கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்
உலகம் முழுவதும் கப்பலோட்டி வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டிய இனம் தமிழ் இனம் என்று பெருமைப்பட்டு நம் முன்னோர்கள் கதைப்பதை கேட்டு மகிழ்ந்ததுண்டு. அதுவும் நவீன தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் இவை நடைபெற்றன. கப்பலோட்டிய தமிழன் என்ற சிவாஜி நடித்த திரைப்படம் மூலம் வ.உ. சிதம்பரப்பிள்ளை என்ற தமிழர் கப்பலோட்டியதை நாம் பார்த்து மகிழ்ந்ததுண்டு. இன்று லட்சங்களை கறந்து பல ஆயிரம் மைல்கள் கடந்து கடலில் தத்தளிக்கும் அகதிகளை கண்டு வெதும்புகின்றோம். எமக்கு ஏன் இந்த நிலமை? எப்படி ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? பேரினவாதம் மட்டுமா? தமிழ் தேசிய வெறியும் காரணம்தானே? இப்படிச் சொன்னதால், சொல்வதால் நாம் துரோகிகள், தமிழ் உணர்வாளர்கள் அல்ல. தமிழ் உணர்வாளர்கள் என்று கொடிபிடிப்போரின் பிள்ளைகளை விட எங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நன்கே பின்பற்றுகின்றார்கள் எப்பதை ஒரு நாள் வரலாறு கூறும். எங்கள் மக்களின் வடுதலைக்காக நாங்களே நிறைய போராடினோம் போராடுகின்றோம் என்று வருங்காலம் வரலாற்றில் பதிக்கும். நாம் நம்பும் சமத்துவ சகவாழ்வு சித்தாந்தத்தின் மீது எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை, தெளிவு எமக்குண்டு.
இலங்கையில் பேரினவாத சக்திகளால் தமிழ் மக்களுக்கெதிராக இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போதெல்லாம் நாம் பாதுகாப்பு தேடி பெரியளவில் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக ஓடவில்லை. இது 1983 ஆண்டு ஆடிக்கலவரம் வரை நீடித்தே இருந்தது. அரச படைகளினால் தேடப்பட்ட சிலர் தனிநபர்களாக அல்லது அவர்கள் சார்ந்த இரகசிய விடுதலை அமைப்பின் மூலம் தமிழ் நாட்டிற்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்தனர். மிகச் சிலர் துரைப்பாவின் கொலை, பஸ்தியாம்பிள்ளை கொலை போன்ற காரணங்களுக்காக தேடப்பட்டதினால் ஐரோப்பிய நாடுகளுக்கு நிரந்தரமாக அவர்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பிற்கு ஏற்ப இடம் பெயர்ந்தனர். ஆனால் இலங்கை அரச படைகளினால் தாம் கொல்லப்படுவோம் என்று பொது மக்கள் அப்போதெல்லாம் வெளிநாடுகளுக்கு அகதிகளாக செல்லவில்லை. ஏன் அருகில் உள்ள தமிழநாட்டிற்கும் செல்லவில்லை. மாறாக இலங்கையின் ஆட்சிப்பீடத்தில் இருந்த பேரினவாத அரசுகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான கலவரங்களால் உள்ளுரில் இடம் பெயர்ந்தனர், அகதிகளாக்கப்பட்டனர். சிறிது காலத்தின் பின்பு நிலமைகள் சீரடைந்ததும் மீண்டும் தமது பழைய இடங்களுக்கு திரும்பிச் சென்றனர் என்பதே வரலாறு.
இதற்கு விதி விலக்காக மலைய மக்களில் ஒரு பகுதியினர் மலையகத்திலிருந்து உள்நாட்டிற்குள் இடம் பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம், வவுனியா மாவட்டத்தில் உள்ள கன்னாட்டி போன்ற இடங்களுக்கு பெருமளவில் நிரந்தரமாக அகதிகளாக வாழ முற்பட்டனர் என்பதே வரலாறு. இவ் மலையக அகதிகளை அப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் அகதிகளாக அனுதாபத்துடன் அரவணைப்பதிற்கு பதிலாக கூலிகளாக ‘அரவணைத்ததே’ கசப்பான உண்மை ஆகும். குறைந்த கூலிகளுக்கு அமர்த்தப்பட்டு அடிமைகள் போல் நடத்தப்பட்ட இந்த மலையக அகதி மக்கள்தான் முதன் முதலாக தமது வாழ்வாதரத்திற்காக போராட புறப்பட்டு, அது இரணைமடு குளத்திற்கு கவசவாகனம் கொண்டு வரப்பட்டு ஒடுக்கப்பட்டது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அப்படியொரு வீரவரலாற்றை இம் மக்கள் கொண்டிருந்தனர்.
1983 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் வைத்து 13 இராணுவத்தினரை புலிகள் தாக்கி கொன்றொழித்த போதுதான் தென்பகுதியை தாண்டி தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவம் பெரிய அளவில் தனது தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தது. அதற்கு முன்பெல்லாம் இலங்கையில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் தென் இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் மீதும், சிங்களஃதமிழ் எல்லைக் கிராமங்களில் அமைந்த தமிழ் கிராமங்களில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கூடவே தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களில் இலங்கை இராணுவம் யாழ் நூலகம், யாழ் சந்தைக் தொகுதி, சுன்னாகம் சந்தை தொகுதி என பொருளாதார நாசங்களை இரவோடு இரவாக செய்து முடித்தது. ரணில் விக்ரமசிங்காவின் மாமனார் ஜே. ஆர் இன் ‘போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்றும்’ தனது நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு எதிராக போர் முரச கொட்டிய பின்புதான் இலங்கை இராணுவம் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்கள் எல்லாம் தனது பிரகடனப்படுத்தாத போரை முடுக்கிவிட்டது.
இவ்வேளை இந்தியாவும் தனது நேசக்கரத்தை போராளிகளுக்கு ‘தார்மீக ஆதரவு வழங்குதல் என்ற செயற்பாட்டின் மூலம் செயற்பட முற்பட்டபோதுதான் முதன் முதலில் தமிழர்கள் பெரிய அளவில் தமிழ் நாட்டிற்கு வள்ளங்களில் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். இலங்கை கடற்பரப்பை தாண்டியவுடன் தமிழர்கள் தமிழ்நாட்டு மக்களாலும் இந்திய கடற்படையினராலும் இரு கரம் நீட்டி வரவேற்கப்பட்டனர். இந்தியாவிற்குள் அகதிகளாக புகுந்த இலங்கைத் தமிழரை ‘விடுதலைப் போராளிகள்’ என்று சதாரண அகதிகளுக்கு அப்பால் மதிப்பளித்து வரவேற்றனர்.
இதற்கு முற்பட்ட காலங்களில் கள்ளக்கடத்தல் நோக்கங்களுக்காக இந்தியா சென்ற தமிழர்கள் தமது கள்ளகடத்தல் தொழிலில் அதிக கவனம் செலுத்தினர். இவர்கள் இந்திய கடலோர படையினருக்கு வேண்டப்படாதவர்கள். இலங்கை கடலோர படைகளுக்கும் வேண்டப்படாதவர்கள். இவர்களின் வழித்தோன்றல்கள்தான் பிரபாகரன் போன்றோர். இயல்பில் தமது ‘தொழில்’ நிமிர்த்தம் இலங்கை இந்திய படைகளுடன் மோதும் தொழில் முறமையை இவர்கள் கொண்டிருந்தனர் என்பதே யதார்த்தமான உண்மை நிலமை. இவ்வாறு கள்ளக்கடத்தலுக்கு சென்றவர்கள் அங்கேயும் தமது சுகத்திற்கு ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்டதே வரலாறு. ஆனால் சாதாரண பொது மக்கள் பொருள் தேடியோ அல்லது பாதுகாப்பு தேடியோ அன்றைய காலகட்டத்தில் தமிழ் நாடு செல்லவில்லை. மாறாக இந்திய சுதந்திர போராட்டகாலத்தில் ஜீவானந்தம் போன்ற இடதுசாரித் தலைவர்கள் பாதுகாப்பு தேடி இலங்கைக்கு கடல் மார்க்கமாக தப்பி வந்ததே வரலாறு.
1983 ம் ஆண்டு கலவரத்தில் ஏற்பட்ட இடம் பெயர்வு நிகழ்வுகளை சாதகமாக பயன்படுத்தி ‘பொருள் உள்ளவர்கள்’ ‘டாலர்’ தேடி மேற்குலகு நாடுகளுக்கு அகதிகள் என்ற போர்வையில் படையெடுத்தனர். இலங்கைக்கு அருகில் பல வகையிலும் எம்மை ஒத்த மக்கள் வாழும் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக செல்வதில் உள்ள இலகுத்தன்மை டாலர்களை அள்ளி வழங்காது என்ற ஒரே ஒரு பொருளாதாரக் காரணத்திற்காக நாம் மேற்குலக நாடுகளுக்கு இடம் பெயர்ந்ததே உண்மை நிலை. இதற்கு நாம் தூக்கிய ஆயுதம் ‘அகதித் தமிழன்’. தேடல் என்பது மனிதனிடம் இருக்க வேண்டிய ஒன்று. அதற்கு நாம் கையாண்ட வழிமுறை ‘அகதித் தமிழன்’. அகதித் தமிழனால் கிடைத்த வாழ்வை உறுதி செய்து நிரந்தரமாக்கிக் கொள்ள புலம் பெயர் நாடுகளில் நாம் பாவிக்க முற்பட்ட கருவி தமிழ் ஈழம், தமிழ் தேசியம் தொடர்ந்த யுத்தம். யுத்தம் நின்றால் எமது சுற்றம் அங்கே தங்கிவிடும். இங்கே வர முடியாது எனவே யுத்தம் வேண்டும் சமாதானம் தேவையில்லை. இதனை இலங்கை அரசுகளும் தமக்கு சாதகமா பாவித்துக் கொண்டன. யுத்தம் தொடர்ந்தன. கொலைகள் நடந்தன. அவை புலம் பெயர் நாடுகளுக்கும் பரவியே இருந்தது. போராட்டத்தில் பங்குதாரராக இல்லாமல் தப்பிவந்து விட்டோமே என்ற ‘குற்ற உணர்வு’ சிலரை ‘நியாயமாக’ போராட்டத்தின் பங்குதாரராக புலம் பெயர் நாடுகளில் மாற்றியதும் உண்மைதான்.
இவ் அகதி வாழ்விற்கான கப்பலோட்டத்திற்கு முன்பு 1977 கலவரம் காரணமாக தென் இலங்கையில் இருந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் லங்காராணி என்ற கப்பல் மூலம் யாழ்பாணம் வந்து சேர்ந்தனரே ஒழிய மாறாக இந்தியாவிற்கு கப்பலில் அகதிகளாக செல்லவில்லை. லங்காராணி கப்பலில் வந்தவர்களை யாழ்ப்பாணம் கனகராயன் மகாவித்தியாலத்தில் அகதிகளாக அமர்த்தி பராமரித்தது அக்கால கட்டத்தில் வாழ்ந்த யாவரும் அறிந்த ஒன்றே. இவ் அகதிகளின் வாழ்வில் பங்கெடுத்த அனுபவம் எம்மில் பலருக்கும் உண்டு.
1983 ஆண்டு ஆரம்பமான அகதிப் பயணம் ராஜீவ் காந்தி புலிகளால் கொல்லப்படும் வரை இந்திய கடல் பிரதேசங்கள் எல்லாம் இரு கரம் பற்றி அழைத்துச் செல்லப்பட்டதே வரலாறு. இவ் இரு கரம் பற்றலை தமிழ் நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்திய கடலோரப்படைகளும் செய்தன. ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்பு நிலமை எல்லாம் தலை கீழாக மாறியது. புலிகள் இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஆரம்பித்த வலிந்த தாக்குதல் கால கட்டத்தில் தமிழ் நாடு தப்பிச் செல்லும் அகதிகளில் புலிகளும் ஊடுருவி வரலாம் என்ற எச்சரிக்கை இந்திய கடலோரப் படைகளுக்கு இருந்தாலும், அகதிகளை தமிழ் நாட்டு மக்கள் விருந்தோம்பலுடன் வரவேற்று வந்தனர் என்பதே உண்மை நிலையாகும். இக்கால கட்டத்தில் இந்திய கடலோரப் பாதுக்காப்பு பரிவினருக்கு வேண்டாத விருந்தாளிகளாக்கப்பட்டனர் இலங்கை தமிழ் அகதிகள். இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந் நிலமையினை ஏற்படுத்திய புலிகள் தமது வழமையான ஆயுத கடத்தலுக்கான தளமாக இந்திய கடற்பகுதியை பயன்படுத்தி வந்தனர்.
வடக்கு கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு இந்திய இராணுவம் இலங்கை மண்ணைவிட்டு வெளியேறும் போது இந்திய அரசு ஒரு பகுதி போராளிகளை அவர்களின் விருப்பின் பேரில் பிரேமதாசா, புலிகளால் கொல்லப்படுவார்கள் என்ற காரணத்தால் அகதிகளாக இந்தியாவிற்கு அழைத்துச் சென்றனர். இதில் பல போராளிகள் இந்திய பாதுகாப்பு படையுடன் செல்ல முடியாத சூழலில் 5 குதிரைவலு உடைய படகுகள் மூலம் புலிகள், பிரேமதாச அரசிடம் இருந்தும் தப்ப இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்கு பாதுகாப்பு தேடி செல்ல முயற்சித்தனர். தப்பிச் செல்பவர்களை கைது செய்வதற்கு புலிகள் கடல்பாதுகாப்பு வலயம் போட்டிருந்தனர். புலிகளின் கடல் பாதுகாப்பு வலயத்தை கடந்து தப்பிச் செல்ல முற்பட்டவர்களில் பெரும் பகுதியினர் புலிகளினால் கடற்கரையில் அல்லது கடலில் வைத்து துரத்தி துரத்த கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் கைது செய்யப்பட்ட இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டு கடல் மீன்களுக்கு இரையாக வீசப்பட்ட வரலாற்றை புலிகள் தனதாக்கிக் கொண்டனர். சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு துணுக்காய் முகாங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் பின்பு கொல்லப்பட்டனர். துணுக்காய் வதை முகாமில் ‘நிரந்தர’ விலங்கிட்டு அடைத்த வைத்து விசாரணை என்ற பெயரில் சித்திரைவதை செய்து கொல்லப்பட்வர்கள் பலர். இதில் மிகச்சிலரே தற்போது புலிகளிடம் இருந்து தப்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் கேட்டால் தெரியும் புலிகளின் வதை முகாங்களின் கொலைக் கதைகள்.
உயிர் வாழ்வதற்காக தப்பித்து சென்றவர்களை புலிகள் கைது செய்து கொலை செய்ததே தமிழ் மக்களின் கொலை வரலாறு. தமிழ் நாட்டிற்கு தப்பி சென்ற இந்த அகதிகள் கொல்லப்பட்டனர். உயிரைக்காப்பதற்காக இப்படி தப்பியோடிய தமிழ் போராளிகள் புலிகளால் கொல்லப்பட்டனர். இவ் அகதிகளின் கொலைகளை அன்று எந்த சர்வ தேசமும் கண்டு கொள்ளவேயில்லை. எந்த புலம் பெயர் தமிழனும் இதற்காக வீதியில் இறங்கி போராடவில்லை. தூதரங்களின் படியேறி நீதி கேட்கவில்லை. மனித உரிமை அமைப்புக்கள் கேள்வி கேட்கவில்லை. தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தவில்லை. தொடர்சியாக இக் கொலைகள் இன்றுவரையும் எந்தக் கணக்கிலும் சேர்க்கப்படவும் இல்லை.
ஆனால் இன்று புலிகள் தமது கப்பல்களில்; உயிர் பிச்சை கேட்டு தப்பித்து ஓடி தம்மை பாதுகாத்துக் கொள்ளும் நிலமைகள் உள்ளன. அவுஸ்திரேலியா, இந்தோனிசியா, கனடா என்றும் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தப்பிச் செல்கின்றனர். Nகிபியால் காட்டிக் கொடுக்கப்படும் கப்பல்கள் பறிமுதல் ஆவதற்கு முன்பு அவற்றை ‘பயன்படுத்தி’ பணம் பண்ணும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இப்படி தப்பி வருபவர்களை யாரும் துன்புறத்தவில்லை. கொல்லவும் இல்லை மாறாக அகதி மனிதன் என்ற நிலமையில் வைத்தே பராமரிக்கினறனர். புலிகளுக்கும், அதன் தீவிர ஆதரவாளர்களுக்கும் முன்பொரு காலத்தில் 1990ம் ஆண்டு அகதிகளாக தப்பிச் சென்றவர்களை கைது செய்து சிறையில் அடைத்து பின் கொலை செய்த சம்பவங்கள் இன்று நினைவுக்கு வருமோ தெரியவில்லை. 1990 ம் ஆண்டு நிகழ்வுகள் இன்றைய இளம் தலைமுiறையினர் பலருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.
புலிகளின் கப்பல்களை பாவித்து பல ஆயிரம் மைல்கள் கடந்து கனடா, அவுஸ்திரேலியா வந்து வாழ வழிகேட்கும் இவர்களை நாம் மனிதாபிமானத்துடன்தான் பார்க்கின்றோம். இவர்களில் பலர் சதாரண பொது மக்கள் ‘டாலர் வாழ்க்கை’ தேடும் கற்பனையில் கடல் கடந்தவர்கள். பல இலட்சம் பணத்தை கப்பல் ஓட்டிகளிடம் கொடுத்து கடல் கடக்க முற்பட்டவர்கள். பிழையான மர்லுமியிடம் லட்சங்களை கொடுத்து தமது பாதைகளை தொலைத்து நிற்பவர்கள். லட்சங்களுக்காக இலட்சியமற்ற இம் மாலுமிகள் இவ் பொதுமக்களை கடலில் தத்தளிக்க காரணமானவர்கள். இவ் பொது மக்களுடன் கலந்திருக்கும் புலிகளும் புலி ஆதரவாளர்களும், இவர்கள் பயணித்த புலிகளின் கப்பலுமே பொது மக்களின் ‘அகதி’ அனுமதி மறுப்பிற்கு காரணமாகின்றன. கூடவே புலிப்பினாமி அமைப்புக்களின் ‘மீட்போன்’ வேடமும் அவ் அவ் நாட்டு அரசுகளின் சந்தேகங்களுக்கு வலுச் சேர்த்துவிட்டன. பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கி விட்டன. கூடவே முன்னாள் சமூகவிரோதி அலெஸ் இவர்களின் உத்தியோகபூர்வ பேச்சாளராக மாறிய நிலைமைகள் மேலும் நிலமைகளை நகைப்பிற்கிடமாக்கியுள்ளது. கப்பலில் கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருட்களும் மேலும் நிலமைகளை சிக்கலாக்கி விட்டுள்ளன.
கப்பல் கடத்தல்காரன் கேபி செய்துவரும் காட்டிக்கொடுப்புக்கள் இனிவரும் நாட்களில் தமிழ் அகதிக் கப்பல் ஓட்டங்களை குறைவடையவே செய்யும். கூடவே இலங்கையில் ஏற்பட்டு வரும் இயல்பு நிலமைகளும் அகதித் தமிழனை கப்பலோட்டி வெளிநாடுகளில் ஒளிக்கச் செய்யாது. மேற்கு நாடுகளில் வாழ்வை தொலைத்து டாலர்களை தேடிய மக்களின் சோக கதைகள் வாழ்வை ரசித்து இலங்கையை விட்டு நகராமல் இருக்க உதவலாம்?. ஆனால் டாலர் ஜடங்கள் மனித வாழ்வை தொலைத்து தொடர்ந்தும் வெளிநாடுகளில் தங்கிவிடுவர். வெளிநாடுகளில் தங்குவதற்கு காரணங்களை தேடி ‘தமிழ் தேசியம்’ உடன் மறுமணம் செய்து கொள்வர். இவ் மறுமணம் மலட்டு தம்பதிகளாக வாழ்வைத் தொடரவே உதவும் என்பது கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போல் காலம் தாழ்த்தியே புரியவரும். அன்று அவ் மலட்டுத் தம்பதியினர் சக்கரை வியாதி, இரத்த அழுத்தம், வாதநோய் பொன்றவற்றால் எழுந்து நடமாட முடியாமல் முடமாகி நடக்கமுடியாத பிணங்களாக வாழ்க்கையை தொலைத்ததை எண்ணி வருந்தவர். ம்…. என்ன செய்ய 25 வருடங்களுக்கு முன்பேயிருந்து கூறிவருகின்றோம். கேட்டால்தானே….?
தமிழ் மக்களின் நிலைமைகளை பார்த்தீர்களா? ஒரு சமூக விரோதி அகதிகளுக்கு பேச்சாளராக செயற்படும் துர்ப்பாக்கிய நிலமைகளை. ஒரு சமூக விரோதி, கொலைகாரன், கடத்தல்காரனை தமிழ்மக்களின் தலைவனாக வலிந்து திணிக்கப்பட்டதன் விளைவுகளை நாம் அனுபவிக்கின்றோம் இன்று. இனிமேலும் இவை தொடர அனுமதிக்க கூடாது. சர்வ தேசம் எங்கும் ஒரு கௌரவமான இனமாக, மக்கள் குழுமமாக ஏற்கப்படும் நிலமைகளை நாம் ஏற்படுத்த வேண்டும். கடத்தல் காரர்களையும், சுயநலவாதிகளையும். பிறர் உழைப்பில் ‘கஞ்சி’ குடிக்கும் சோம்பேறிகளையும் தவிர்ப்போம்.
நாம் உண்மையானவர்கள். நாகரிகமானவர்கள் கடின உழைப்பாளிகள், திறமைசாலிகள். நாம் இலங்கையில் சகல இனங்களும் சம உரிமை பெற்ற சமத்துவத்துடன் வாழ்வதை வேண்டி போராடப் புறப்பட்டவர்கள். பிரிவினைவாதிகள் அல்ல. பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் நந்தி கடலோரம் கை தூக்கி சரணடைந்து விட்டார்கள். மலேசியாவில் படிபட்டு விட்டார்கள் நாடுகடந்த தனிநாடு கோஸத்தில் பிழைப்பு நடத்துபவர்கள். சாதார தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் வாழ்வு தேடி போராடியவர்கள். தம் வாழ்வை மட்டும் வேண்டி நின்ற பிரபாகரன் குழமத்தினால் ஏமாற்றப்பட்டவர்கள்.
கடந்த கால தவறான வழி நடத்தல்களை இனம் கண்டு, நிலமைகளை புரிந்து கொண்டு சரியான திசைவழியில் பயணிக்க மீண்டும் தயாராக உள்ளோம் என்று எமது நடவடிக்கைகள் மூலம் சர்வ தேசத்திற்கு எடுத்தியம்புவோம். நிச்சயம் சர்வ தேச சமூகம் எம்மை திரும்பி பார்க்கும். ஒரு நாள் நாம் வெல்வோம், நாம் சரியான திசைவழியில் பயணிக்க ஆரம்பித்தால். மாறாக பிழையான மாலுமியின் கப்பலில் பயணிக்க முற்பட்டால் நடுக்கடலில் நங்கூரம் கூட இடமுடியாமல் தத்தளிக்க விடப்படுவோம். சிந்தித்து செயற்படவேண்டிய காலம் இது.
(சாகரன்)
0 விமர்சனங்கள்:
Post a Comment