவரின் வீட்டிலேயே தங்கியிருக்கிறோம். எத்தனை நாளுக்குத் தான் பிறத்தியாரின் வீட்டிலேயே சீவிப்பது? நாங்கள் தனியாக வசிக்க வீடொன்றைத் தேடி வருகிறோம். ஆனால் இப்போது வீடுகளின் வாடகை மிகமிக உயர்ந்து விட்டது. அத்தோடு வன்னியிலிருந்து அதிகளவானோர் வருவதால் வீடுகள் கிடைப்பதும் அரிதான விடயமாகவே இருக்கின்றது. எனக்கு ஒரு அரசாங்கத் தொழில் கிடைக்கும் வரையும் இவ்வாறான இன்னல் நிறைந்த வாழ்வு தான் தொடரப்போகிறது.
ஒளண்யன்
0 விமர்சனங்கள்:
Post a Comment