உலக தமிழ்மக்கள் தமது நிதியினை அநாவசியமில்லாமல் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி நிதிவசூலிப்பவர்களிடம் வழங்க வேண்டாம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு தாய்லாந்துக்கான விஜயத்தினை இன்றுகாலை மேற்கொண்டுள்ளார். தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்திரநேரு எம்.பி, அங்குள்ள தமிழ்மக்களுடன் கலந்துரையாடியுமுள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய சந்திரநேரு எம்.பி, புலிகளின் பெயராலும், விடுதலைப் போராட்டத்தின் பெயராலும் தமிழ் மக்களிடம் உலகம் முழுவதிலும் நிதி வசூலித்து வருபவர்கள் அந்த நிதியினை தாமே சுருட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் நிதியானது குறித்த பொதுமக்களைச் சென்றடையவில்லை. மாறாக குறிப்பிட்ட சிலரால் பதுக்கப்படுகின்றது.
அந்தப் பணத்தில் அவர்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். ஆகவே இந்த விடயத்தில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறாக பொதுமக்களைச் சென்றடையாது பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை மீட்டெடுத்து பொதுமக்களிடம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்தோ அன்றில் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர் நிலைகுறித்தோ இலங்கையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவொரு விபரங்களும் தெரிவதில்லை என்பதுடன், இது குறித்து எவரும் அக்கறைப்படுவதுமில்லை எனவே இது குறித்து நாம் மனிதஉரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சீ.ஆர்) போன்ற அமைப்புக்களிடம் எடுத்துக்கூறி இந்த அகதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
தொடர்ந்தும் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ்மக்கள் தமது நிதியினை அநாவசியமில்லாமல் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை நம்பி நிதிவசூலிப்பவர்களிடம் வழங்க வேண்டாம். அந்த நிதியினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவே வழங்கி உதவி புரியவேண்டும். ஏனெனில் கடந்தவாரம் கூட 300 போராளிகள் தளத்தில் நின்று வன்னிக் காட்டுப்பகுதியில் செயற்படுவதாகவும், அவர்களின் உணவுக்காக மற்றும் ஆயுத உதவிகளுக்காக நிதி வழங்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு லண்டனில் பெருமளவு நிதி சேகரிக்கப்பட்டது எனக்கு நம்பகரமாக தெரியவந்துள்ளது.
எனவே தொடர்ந்தும் மக்கள் இதுபோன்ற மாயவலைக்குள் சிக்கி ஏமாறக்கூடாது. இவ்வாறு வசூலிக்கப்பட்டு பதுக்கப்படும், மக்களின் நிதியினை மீண்டும் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையும் வகையில், நாம் எந்த வகையிலாவது இது குறித்து நடவடிக்கை எடுத்து அந்நிதியினை மீட்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இனிமேல் இதுபோன்ற மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லையெனவும், தாய்லாந்திலுள்ள தமிழ்மக்களும் இதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் சந்திரநேரு எம்.பி இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment