தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போரும் தமிழ் மக்களுக்கான அரசியல் நோக்கும் – ஓர் உண்மை விளக்கம்
தமிழ் மக்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்று ஆய்வு செய்தால் அதற்குப் பல வரலாற்றுக் காரணங்கள் உண்டு என்பதைக் கண்டு கொள்ளலாம். இனக்கொலை வடிவம் எடுத்த மிருகத்தனமான ஒடுக்கு முறையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழியில்லை என்பதாலும், சமாதான வழிமுறை தழுவிய ஜனநாயகப் போராட்டங்கள் அரசியலமைப்பு வழிகளும் நாடாளுமன்றக் கதவுகளும் இறுக மூடப்பட்டதாலும், சமாதானப் பேச்சுக்கள் மூலம் சமத்துவத்தையும் நீதியையும் வழங்க சிங்கள ஆட்சியாளர்கள் மறுத்து விட்டதாலுமே தமிழர்கள் ஆயுதமேந்தத் துணிந்தார்கள். பல தசாப்தங்களாக சிங்கள இனவாதம் இழைத்த அநீதிகளதும் கொடுமைகளதும் வரலாற்றுக் குழந்தையாகவே தமிழ் மண்ணில் ஆயுதப் போர் பிறப்பை எடுத்தது.
தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகத்தை, 37 ஆண்டுகால விடுதலைப் பயணத்தை உறுதிமிக்க ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாக, கோழைத்தனமானதாக, நம்பிக்கைத்துரோகம் மிக்கதாக சித்தரித்தது சர்வதேச அரசியல் அரங்கில் சிறி லங்கா அரசு, தமிழ் விரோத சக்திகள் மேற்கொண்டு வரும் விசமப் பிரச்சாரத்திற்கு ஆப்பு வைக்கும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் அரசியல் பரப்புரை பிரிவால் வெளியிடப்படும் விரிவான கொள்கை விளக்க அறிக்கையின் தமிழாக்கத்தை இங்கு தருகின்றோம். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றுத் தோற்றம் வளர்ச்சி பற்றியும், அடிப்படையான அரசியல் குறிக்கோள் பற்றியும் இவ்வறிக்கை எடுத்து விளக்குவதுடன் மகிந்த அரசின் இனவாத அரசியற் தந்திரங்களையும் அந்தரங்க சூழ்ச்சிகர நோக்கங்களையும் அம்பலப்படுத்துகின்றது.
முன்னுரை
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் வன்முறையின் எரிமலையாக இருந்து வருகின்றது இலங்கை. இத்தீவு சுதந்திரம் பெற்றதையடுத்து தமிழ் சிங்கள தேசங்கள் மத்தியில் எழுந்த முரண்நிலை படிப்படியாக முறுகலடைந்து, ஒரு முழு அளவிலான போராக விரிவாக்கம் கண்டிருந்தது. தமிழர் தேசத்தின் சுதந்திர இயக்கமாக விடுதலைப் புலிகளும் சிங்களத்தின் அடக்குமுறைச் சக்தியாக சிறி லங்கா அரசும் இப்போரில் பிரதான பாத்திரங்களை வகிக்கின்றன. நிலையான தேசிய இராணுவங்களைக் கொண்டிருக்கும் இவ்விரு தரப்பினர் மத்தியிலும் நீண்ட காலமாகக் கடும் போர் நிகழ்ந்து வந்திருக்கிறது.
இப்போரின் விளைவுகள் கொடூரமானவை. ஒரு ஆக்கிரமிப்பு யுத்தமாக தமிழரின் தாயக மண்ணில் இப்போர் நிகழ்ந்து முடிந்ததால் போரில் கொடிய விளைவுகளுக்கு தமிழ் மக்களே முகங் கொடுத்து வருகின்றனர். இந்த நீண்ட கொடிய யுத்தம் இது வரை எழுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் உயிர்களைப் பலி கொண்டுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமாக பல இலட்சம் மக்களை இடம்பெயர வைத்துள்ளது. இப்போர் இப்பொழுது என்றுமில்லாத வகையில் தீவிரமடைந்து சொந்தமண்ணிலேயே எம்மக்களை அநாதைகளாக்கியுள்ளது. உயிரழிவும் பொருளழிவுமாக நாளுக்கு நாள், இப் போர் பெரும் நாசத்தை விளைவித்து ஒரு இனத்தின் அடையாளத்தை சிதைத்து ஏதிலிகளாக்கி வதை முகாங்களுக்குள் சிறைப்படுத்தி வைத்துள்ளது.
இந்தப் போர் ஏன் நிகழ்ந்தது? தமிழரின் அரசியல் பிரச்சினை ஆயுத வன்முறை வடிவம் எடுத்ததற்கான காரணங்கள் என்ன? விடுதலைப் புலிகள் எதற்காக ஆயுதமேந்திப் போராடினார்கள்? இந்தக் கேள்விகளுக்கு சிறி லங்கா அரசு கொடுக்கும் விளக்கம் விசித்திரமானது. பரந்த பரிமாணத்தையுடைய மிகவும் சிக்கலான ஒரு நெருக்கடியை வெறும் பயங்கரவாப் பிரச்சினையாக எளிமைப்படுத்தி, மலினப்படுத்த முனைகின்றது அரசு. சிறி லங்காவின் இந்த அபத்தமான தர்க்கத்தில் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகவும் அவர்களது அரசியல் இலட்சியம் அராஜகவாதமாகவும் சித்தரிக்கப் படுகின்றது. இந்தச் சித்தரிப்பின் அடிப்படையிலேயே அரசின் தீர்வும் அதற்கான அணுகுமுறையும் அமையப் பெற்றிருக்கின்றது. முழு அளவிலான போர் மூலம் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் பயங்கரவாதம் ஒழிந்து விடும் என்பதும் பயங்கரவாதம் ஒழிந்து விட்டால் தமிழரின் பிரச்சினை தானாகவே தீர்ந்து விடும் என்பதும் அரசின் நிலைப்பாடு, இந்தக் குருட்டுத்தனமான அணுகுமுறையின் அடிப்படையில் சிறி லங்கா அரசு செயற்பட்டு வருகின்றது.
தமிழரின் தேசியப் போராட்டத்தை பயங்கரவாதப் பிரச்சினையாக உருவகப்படுத்தி உலகத்தை நம்ப வைக்கும் நோக்குடன், மிகவும் நுட்பமாக, திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தை சிறி லங்கா அரசானது அனைத்துலக ரீதியாக மேற்கொண்டு வருகின்றது. மேற்குலகமானது பயங்கரவாதத்திற்கு அஞ்சுகின்றது. அதனை ஒரு உலகளாவிய அச்சுறுத்தலாகவும் கருதுகின்றது. மேற்குலகின் இவ்வுணர்வலைகளை நன்கு அறிந்த சிறி லங்கா அரசானது. தனது நாடும் இதே அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக சர்வதேச சமூகத்தை நம்ப வைக்க முனைகின்றது. உள்நாட்டில் தலைவிரித்தாடும் இனச் சிக்கலை சர்வதேசப் பயங்கரவாதமாக பூச்சாண்டிக் காட்டுவதில், சிறி லங்காவின் வெளிநாட்டுத் தூதரகங்கள் இரவுபகல் பாராது தீவிரமாகச் செயற்படுகின்றன. அரசியல் ஏமாற்றுவித்தையில், தமிழினத் துரோகத்தை சாணக்கியமாக செய்யும் தமிழ் அமைச்சர்களின் வழிநடத்தலில், இந்த விசமப் பிரச்சாரம் உலக ரீதியாக மேற் கொள்ளப்படுகின்றது. தமிழரின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தமிழருக்கு எதிராகத் தமிழரின் தாயகத்தில் நிகழ்த்தப்படும் தமிழின அழிப்புக்கு அனைத்துலகின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்று விடுவது தான் சிறி லங்காவின் நோக்கம். இதனால், இந்தப் இன அழிப்புச் செயற்பாட்டுக்கு சிறி லங்கா அரசு கொடுக்கும் விளக்கம் வினோதமானது. சிறி லங்காவின் ராஜரீக மொழியில் இப்போர் உன்னதமானது. சமாதானத்தை நோக்காகக் கொண்டது. பயங்கரவாதப் பிடியிலிருக்கும் தமிழருக்கு விடுதலையைத் தேடிக் கொடுக்கும் உயரிய இலட்சியத்தைக் கொண்டது. இவ்விதம் மகிந்த அரசு மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரமானது தமிழரின் போராட்டம் பற்றி, குறிப்பாக நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் பற்றி சர்வதேச அரசியல், ராஜதந்திர அரங்கில் பெரும் குழப்பத்தையும் தப்பபிப்பிராயத்தையும் எழுப்பியுள்ளது. அத்துடன், இலங்கைத் தீவில் நீண்ட முடிவில்லாத கதையாக அரசியல் வன்முறையும் அதற்கு எதிரான ஆயுத வன்முறையுமாக தமிழரின் இனப்பிரச்சினை வன்முறைத் தீயாகக் கொழுந்து விட்டு எரிகின்றது.
இந்த வன்முறைச் சூழலில் தமிழரின் அரசியல் போராட்ட வரலாறு பற்றி தெளிந்த – ஆழமான பார்வை இல்லாமல் தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் நியாயப்பாடுகளைப் புரிந்து கொள்வது சிரமமானது. இத்தகைய சிக்கலான நிலைமையில் சிறி லங்கா அரசும் அரசியல் மெய்நிலையைத் திரிபுபடுத்திக் கூறிவருவதால், தமிழரின் சுய நிர்ணய உரிமைக்காக 37 ஆண்டுகாலம் உயிர்த்தியாகம் புரிந்து போராடிய சுதந்திர இயக்கம் பற்றி வெளியுலகத்தில் மட்டுமன்றி இப்போராட்டத்தை நேசித்த ஒவ்வொருவர் மத்தியிலும் குழப்பமும் தவறான மதிப்பீடுகளும் எழுந்துள்ளன.
தமிழரின் ஆயுதப் போராட்டம் அதை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் பற்றி எழுந்துள்ள குழப்ப நிலையைத் தெளிபடுத்தி, சரியான விளக்கங்களைத் தர முனைகின்றது இக் கொள்கை விளக்கக் கட்டுரை. ஆயுதப் போராட்ட இயக்கம் தோற்றங் கொண்ட வரலாற்றுப் புற நிலைகளை எடுத்து விளக்கும் அதேவேளை, இராணுவ அடக்குமுறைக்கும் இனக் கொலைக்கும் எதிராக ஆயுதமேந்திப் போராடும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என நாம் வாதிடுகின்றோம். விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என முத்திரை குத்த முயற்சிக்கும் சிறி லங்கா அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்குப் பதிலளிப்பதுடன் ஆயுதப் போராட்டமானது தமிழரின் தன்னாட்சி உரிமைக்கான அரசியற் போராட்டம் என்பதை எடுத்து விளக்குகின்றோம். ஒட்டுமொத்தத்தில், அரசியற் சுதந்திரமும் தன்னாட்சியும் வேண்டி நிற்கும் தமிழரின் போராட்ட நிலைப்பாட்டை இந்த அரசியல் ஆவணம் தெளிவாக முன்வைக்கின்றது.
தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்று ஆய்வு செய்தால், அதற்குப் பல வரலாற்றுக் காரணங்கள் உண்டு என்பதைக் கண்டு கொள்ளலாம். இனக் கொலை வடிவம் எடுத்த மிருகத்தனமான ஒடுக்குமுறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழியில்லை என்பதாலும் சமாதான வழிமுறை தழுவிய ஜனநாயகப் போராட்டங்கள் சமரசப் பேச்சுக்கள் மூலம் சமத்துவத்தையும் நீதியையும் வழங்க சிங்கள ஆட்சியாளர்கள் மறுத்து விட்டதாலுமே தமிழர்கள் ஆயுதமேந்தத் துணிந்தார்கள். பல தசாப்தங்களாக சிங்கள இனவாதம் இழைத்த அநீதிகளதும் கொடுமைகளதும் வரலாற்றுக் குழந்தையாகவே தமிழ் மண்ணில் ஆயுதப் போர் பிறப்பை எடுத்தது.
தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள்?
ஆயுதம் தரித்த விடுதலை இயக்கத்தின் எழுச்சி பற்றியும் வளர்ச்சி பற்றியும் ஆழமாக அறிந்து கொள்வதாயின் தமிழ் மக்களது தன்னாட்சி உரிமைப் (சுயநிர்ணய உரிமை) போராட்டத்தின் வரலாற்று வளர்ச்சிப் போக்குடனேயே அதனை ஆய்வு செய்ய வேண்டும். தமிழரின் தன்னாட்சி உரிமைப் போராட்டமானது அரை நூற்றாண்டு கால படிமுறை வளர்ச்சியுடைய வரலாற்றைக் கொண்டது. அரசின் அடக்குமுறையும் அதற்கு எதிரான தமிழரின் கிளர்ச்சிப் போராட்டமுமாக இந்த வரலாறு விரிகின்றது. ஆரம்ப காலகட்டங்களில் தமிழரின் போராட்டமானது அமைதி வழியில் அமைந்தது, சாத்வீக, சனநாயகப் போராட்ட வடிவங்களாக எழுச்சி பெற்றது ஆனால், காலப் போக்கில் இராணுவ அடக்குமுறை தீவிரமடைந்து இனக்கொலைப் பரிமாணம் பெற்ற போது, தமிழரின் உரிமைப் போராட்டம் ஆயுதப் போராக வடிவம் எடுத்தது.
1948 இல் பிரித்தானிய காலணித்துவம் இலங்கைத் தீவுக்குச் சுதந்திரம் வழங்கி ஆட்சி அதிகாரத்தைப் பெரும்பான்மைச் சிங்களவரிடம் ஒப்படைத்த காலத்திலிருந்து தமிழருக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறை தொடங்கியது.
அன்றிலிருந்து மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிய சிங்கள அரசாங்கங்கள் திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட இன ஒடுக்குதல் சட்டங்களும் நடவடிக்கைகளும் தமிழரின் மொழியுரிமையை, கல்வியுரிமையை, வேலைவாய்ப்புரிமையைப் பறித்தெடுத்தன. படிப்படியாகத் தீவிரமடைந்த அரசின் ஒடுக்குமுறையானது தமிழரின் சமூக பொருளாதார வாழ்வை ஆழமாகப் பாதித்தது. இது ஒருபுறமிருக்க அரசினால் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் தமிழரின் வரலாற்று மண்ணை பெருமளவில் ஆக்கிரமித்ததுடன் சனத்தொகை விகிசாரத்தை மாற்றியமைத்து தமிழரின் பாரம்பரியப் பகுதிகளில் தமிழ் மக்களைச் சிறுபான்மையினராக்கியது. இவ்விதம் சிங்கள அரசின் ஒடுக்குமுறையானது தமிழரின் இன அடையாளங்களையே அழித்து வரும் நாசகார நோக்குடையதாக அமைந்தது.
சிங்கள அரசின் ஒடுக்குமுறை மோசமடைந்து தமிழரின் தேசிய தனித்துவத்திற்கு ஆபத்து எழுந்த சூழ்நிலையில் தமிழ் நாடாளுமன்ற அரசியற் தலைமை, வெகுசனப் போராட்டங்களில் குதித்தது. காந்தியின் அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டி சாத்வீகப் போராட்டங்களை நடத்தியது. அறுபதுகளின் ஆரம்பத்தில் நிகழ்ந்த சத்தியாக்கிரகப் போராட்டமானது. சமுத்திரமாக சனங்களை தமிழ் மக்களுக்கு சாத்வீகப் போராட்டங்களில் நம்பிக்கை தளர்ந்தது. நாடாளுமன்ற அரசியல் முறையாலும் பயன் ஏதும் ஏற்படவில்லை. அது பெரும்பான்மையோரின் கொடுங்கோன்மையாக விளங்கியது. இந்த இக்கூட்டான நிலையில் வேறு வழி தெரியாத அன்றைய தமிழ்த் தலைமை சிங்களப் பேரினவாதத்துடன் பேச்சுக்களை நடத்திச் சமரசங்காண முனைந்தது. சமாதானப் பேச்சுக்கள் நடந்தன. இணக்கப்பாடுகள் காணப்பட்டன. ஆனால், தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை சிங்கள பௌத்த பேரினவாதம் கடுமையாக எதிர்த்தது. இந்த எதிர்ப்புக்கு அஞ்சிய சிங்களத் தலைமைகள் ஒப்பந்தங்களை முறித்தன. உடன்பாடுகளைக் கிழித்து எறித்தன.
1972 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த அரசியல் அமைப்புத் திட்டமானது தமிழருக்கு எதிரான அரசின் அடக்குமுறையின் சிகரமாக அமைந்தது. இந்த அரசியல் யாப்பு சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்திற்கும் முதன்மையளித்து, சிங்கள. பௌத்த பேரினவாதத்தைச் சட்டரீதியாக நிறுவனப்படுத்தியது. அத்துடன் ஒற்றையாட்சி அரசியல் மூலம் தமிழ்த் தேசத்தை ஓரங்கட்டியது. இந்த நிகழ்வானது தமிழரின் அரசியற் போராட்டத்தில் ஒரு புரட்சிகரமான அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வந்தது.
இந்தப் பிரத்தியேக வரலாற்றுச் சூழலில் தான் தமிழ் மண்ணில் ஆயுதப் போராட்ட இயக்கம் பிறப்பை எடுத்தது. அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு அரசியற் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் விடுதலைப் புலிகள் இயக்கம் பிறந்தது. தமிழ் மக்களை அடக்கி ஆள வேண்டும் என்ற வக்கிர உணர்வுடன் சிங்கள அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறையின் எதிர்வினையாகவே ஆயுதம் தரித்த புரட்சி இயக்கம் உருப்பெற்றது. எனவே, தமிழரின் தேசிய சுதந்திரப் போராட்டத்தின் விரிவாக்கமாகவும் வரலாற்று வளர்ச்சியாகவுமே ஆயுதப் போராட்டத்தைக் கொள்ள வேண்டும்.
தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்று ஆய்வு செய்தால் அதற்குப் பல வரலாற்றுக் காரணங்கள் உண்டு என்பதைக் கண்டு கொள்ளலாம். இனக்கொலை வடிவம் எடுத்த மிருகத்தனமான ஒடுக்குமுறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழியில்லை என்பதாலும், சமாதான வழிமுறை தழுவிய ஜனநாயகப் போராட்டங்கள் அரசியலமைப்பு வழிகளும் நாடாளுமன்றக் கதவுகளும் இறுக மூடப்பட்டதாலும், சமரசப் பேச்சுக்கள் மூலம் சமத்துவத்தையும் நீதியையும் வழங்க சிங்கள ஆட்சியாளர்கள் மறுத்து விட்டதாலுமே தமிழர்கள் ஆயுதமேந்தத் துணிந்தார்கள். பல தசாப்தங்களாக சிங்கள இனவாதம் இழைத்த அநீதிகளதும் கொடுமைகளதும் வரலாற்றுக் குழந்தையாகவே தமிழ் மண்ணில் ஆயுதப் போர் பிறப்பை எடுத்தது.
தன்னாட்சி உரிமைக்கான ஆயுதப் போராட்டம்
1972 ஆம் ஆண்டு எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழரின் அரசியற் போராட்ட வடிவத்தில் அடிப்படையான ஒரு மாற்றம் நிகழ்ந்தது. தமிழரின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக ஆயுதம் தரித்த கெரில்லா இயக்கம் ஒன்று தோற்றம் எடுத்து அரசின் வன்முறைக்குச் சவால் விடுத்து தமிழரின் அரசியல் உரிமைகளுக்காக ஆயுதமேந்திப் போராடத் துணிந்தது. விடுதலைப் புலிகளின் தோற்றத்துடனும் வளர்ச்சியுடனும் ஆயுதப் போராட்டமானது தமிழரின் அரசியற் போராட்டமாக உயர் பரிமாணம் பெற்று அமைப்பு ரீதியாகப் பலம் பெற்றது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டமானது தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியற் கொள்கைத் திட்டத்தில் அமையப் பெற்றிருக்கின்றது. தமிழ் மக்களது தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதே விடுதலைப் புலிகளது அரசியற் கொள்கையின் அடிப்படை இலட்சியமாகும். தன்னாட்சி உரிமைக் கோட்பாடானது ஒரு தேசிய இனமான மக்கள் சமூகத்தின் அரசியற் சுதந்திரத்தை வலியுறுத்துகின்றது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் தமது தேசிய இனக் கட்டமைப்பையுடைய மக்கள் சமூகமாக அமையப் பெற்றிருக்கின்றார்கள் என்பதும் அவர்களுக்கு வரலாற்று ரீதியான தாயகம் உண்டென்பதும் இத் தாயகமானது வடக்கு கிழக்கு மாகாணங்களடங்கிய தொடர்ச்சியான நிலப்பரப்புடையது என்பதும் விடுதலைப் புலிகளது நிலைப்பாடாகும். தமிழர்களுக்கு ஒரு தனித்துவமான தாயகப் பூமியும், தனிச் சிறப்புடைய மொழியும், பண்பாடும், பொருண்மிய வாழ்வும், மூவாயிரம் ஆண்டுகளாக விரியும் நீண்ட வரலாறும் இருப்பதால் அவர்கள் ஒரு தேசியக் கட்டமைப்பிற்கான சகல பண்புகளையும் கொண்டு விளங்கும் ஒரு மக்கள் சமூகமாகும். இவ்விதமான ஒரு தேசிய மக்கள் சமூகம் என்ற வகையில் அவர்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்துடையவர்கள். இத் தன்னாட்சி உரிமை என்பது ஒரு மக்கள் சமூகம் தனது அரசியற் தலைவிதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரமாகும். 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமக்கே உரித்தான தன்னாட்சி உரிமையைப் பிரகடனம் செய்து ஒரு சுதந்திரமான தனியரசை அமைப்பதற்குப் போராட முடிவெடுத்தார்கள் என்பதும் விடுதலைப் புலிகளது நிலைப்பாடாகும். தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளின் தேசிய விடுதலைப் போராட்டம் அமைந்திருக்கின்றது.
தமிழர் தேசத்திற்கு சுதந்திரம் வென்றெடுக்கும் புலிகளின் இலட்சியமானது. தனிப்பட்ட முறையில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவல்ல. மாறாக அனைத்துத் தமிழ் மக்களினதும் ஏகோபித்த அபிலாசையை முழுத் தேசத்தினதும் விருப்பாற்றலை நிறைவு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். அடக்குமுறைக்கு ஆளாகியிருந்த தமிழினம் சனநாயக வழிமுறை வாயிலாக தனக்கு உரித்தான தன்னாட்சி உரிமையைப் பிரயோகிக்க முடிவெடுத்தது. இத்தன்னாட்சி உரிமையானது ஐ.நா. சாசனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகளாவிய பொது மனித உரிமை விதியாகும். ஐ.நா. சாசனத்து நியமங்கள் தன்னாட்சி உரிமைக்கு கீழ்க்கண்ட வரைவிலக்கணத்தைக் கொடுக்கின்றது.
எல்லா மக்கள் சமூகத்தினரும் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள் இந்த உரிமையின் கீழ் தமது பொருண்மிய, சமூக, பண்பாட்டு வாழ்வை மேம்படுத்தும் வழிமுறைகளை அவர்கள் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கலாம்.
ஒரு பொதுசன வாக்கெடுப்பாக நிகழ்ந்த 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது அரசியற் தகுநிலையை தாமாகவே தீர்மானித்துக் கொண்டார்கள். அதாவது பிரிந்து சென்று தமது தாயகத்தில் இறைமையுடைய ஒரு தனியரசை அமைப்பதென முடிவெடுத்தார்கள். தனியரசை அமைத்துத் தருவதாக உறுதியளித்து தமிழ் மக்களிடமிருந்து ஒரு தெளிவான ஆணையைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி தமிழினத்திற்குத் துரோகம் இழைத்தது. ஆனால், விடுதலைப் புலிகளோ தமிழினத்தின் ஆணையை ஏற்று தமிழரின் தேசிய அபிலாசையை நிறைவுசெய்யும் நோக்குடன் தன்னாட்சி உரிமைக்காக இரத்தம் சிந்திப் போராடி 2009 மே 17 ஆம் திகதியுடன் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து உலக ஒழுங்குக்கு அமைவாக புதிய அணுகுமுறைகளுடன் இராஜதந்திர வழிமுறைகளுக்குள் பிரவேசித்து வருகின்றார்கள்.
சிறி லங்கா அரசானது தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை விடாப்பிடியாக மறுத்து வருகின்றது. தமிழரை ஒரு மக்கள் சமூகமாகவும் ஏற்க மறுக்கின்றது. பல்லினக் கோட்பாட்டை வலியுறுத்தும் சிங்கள ஆட்சிபீடம் தமிழரை ஒரு சிறுபான்மை இனக் குழுவாகச் சித்தரித்து தமிழரின் தாயகத்தையும் தேசியத்தையும் நிராகரித்து வருகின்றது. அதேசமயம் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்து தன்னாட்சி உரிமைக் கோரிக்கையையும் சட்டவிரோதமானதாக ஆக்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க தமிழர்கள் மீது முழு அளவிலான போரை ஏவி விட்டு அவர்களது அரசியற் சுதந்திரப் போராட்டத்தையும் நசுக்கி அவர்களை இலங்கைத் தீவிலிருந்து முற்றாக அழித்தொழிக்கும் முயற்சியில் தீவிரமாக பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் என அவதூறாகக் குற்றஞ்சாட்டியும் கண்டித்தும் வருகின்றது.
சர்வதேச அங்கீகாரம்
சர்வதேச ராஜதந்திர அரங்கில் சிறி லங்கா அரசு மேடையேற்றி வரும் மிகவும் அபாண்டமான பொய்ப் பிரச்சாரத்தின் பின்னணியில் தமிழ் மக்களும் தமது தன்னாட்சி உரிமைப் போராட்டத்தின் நியாப்பாடுகளை விளக்கி உலகெங்கும் தீவிரமான பரப்புரைகள் செய்து வருகின்றனர். இனக்கொலை வடிவத்தில் பேயுருவம் எடுத்துள்ள அரசப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் உரிமை தமக்குண்டு எனவும் அவர்கள் வாதாடி வருகின்றார்கள்.
தமிழருக்கு எதிரான சிங்கள அரசின் ஆக்கிரமிப்புப் போர் தீவிரமடைந்து தமிழரின் நிலை மோசமடைந்து இறுதியில் மாபெரும் மனித பேரவலமாக எழுந்ததால் தமிழரின் உரிமைக் குரல் ஐ.நா. அரங்குகளில் மேலோங்கி வருவதைக் காணலாம்.
ஆரம்பத்தில் தன்னாட்சி உரிமைக் கோட்பாடானது. காலனித்துவ ஆட்சிக்கு எதிராக தேச சுதந்திரம் கோரி நடாத்தப்பட்ட விடுதலைப் போராட்டங்களுக்கே பயன்படுத்தப்பட்டது. ஆனால், சமகால வரலாற்றுச் சூழலில் இக்கோட்பாடானது. பல்வேறு ஒடுக்குமுறை வடிவங்களுக்கு எதிராகப் போராடும் மக்களின் உரிமைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக இனவாத அரசுகளின் அடக்குமுறை அல்லது அந்நிய ஆதிக்கம் அன்றி அந்நிய படைபெயடுப்பு போன்ற ஒடுக்கு முறைகளைச் சந்தித்து நிற்கும் மக்களுக்கும் இந்த உரிமை உரித்தாகின்றது. இங்கு அந்நிய ஆதிக்கம் என்பது ஒரு தேசத்தின் மீது இன்னொரு தேசம் திணிக்க முயலும் ஆதிக்கத்தையே குறிக்கின்றது.
தமிழ் மக்கள் சிங்கள இனவாத அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி நிற்கின்றார்கள். அந்நிய தேசமான சிங்களத்தின் இராணுவ ஆதிக்கத்திற்கும் படையெடுப்பிற்கும் உட்பட்டு நிற்கின்றார்கள். ஆயுத பலத்தால் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அவர்களை சிங்கள இராச்சியத்துடன் பலவந்தமாக இணைத்து விட மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் விடாப்பிடியாக முனைந்து வருகின்றன என்பது வரலாற்று உண்மை. இந்த வரலாற்று உண்மை சந்தேகத்திற்கு இடமின்றி ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றது. அந்நிய ஆதிக்கத்தையும் இனவாத அடக்குமுறையையும் தெளிவுற நிரூபிக்கும் உண்மைச் சம்பவம் இது. இந்த வகையில் சர்வதேசச் சட்டத்தின் நியமங்களையும் வரையறைகளையும் தமிழர்கள் பூர்த்தி செய்வதால் அவர்களுக்கு தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தும் தகுதியுண்டு. தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஆயுதம் ஏந்திப் போராடும் உரிமையும் உண்டு. இன்னொரு வகையில் சொல்லப் போனால் தமிழர்களது ஆயுதப் போராட்டமானது சர்வதேச சட்டத்தின்படி ஒரு நியாயப் பூர்வமான அரசியற் போராட்டமாகும்.
விடுதலை புலிகள் ஒரு விடுதலை இயக்கம்
தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டும் இலட்சியத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கமானது சிங்கள அரசின் இராணுவ ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதந்தரித்த விடுதலைப் போரை கடந்த 37 ஆண்டுகளாக நடத்தி வந்தது. தன்னாட்சி உரிமைக் கோரிக்கையில் தளராத உறுதிபூண்டு நீண்டகாலமாக தமிழரின் அரசியல் சுதந்திரத்திற்காக இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடி வந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கமானது ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற தகுதியைப் பெற்றிருக்கின்றது. எழுபதுகளின் ஆரம்பத்தில் உதயம் பெற்று மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழரின் போராட்ட சக்தியாக இரத்தம் சிந்தும் இலட்சியப் போர் புரிந்து – அதியுயர் அர்ப்பணிப்புகளைச் செய்து வருவதால் தமிழீழ மக்கள் மத்தியிலும் அனைத்துலக தமிழர் மத்தியிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் பரந்துபட்ட நல்லாதரவைப் பெற்றிருக்கின்றது. தமிழரின் தேசிய இனப்பிரச்சினை சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றமைக்கு புலிகளின் விடுதலைப் போராட்டமே பிரதான காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
விடுதலைப் புலிகள் இயக்கமானது பயங்கரவாதச் செயல்களில் பலம்மிக்க இராணுவ சக்திகளுடன் (இந்திய இராணுவம் உட்பட) தளராத உறுதியோடு போர் நிகழ்த்தும் வல்லமையும் அரசியல் நடவடிக்கைகளில் அலையலையாக சனத்திரளை அணிதிரட்டும் ஆற்றலும், விடுதலைப் புலிகளை ஒரு தேசிய சுதந்திர இயக்கம் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியிருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் ஒரு நிலையான இராணுவம் முப்படைப் பரிமாணத்துடன் உருப்பெற்றிருந்தது. பல்லாயிரம் விடுதலைப் போராளிகளைக் கொண்ட ஒரு தேசிய விடுதலைப் படையாக அது இயங்கி ஒரு எழுச்சி மிக்க நிழலரசையும் கொண்டிருந்தது. இந்த விடுதலை இராணுவத்திற்கு ஒரு கட்டளைத் தலைமையும் உயர் இராணுவ பயிற்சி வசதிகளும், நவீன படைக்கலன்களும் முப்படைப் பரிமாணத்துடன் பரந்த கட்டுப்பாட்டுப் பிரதேசங்களும் சிங்கள ஆயுதப் படைகளுடன் மரபு வழிப் போரில் சண்டையிடும் வல்லமையும் ஆற்றலும் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளிடம் ஒரு அரசியல் அமைப்பும் உண்டு. அதன் கீழ் சமூக, பொருண்மிய, கல்வி, பண்பாட்டுப் பிரிவுகள் செயற்பட்டன. விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சட்டம் ஒழுங்கையும் நீதி பரிபாலனத்தையும் சிவில் நிர்வாக அலகுகளையும் செயற்படுத்தி யிருந்தனர். பல்முகக் கூட்டமைப்பான ஒரு கட்டமைப்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு புறம் ஆயுதப் போராட்டத்தையும் மறுபுறம் அரசியற் போராட்டத்தையும் இன்னொரு புறம் சிவில் நிர்வாகத்தையும் செயற்படுத்தும் இலக்கைக் கொண்டதாக அமையப் பெற்றிருந்தது. அத்தோடு உலகத்தின் தலைநகரங்களில் செயற்படும் ஒரு பரந்த சர்வதேச அமைப்பும் புலிகளிடமுண்டு.
தமிழரின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழருக்கு நீதி வழங்குவதை மறுத்து வரும் ஒரு இனவாத அரசிடம் யாருமே உண்மையையும் நேர்மையையும் எதிர்பார்க்க முடியாது. தமிழரின் தேச சுதந்திர இயக்கத்தைச் சிறுமைப்படுத்துவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் இழிவுபடுத்துவதிலுமே சிறி லங்காவின் பாரிய பிரச்சார இயந்திரம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.
சிங்கள ஆட்சியாளரின் குருட்டுத் தனமான இனவாதப் பார்வையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் தமிழரின் சுதந்திரப் போராட்டம் பயங்கரவாதிகளின் போராகவும் திரிபுபடுத்தப்படுகின்றது.
மிகவும் கடுமையான இனவாத நிலைப்பாட்டை எடுத்து விடுதலைப் புலிகளை மிகவும் இழுக்கான வார்த்தைகளில் தூற்றி வந்த போதும் சிங்களத் தலைமைகள் வௌ;வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் புலிகளைத் தமிழரின் அரசியல் இராணுவ சக்தியாக ஏற்று அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருந்தது. திம்புவிலும் டெல்லியிலும் பெங்களூரிலும் கொழும்பிலும் பின் அனைத்துலக நாடுகளின் தலைநகரங்களில் அவ்வரசுகளின் அங்கீகரத்துடன் சிறி லங்கா அரசு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியது. எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி விடுதலைப் புலிகளை தமிழரின் அரசியற் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டே இந்தப் பேச்சுக்களில் சிறி லங்கா பங்குபற்றியது. இவ்விதம் பேச்சுக்களின் போது புலிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் பேச்சுக்கள் முறியும் போது நீக்கப்பட்டு விடுகின்றது. சமாதான காலத்தில் புலிகளை மக்கள் இயக்கமாக அங்கீகரிப்பதும் பின்பு போர்க்காலத்தில் அவர்களைப் பயங்கரவாத இயக்கமாக இழிவுபடுத்துவதும் சிறி லங்காவின் மிகவும் விசித்திரமான கேலிக் கூத்தான அரசியல் நாடகம் என்பதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்த போதிலும், இச் சர்வதேச சமூகம் தங்கள் நலன்களுக்காக ஒரு இனத்தின் அழிவுக்கு துணைபுரிந்து சிறி லங்காவையும் அதன் இரானுவ மேலாதிக்கத்தையும் ஊக்குவித்து வருகின்றமை வருந்தத்தக்கது.
சிறி லங்கா அரசின் அந்தரங்க நோக்கங்கள்
1983 ஆம் ஆண்டு யூலையில் வெடித்த இனவாதப் பூகம்பத்தில் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, தமிழரின் தேசிய இனப் பிரச்சினை சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. சிறி லங்காவின் படுபாதகமான மனித உரிமை மீறல்களைக் கண்டு சர்வதேச சமூகம் அதிர்ச்சியடைந்தது. இந்தக் கொடிய இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பெரும் தொகையில் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற பிற தேசங்களில் அரசியற் தஞ்சம் புகுந்தனர்.
இதனையடுத்து அபிவிருத்தி கண்ட செல்வந்த நாடுகளின் அக்கறையும் கவனமும் இலங்கைத் தீவின் அரசியல் மீது திரும்பியது. தமிழரின் நிலைகுறித்துக் கவலையடைந்த மேற்குலக நாடுகள் சில சிறி லங்காவிற்கு வழங்கும் நிதியுதவியை மனித உரிமைப் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி மனித உரிமையை மேம்பாடு செய்வதன் அடிப்படையில் உதவி வழங்கப்படுமென வலியுறுத்தி வந்தன. ஆயினும் மேற்குலகின் இந்த அழுத்தங்கள் எவ்வித பயனையும் அளிக்கவில்லை. சிறி லங்காவின் ஒடுக்குமுறை ஆட்சியில் எவ்வித மாற்றங்களும் நிகழவில்லை. எனினும் தற்போதைய சிங்கள அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்குடன் விசாரணைக் குழுக்களையும் மனித உரிமை ஆணைக்குழுக்களையும், அரசியல் விவகார குழுக்களையும் நியமித்து சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இலங்கைத் தீவானது தொடர்ந்தும் அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத சட்டத்தின் கீழும் இராணுவ பொலிஸ் கொடுங்கோன்மையின் கீழும் ஆளப்பட்டு வருகின்றது என்பது தான் உண்மை. தென்னிலங்கையில் அரசுக்கு எதிரான சக்திகள் காவல்துறையினரின் பயமுறுத்தல் கைது தடுப்புக்காவல், தாக்குதல் போன்ற கொடுமைகளைச் சந்தித்து வருவதோடு உயிருக்கு பயந்து இலங்கைத்தீவை விட்டு வெளியேறி உலக நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். அங்கு அரசியல் சுதந்திரங்களை நசுக்கிவிட அரசாங்கம் இரும்புக் கரத்தைப் பாவிக்கின்றது. வடகிழக்கில் நிலைமை படுமோசமாக உள்ளது. இங்கு இராணுவ நடவடிக்கைகள் என்ற போர்வையில் தமிழருக்கு எதிராக மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் இழைக்கப்படுகின்றன.. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டு கைதுகளும் காவல்வைப்பும் காணாமல் போதலும் சித்திவதையும் பாலியல் வல்லுறவும் கொலைகளுமாக மிகவும் மிருகத்தனமான இராணுவப் பயங்கரவாத ஆட்சி நடைபெறுகின்றது. தமிழர் தாயகத்தில் குறிப்பாக வன்னிமண்ணில் மட்டும் 5000 பேருக்கு மேல் காணாமல் போயுள்ளதாக நன்கு ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமை நிலைமை படுமோசமாகி போருக்குப் பின்னரான வன்முறையும் அடக்குமுறையுமாக இலங்கையில் கொந்தளிப்பான நிலை தாண்டவமாடும் போது, உதவி வழங்கும் நாடுகள் தொடர்ந்தும் சிறி லங்காவுக்குப் பாரிய அளவில் நிதியுதவியை வாரி வழங்கி வருகின்றன. இந்த நிதியில் பெரும் பகுதி அரசாங்கத்தின் சமாதானத்திற்கான போருக்கு செலவாகிய நட்டத்தை
இது ஒரு புறமிருக்க போரினால் எழுந்த மாபெரும் மனித அவலங்களைக் கருத்தில் எடுக்காது. மனிதாபிமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் சில வெளிநாடுகள் சிறி லங்காவுக்கு தொடர்ந்தும் அழிவு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. உலகத்திடமிருந்து பெருந்தொகையில் நிதியுதவியும் பெருமளவில் ஆயுத உதவியும் குவிந்து வருவதால் உற்சாகம் பெற்றிருக்கும் சிங்கள அரசு தமிழருக்கு எதிராக சுவீடன், கனடா சுவிஸ், அவுஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், கொலண்ட், தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என நேரடியாகத் தெரிவித்துள்ளன. இந் நாடுகளின் கோரிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்போதைய தலைமை வரவேற்ற போதும் சிறி லங்கா அரசு அதற்கிணங்க மறுக்கின்றது. தமிழரின் இனப்பிரச்சினை ஒரு உள்நாட்டு விவகாரம் எனக் கூறி சர்வதேச சமூகத்தின் வேண்டுதல்களை நிராகரித்து வருகின்றது.
சிறி லங்கா அரசானது சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை மறுத்து வருவதற்குச் சில அடிப்படையான காரணங்களுண்டு. முதலாவதாக தமிழரின் தேசியப் பிரச்சினை உலக அரங்கில் ஏறி சர்வதேச நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுவதை மகிந்த அரசாங்கம் விரும்பவில்லை. இரண்டாவதாக தமிழர் போராட்டத்தின் பிரதான தலைமைச் சக்தியாக விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து பயணிப்பதையும், புலிகள் இயக்கத்துக்கு தமிழ் மக்களுக்கான பலமான தலைமைத்துவ அந்தஸ்து கிடைப்பதை சிங்கள அரசு விரும்பவில்லை. மூன்றாவதாக தமிழரின் தன்னாட்சிக் கோரிக்கை நியாயமானதென நாகரிக உலகம் அனுதாபம் காட்டலாம் என்ற அச்சமும் சிறி லங்காவுக்கு உண்டு. நான்காவதாக சமாதான முயற்சிகளுக்குப் பதிலாக இராணுவப் பாதையையே நாடிய சிறி லங்கா அரசு அதை வென்றெடுப்பதில் வெற்றி கண்டுள்ளமையினால் அவ் இராணுவ கோட்பாட்டிலேயே நாட்டம் கொண்டுள்ளது.
தமிழரின் தாயகத்தை ஆக்கிரமித்து தமிழரை அடக்கி ஆளும் இராணுவக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலமே சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் திருப்திப்படுத்தி அதன் ஆதரவை வென்றெடுக்கலாமென சிங்கள அரசு கருகின்றது. முப்பத்தேழு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டமானது சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் மத்தியில் பரஸ்பர பகைமையையும் நம்பிக்கையீனத்தையும் உருவாக்கியிருந்தது என்பதே உண்மை. இரு தரப்பினர் மத்தியில் நிகழ்ந்த பேச்சுக்கள் முறிவடைந்ததற்கு இந்தப் பரஸ்பர பகைமையும் நம்பிக்கையீனமுமே காரணம். இதன் காரணமாகவே எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளின் பேராதரவுடன் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதி பூண்டுள்ள புலிகளின் தலைமைத்துவம் அதுவே தமிழரின் அபிலாசைகளுக்கு பயனளிக்குமெனவும் நம்புகின்றது. ஆனால் சிறி லங்கா அரசோ நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய காரணங்களின் நிமித்தம் சர்வதேச சமூகத்திம் சர்வதேச அரசுகளின் மத்தியத்துவத்தை விரும்பவில்லை. ஆயுதபோரை முடிவுக்குக் கொண்டுவந்து புதிய பரிமாணத்துக்ள் பிரவேசித்திருக்கும் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு சிங்கள அரசு பின்னடிப்பதற்கு வேறும் சில காரணங்களுண்டு.
தற்போதைய சிங்கள அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்குடன் விசாரணைக் குழுக்களையும், மனித உரிமை ஆணைக்குழுக்களையும், பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு அமைவாக தீர்வு என வேறு குழுக்களையும் நியமித்து சில கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் இலங்கைத் தீவானது தொடர்ந்தும் அவசரகாலச் சட்டத்தின் கீழும் இராணுவ பொலிஸ் கொடுங்கோன்மையின் கீழும் ஆளப்பட்டு வருகின்றது என்பது தான் உண்மை..
சிங்கள இனவாத ஆட்சியாளரின் பார்வையில் விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம். போருக்குப்பின்னும் தமிழரின் தனித்துவம், தாயகம், தேசியம் என்ற தமிழினத்தின் ஒட்டுமொத்தமான விருப்பாற்றலைக் குறியீடு செய்து நிற்கும் ஒரு புரட்சிகர இயக்கமாக விடுதலைப் புலிகளை இவர்கள் கருதுகிறார்கள். ஏனைய தமிழ்க் குழுக்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளைக் கைவிட்டு எந்தச் சலுகைகளையும் ஏற்கத் தயாராக இருக்கும் போது விடுதலைப் புலிகள் மட்டும் கொண்ட இலட்சியத்தை இறுகப் பற்றி தமிழரின் தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதில் உறுதியாக நிற்கின்றார்கள் என்பதையும் சிங்கள ஆளும் வர்க்கம் நன்கு உணர்ந்திருக்கின்றது. ஆகவே, இந்த அடிப்படைகள் பற்றிப் பேச வேண்டும். ஆனால், இந்த அடிப்படைகள் பற்றி விவாதிக்கக் கூட சிங்கள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. தமிழர்களின் தேசிய அபிலாசைகளையும் உணர்வுகளையும் முற்றாக உதாசீனம் செய்து பிறிதொரு அரசியற் கருத்துலகில் தமிழரின் பிரச்சினையை நிலைநிறுத்த முனைகின்றார்கள். இலங்கையானது பல இனக் குழுக்களைக் கொண்ட ஒரு சமூகக் கட்டமைப்பு என்பதும் அதில் ஒரு சிறிய இனக்குழுவாக தமிழர்கள் அமைந்துள்ளார்கள் என்பதும் இதன் அடிப்படையில் தேசிய தனித்துவம் தாயகம் என்ற தமிழரின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்பதும் சிறி லங்காவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு காரணமாகவே நேரடியாகவோ அன்றி சர்வதேச சமூகத்தின் நடுநிலையுடனோ விடுதலைப் புலிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்த சிங்கள ஆட்சிபீடம் தயக்கம் காட்டுகின்றது.
விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக ஓரங்கட்டி விடுவதே அரசின் நோக்கம். இன்றும் கூட மகிந்த அரசின் தற்போதைய இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இந்த நோக்கத்தையே சுட்டிக் காட்டுகின்றன. தமிழரின் வரலாற்றுத் தாயகத்தை இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தால் தமிழரின் தாயக தன்னாட்சிக் கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்பதும் அதனால் இக் கோரிக்கைகளை முன்னெடுக்கும் புலிகளின் போராட்டத்திற்கும் முடிவுகட்டிவிடலாம் என்பதும் சிங்கள அரசின் திட்டமாகும்.
இந்த அந்தரங்க நோக்கங்களின் அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இராணுவ அரசியல் அணுகுமுறைகள் அமையப் பெற்றுள்ளன. ஆனால், சிறி லங்காவின் பரப்புரை இயந்திரங்கள் உலக சமுதாயகத்திற்கு வித்தியாசமான ஒரு கதையை எடுத்துக் கூறுகின்றன. உண்மையான நோக்கங்களை இருட்டடிப்புச் செய்து பொய்யான புனைகதைகளை எடுத்துக் கூறிவருகின்றன. பயங்கரவாத அச்சுறுத்தல் என்றும் சமாதானத்திற்கானப் போர் என்றும் புலிகளின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து தமிழரை விடுதலை செய்வது என்றும் கற்பனாவாதக் கட்டுக்கதைகளைக் கூறிவருகின்றன. சிறி லங்கா அரசின் இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாந்து போகாமல் சுதந்திரத்திற்காகவும் கௌவரத்திற்காகவும் தமிழர் நடத்தி வரும் நியாயமான போராட்டத்தின் உண்மைக் கதையை உலக சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். என்பதே எமது ஆவல். இந்த ஆவலை தாயகத்தையும் தமிழீழத் தேசியத்தலைமையையும் நேசிக்கும் மக்களும் உணர்ந்து கொண்டு தமிழரின் இராஜதந்திர வழியூடான உரிமைப்போருக்கு ஒத்துழைப்பும் பேராதரவும் நல்க வேண்டும். என்பதுமே எமது வேணவாவாகும்.
அரசியற் பரப்புரைக் குழு
தமிழீழ விடுதலைப் புலிகள்
சுவிஸ் கிளை
0 விமர்சனங்கள்:
Post a Comment