ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன: கலைஞர்
பிரபாகரன் மீது புகார் கூறி முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இதுதொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி கேள்வி-பதில் வடிவில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- நீங்கள் 18-11-2009 அன்று "நம் மவுன வலி; யாருக்கு தெரியப் போகிறது?'' என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே?
ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன- அதே நேரத்தில் இளந்தலைவர் ராஜீவ்காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்தினமும், பத்மநாபாவும், யோதீஸ்வரனும் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கிய போது - அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதிய பத்திரிகைகளில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,
’’எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்! இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை! கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி! உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் - உயிரனையான் - உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?''
மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தவர்தான் அவர்.
அப்படியெல்லாம் அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என்மீது பாய்கிறார்களே; தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதைவிடக் காரணங்கள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள்!’’என்று தெரிவித்துள்ளார்.
நன்றி நக்கீரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment