புலிகளை விற்றுப் பிழைப்பு நடத்த துணிந்து விட்டாரா சம்பந்தன்? – தொல்காப்பியன்
தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சும் போக்கும் இப்போது தமிழ் மக்களிடையே பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயல்பாடுகள் தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தத் தவறவில்லை.
குறிப்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிடுகின்ற தகவல்களும்- அவர் நடத்தும் பேச்சுக்கள் பற்றி வெளியாகும் தகவல்களும் தமிழ் மக்களை வெறுப்புடன் நோக்க வைக்கின்றன.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் குறித்து அவர் வெளியிட்டிருக்கின்ற கருத்து மிகவும் முக்கியமானது. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் மக்களின் சார்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் எடுத்த முடிவு தவறானது என்றும்-; அதனால் தான் இத்தனை அழிவுகள் ஏற்பட்டதாகவும் புலம்பியிருக்கிறார். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கப் புலிகளே முடிவு எடுத்தது உண்மை.
புலிகளின் முடிவை அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டதும் உண்மை. அப்போது அதுபற்றி வாய் திறக்காமல் இருந்த சம்பந்தன் இப்போது அதுபற்றிக் கதைக்க ஆரம்பித்திருப்பது வேடிக்கை. குறிப்பாக புலிகள் பலமோடு இருக்கும் வரைக்கும் அவர்களின் மூலம் அரசியல் நலன்களை அனுபவித்த அவர்- இப்போது புலிகள் இயக்கம் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் எல்லாப் பழியையும் அவர்கள் மீது போட்டுத் தப்பிக்க முனைகிறார் என்பது வெளிப்படை.
புலிகளின் முடிவு தவறாகவே இருந்து விட்டுப் போகட்டும். புலிகளின் முடிவுக்கு எதிராக வாதாடியதாக இப்போது கூறும் சம்பந்தன், அந்த முடிவு பேரழிவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருந்தால்- ஆனந்தசங்கரி போலத் தனிவழி போயிருக்கலாம். அதை ஏன் அவர் செய்யவில்லை? புலிகள் இருக்கும் வரை அதுபற்றி வாய்திறக்காமல் இருந்து விட்டு- இப்போது அவர்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க நினைப்பது தவறன்றோ. இந்தக் கட்டத்தில் ஆனந்தசங்கரி சம்பந்தனை விட ஒரு படி உயர்வான நிலையில் இருக்கிறார் என்பதை ஏற்றேயாக வேண்டும்.
2005 ஜனாதிபதித் தேர்தல் இன்றைய அழிவுகளுக்கு ஒரு காரணம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 2005ம் ஆண்டு புலிகள் ஏன் அப்படி ஒரு முடிவை எடுக்க நேர்ந்தது என்பதை சம்பந்தனே நன்கு அறிவார். அப்போது மகிந்த ராஜபக்ஸ அல்லது ரணில் விக்கிரமசிங்க என்ற இரண்டு பேய்களுக்கு நடுவே தமிழ் மக்கள் சிக்கிப் போயிருந்தனர். இப்போதும் அதே நிலை தான். மகிந்த ராஜபக்ஸ கடும் போக்குவாதி. எதையும் விட்டுக் கொடுக்க நினைக்காதவர். அவர் பதவிக்கு வந்தால் போர் மூளும் என்பது புலிகளுக்கும் தெரிந்திருந்தது. போரை அடிப்படையாக வைத்தே அவர் காய்களை நகர்த்தினார். அதாவது அவரது நிலைப்பாடு போரை நோக்கிய – வெளிப்படையான நகர்வுகளைக் கொண்டதாகவே இருந்தது. போரைச் சமாளித்துப் பழக்கப்பட்டுப் போன புலிகளுக்கு அவரைச் சமாளிக்கலாம் என்ற கருத்து இருந்தது.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தன்னை ஒரு மென் போக்காளராகக் காட்டிக் கொண்டு நரித்தனமான காரியங்களில் ஈடுபட்டவர். ஜே.ஆரின் வழிவந்த அவர் வெளியே பெரிதாக எதையும் பேசாமல் புலிகள் இயக்கத்தை சிதைப்பதிலேயே குறியாக இருந்தவர். போரில் அரசாங்கம் வென்ற பின்னர் அதற்கு ஐதேக உரிமை கோரியதை எவரும் மறந்து விடமுடியாது.
புலிகளிடம் இருந்து கருணாவைப் பிளவுபடுத்தி அவர்களைப் பலவீனப்படுத்தியதாகவும் – எனவே போரின் வெற்றியில தமக்கும் பங்குண்டு என்று ஐதேக உரிமை கோரியதை யாரும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.
அதைவிட சர்வதேச ரீதியாகப் புலிகள் மீது தடைகளை ஏற்படுத்தி அவர்களைப் பலவீனப்படுத்துவதி சமாதானப் பேச்சுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, தாமதப்படுத்துவதிலேயே குறியாக இருந்தவர் ரணில். இந்தக் கட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வருவது புலிகள் இயக்கத்தை சமாதானத்தின் பேரால் பலவீனப்பமுடுத்தி விடும் என்று புலிகள் கருதியிருந்தனர். இதனால் தான் புலிகள் தேர்தலின் போது அப்படியான முடிவை எடுக்க நேர்ந்தது. இதை சம்பந்தன் மட்டுமன்றி பலரும் அறிவர்.
மூன்று தசாப்தங்களாகப் புலிகள் போரை எதிர்கொண்டு பழகிப் போனதால் – மகிந்த என்ற சண்டைக்காரன் பதவிக்கு வருவதே பரவாயில்லை என்று அவர்களை முடிவெடுக்க வைத்தது. ஆனால் மகிந்தவுடன் சர்வதேச சக்திகள் கைகோர்த்துக் கொண்டு இப்படியொரு நெருக்கடிக்குள் தமிழ் மக்களின் போராட்டத்தைத் தள்ளிவிடும் என்ற முற்கணிப்பு சம்பந்தனுக்கோ – வேறெவருக்கமோ ஏற்பட்டிருக்கவில்லை.
அப்படியான சிந்தனை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் அதுபற்றி அவர்கள் முன்கூட்டியே எச்சரித்திருக்கலாம். அப்படி யாரும் புலிகளுக்கு எச்சரித்தாகவும் தெரியவில்லை. சரி புலிகள் தான் கேட்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும் – தேர்தல் புறக்கணிப்புக்கு எதிராக – அதன் பாதகங்கள் பற்றி தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம். அதுதான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட உண்மையான அரசியல்வாதியின் பண்பு.
இதுதான் நடக்கப் போகிறது என்று தெரிந்திருந்தும் சொல்லாமல் இருந்திருந்தால்- அதைவிட இவர்கள் தமிழினத்துக்குச் செய்திருக்கக் கூடிய பாரிய துரோகம் வேறேதும் இருக்க முடியாது. இப்போது எல்லாம் முடிந்து விட்டது. இன்னொரு வரலாற்றுக் கட்டத்தில் நின்று கொண்டு கடந்த காலம் பற்றிப் பேசுவதால் பயனில்லை.
புலிகளின் முடிவு மீது முழுப்பழியையும் சுமத்தி விட்டுத் தமிழ் மக்களின் தலைவராகவோ- ஒரு தீர்க்கதரிசி போலவோ வலம் வர எண்ணுவது தமிழினத்தின் மூத்த அரசியல்வாதியான சம்பந்தனுக்கு அழகில்லை. புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டதால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்திருந்தனர்.
கடும் நெருக்கடி ஏற்பட்ட போது தம்மை விட்டு ஓடிப் போன கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையைப் புரிந்து கொண்டு யாழ்.மாநகரசபைத் தேர்தலிலும், வவுனியா நகரசபைத் தேர்தலிலும் மக்கள் கூட்டமைப்பை ஆதரித்தார்கள். ஆனால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கிலும் பேச்சிலும் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து வருவது உண்மை. இந்தக் கட்டத்தில் ஒரு விடயத்தை சம்பந்தன் உணர்ந்து கொள்வது நல்லது.
ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்காகவோ மகிந்தவுக்காகவோ ஆதரவு கொடுப்பதற்காகப் புலிகளை விற்று பிழைப்பு நடத்த முற்படுவது பச்சைத் துரோகம். இவர்களில் எவருக்காவது ஆதரவு கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது என்பதையும் உணர வேண்டும். இவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக அணிசேர்ந்து வீணாக கூட்டமைப்புக்கு உள்ள மதிப்பையும்- ஆதரவையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது. வடக்கிலும், கிழக்கிலும் அதிக தமிழ் வாக்காளர்களைக் கொண்டது யாழ்ப்பாண மாவட்டம். யாழ்ப்பாண மாவட்ட மக்களைப் பொறுத்தவரையில் சிங்கள வேட்பாளர்களின் மீது அவர்கள் என்றுமே நம்பிக்கை வைத்ததில்லை.
இது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல்கள் அனைத்திலும் உணர்ந்து கொண்ட உண்மை. இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து போனால் அது கூட்டமைப்பின் பலவீனமாகப் பார்க்கப்படுமேயன்றி குறித்த வேட்பாளரின் பலவீனமாகப் பார்க்கப்படாது. இந்த நிலை அடுத்த பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய சார்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. சிங்களத் தலைமைகளுக்காக நாம் மோதிக் கொண்டு எமது மண்டைகளை எதற்காக உடைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.
0 விமர்சனங்கள்:
Post a Comment