புலிகள் செய்த தவறு என்ன?
கமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்... மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளால் வெறுக்கப்பட்ட ஜெகத் கஸ்பர், ஈழப் போராட்டத்தின் அழிவில் இந்தியாவின் பங்கை மூடி மறைக்க முயல்கிறார் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கஸ்பரைச் சந்தித்துப் பேசினோம். தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு நிதானமாகவும், சிலநேரங்களில் ஆவேசமாகவும் பதிலளித்தார்.
2009 மே-17க்குப் பின், தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறீர்கள். புலிகளுடன் உங்களுக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது?
``1995-ம் ஆண்டு. அப்போதைய அதிபர் சந்திரிகா பெரும் எடுப்பிலான யுத்தம் ஒன்றை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு, யாழ்குடா நாட்டை ஆக்கிரமித்தார். ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் தங்கள் கையில் அகப்பட்ட உடைமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, வன்னி நோக்கிப் பயணம் நடத்திய அந்த நாட்களில், ஒரு வானொலி ஊடகவியலாளராக அந்த மக்களின் போராட்ட அனுபவத்துக்கு நான் அறிமுகம் ஆனேன். வன்னிக்கு வந்த மக்கள் தாங்கள் படுகின்ற அன்றாட அனுபவங்களை தங்கள் கடிதங்கள் மூலமாக எழுதினார்கள். மக்களின் துன்பங்களுக்கும், வலிகளுக்கும் வானொலி மூலமாக என்னால் ஆன அன்புநேயக் கருணையை உருவாக்கித் தந்தேன். அந்த ஒரு பயணத்தில்தான் தமிழ் மக்களின் அரசியல் சிக்கலுக்குத் தீர்வு, தனித்தமிழ் ஈழம்தான் என்று உணர்ந்தேன்.
அடிப்படைப் பிரச்னை என்பது, உலகம் காட்ட விரும்புவதுபோல் விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் அல்ல. தமிழ் மக்களை அடித்தொழித்து, சமூக-அரசியல்-பண்பாட்டு அடையாளங்களைச் சிதைத்து, ஒன்றும் இல்லாமல் ஆக்குகின்ற சிங்களப் பேரினவாதம்தான் இந்தச் சிக்கலுக்கான வேர் என உணர்ந்தேன். அந்த அடிப்படையில் அந்தப் போராட்டத்துக்கு அரசியல் தார்மிக ஆதரவை ஒலிபரப்பு நிலையம் ஊடாக வழங்கி வந்தேன். ஒலிபரப்பு என்று மட்டும் இல்லாது, வாய்ப்புக்கு உட்பட்ட நிலையில் எல்லாம் உதவினேன். குறிப்பாக, யுத்தம் சிதறடித்த பல்லாயிரக்கணக்கான உறவுகளை மீண்டும் ஒன்று சேர்த்து வைக்கும் பணியை வானொலி மூலமாகச் செய்ய முடிந்தது. வவுனியா, மட்டக்களப்பு, திரிகோணமலை, வன்னியில் பல இடங்களில் இருந்த திருச்சபை சார்ந்த அலுவலகங்கள் மக்கள் தொடர்பு மையங்களாக மாறின. சந்திரிகா அம்மையார் அந்த மக்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தார். அந்த ஐந்து ஆண்டுகால (1995-2000) மனிதாபிமானமற்ற அடக்குமுறையால் பட்டினி கிடந்து, அநாதையான பிள்ளைகளை எங்கள் வானொலி ஊடாகத் தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். கர்ப்பிணிகளைக் காப்பாற்றினோம். திருச்சபை அமைப்புகள் மூலம் உலக மனித உரிமைகள் அமைப்புகளிடம் தமிழ் மக்களின் போராட்டத்தின் அரசியல் நியாயங்களை எடுத்துச் செல்லும் பணியையும் செய்தேன்.''
உங்களுக்கு, விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு உண்டா, இல்லையா?
``நான் இயக்க உறுப்பினரும் இல்லை; இயக்கத்தோடு நேரடியான தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. என்னைப் பொருத்தவரையில் ஒரு எதார்த்தத்தைக் கண்டேன். அதற்குப் பதில் சொன்னேன். அது, செயலாக வெளிப்பட்டது. அப்போது, பலரோடும் தொடர்பு கொண்டேன். அவர்கள் யார் என்றுகூட கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, இயக்கத்துக்கு நான் ஆலோசகரும் அல்ல; பணியாளரும் அல்ல.''
விடுதலைப் புலிகளுக்கு புவி அரசியல் தெரியாததுதான் அவர்களின் தோல்விக்குக் காரணம் என்று விமர்சித்து வருகிறீர்களே?
``தப்பே செய்ய மாட்டோம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். சீனாவை விமர்சிக்கலாம்; ரஷ்யாவை விமர்சிக்கலாம்; அமெரிக்காவை விமர்சிக்கலாம்; இந்தியாவை விமர்சிக்கலாம். ஆனால், நம்மை மட்டும் யாரும் விமர்சிக்கக் கூடாது. வானத்தில் இருந்து வந்த பரிசுத்த புறாக்கள் தமிழர்கள்! இந்த விடுதலைப் போராட்ட அழிவுக்குக் காரணமே இதுதான்.
ஈழத்தின் இன்றைய விடுதலைப் போராட்டப் பின்னடைவுக்கு, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை, இன்று நிலவுகின்ற உலக ஒழுங்கு; இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை. `அங்கே ஈழம் அமைந்தால், தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கும். ஈழம் அமைவதை அனுமதிக்கவே கூடாது' என்ற நிலையில் இந்தியா இருக்கிறது. அதே வேளையில் இந்த உலக ஒழுங்கும், இந்திய வெளியுறவுக் கொள்கையும் மாறும், மாற்றப்படுகின்ற தன்மை கொண்டவைதான். இந்தச் சூழலில், உலகம் ஈழப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று வரையறுத்து, அந்தவொரு வட்டத்துக்குள் சுருக்கியது. ஆகையால்தான் உலக அளவில் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
தமிழர்கள் எல்லோரும் இணைந்து இயங்கி, இது பயங்கரவாதம் அல்ல என்பதை விளக்கி, தமிழ் மக்களின் தேசிய, அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதே, நம் முன்னால் இருக்கின்ற சவால். இது நடக்க வேண்டும்.''
இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவு சக்தியாக இருக்கத்தக்க விடுதலைப் புலிகளையும், ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது என்று சொல்லி வருகிறீர்களே?
``ஆமாம். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கரம் வலுப்பெற்றுவிட்டது. இலங்கை என்பது சீனாவின் கிளை நாடு என்றாகிவிட்ட நிலையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் முரண் வலுத்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவை கட்டுப்படுத்தி, மட்டுப்படுத்துகின்ற செயலுக்கு தமிழீழம் மட்டுமே துணையாக இருக்க முடியும். இந்திய-சீன யுத்தத்தின் போது, இலங்கை சீனாவுடன் இருந்தது. இந்திய-பாகிஸ்தான் போரின்போது இலங்கை, பாகிஸ்தானுடன் நின்றது.
இந்தியப் பெருங்கடலில் கேந்திரிய முக்கியத்துவம் பெறுவதற்கு, தமிழீழ ஆதரவு வேண்டும் என்று இந்தியா கருதுகிற நேரம் வரும். வர வைக்க வேண்டும். 37,000 போராளிகளும், ஒன்றரை லட்சம் மக்களும் இறந்தது ஈழம் என்கிற கனவுக்காகத்தான். ஈழம் அமையாவிட்டால், இந்த மக்களின் தியாகம் வீணாகிவிடும்.''
ஈழம் அமைவதை இந்தியா விரும்பாது என்கிறீர்கள். இந்தியாவில் இருந்து கொண்டு ஈழம் அமைய ஆதரவு தர முடியுமா?
``நீங்கள் கேட்பது சரிதான். ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட அழிவில் இந்தியாவின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறேன். இந்தியா, இலங்கையின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியது உண்மை; போர்க் குற்றங்களில் இந்தியாவுக்கும் மறைமுகப் பங்கு இருக்கிறது. இந்தியக் கரங்களில் ஈழ மக்களின் ரத்தம் படிந்திருக்கிறது. இந்தியாவுக்கு பரிசுத்தப் பட்டம் கொடுக்க யாரும் தயாராக இல்லை. இதைச் சொல்வதில் எனக்கு தயக்கமோ, அச்சமோ கிடையாது. ஆனால், இதையே சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்ற தமிழ்நாட்டில் என்ன முயற்சி செய்தோம்? இங்கே எப்போதும், `பல்குழுவும் உட்பகையும்'! `அவர் செய்யவில்லை; இவர் செய்யவில்லை' என்கிறார்கள். ஒரு நாட்டின் கொள்கையை மாற்ற நாம் என்ன செய்தோம்? சீனாவிடம் கறாராகப் பேச இந்தியாவால் முடியும். ஆனால் அப்படிப் பேச வைக்கிற அழுத்தம் இங்கே இல்லை. அவ்வளவுதான்.''
உலக நாடுகள் புலிகள் மீது தடை விதிக்க இந்தியாதான் காரணம் என்பது உண்மையா? அப்படியென்றால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வரமுடியுமா?
``நீங்கள் சொல்வதில் பாதி உண்மை; பாதி உண்மை இல்லை. இந்தியாவின் ராஜதந்திரம் தமிழர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மைதான். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா தன்னுடைய முழு ராஜதந்திர வளங்களையும் உலகஅளவில் நிறுத்தி வைத்திருந்தது. நிறுத்தி வைத்திருக்கிறது. இதில், மாற்றுக் கருத்துக்கு நிச்சயம் இடமில்லை. ஆனால், அதை இடைமறித்து முறியடிக்கிற ஆற்றல் தமிழர்களுக்கு இல்லை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதை இடைமறிக்க வேண்டும்; அந்த வலு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த எல்லா காரியங்களும் மேற்குலக நாடுகளுக்குப் பிடித்திருந்தது என்று சொல்ல முடியாது.''
புலிகள் அப்படி என்ன தவறு செய்து விட்டார்கள்?
``இப்போதைக்கு அது பற்றியெல்லாம் சொல்ல முடியாது. காலம் வரும் போது வெளிப்படுத்துவேன். குறைந்தபட்சம் விவாதத்துக்கான களத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.''
இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?
``இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணிநேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. `தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்' என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் அதை ஏற்கவில்லை.''
ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை?
``அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்துக்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை.''
ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதாகச் சொல்லும் கஸ்பர் மீது புலிகள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். புலிகளுக்குச் சேர வேண்டிய பெரும் தொகையை கஸ்பர் கையாடல் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறதே?
``(கோபமாக) யார் என்னை விமர்சனம் செய்கிறார்கள்? என்னை விமர்சனம் செய்பவர்கள் புலிகளின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளா? எதற்காக என் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள்? அவர்கள் எல்லாம், ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு என்ன செய்து கிழித்துவிட்டார்கள்? இடர் மிகுந்த காலத்தில் போராட்டக் களத்துக்குள் நுழைந்தேன். ஆனையிறவு வெற்றியின்போது, வெளியே வந்தேன். மீண்டும் முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக் காலத்தில் உள்ளே வந்திருக்கிறேன். என்னுடைய பங்களிப்பு என்ன என்று எனக்குத் தெரியும். சான்றிதழ் பெறக் கூடிய நிலையில் நானில்லை; எனக்குச் சான்றிதழ் தரக்கூடிய தகுதி, `அதிர்வு', `வினவு' இணைய தளங்களுக்கு இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை.''
பிரபாகரனுடன் ஒருசில நிமிடங்கள் நடந்த சந்திப்பைப் பெரிதுபடுத்தி சுயவிளம்பரம் செய்கிறீர்கள் என்கிறார்களே?
``அதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? அதைப் பற்றி இவர்கள் பதற்றப்பட வேண்டிய அவசியம் என்ன? நான் பத்து நிமிடம் பார்த்தால் என்ன? பத்து மணிநேரம் பார்த்தால் என்ன? நீங்கள் என்னுடன் வரவில்லைதானே? தலைவருடனான என் சந்திப்பு வீடியோ ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்''.
தடை செய்யப்பட்ட புலிகளை ஆதரித்துப் பேசும் நீங்கள் அரசின் எந்த நெருக்கடியையும் இதுவரை சந்திக்கவில்லை. இதுவே உங்கள் மீதான சந்தேகத்தைக் கிளப்புகிறது என்கிறார்களே?
``இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. (சிரிக்கிறார்) இது என்ன மனநிலை என்றே எனக்குப் புரியவில்லை? நான் கைது செய்யப்படவில்லை என்று ஏன் இவர்கள் வருந்துகிறார்கள்? நான் கைது செய்யப்படும் நாளுக்காக ஆசையுடன் காத்திருப்பவர்களைப் பார்த்து நான் என்ன சொல்வேன்? என்னுடைய ஜனநாயக உரிமையைச் செய்கிறேன். சட்டத்துக்கு விரோதமான எந்தச் செயலையும் செய்யவில்லை. உண்மையான பிரச்னையில் இருந்து திசைதிருப்பும் விவாதங்களுக்குச் செல்லவும் நான் விரும்பவில்லை.
வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். எல்லா கட்சிகளுடனும் உரையாடுவதில் எனக்கு நம்பிக்கை உண்டு. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க, கட்சியினருடன் உரையாடலாம். அவர்களுடன் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அது ஒன்றும் ஒழுக்கக்கேடு அல்ல. பொது நன்மைக்காக மற்றவர்களுடன் உரையாடுவது, பழகுவது தவறல்ல. வெறுமனே நான் எதிர் மூலையில் நின்று கொண்டு விமர்சனம் செய்வதில்லை. `நான் தெருவில் நிற்க வேண்டும்; சிறையில் இருக்க வேண்டும்' என்று சொல்பவர்கள், மனநோயாளிகள்!''
வெளிப்படையாகச் சொல்லுங்கள், ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?
``கடைசிகட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, `தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்' என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. `ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்' என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.''
நீங்கள் அண்மையில் வெளியிட்ட `ஈழம்...மௌனத்தின் வலி' புத்தகத்தில், தோழர் துரை சண்முகத்தின் ஈழ அவலம் தொடர்பான கவிதையில் இந்திய அரசுக்கு எதிரான சொற்களை நீக்கி வெளியிட்டீர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
``நான் அவரிடம் கவிதை கேட்கவும் இல்லை; வாங்கவும் இல்லை. இதை முன்னெடுத்துச் செய்தவர்கள், `போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பு'. கவிதைப் புத்தகம் அச்சிட்டு, அதை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியை நான் செய்தேன். புத்தக வெளியீட்டு விழாவுக்கு சில வேலைகளைச் செய்தேன். கவிதைகளை வாங்கியது, அதை வடிவமைப்புச் செய்தது, `இது இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று, எதிலும் நான் தலையிடவில்லை.''
அந்தப் புத்தகத்தை வெளியிட்டது, உங்கள் நல்லேர் பதிப்பகம்தானே? அப்படியானால் நீங்கள்தானே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்?
``அடித்தல், திருத்தல் என எந்த வேலையையும் எங்கள் பதிப்பகம் செய்யவில்லை. `போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பு' கவிதை வாங்கியது, நாங்கள் வெளியிட்டோம்.''
சரி, இந்தக் கவிதைப் புத்தகத்தால் ஈழத்தில் நடந்த அவலத்துக்கு என்ன விமோசனம் கிடைக்கப் போகிறது என்று கேட்கிறார்களே?
``(கோபமாக) என்னிடம் பேட்டி எடுத்து எதற்காகப் போடுகிறீர்கள்? இதில் யாருக்கு என்ன லாபம்? இதுவரை ஈழ விவகாரம் தொடர்பாக எத்தனை புத்தகங்கள் வந்திருக்கும்? இதோ இந்தப் புத்தகத்தைப் பாருங்கள், (மேசையில் இருக்கும் `பிரபாகரன்-வாழ்வும் மரணமும்' என்ற புத்தகத்தை எடுத்துக்காட்டுகிறார்) இந்தப் புத்தகத்தின் விலை நூற்று இருபது ரூபாய். எங்கள் புத்தகத்தின் தரத்தைப் பாருங்கள். அந்தத் தரத்தில் நூறு ரூபாய்க்கு ஒரு புத்தகத்தை அச்சிட்டு உங்களால் வெளியிட முடியுமா? நீங்கள் பத்திரிகையாளர், ஒரு கேள்வி கேட்கும்போது ஓரளவுக்கு நியாயத்தன்மையோடு கேட்க வேண்டாமா? எத்தனையோ பதிப்பகங்கள் வெறும் வியாபாரம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு எத்தனையோ புத்தகங்கள் வெளியிடப்பட்டபோது, இந்த முற்போக்குச் சிந்தனைப் புரட்சியாளர்களுக்குத் தெரியவில்லை.
பொதுமக்கள் வெளிக்கு அந்த மானுட அவலங்களை எடுத்துச் செல்ல பத்து, இருபது பேர் சேர்ந்து ஆத்மார்த்தமாக ஒரு முயற்சி செய்திருக்கிறார்கள். அதையேன் விமர்சனம் செய்கிறீர்கள்? ஏன் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தப் பிரச்னையைப் பேசக் கூடாதா? நீங்கள் என்ன குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? அப்படி குத்தகைக்கு எடுத்து என்ன பண்ணிக் கிழித்துவிட்டீர்கள்? கடந்த பத்து ஆண்டுகளில் `எல்லாருக்கும் உரிமை' என்று, ஒரு புத்தகமாவது வந்திருக்கிறதா? வாங்க, உங்களால் முடிந்தால், இந்தப் புத்தகத்தை அச்சிட்டு விற்றுக் கொள்ளுங்கள்.''
தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ விடுதலை ஆதரவாளர்களை விமர்சனம் செய்கிறீர்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
``வதை முகாம்களில் உள்ளவர்களை அவர்களின் இருப்பிடத்தில் வாழச் செய்வதற்கும், தமிழீழத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தவும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட எல்லாத் தமிழ் மக்களும் அரசியல் சுயநிர்ணய உரிமை கிடைக்கச் செய்ய வேண்டும்.
திரிகோணமலையில் 1927-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சிங்கள மக்கள் 1.3 சதவிகிதம்; தமிழ் மக்கள் 81.8 சதவிகிதம். 16.9 சதவிகிதம் பேர் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள். 1981-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் தமிழ் மக்களின் எண்ணிக்கை, 36 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. வெறும் 1.3 சதவிகிதமாக இருந்த சிங்களவர்கள், 36 சதவிகிதமாக வளர்ந்து விட்டார்கள். அதையே முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்த, ராஜபக்ஷே சகோதரர்கள் திட்டமிடுகிறார்கள். அப்படி நடந்தால், ஈழம் என்று பேசுவதற்கு தாயக நிலப்பரப்பு இல்லாமல் போய்விடும். அதை எல்லாம் செய்யும் சக்தி உலக நாடுகளுக்கு இருக்கிறது. நாடாளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு இருக்கிறது. எனவே, யார் தவறு செய்தார்கள் என்று, விவாதிக்க வேண்டாம். இதனால் அந்த மக்களுக்கு என்ன நன்மை? நடக்க வேண்டியதைச் செய்ய எல்லோரும் ஒன்றுபட்டு ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும்.
திம்பு கொள்கையின் அடிப்படையில் அரசியல் தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும். ஆயுதப் போராட்டம் தோற்றதால் தமிழ் மக்களின் அரசியல் நியாயங்கள் தோற்றதாக நினைத்துவிடக் கூடாது. தமிழ் மக்களின் தீர்வுகளுக்கான பேச்சு வார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதில், எல்லாருக்கும் கருத்து ஒற்றுமை வரவேண்டும்.
நடந்த மனித உரிமை மீறல்களுக்கு அனைத்துலக நீதி விசாரணை வேண்டும். போர்க் குற்றங்களில் இந்தியாவும் குற்றவாளிதான்!'' என்று முடித்துக் கொண்டார் கஸ்பர்.
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment