பின் வாங்குதல் : ராகவன்
ஒரு போராட்ட அமைப்பானது தனது மக்களுக்காகப் போராடும்போது அவர்களின் நலன்களை முதன்மைப்படுத்தல் மிக அவசியம். மக்களின் நலன்களைக் கைவிட்டு, விடுதலை என்ற ஒரு கோஷத்துக்காக மக்களைப் பலியிடுவது விடுதலை அமைப்பையும் அது பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களையும் பேரழிவுக்குள் தள்ளி விடும். இராணுவ நடவடிக்கைகள் விடுதலைப் போராட்டத்தின் முதன்மை அம்சங்களில் ஒன்று மட்டுமே தவிர, அது மட்டுமே முக்கிய அம்சம் கிடையாது. சர்வதேச சூழல்கள், எதிரியின் படைபலம் போன்ற பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுத்துத் தனது பலவீனத்தைப் புரிந்துகொண்டு பின் வாங்குதல், முதலில் இருந்து தொடங்குதல், சமரசத்திற்கு போதல் போன்றவை ஒன்றும் கவுரவக் குறைச்சலான விடயங்களல்ல.
நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதங்ளைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குப் போனது ஏதோ ஒன்றும் வெட்கத்துக்குரிய விடயமல்ல. அது அரசியல் ஞானம்கொண்ட அகபுறச் சூழல்களை கருத்தில்கொண்ட மக்களின் நலன்களை முன்னிறுத்திய யதார்த்தபூர்வமான முடிவு. அந்த முடிவின் பின் அவர்கள் தாங்கள் நினைத்ததை அடையமுடியாமல் கூடப் போகலாம். ஆனால் ஏறமுடியாத உச்சிக்கு ஏறும் தற்கொலை முயற்சியை விட பின்வாங்குதல் உவப்பானதே. ஏனெனில் பின்வாங்குதல் புதிதாகத் தொடங்குவதற்கான ஒரு இடைவெளியைத் தருகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பு ஒருபலம் பொருந்திய இராணுவ அமைப்பாகத் தன்னைக் கட்டி எழுப்பியது. ஆனாலும் ஒரு அரசின் இராணுவ பொருளாதாரப் பலம், சர்வதேச ஆதரவு ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது ஒரு விடுதலை அமைப்பானது மேற்கூறிய அனைத்து ஆயுதங்களையும் சரிவரப் பயன்படுத்தாவிட்டால் தோல்வியையே தழுவும். ஏனெனில் அரசின் இராணுவ, ஆயுத, ஆட்பலம் எப்பொழுதும் விடுதலை இராணுவத்தின் பலத்தை விட அதிகமாகவே இருக்கும்.
விடுதலைப் போராட்டத்தின் தார்மீகப் பலமே விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளம்.
பெப்ரவரி 2002இல் ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் தங்கள் இராணுவ பலத்தை அதிகரிப்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினர். சமாதான காலத்தில் இராணுவ பலத்தை அதிகரிப்பதில் தவறேதுமில்லை. ஆனால் அரசியல்ரீதீயான நடவடிக்கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதும் சம காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். இந்த அம்சம் விடுதலைப் புலிகளால் கணக்கில் எடுக்கப்படவேயில்லை. முப்படைகளையும் பாதாளத்தில பத்துப்படைகளையும் வைத்திருக்க வேண்டும் என்ற பேராசையும் இராணுவ வெற்றியால் எதனையும் சாதித்துவிடலாம் அன்ற அதீத அல்லது மூட நம்பிக்கையும் விடுதலைப் புலிகளின் தோல்விக்கு வித்திட்டன.
அக்கால கட்டத்தில், 2004இல் கருணாவின் பிரிவு விடுதலை புலிகளின் இராணுவ பலத்திற்கு ஒரு பெரும் இழப்பாக அமைந்தது. கருணாவின் பிரிவானது கிழக்குவாழ் தமிழர்களின் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் விடுதலைப் புலிகள் அதுவரை காலமாக கட்டுப்பாடுக்குள் வைத்திருந்த பல பிரதேசங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. அதுவரையும் இராணுவம் பல்வேறு முனைகளில் தாக்குதலை எதிர்கொண்டது. கிழக்கின் புவியியல் அமைப்பு விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பாக அமைந்திருந்தது. கருணாவின் பிரிவை விடுதலைப் புலிகளின் தலைமை அரசியல் நேர்மையுடன் அணுகி உள் முரண்பாடுகளை நட்புரீதியாகத் தீர்த்திருந்தால் இன்று கிழக்கு நிலம் இராணுவத்தின் கையில் போயிருக்குமா என்பது கேள்விக்குறியே.
இதற்கு மேலாக விடுதலைபுலிகள் சமாதான காலத்தை ஒரு வாய்ப்பாகக் கருதி மாற்றுக் கட்சியினர் மேல் குறி வைத்துக் கொன்று குவித்ததானது அப்பிரிவினரையும் அவர்களது ஆதரவாளர்களையும் இலங்கை அரசின் பக்கம் தள்ளிவிட்டது. தங்களது இராணுவ பலத்தைப் பெருக்குவதற்காக சிறார்களை படையில் வலுக்கட்டாயமாக சேர்த்தது, வரிவிதித்தல் போன்ற புலிகளின் அடாவடித்தனங்கள் விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களிடமிருந்து மேலும் அந்நிய படுத்தின. முஸ்லிம் மக்களை வஞ்சித்து அம்மக்களின் ஆதரவையும் புலிகள் இழந்தனர்.
விடுதலைப் புலிகளின் ஆதரவுத்தளம் புலம் பெயர்ந்த தமிழரகள் மட்டுமே என்ற நிலைக்குப் புலிகள் தள்ளப்பட்டனர். வெளிநாடு வாழ் தமிழரின் நிதி உதவி மூலம் ஆயுதங்களைக் குவித்து யுத்தமொன்றைப் புரிவதன் மூலம் தமது குறிக்கோளை அடைந்து விடலாம் என விடுதலைப் புலிகள் தவறான கணக்குப் போட்டனர். வெளிநாடு வாழ் தமிழர் இந்தப் போராட்டத்தில் நேரடிப் பங்கு வகிக்காதவர்கள். இவர்களில் அநேகர் விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிகளில் குதூகலமடைகின்றவர்கள்.
அண்மையில் சிசாக் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். புரட்சிகர அரசியலில் பின்வாங்குதல் சம்பந்தமான கட்டுரை அது. பின்வாங்குதல் என்பது ஏற்கனெவே அடைந்த இடத்திலிருந்து தொடங்குவதல்ல. ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்பது.
ருஸ்யப் புரட்சிக்குப் பின் சந்தைப்பொருளாதாரத்தையும் தனியுடைமையையும் இணைத்துக் கொள்ளும் வகையில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகமாக்கும்போது பின்வாங்குதல் சம்பந்தமாக லெனினின் பார்வையிலிருந்து அந்த கட்டுரை ஆரம்பிக்கிறது.
ஒரு மலையேறி யாருமே அடைய முடியாத மலை உச்சி ஒன்றிற்கு ஏற முயல்கிறான். யாருமே அடைய முடியாத தூரத்திற்கும் வந்துவிட்டான். ஆனாலும் இதற்கு மேல் தன்னால் போக முடியாதென்று அவனுக்குத் தெரிகிறது. தான் தேர்ந்தெடுத்த பாதை ஆபத்தானதும் கடினமானதும் மட்டுமல்ல அப்பாதையில் பயணித்தால் தனது இலக்கை அடைய முடியாதென்று அவனுக்குத் தெரிகிறது. எனவே அவன் பின்வாங்குகிறான்.
பின்வாங்குவது இலகுவானதல்ல.
அவன் சறுக்கலாம், விழலாம். ஆமை வேகத்தில் இலக்கிலிருந்து பின்வாங்க வேண்டியிருக்கின்றது. பின்வாங்குதலின் போது வரும் ஆபத்துக்களோ அல்லது இந்த கடினமான பின்வாங்கலின் விளைவுகள் எப்படியிருக்குமென்றோ யாரும் ஆருடம் கூடக் கூற முடியாத நிலை. ஆனாலும் அவன் இலக்கை அடைவதுநடைமுறைச் சாத்தியம் இல்லை என தெரிந்தவுடன் பின் வாங்க முடிவு செய்து விட்டான்.
நல்ல வேளை, பின்வாங்கும்போது பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு தொலைநோக்குக் கருவியால் மலையிலிருந்து இறங்குபவனை பார்த்துக்கொண்டிருக்கும் ‘உண்மையான நண்பர்களின்” குரல் அவனுக்குக் கேட்கவில்லை. அவர்கள் அவனை முன்னோக்கிச் செல்லுமாறு கூக்குரல் இடுகிறார்கள். அவர்களது கூக்குரலைக் கேட்டு முன்னேறி நகர்ந்திருந்தால் அவனுக்குத் தலைச்சுற்று வந்திருக்கும். தலைச்சுற்று வரும்போது ஒருவர் தெளிவாக இருக்க முடியாது. உறுதியாகக் காலடியும் வைக்க முடியாது. முக்கியமாக உயரமான இடங்களில் தலைச்சுற்றல் மிகவும் ஆபத்தானது.
தனிச்சொத்தையும் சந்தைப் பொருளாதாரத்தையும் புதிதாகத் தோன்றிய சோவியத்தில் உடனடியாக இல்லாமற் செய்வது நடைமுறைச் சாத்தியமல்ல. எனவே கலப்புப் பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் என்ற அரசியல் தீர்க்கதரிசனத்தின்படி பின் வாங்குதல் அவசியமாகிறது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் சோவியத் யூனியன் போல்ஸ்விக்குகளின் முழுக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்த கால கட்டம் இது.
மலையேறியின் யதார்த்தமான பின்வாங்குதல் பற்றிய சிந்தனை புலிகளுக்கு வருவதற்கான அரசியல் தெளிவோ இராணுவத்தெளிவோ அவர்களிடம் இருக்கவில்லை. மாறாக, தாங்கள் முன்னோக்கிப் போவதைத் தூரத்தில் இருந்து பார்க்கும் ‘உண்மையான நண்பர்களின்” குரல் அவர்களுக்கு நன்றாகவே கேட்டது.
ஒரு பக்கம், முரட்டுத்தனமாக எந்தவித விட்டுக்கொடுப்பும் இன்றி மக்களிடமிருந்து அந்நியப்பட்டு யாருக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அந்த மக்களையே பணயம் வைத்து விடுதலைப் புலிகள் தற்கொலை அரசியலைத் தொடர்ந்தனர். கடந்த “மாவீரர் தினத்தில்” விடுதலைப்புலிகளின் தலைவர் எல்லா எதிர்ப்புகளையும் தனியாக நின்று எதிர்கொள்ளும் பலம் தமக்கு இருக்கிறதென வீராப்புப் பேசி, தூரத்திலிருந்து பார்வையாளாரக இருக்கும் புலம்பெயர் தமிழரையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் விடுதலைப் புலிகளுக்கு முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்குமாறு கேட்டார்.
புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் ஏற்பாடு செய்து விடுதலைப்புலிகளை ஏற முடியாத மலைஉச்சிக்கு ஏற உற்சாகம் கொடுத்தனர். தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் நடிகர்களும் வீரப்பிரதாபங்களையும் வாய்வீச்சுகளையும் வீசி விடுதலைப்புலிகளின் விட்டுக்கொடா அரசியலுக்கு உந்து சக்தியாக விளங்கினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளின் சவப்பெட்டியின் இறுதி ஆணியை அடிக்க ஆயுதத்தை விடுதலை புலிகள் கைவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.
ஆயுதங்கள் வெறும் இரும்புக்கருவிகள். ஆயுதங்களைக் கை விடுவது வேறு. ஆயுதப் போராட்டத்தை கை விடுவது வேறு. ஆயுதங்களைத் தாங்கியது மக்களைப் பாதுகாக்க.அந்த மக்களையே ஆயுதமாக்கி தம்மையும் தமது ஆயுதங்களையும் பாதுகாக்கமுனைந்தனர் புலிகள். இறுதியில் விடுதலைப் புலிகளின் மக்களை அந்நியப்படுத்திய சாகச அரசியல் ஒட்டுமொத்த அழிவுக்கு இட்டுச் சென்று தமிழ் மக்களிடம் இருந்த எதிர்ப்பு அரசியல் பரப்பையும் அழித்தொழித்து ஒரு அரசியல் சூனியப் பரப்பைத் தந்துவிட்டுப் போயிருக்கிறது. விடுதலைப்புலிகளின் பாரிய அரசியல், இராணுவ தவறுகளுக்கு பின்புலத்தில் அவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்து எவ்வித பொறுப்புக்களும் அற்று வேடிக்கை பார்த்தும், விளம்பரம் செய்தும், பத்திரிகை நடத்தியும், பணம் பண்ணியும், ஊர்வலம் நடத்தியும், புலிகளை எவ்வித விமர்சனமுமின்றி ஆதரித்த புலிகளின் புலம் செயல்பாட்டாளர்களும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் வரலாற்றின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
புலிகள் தொடங்கிய இடத்திலோ, விட்ட இடத்திலோ தமிழ் மக்களின் அரசியல் இனித் தொடங்காது. இனி புதிய தொடக்கமே.
நன்றி : வைகறை
0 விமர்சனங்கள்:
Post a Comment