சிவாஜிலிங்கம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார் : சிவசக்தி ஆனந்தன்
ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு யாருக்கு என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை அறிவிக்காத நிலையில் கட்சியின் உறுப்பினர்களிடையே முரண்பட்ட கருத்துகள் வலுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது கட்சியின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாவிடின் தாம் சுயேட்சையாகக் களமிறங்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்குக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவதாகவும் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிவாஜிலிங்கம் கலந்துகொண்டதுடன் தமது கட்சியின் நிலைப்பாட்டைப் பிரத்தியேக உரையின் மூலம் வெளிப்படுத்தினார்.
ஆட்சி மாற்றத்துக்காக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ள அதேவேளை, இது குறித்து மக்கள் கூறும் கருத்தினையே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என துரைரட்ணசிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தனது இறுதி முடிவு குறிதது எதுவித தகவல்களையும் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை.
சிவாஜிலிங்கம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார் : சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் வாக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக ஒரு பகுதியினரிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாவிடின், தான் சுயேட்சையாகக் களமிறங்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்று மீண்டும் வலியுறுத்தியிருந்தார். அவரது கருத்துக்களின் வீடியோ காட்சியினை நாம் இணைத்திருந்தோம்.
இது தொடர்பாகப் பதில் கருத்து தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில்,"எமது கட்சியின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என இறுதியாக நடைபெற்ற எமது கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தோம். இந்நிலையில் சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனால் அதனை திசை திருப்புவதற்காக ஒரு பகுதியினரிடமிருந்து சிவாஜிலிங்கம் பணம் வாங்கியுள்ளார். அதற்காகவே தன்னிச்சையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போவதாக அவர் கூறி வருகிறார். எனினும் எமது கட்சியின் முடிவு அதுவல்ல" என்றார்
0 விமர்சனங்கள்:
Post a Comment