ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் த.வி.கூட்டணியின் 15 அம்ச கோரிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 15 அமிச கோரிக்கையினை முன்வைத்துள்ளது. அது தொடர்பாக அக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போதைய அரசியல் நிலைமையை மிக்க அவதானத்துடன் பரிசீலித்து ஜனாதிபதி அவர்களுக்கும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களுக்கும் இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் அதனை அமுல்படுத்துமாறு 15 அம்ச கோரிக்கையை முன்வைக்கிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைக்கும் கோரிக்கைகள் புதியவையல்ல. அவை சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி மட்டுமல்லாமல் நாட்டின் பல்லின மக்களின் பிரச்சினைகளை தழுவுவதோடு சகல மக்களும் சகல உரிமைகளையும் அனுபவித்து அனைவரும் சமமாக வாழக்கூடிய ஓர் நல்ல அரசை நிறுவுவதுமாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெளிப்படையான கருத்து யாதெனில் சகலருக்கும் மனதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கி சிறியவன், பெரியவன் என்ற பேதமின்றி அனைவரும் வாழ வேண்டும் என்பதே. மக்களின் நினைவாற்றல் குறைந்ததே. அதற்கு இலங்கை மக்கள் விதிவிலக்கு அல்ல.
நம் நாட்டில் நாம் எதிர் நோக்கும் பிரச்சினை அனைத்தும் எம் அனைவரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிர்கள், பல கோடி பெறுமதியான தனியார், அரச உடைமைகள் அண்மையில் நடந்து முடிந்த யுத்தத்திற்கு செலவழிக்கப்பட்ட கற்பனைக்கு எட்டாத பெருந்தொகை பணம், தினம் தினம் பலகோடி ரூபா செலவு செய்து இராணுவ முகாம்கள், தளபாடங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்ற செலவுகள் அத்தனையும் நம் அனைவருக்கும் நல்லதொரு பாடத்தை போதித்துள்ளது. இத்தகையவொரு நிலைமை மீண்டுமொரு தடவை ஏற்படக்கூடாது. இதை புத்தி சாதுரியமாக செயற்பட்டு தடுக்க முடியுமேயன்றி 30 ஆண்டு காலமாக பயத்துடனும், பீதியுடனும் அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்ந்த மக்கள் இதுவரை காலம் இருந்த நிலையில் மாற்றமில்லை என்பதை உணர்ந்து விட்டு போனவர்களின் இடத்திற்கு புதியவர்கள் வந்துள்ளனர் என்று உணரக்கூடிய வகையில் அங்கும் இங்கும் புதிய இராணுவ முகாம்கள் அமைப்பதன் மூலம் அல்ல.
தமிழர் விடுதலைக் கூட்டணி உண்மையாகவும் மிக உறுதியாகவும் நம்புவது பின்வரும் ஆலோசனைகள் அமுல்படுத்தப்பட்டால் இக்கட்டான நிலையில் தள்ளப்பட்டுள்ள இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பதே. ஆகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் ஆதரிக்க இருக்கின்ற வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு வாக்காளரும் அழுத்தத்தைக் கொடுத்து எம் ஆலோசனையை அமுல்படுத்த வைத்தால் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வோடு இழந்த அமைதியையும், சமாதானத்தையும் மீளப்பெற்று அதிகமாக தேவைப்படுகின்ற ஒற்றுமையையும் செழிப்பையும் இந் நாட்டில் ஏற்படுத்த முடியும்.
1. தமிழர் விடுதலைக் கூட்டணி சோல்பரி அரசியல் சாசனத்தின் சிறுபான்மை இனத்துக்கு ஒரேயொரு பாதுகாப்பாக இருந்த 29வது அம்சத்துக்கு ஏற்பட்ட கதியை நன்கு அறிந்தமையால் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் ஏற்பட்டால் அத் தீர்வு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் மீள் பரிசீலிக்க நேர்ந்தால் இதுவரை காலமும் பல உயிரிழப்புக்களுக்கும், சொத்தழிவுகளுக்கும் மத்தியில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அத்தனையும் பாழாகிவிடும். கடந்த ஐந்து ஆண்டு காலமாக சமஷ்டி அமைப்பின் கீழ் ஒரு தீர்வை அடைய பெரு முயற்சி எடுத்து அதற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வொன்றை ஏற்க தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருந்தது. ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வொன்றை ஒருபோதும் அடைய முடியாதென முழுமையாக நம்புகிறது.
2. வடக்கு கிழக்கு இணைப்பால் இந் நாட்டிற்கோ அன்றி அப் பகுதியில் வாழும் எந்த இனத்துக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி முற்று முழுதாக நம்புகிறது. அதற்குப் பதிலாக பல்லின மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும், சமாதானத்தையும் வளர்க்க உதவுவதாக அமையும். பாராளுமன்றத்தில் பிரதம அமைச்சர் அவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கமைய இரு மாகாணங்களின் இணைப்பு பற்றிய விடயத்தை அப் பகுதியில் வாழும் மக்களிடமே கையளிப்பது பொருத்தமானதென தமிழர் விடுதலைக் கூட்டணி நம்புகிறது.
3. இடம்பெயர்ந்த மக்களை அவரவர் இடங்களில் குடியேற்ற இத்தகைய தாமதம் மிக நியாயமற்ற செயலென தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகிறது. சிங்களவரோ, முஸ்லீம்களோ, தமிழரோ, இந்திய வம்சாவளியினரோ அன்றி வேறு எந்த இனத்தவராகிலும் அவர்கள் இடம் பெயர்வதற்கு முன் குடியிருந்த இடங்களிலேயே குடியமர்த்தப்பட வேண்டும். கிளிநொச்சி அரசாங்க அதிபரும், சில கிராம சேவையாளரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையாலேயே இப் பிரதேச மீள் குடியேற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளமை வருந்தத்தக்கது.
4. இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட உயிரழிவுக்கும், சொத்து சேதத்திற்கும் தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள், மலையகத்தவர்கள் என்ற பேதமின்றி முழு அளவிலான நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
5. யுத்தம் ஆரம்பித்த பின்னர் வன்னிப் பகுதியில் இறந்தும், காணாமல் போயுமுள்ள குடிமக்களின் பெயர், முகவரி, போன்ற புள்ளி விபரங்களை திரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. 10,000 இற்கும் மேற்பட்ட அப்பாவி சிறுவர்களை முறையற்ற வழியில் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தி புனர்வாழ்வு இல்லங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அவரவர் பெற்றோரிடம் உடன் கையளிக்க வேண்டும். அவர்களில் சிலர் புலிகள் இயக்கத்தில் தாமாக இணைந்திருக்கலாம். ஆனால் ஏனைய அனைவரும் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களாவர். இப்போது இச் சிறுவர்களுக்கு அவசியமாக தேவைப்படுவது பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் ஆகும்.
இந்த அப்பாவி பிள்ளைகளை பெற்றோரிடம் கையளிப்பின் அவர்களுக்கு எத்தகைய கல்வியை ஊட்ட வேண்டுமென பெற்றோரே தீர்மானிப்பார்கள். அநேகமான பிள்ளைகள் யுத்தம் காரணமாக மட்டுமன்றி பலாத்காரமாக இணைத்துக் கொள்ளப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பலவருட கல்வியை இழந்துள்ளனர். அத்தகையோர் தமது கல்வியை தொடர அரசு ஆவன செய்ய வேண்டும். இந்திய அரசிடம் வேண்டுகோள்; விடப்படின் சில நூறு புலமை பரிசில்களை தமிழ்நாடு அரசிடம் பெற்றுக்கொள்ளலாம். முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் இலங்கை விஜயத்தின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் இக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
7. வடக்கின் வசந்தம் வெறும் கேலிக்கூத்தாக மாறிவிட்டது. அங்கே அமைதியான கடும் புயல் தொடர்ச்சியாக மக்களின் அமைதியை குழப்பி வருகிறது. இம் மக்கள் பல வருடங்கள் பய பீதியுடன் நடமாடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை இழந்து வாழ்கின்றனர். அங்கேயுள்ள ஆயுதக்குழுவின் செயற்பாடுகள் அமைதியான வாழ்வை சீர்கெட வைக்கிறது. அத்தகைய ஆயுதக் குழுவிடமிருந்து ஆயுதங்கள் உடனடியாக களையப்பட வேண்டும்.
8. வடகிழக்கில் ஆட்கடத்தல்கள், கொலைகள் ஆகியவற்றை விசாரிப்பதற்கு மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடு வடக்கிற்கு விஸ்தரிக்கப்பட வேண்டும்.
9. தற்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் மீள தலைநிமிர்த்தி செயற்பட முடியாத நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு அங்குள்ள வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆயுதக் குழுக்களால் பலாத்காரமாக பயன்படுத்தப்படும் தனியார் வீடுகள் மற்றும் வேறு கட்டிடங்கள் உடனடியாக உரியவர்களிடமோ அன்றி அவர்களது வாரிசுகளிடமோ ஒப்படைக்கப்பட வேண்டும்.
10. அரச பிடியிலிருந்தும், இடம்பெயர் முகாம்களில் இருந்தும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் தப்பிச் செல்ல மிக அற்ப குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட வேண்டும். இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காரணங்களை, குற்றச்செயலாக கணிக்கப்பட முடியாதென்பது விசேட அம்சமாகும். அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும்.
11. சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு கிழக்குப் பகுதிகளில் அப்பாவி மக்களிடமிருந்து குறிப்பிடத்தகுந்தளவு தங்கம் பிறிதொரு காலத்தில் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற உறுதியோடு பெறப்பட்டது. ஒரு சிலருக்கு தங்கம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. பலருக்கு கொடுக்கப்படவில்லை. இது தவிர மக்கள் தமது தங்க நகைகளை புலிகளிடம் ஈடு வைத்திருந்தனர். அத்துடன் தமது பணத்தை புலிகளால் சட்ட விரோதமாக நடத்தப்பட்ட ஈழ வங்கி கிளைகளில் வைப்புச் செய்தனர். வன்னியில் மீட்டெடுக்கப்பட்ட தங்கமும், பணமும் வடகிழக்கு மக்களுக்கு சொந்தமானவை. ஆகவே அங்கு மீட்கப்பட்ட நகைகளும் பணமும் உரிமை கோருவோருக்கு போதிய கால அவகாசம் வழங்கி பாதுகாப்பாக வைத்திருக்கப்பட வேண்டும்.
12. உயர்கல்வி பெறும் வாய்ப்பு பெற்றும் யுத்தம் காரணமாகவும், பலாத்காரமாக பிடிக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் அதனை தொடர முடியாது பலர் இருப்பதால் வன்னி பகுதிக்கென பல்கலைகழகம் ஒன்றை உருவாக்கி அங்கு குறைந்த பட்சம் விவசாயம், கலைப்பிரிவு போன்ற துறைகளை இயங்க வைக்க வேண்டும்.
13. வன்னி வர்த்தகர்களில் அநேகர் அனைத்து சொத்துக்களையும் இழந்துள்ளனர் என்பதால் இடம் பெயர்வதற்கு முன்பு அவர்கள் பெற்றிருந்த அங்கீகார உரிமைகளான ஏக விநியோக உரிமை, உத்தரவு பெற்ற வர்த்தக உரிமை,பெற்றோல் நிலையம் நடத்தும் உரிமை போன்றவற்றுக்கான உரிமைகள் வழங்கும் போது பாதிக்கப்பட்ட இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
14. இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் போது இரு விசேட பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். முதலாவதாக 1992ம் ஆண்டு வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களின் நலன்களை பேணவும், இரண்டாவது மிகவும் துர்ப்பாக்கிவான்களாகிய விசேடமாக 1958 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் குடியேறிய மக்களின் நலன் பேணவும் ஆகும்.
15. மீறுவோருக்கு கடும் தண்டனை உட்பட மிக்க வலுவுள்ள ஓர் அடிப்படை உரிமை சாசனம் சட்டமாக்கப்பட வேண்டும்.
- தலைவர் ஆனந்த சங்கரி
0 விமர்சனங்கள்:
Post a Comment