சரத் பொன்சேகா எதிர்நோக்கும் சவால்கள்
பாதுகாப்புப் படை அதிகாகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா, கடந்த திங்கட்கிழமை தனது அலுவலகத்தில் இருந்து முறைப்படியான அணிவகுப்பு மரியாதைகளுடன் வெளியேறிச் சென்றார்.
இராணுவச் சீருடையுடன் அவர் தோற்றமளித்த கடைசி நாள் அது தான்.
அன்றையதினம் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது அரசியலுக்கு வருவது பற்றிய தனது முடிவை இரண்டு நாட்களுக்குள் அறிவிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் இந்தப் பத்தியை எழுதும் வரைக்கும் அவர் அரசியலுக்கு வருவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை.
முன்று நாட்களாகியும் எந்தப் பதிலும் வரவில்லையே என்று திரும்பவும் செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, தனது முடிவை இப்போதைக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவையும் அரசியலையும் இணைத்து ஒரு பிரமாண்டமான தோற்றப்பாடு இலங்கையிலும், இலங்கைக்கு வெளியேயும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், ஜெனரல் சரத் பொன்சேகா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகப் போட்டியிடுவதற்குத் துணிவாரா அல்லது முன்வைத்த காலைப் பின்வைப்பாரா என்ற கேள்வியும் இருக்கவே செய்கிறது.
ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசியலுக்குக் கொண்டு வந்து எப்படியாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பதவியில் இருந்து வீழ்த்தி விட்டால் போதும் என்பதே பிரதான எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு.
ஜனாதிபதி மஹிந்தவை வீழ்த்துவதற்காக அரசியலில் இறங்கினால் தனது எதிர்காலம் என்னவாகும், அதற்கான உறுதிப்பாடு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா சிந்திப்பதாகவும் தெகிறது.
எந்தவொரு அரசியல் கட்சியின் தயவிலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஜெனரல் சரத் பொன்சேகாவின் நோக்கம் அல்ல.
அப்படிப் போட்டியிட எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுமா என்பதும் சந்தேகமே.
இந்தக் கட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் என்று வரும் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிற்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஏதாவது புதிய அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் போட்டியிடுவதுதான் அது.
ஜனாதிபதித் தேர்தல் சட்டப்படி வேட்பாளர் ஒருவர் அரசியல் கட்சி ஒன்றைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது சுயேச்சையாகப் போட்டியிடுவதாயின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திராததால் எப்படி யாவது ஒரு அரசியல் கட்சியின் சார்பில் தான் போட்டியிட்டேயாக வேண்டும்.
இதற்காகவே ஜே.வி..பி.யின் எம்.பி. ஒருவன் தலைமையில் புதிய கட்சி ஒன்றைப் பதிவு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
எவ்வாறாயினும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்காக நான்கு கட்சிகளைப் பதிவு செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இவற்றில் ஏதாவது ஒன்றின் சார்பில் அவர் களமிறங்க வேண்டும். இதைவிட வேறு தெரிவு அவருக்குக் கிடையாது.
அதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு ஜே.வி.பி, ஐ.தே.க. இரண்டுமே தயாராக இருக்கின்றன.
இவை இரண்டுக்கும் இடையில் இப்போது பின்கதவுப் பேச்சுகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இரு கட்சிகளும் தம் பக்கத்தில் வைத்திருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டால சரி என்ற ரீதியில் செயற்பட ஆரம்பித்துள்ளன.
ஜே.வி.பி.. தரப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழித்தல், 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைறைப்படுத்தல், ஊடக சுதந்திரம், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு போன்றவற்றை வலியுறுத்தியுள்ளது.
ஐ.தே.க.வும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழித்து பிரதமருக்கு அதிகாரங்கள் வழங்குவது என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறது.
இவை இரு கட்சிகளாலும் பொதுப்படையாக ஏற்கப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதால் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா களமிறங்குவதற்கு எந்தத் தடையும் இருக்காது.
ஆனாலும் ஜெனரல் சரத் பொன்சேகா உறுதியாக தனது அடியை அரசியலுக்குள் எடுத்து வைப்பதற்கு சற்றுத் தயக்கம் காட்டுவதாகத் தெகிறது. காரணம், எப்படித் தான் ஜனாதிபதியாக வந்தாலும் சரி, மஹிந்த ராஜபக்ஷவிடம் தோல்வியடைந்தாலும் சரி, தனது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி அவருக்குள் எழுந்திருப்பதாகத் தெகிறது.
ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக பொது வேட்பாளராகக் களமிறங்கி தோல்வியடைந்தால், இராணுவ வெற்றிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா பற்றிய பிரமாண்ட விம்பம் சுக்குநூறாகி விடும்.
வரலாற்றில் அவருக்கு இடம் இல்லாமலேயே போய்விடும். அல்லது இல்லாமல் ஆக்கப்பட்டு விடும்.
இன்னொரு பக்கத்தில் ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டு விடும் சூழ்நிலையே காணப்படுகிறது.
எல்லா கட்சிகளும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க இணங்கியுள்ள நிலையில் ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவானால் கூட, ஆகக் கூடியது ஆறு மாதங்களுக்கு மேல் அந்த அதிகாரங்களை அனுபவிக்க முடியாமல் போகலாம்.
அதன் பின்னர் வெறும் பொம்மையாகவே காலத்தைக் கழிக்க வேண்டியது தான். அப்படியானால், ஜனாதிபதியானால் கூட அவரது எதிர்காலம் என்பது பிரகாசமானதாக அமைய மாட்டாது. பொம்மை போன்று தாம் ஆட்டி வைக்கின்ற ஒருவராகவே ஜெனரல் சரத் பொன்சேகா இருக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நினைப்பு.
அதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா இணங்குவாரா என்பது ஒருபுறத்தில் இருக்க, அப்படியானதொரு பதவிக்கு ஆசைப்பட்டு சூழ்நிலைக் கைதியாக மாறுவதற்கு அவர் விரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிதோல்வி என்பதற்கு அப்பால், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு
தனது எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகமாக இருக்கக் கூடும்.ஏனென்றால் அவருக்கென்று ஒரு அரசியல் அடித்தளம் கிடையாது.
அவரைத் தாங்கி நிற்பதற்கு இதுவரை ஒரு கட்சி கிடையாது. இது அவரது கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தனியானதொரு கட்சியைச் சார்ந்து அரசியல் நடத்தும் முயற்சியில் கால் வைக்க நினைக்க மாட்டார்.
அதேவேளை தனது பாதுகாப்பு, குடும்ப நலன்கள் பற்றிய கவலைகளும் அவருக்கு இருக்க வாய்ப்புகள் உள்ளன.
இதுவரை கடுமையான இராணுவப் பாதுகாப்புக்குள் சுற்றிச் சுற்றி வந்தவர் இன்று வெளியே வந்துள்ளார்.
அரசியலில் இறங்குவது பற்றிய தீர்மானத்தை எடுக்க முன்னரே வாடகைக்கு ஒரு வீட்டை எடுப்பது கூட அவருக்குக் கடினமான காயமாகியிருக்கிறது.
இப்படித் தனிப்பட்ட வகையில் நிறையவே சிந்திக்க வேண்டிய நிலை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தனது நிலை எப்படியிருக்கும் என்று சரியாகக் கணித்தே, அதற்கான உறுதிப் பாட்டை உத்தரவாதங்களைப் பெற்றுக் கொண்டே அரசியலுக்கு வருவது பற்றிய முடிவை ஜெனரல் சரத் பொன்சேகா எடுக்கக் கூடும். படையதிகாகளின் பிரதான பதவியிலிருந்து ஜெனரல் சரத் பொன்சேகா ராஜினாமா செய்ததையடுத்து ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு பின்தள்ளிப் போகிறது.
சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் தொடர்பாக உறுதியான அறிவிப்பு இல்லாமல் அவ்வப்போது பரப்பரப்பு மட்டுமே வெளிவருகின்றது.
கார்வண்ணன்
0 விமர்சனங்கள்:
Post a Comment