மறைந்திருக்கும் மர்மங்கள் - கோட்டாபய கொலைக்கு கிளிநொச்சியில் தீட்டப்பட்ட திட்டம்!
இதனால் அதிர்ச்சியடைந்திருந்த பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத் தலைவர்கள் தென்பகுதியில் பாரிய தாக்குதல் ஒன்றை நடாத்தி அதன் மூலம் இராணுவத்தினரின் நடவடிக்கைகளைத் தடுக்கலாம் என எண்ணி இருந்தனர். இதற்கான தருணத்தையும் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ ஆகியோரது செயற்பாடுகளால் இலங்கை இராணுவத்தினர் உற்சாகப்படுத்தப்பட்டிருந்தனர்.
இது வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் ஏனைய புலிகள் இயக்க முக்கியஸ்தர்களாலும் தாங்கிக் கொள்ள இயலாத விடயமாகியிருந்தது.
அக் காலகட்டத்தில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், தமிழ்ச்செல்வன் உட்பட்ட பல்வேறு மட்ட புலிகளின் தலைவர்கள் கிளிநொச்சியில் தங்கியிருந்தனர். ஆக, இது புலிகளின் கோட்டையாக விளங்கியது.
ஒருநாள், புலிகள் இயக்கத்தில் இருந்த திறமைசாலி எனப் பெயர் பெற்றிருந்த புலிகளது புலனாய்வுத்துறை முக்கியஸ்தரான அன்புமாஸ்டர் என்பவர் தனது தலைவர் பொட்டு அம்மான் தங்கியிருந்த புலிகளது முகாமிற்கு பெரியதொரு திட்டத்துடன் நுழைந்தார்.
அன்பு மாஸ்டர் பொட்டு அம்மானின் முகாமிற்குள் நுழையும் போது அங்கு இன்னுமொரு புலனாய்வுத்துறை முக்கியஸ்தரான கபில் அம்மானும் பரமதேவனும் இருந்தனர்.
இவர்களைக் கண்டதும் மேலும் பரவசமடைந்த அன்பு மாஸ்டர் தனது திட்டத்தை புலிகளது புலனாய்வுத்துறை சார்ந்த மேற்படி மூவரிடம் சமர்ப்பித்திருந்தார். “ இந்த திட்டத்தை நாம் சரியாக செய்தால்.. சரி… எல்லாம் முடிந்துவிடும்…. கொழும்பில் உள்ள எங்களது ஆட்கள் இதனை ஒழுங்காகச் செய்வார்கள் என்று நம்புறன்…. எனவே தம்பியிடமும் ( பிரபாகரன்) கூறிவிட்டு இதனைச் செய்வம்…” என தன்மீது பார்வையைச் செலுத்திக் கொண்டிருக்கும் ஏனையவர்களைப் பார்த்தபடி கூறுகிறார் அன்புமாஸ்டர்.
“நல்லது…. நீ… சொல்லுகிறாய் என்பதால் நாங்கள் இதனை செய்வம்…” எனக் கூறி தனது சகா கொண்டு வந்திருந்த திட்டத்தை ஆராய்ந்து பார்த்த பொட்டு அம்மான், இறுதியில் இத் தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்பை தனக்கு நெருக்கமான கபில் அம்மானிடமும் பரமதேவனிடமும் ஒப்படைத்துவிட்டு அதற்கான தனது அனுமதியையும் வழங்குகிறார்.
அன்புமாஸ்டர் யார் என்பது குறித்து பொட்டு அம்மான் நன்கறிவார்.
இக்காலகட்டத்தில் பாலாஜி, கிருபன், மைக்கல், கதிர், உண்டியல் ரெக்கி, உட்பட்ட புலிகளின் தற்கொலைதாரிகள் உள்ளிட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் தென்பகுதியில் பயங்கரத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நோக்கத்துடன் பல்வேறு வேடங்களில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்தனர்.
இவர்களில் பாலாஜி என்பவன் புலிகளின் புலனாய்வுத் துறை உறுப்பினர் என்ற ரீதியில் செயற்பட்ட முக்கிய நபராவார். வெல்டிங் தொழிலை கற்றறிந்திருந்த இவன், பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக வெல்டிங் தொழிலாளர் போல் தன்னை இனங்காட்டியவாறு கொழும்பு கிருலப்பனை பகுதியில் தங்கியிருந்தான்;.
ஒருநாள் கிளிநொச்சியில் இருந்து பாலாஜிக்கு அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அது புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கபில் அம்மானிடமிருந்து வந்திருந்தது.
“உடனே என்னை தொடர்பு கொள்ளும்படி கிருபனுக்கு தகவல் கொடு…உடனடியாக….என கிளிநொச்சியில் இருந்த கபில் அம்மான் தொலைபேசி மூலம் பாலாஜிக்கு அறிவித்திருந்தார்.
உடனடியாக செயற்பட்ட பாலாஜி அப்போது மொரட்டுவ பகுதியில் தங்கியிருந்த கிருபனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு “ கபில் மாஸ்டர் உன்னை தொடர்பு கொள்ளச் சொன்னார்… அவசரமாம்… இப்போதே..தொடர்பு எடு…” எனக்கூறினான்;. அடுத்த நொடியில் கிருபன் கபில் அம்மானின் செய்மதி தொலைபேசியுடன் தொடர்பு கொண்டான்.
“ கபில் அண்ணன் உங்களுக்கு எடுக்கச் சொன்னியலே..”
“ஓம்…உனக்கொரு பெரிய வேலை இருக்குது… நீ செய்ய வேணும்…ஒவ்வொரு நாளும் காலையில கொள்ளுப்பிட்டி ஜனாதிபதி வீட்டுக்கு அருகாமையிலும் டவுன் ஹோலுக்கு நவலோக்க ஆஸ்பத்திரிக்கும் அருகில் குமாரன்ரத்னம் சந்திக்கு இடையிலுமாக சாம்பல் நிறக் காருடன் கொன்வே ஒன்று போகுதாம். இன்றிலிருந்து நீ அதை கண்காணிக்க வேண்டும்… உடனே இந்த விஷயத்தை கதிருக்கும் சொல்லி அவனையும் சேர்த்துக் கொள்…உந்த சாம்பல் நிற காரில எங்களுக்குத் தேவையான ஒரு பெரிய ஆள் போறான்.. டிபன்ஸ் செக்கரட்ரி… அவனுக்கு எப்படியாவது அடிக்க வேணும்…இந்த வேலைய ஒழுங்காகச் செய்யவேணும்.”
கபில் அம்மான் கிருபனிடம் தொலைபேசியில் கூறினார்.
கபில் அம்மானிடம் கூறியதற்கிணங்க மறுநாள் முதல் கிருபனும் கதிரும் இணைந்து மேற்படி கண்காணிப்புப் பணியை ஆரம்பித்ததுடன் சில தினங்களில் மைக்கலும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.
கதிர் என்பவன் அக்காலகட்டத்தில் கொழும்பு வந்து முச்சக்கரவண்டி சாரதியாக தன்னை இனங்காட்டிக் கொண்டு இருந்த தற்கொலைதாரியாவான். தன்னை முச்சக்கரவண்டி சாரதியாக இணங்காட்டிக் கொள்வதற்காக நீலநிற பழைய முச்சக்கர வண்டி ஒன்றையும் இவன் வைத்திருந்தான். கொழும்பு நகரில் வாடகைப் பயணங்கள் செல்வதுடன் கபில் அம்மானன் கூறிய தினத்திலிருந்து மேற்கூறப்பட்ட வாகன தொடர் அணியைக் கண்காணிப்பதும் அவனது பணியாகியது.
இவ்வாறு கதிர் அந்த வாகனத் தொடரணியை பின்பற்றிச்சென்று கண்காணிக்கும் போது கிருபனும், மைக்கலும், தினமும் டவுன்ஹோலுக்கும், நவலோக்க சந்தி மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளிலும் சுற்றித்திரிந்து வாகனத் தொடரணி செல்லும் விதம் மற்றும் அவற்றுக்கான பாதுகாப்பு என்பன குறித்து நன்கு கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
இப்படியே இருமாதங்களாகிவிட்டன. இதனிடையே கிளிநொச்சியில் புலிகளது மேற்படித் தாக்குதல் திட்டத்தைக் தயாரித்த அன்பு மாஸ்டர், பொட்டு அம்மான், கபில் அம்மான் மற்றும் பரமதேவன் போன்ற புலிகளது புலனாய்வுத் துறையினர் இணைந்து மேலுமொரு முக்கியப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதாவது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பயணிக்கும் பாதுகாப்பான வாகன ரக வாகனங்கள் தொடர்பில் இணையத்தளத்தின் மூலம் ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
“இண்டர் நெட்டில் காட்டுவதைப் போல் இந்த வாகனத்திற்குள் குண்டுகள் நுழையாது.. இது புளட்;ப்ரூப் என்றாலும் ஒன்றைச் செய்யலாம்…பெரியதொரு விபத்தின் போது ஒட்டோ முறையில் கதவுகள் லொக் ஆகும் வகையில் இவ் வாகனம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.”
என இணையத்தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பு மாஸ்டர் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரை நோக்கிக் கூறினார்.
அன்புமாஸ்டரின் இக் கூற்றை செவிமடுத்த ஏனைய புலனாய்வுத் துறை முக்கியஸ்தர்கள் இத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொள்வது எவ்வாறு என்பது குறித்து சற்று நேரம் சிந்தித்தனர்.
“சரி..அப்படி என்றால் வாகனத்திற்கு குண்டுகள் படுகிற வகையில தாக்குதல் நடத்திச் சரிவராது… நாங்கள் வாகனம் தீப்பிடிக்கிற வகையில் காரியத்தச் செய்வம்,.. கதவுகள் லொக் ஆகிறதனால வாகனத்துக்குள்ளேயே ஆள் எரிஞ்சு போயிடுவான்…” என பொட்டு அம்மான் கூறியதை அங்கிருந்தவர்கள் அனுமதித்தனர். இதன்படி மேற்படி தாக்குதலின் இறுதித் திட்டமும் அன்றைய தினம் முடிவுக்கு வந்துவிட்டது.
அதன் பின்னர் இத்திட்டம் குறித்த தகவல்களை புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் தெரிவிப்பதற்கான நடவடிக்கையை இவர்கள் மேற்கொண்டதுடன் அதுகாலவரையில் பாதுகாப்புத் தரப்பினரது தாக்குதல்களினால் செய்வதறியாது திகைத்துப் போயிருந்த பிரபாகரன் மேற்படி தாக்குதலை மேற்கொள்ள பச்சைக் கொடிகாட்டினார்.
இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கான தாக்குதலை நடாத்துவது தொடர்பில் கொழும்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கதிர், கிருபன், மைக்கல், ஆகியோர் தங்களது பணியின் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தனர்.
இதனிடையே ஒருநாள் கிருபனைச் சந்தித்த கதிர், இத்தாக்குதலை மேற்கொள்வதற்கு புதியதொரு முச்சக்கரவண்டி தேவை எனக் கூறினான்.
இவ்விடயம் குறித்து கிருபன் பாலாஜிக்கு அறிவித்தான்;. பின்னர் கதிரின் தேவை குறித்து கிளிநொச்சியில் இருந்த பரமதேவனுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பாலாஜியுடன் தொடர்பு கொண்ட பரமதேவன், யாரும் எதிர்பார்த்திராத ஒரு விடயத்தைக் கூறினார்.
“சரி உங்களது வேலை முடிந்ததென்றால் த்ரீவில் ஒன்றை வாங்கலாம்… நீ கிருபனிடம் கூறு.. இன்னும் இரு வாரத்தில் வெள்ளவத்தைக்குப் போய் உண்டியல் ரெக்கியை சந்திக்கும்படி… த்ரீவில் வாங்குவதற்கான காசு கனடாவில் இருந்து ரெக்கிக்கு வந்திருக்கும். அதற்கு முன்னம் இங்கால பக்கம் வந்திட்டுப் போகும்படி கதிரிட்ட சொல்லு…பெரியவர் அவனைச் சந்திக்க வேணுமாம்” என பரமதேவன் பாலாஜியிடம் கூறினார்.
இந்த இறுதிக் கட்டத்தில் கதிரை கிளிநொச்சிக்கு வரச் சொன்ன விடயமானது பாலாஜிக்கும் கதிருக்கும் கிருபனுக்கும் புரியாத புதிராகவே இருந்தது.
எனினும் பரமதேவன் கூறியபடி மறுதினமே கதிர் புலிகளது தலைவர்களைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி நோக்கிப் புறப்பட்டான். கதிர் கிளிநொச்சியிலுள்ள புலிகளது முகாமை அடைந்தபோது, பொட்டு அம்மன், கபில் அம்மான், பரமதேவன், அன்புமாஸ்டர், ஆகியோர் மேலுமொரு முக்கியப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கதிர் கிளிநொச்சி வந்தடைந்த தினத்திற்கு மறுதினம் அத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
அதாவது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீதான தாக்குதலை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கதிர் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் முன்னோடி ஏற்பாடாக நேரடித்தாக்குதல் சம்பவமொன்று நடாத்தப்பட்டது.
இந்த முன்னோடி தாக்குதல் சம்பவத்தின் மூலம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீதான தாக்குதலை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி தெளிவாகப் புரிந்து கொண்ட கதிர், சில தினங்கள் கிளிநொச்சியில் தங்கிவிட்டு பொட்டு அம்மானுடன் இறுதி விருந்திலும் கலந்துகொண்டுவிட்டு தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் அனைவரிடம் இருந்தும் விடைபெற்றுக் கொண்டு தாக்குதலை மேற்கொள்வதற்காக மீண்டும் கொழும்பு வந்தான்.
பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்;டாபய ராஜபக்ஷ கொலை சதித்திட்டத்தின் சந்தேக நபர்கள் கதிரின் இந்த விடைபெறும் நிகழ்வை கூறும் போது, பிரபாகரன் உள்ளிட்ட புலித்தலைவர்கள் தமிழ் இளைஞர், யுவதிகளை எவ்வாறு தற்கொலைதாரிகளாக மாற்றி, அழித்தார்கள் என்ற விடயம் மிகத் தெளிவாகத் தெரிய வருகிறது.
கதிர் கொழும்பு வந்து இருவாரங்கள் கழிந்த நிலையில் ஒருநாள் கிருபன் உண்டியல் ரெக்கியைத் தேடி வெள்ளவத்தைப் பகுதிக்குச் சென்றான். கதிருக்குத் தேவையான முச்சக்கரவண்டியை கொள்வனவு செய்வதற்கு பணம் வாங்கும் நோக்கிலேயே கிருபன் அங்கு சென்றான்.
அச் சந்தர்ப்பத்தில் பரமதேவன் ஏற்கனவே கூறியபடி கனடாவில் இருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் உண்டியல் ரெக்கியிடம் வந்த சேர்ந்திருந்தது. அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட கிருபன் அப்பணத்தை கதிரிடம் கொடுத்தான்.
அதாவது கதிரின் வாழ்க்கையில் அவன் தனது கடைசி சொத்தை கொள்வனவு செய்வதற்காக அப்பணம் கொடுக்கப்படுகிறது.
இதன் பிரகாரம், அன்பு மாஸ்டரின் பயங்கரத் தாக்குதலை செயற்படுத்தும் முகமாக அதன் இறுதிக் கட்டத்தையடைந்திருந்த நிலையில் பணம் கிடைத்த மறுதினமே கதிர் சிகப்பு நிற புதியதொரு முச்சக்கர வண்டியைக் கொள்வனவு செய்கின்றான்.
இல. டபிள்யூ.பி.ஜி.எச். 0617 என்பது அம் முச்சக்கர வண்டியின் பதிவு இலக்கமாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒருநாள் கிளிநொச்சியிலிருந்து பரம தேவன் கிருபனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
“கெயார் இன்டர் நெஷனல் (அரச சார்பற்ற நிறுவனம்) கெப் வாகனமொன்றில கதிருக்குத் தேவையான சாமான்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டிருக்கு… கெப்பில டீசல் டெங்கியில இருக்கும்… இப்பவே பாலாஜியுடன் தொடர்பு கொண்டு அந்த சாமான்கள இறக்கி வைக்கிறதுக்கு ஒரு இடத்த தயார் பண்ணு…” என அத் தொலைபேசி தொடர்பில் கிருபனுக்குக் கூறப்பட்டது.
உடனே பாலாஜியை தொடர்பு கொண்ட கிருபன், உடனே அவனை தான் சந்திக்க வேண்டும் எனக் கூறினான்.
“வா… நாரஹேன்பிட்டி, கிரிமண்டல ரோட்டில நிற்கிறான்…” என்றான் பாலாஜி.
பாலாஜியை சந்திக்கும் நாரஹேன்பிட்டிக்குப் புறப்பட்ட கிருபன் அங்கு மோட்டார் சைக்கிளொன்றில் வந்திருந்த பாலாஜியைக் கண்டான்.
“கெயார் இன்டநெஷனலின்ட வாகனத்தில சாமான்கள அனுப்பப்பட்டிருக்கிறதென்று பரமதேவன் சொன்னவர்… சாமான்கள வைக்க இடமொன்று வேண்டும்…” என கிருபன் தான் வந்த நோக்கத்தை பாலாஜியிடம் தெரிவித்தான்.
“சரி… ஏறு…” என கிருபனிடம் கூறிய பாலாஜி கிருபனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு தெஹிவளையி;ல் ஓரிடத்திற்குச் சென்றான்…
கெயார் இண்டர் நெஷனல் கெப் வாகனத்தில் கொண்டு வரப்படுகின்ற தாக்குதலுக்கான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கு இந்த இடம் பாதுகாப்பற்றது என கிருபன் கூறினான். எனவே மீண்டும் கிருபனை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்ட பாலாஜி பொறலஸ்கமுவ பகுதியின் வௌ வீதிக்குச் சென்றான்.
வேல்டிங் தொழிலாளி என்ற ரீதியில் கொழும்பில் தங்கி இருந்த பாலாஜி வெல்டிங் வேலைக்கென குத்தகைக்கு எடுத்திருந்த புதிதாக கட்டப்படும் வீடொன்று இங்கு இருந்தது.
எனினும் இந்த இடமும் கிருபனின் மனதுக்குப் பிடிக்கவில்லை. இந்த வகையில் வத்தளை – மாபோலை பகுதிக்குச் சென்ற பாலாஜியும் கிருபனும் இறுதியாக கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் 57வது ஒழுங்கையை வந்தடைந்தனர். இங்கு பாழடைந்த ஒரு வீடு இருந்தது. பாலாஜியின் நண்பனொருவன் தங்கி இருந்த இந்த வீடு தங்களது செயற்பாட்டுக்கு உகந்ததென கிருபனும் இணக்கம் தெரிவித்தான்.
அதற்கு மறுநாள் சில காலமாக அறிந்திருந்த நபரொருவர் கிருபனுடன் தொடர்பு கொண்டிருந்தான்.
“தம்பி… நான் கண்ணன் கதைக்கிறன்… வேலை எல்லாம் சரி… நீ எங்க இருக்கிறாய்… இன்றைக்கு மத்தியானம் வேலையை முடிக்க தயாரா இரு… நான் சாமான்கள எடுத்துக் கொண்டு வாகனத்தில வாறன்… நீயும் இடையில ஏறிக்கொள்…” என கண்ணன் கிருபனிடம் கூறினான்.
இந்த கண்ணன் என்பவன் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியலாளராகப் பணியாற்றுபவன்.
ஏற்கனவே கதைத்துக் கொண்டதன் பின்னர் அன்று பகல் கண்ணன் கெயார் இண்டநெஷனல் கெப் ரக வாகனத்தில் கிருபனைத் தேடி வந்தான். அப்போது பாலாஜியும் கிருபனுடன் இருந்தான். பின்னர் எல்லோரும் கெப் வாகனத்தில் ஏறி, வெள்ளவத்தைக்கு வந்தனர்.
“தம்பி… சாமான்கள் டீசல் டெங்கியில இருக்குது… விரைவா அதக் கழற்றுவம்” என கண்ணன் செயற்பாட்டில் இறங்கினான்.
இதன்படி கெப் வாகனத்தின் டீசல் தாங்கி கழற்றப்பட்டது. பின்னர் அதனை இரண்டாகத் திறந்த கண்ணன் அதனுள் இருந்து 25 கிலோ சுமையுடைய சக்திவாய்ந்த குண்டொன்றையும் கதிரின் முச்சக்கரவண்டியில் பொருத்தக் கூடிய மேலதிக பெற்றோல் தாங்கி ஒன்றையும் வெளியில் எடுத்தான்.
பின்னர் அனைவரும் இணைந்து கெப் வண்டியின் டீசல் தாங்கியை மீண்டும் வேல்டிங் செய்து வாகனத்துடன் பொருத்தினர். இதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் கண்ணன் அங்கு கொண்டு வந்திருந்தான்.
இதன் பின்னர் அதிசக்தி வாய்ந்த குண்டையும் ஏனைய உபகரணங்களையும் அந்த வீட்டினுள் மறைத்து வைத்த அவர்கள் மீண்டும் நாளை சந்திப்பதாகக் கூறி அங்கிருந்து சென்றனர்.
எனினும் மறுநாள் கிருபனும் பாலாஜியும் மாத்திரமே அங்கு வந்தனர். கண்ணன் வந்திருக்கவில்லை. பாலாஜியும் கிருபனும் இது பற்றி கதைத்துக் கொண்டிருக்கும் போது கண்ணனிடம் இருந்து கிருபனுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது.
“தம்பி… நானிப்போ வரமாட்டன்… உந்த இடத்துக்கு த்ரீவில் ஒன்றில கதிர் வருவான்… த்ரீவீலில சாமான்களப் போட்டுக் கொண்டு மோதரை பூசாரியின்ட வீட்டுக்கு வாங்கோ… அந்த இடத்தில எல்லாத்தையும் செட் பண்ணலாம்…” எனக் கண்ணன் கூறினான்.
கண்ணன் கூறியபடியே சற்று நேரம் கழித்து கதிர் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததன் பின்னர் கிருபனும் கதிரும் சேர்ந்து அதிசக்தி வாய்ந்த குண்டையும் ஏனைய உபகரணங்களையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு மோதரை நோக்கிப் புறப்பட்டனர். வேறொரு பணி காரணமாக பாலாஜி அந்த இடத்தில் நின்று விடடான்.
கிருபனும் கதிரும் மோதரையிலுள்ள பூசகரின் வீட்டுக்கு குண்டு உட்பட ஏனைய உபகரணங்களைக் கொண்டு வரும் போது அப்பகுதியில் கனத்த மழை பெய்து கொண்டிருந்தது. அவர்கள் அந்த வீட்டை அடைந்த போது கண்ணனும் அங்கிருந்தான்.
பூசாரியின் வீட்டில் வைத்து முச்சக்கர வண்டியில் குண்டைப் பொருத்துவது இவர்களது நோக்கமாக இருந்த போதிலும் கனத்த மழை இடைவிடாது பெய்துகொண்டிருந்தபடியால் அப்பணி மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பூசாரியின் வளவுக்குள் குண்டு உட்பட்ட ஏனைய உபகரணங்களைக் குழி தோண்டிப் புதைத்துவைத்த அவர்கள் மறுநாள் சந்திப்பதாகக் கூறிக் கொண்டு தாங்கள் தங்கியிருந்த இடங்களுக்குச் சென்றனர்.
முந்தைய தினம் கதைத்துக் கொண்டதன் பிரகாரம் கதிரும், கண்ணனும், கிருபனும் மறுநாள் பகல் பூசாரியின் வீட்டுக்கு வந்தனர்.
அந்த பயங்கர வேலை ஆரம்பிக்கப்பட்டது. அதற்குரிய வேல்டிங் கருவிகள், பூச்சுக்கள் என்பன கண்ணனால் கொண்டு வரப்பட்டிருந்தன.
முதலில் முச்சக்கர வண்டியின் பெற்றல் தாங்கி கழற்றப்பட்டு அதனை அகற்றிய கண்ணன் பின்னர் கிளிநொச்சியிலிருந்து கொண்டு வரப்பட்ட தாங்கியை அதில் பொருத்தினான்.
பின்னர் அதிசக்தி வாய்ந்த குண்டு முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டது. அனைத்தும் பொருத்தப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியின் ஹெண்டலில் குண்டினை வெடிக்கச் செய்யும் பட்டனைப் பொருத்திய கண்ணன் அங்கிருந்த அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்து அதன் செயற்பாட்டை செயற்படுத்திப் பார்க்கத் துணிந்தான். தான் ஒரு பொறியியலாளர் என்பதைக் காட்டும் வகையில் இச்செயல் அமைந்தது.
இறுதியில் முச்சக்கர வண்டியை கதிரிடம் ஒப்படைத்து விட்டு கண்ணனும் கிருபனும் வாழ்க்கையில் இறுதித் தடவையாக கதிரிடம் இருந்து விடைபெற்றனர்.
மறுநாள் அதிகாலையில் முச்சக்கர வண்டியில் ஏறி அமர்ந்த கதிர் தனது இலக்கை நோக்கிப் பறிக்க ஆரம்பித்தான்.
அந்த நேரத்தில் கதிர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியில் குமரன் ரத்னம் வீதியின் சந்தியில் இருந்தான்.
இங்குதான் கிருபன், மைக்கல், கதிர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டிருந்தனர்.
நேரம் காலை 7.00 மணியைத் தாண்டி இருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ பயணித்த வாகனத்துடன் கூடிய வாகனத் தொடரணி அப்போது கொழும்பு கங்காராம மாவத்தை ஊடாக வந்து குமரன் ரத்னம் சந்தி ஊடாகப் பயணித்துக் கொண்டிருந்தன.
இதனை கிருபனின் தகவலின் படி ஏற்கனவே அறிந்திருந்த கதிர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பலி கொள்ளும் தாக்குதலை மேற்கொள்ளத் தயாரானான்.
எனினும், முச்சக்கர வண்டியை இயக்கி இலக்கு நோக்கி கதிர் முன்னேறுவதற்கு முன்பதாக வழியில் சென்று கொண்டிருந்த வாகனமொன்று கோடாபய ராஜபக்ஷ பயணித்த வாகனத்திற்கும் கதிரின் முச்சக்கர வண்டிக்கும் குறுக்கே வந்துவிட்டது.
இதனால் கதிரின் இலக்கு தவறி விட்டது.
இது – கோடாபய ராஜபக்ஷ மீதான தாக்குதல் இடம்பெறுவதற்கு ஒருவாரம் முன்பதாக நடந்த சம்பவமாகும்.
velichcham
0 விமர்சனங்கள்:
Post a Comment