யாழ்ப்பாணம்-கொழும்பு நேரடி பேருந்து சேவை தொடங்கியது
யாழ்ப்பாணத்தில் இன்று, புதன்கிழமை, காலை நடந்தஒரு வைபவத்த்தில் இந்த நேரடி சேவை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினசரி மூன்று பேருந்துகள் , ஏ-9 வீதியூடாக இயக்கப்படுகின்றன என்று இலங்கைப் போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண பணிமனை பொதுமேலாளர் கணேசபிள்ளை தமிழோசையிடம் தெரிவித்தார். இவற்றில் இரண்டு அரைச்சொகுசு பேருந்துகள், மற்றொன்று சாதாரண பேருந்து.
யாழ்ப்பாணத்துக்கும் நாட்டின் தென்பகுதிகளுக்கும் இடையே தரைவழிப் போக்குவரத்து, யுத்த காலத்தில் தடைப்பட்டிருந்தது. சமீபத்தில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டபோது, இதில் பயணிக்கும் பயணிகள் , வவுனியா அருகே உள்ள மதவாச்சி சோதனைச்சாவடி வரையிலும் ஒரு பேருந்தில் சென்று, பிறகு அங்கிருந்து சோதனைச்சாவடியைத் தாண்டி , வேறு ஒரு பேருந்தில் அல்லது இரயில் வண்டிகள் மூலமாக தங்களது பயணத்தைத் தொடர வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்த நிலை இப்போது தொடங்கப்பட்டுள்ள நேரடிப் போக்குவரத்து மூலம் மாறி, பயணிகள் நாட்டின் வடக்கிலிருந்து கொழும்புக்கு தடையில்லாமல் நேரடியாக பயணிக்கக் கூடிய வசதி ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
ஆனாலும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்ல விரும்பும் பயணிகள், வழமை போல அவர்களது பகுதிகளில் இருக்கும் ராணுவ அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே இந்தப் பேருந்துகளில் செல்ல முடியும் என்று கணேசபிள்ளை தெரிவித்தார்.
அதே போல, யாழ்ப்பாண மக்கள் மட்டுமே இந்தப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்த முடியும் என்றும், கொழும்பிலிருந்து மக்கள் யாழ்ப்பாணம் செல்ல இந்த சேவையைப் பயன்படுத்த தற்போது முடியாது என்றும் அவர் கூறினார்.
இதே போல யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு விமானம் அல்லது கப்பல் மூலம் செல்பவர்கள் மீண்டும் அவர்கள் பயணித்த அதே வழியிலேயே ( அதாவது விமானத்திலோ அல்லது கப்பல் மூலமாகவோதான்) திரும்ப வேண்டும் என்ற தற்போதைய நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கணேச பிள்ளை தெரிவித்தார்.
BBC
0 விமர்சனங்கள்:
Post a Comment