துருக்கியில் தொடரும் “ஈழப் போர்”
25 வருட ஈழப் போரின் முடிவில் வெற்றிவாகை சூடிய இலங்கை அரசுக்கு பாராட்டுத் தெரிவித்த மிகச் சில சர்வதேச நாடுகளில் துருக்கியும் ஒன்று. துருக்கியின் ஜனாதிபதி குல், ராஜபக்ஷவுடன் நேரடியாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். துருக்கிய (வலதுசாரி) தேசிய ஊடகங்கள் ஈழப்போரை மிக உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளன. தேசிய நாளிதழான “ஹுரியத்”, இலங்கை அரசு நடைமுறைப்படுத்திய கெரில்லா எதிர்ப்பு யுத்த தந்திரங்களை, துருக்கிய அரசு படிக்க வேண்டும் என்று ஆசிரிய தலையங்கம் தீட்டியுள்ளது. ரஷ்ய படைகள் செச்னியாவில் செய்தது போல, மக்களின் இழப்பைப் பற்றி சிந்திக்காமல், கெரில்லாக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் மீது வரைமுறையற்ற தாக்குதலை நடத்துதல். போர் நடக்கும் காலம் முழுவதும் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துதல், ஊடகங்களுக்கு தடை விதித்தல். இது போன்ற பாடங்களை துருக்கியும் நடைமுறைப்படுத்தி, குர்திஸ்தான் என்ற தனி நாடு கோரும் பி.கே.கே. இயக்கத்தை முற்றாக அழிக்க முடியும், என்று ஆலோசனை கூறுகின்றன.
இலங்கை அரசுக்கும், துருக்கி அரசுக்கும் இடையில் சில கருத்து உடன்பாடுகளும், அதையொட்டிய நட்புறவும் இருப்பதைப் போல; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே.) க்கும் இடையில் நெருக்கமான நட்புறவு இருந்து வருகின்றது. தொடக்க காலத்தில் புலிகளுக்கு கிடைத்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பி.கே.கே.இடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவை. (பனிப்போர் காலகட்டமான அன்று சோவியத் யூனியன் பி.கே.கே.க்கு “சாம்” ஏவுகணைகளை வழங்கி இருந்தது). சுவாரஸ்யமாக, புலிகள் 1983 லிலும், பி.கே.கே. 1984 லிலும், கிட்டத்தட்ட ஒரே காலத்தில் விடுதலைப் போரை ஆரம்பித்திருந்தன. போர் அகதிகளாக, மேற்கைரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை புலிகள் தமக்கு நிதி வழங்கும் ஆதரவுத் தளமாக வைத்திருந்தனர். அதே போலவே மேற்குலகில் வாழும் குர்திய சமூகத்தில் பெரும்பான்மையானோர் பி.கே.கே.இற்கு ஆதரவளிக்கின்றனர்.
புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளினதும், பி.கே.கே.யினதும் செயல்முறை, அரசியல் அணுகுமுறை எல்லாமே ஒரே மாதிரியாக உள்ளன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் அண்மைய ஆர்ப்பாட்டங்கள் பல, பத்து வருடங்களுக்கு முன்னர் பி.கே.கே. ஒழுங்கு செய்த அதே பாணியில் அமைந்துள்ளன. பத்து வருடங்களுக்கு முன்னர், குர்தியர்கள் பெருமளவில் வாழும் ஜெர்மனியில் பி.கே.கே. தடை செய்யப்பட்டது. அப்போது தடைசெய்யப்பட்ட பி.கே.கே. கொடிகளுடனும், தலைவர் அப்துல்லா ஒச்சலானின் உருவப் படத்துடனும் ஆயிரக்கணக்கான குர்த்தியர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கென்யாவில் வைத்து, ஒச்சலான் துருக்கிய புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, மேலைத்தேய நகரங்கள் ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்தன. தூதுவராலயங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. லண்டன் மாநகரில் ஒரு மாணவி தீக்குளித்து மரணமடைந்தார்.
ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பவர்கள் ஒன்றில் இந்தியாவில், அல்லது சர்வதேச நாடுகளில் வாழும் தமிழ் இனத்தவர்கள் என்ற எல்லையை கடந்து செல்லவில்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் பி.கே.கே. பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமளவிற்கு அவர்களுக்கிடையே புரிந்துணர்வு உள்ளது.(SOLIDARITY WITH THE TAMILS) பி.கே.கே. சார்பு தொலைக்காட்சியான “ரொஜ் டி.வி.” தினசரி ஈழப்போர் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருகின்றது. தொலைகாட்சி சேவை நடத்துவதில் கூட இரு அமைப்புகளுக்கும் இடையில் அசாத்திய ஒற்றுமை நிலவுகின்றது. பாரிசில் இருந்து ஒளிபரப்பாகிய TTN தமிழ் தொலைக்காட்சி, இலங்கை அரசின் நடவடிக்கையால் தடை செய்யப்பட்டு, தற்போது GTV என்ற பெயரில் இயங்கி வருகின்றது. அதே போல லண்டனில் இருந்து ஒளிபரப்பாகிய MED குர்திஷ் தொலைக்காட்சி, துருக்கி அரசின் நடவடிக்கையால் தடை செய்யப்பட்டு, தற்போது ROJ TV என்ற பெயரில் இயங்கி வருகின்றது.
இரண்டு நாடுகளிலும் நிலவும் இனப்பிரச்சினை பல ஒற்றுமைகளையும், அதே நேரம் சில குறிப்பிடத்தக்க வேற்றுமைகளையும் கொண்டுள்ளது. புலிகளுக்கு நேர்ந்த கதியை பார்த்து பி.கே.கே. தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்று துருக்கிய ஊடகங்கள் போதித்து வருவதை, வட-ஈராக் மலைகளில் பதுங்கியுள்ள பி.கே.கே. தலைமை நிராகரித்துள்ளது. புலிகளின் வீழ்ச்சி குறித்து பி.கே.கே. ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பி.கே.கே. ஜெனரல் கரயிலன் கையொப்பமிட்டுள்ள அந்த அறிக்கை புலிகள் விட்ட தவறுகளையும் விமர்சனத்திற்குட்படுத்தியுள்ளது.
கரயிலான் துருக்கி ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம் இது: “தமிழ்ப் புலிகள் ஒரு காலத்தில் இந்தியாவால் ஆதரிக்கப் பட்டார்கள். ஆனால் பின்னர் இந்தியா இலங்கை அரசை ஆதரித்தது. இதை விட, புலிகள் இயக்கம் தேசக் கட்டுமானப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை, போராட்டத்தின் சீர்குலைவாக அமைந்தது. (இறுதிக் காலத்தில்) புலிகள் மரபுவழிப் படையணியாக போரிட்டனரே அன்றி, கெரில்லா யுத்தத்தை நடத்தவில்லை. இதன் விளைவு, (தமிழரின்) இனவழிப்பில் கொண்டு போய் முடித்தது. மத்திய கிழக்கில் இருந்து வேறுபடும், பூகோள அமைவிடத்தையும், காலநிலையையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். (குர்திய) போராட்டம் ஒரு தீவிற்குள் முடங்கி விடவில்லை. ஒரு தீவிற்குள் எதிரியை தனிமைப்படுத்தி கடலை நோக்கி தள்ளுவது சுலபம். அதற்கு அடுத்தபடியாக, பி.கே.கே. சிறிய விமானப்படை ஒன்றையோ அல்லது ஆட்டிலெறி போன்ற கனரக ஆயுதங்களையோ வைத்திருக்கவில்லை.”
குர்திய இன மக்களின் தாயகம், இலகுவில் ஊடுருவ முடியாத மலைப்பிரதேசமாக உள்ளது. இது கெரில்லாப் போருக்கு அனுகூலமான தரையாகும். இப்போதும் பி.கே.கே. அமைப்பில் புதிதாக சேரும் உறுப்பினர்கள், முதல் ஆறு மாதங்களுக்கு எந்த வசதியுமற்ற கரடுமுரடான மலைகளில் வாழுவது எப்படி என்று பயிற்சி வழங்கப்படுகின்றது. குளிர்காலத்தில் உறை பனிக்குள்ளும் தப்பி வாழ வேண்டும். துருக்கியின் தென் கிழக்குப் பகுதி, ஈராக்கின் வட பகுதி மற்றும் சிரியாவின் வட எல்லைப்பகுதி ஆகியவற்றை இணைக்கும் மலைப் பிரதேசத்தில் குர்திய மக்கள் பரந்து வாழ்கின்றனர். பி.கே.கே. தொன்னூறுகளில் சில மலைப்பகுதி கிராமங்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசமாக வைத்திருந்தது. நேட்டோ இராணுவ அமைப்பின் அங்கத்துவரான துருக்கி அரசுக்கு கிடைத்த மேற்கத்தைய ஆயுதங்களின் துணை கொண்டு, பி.கே.கே. போராளிகளை துருக்கியில் இருந்து முற்றாக துடைத்தழித்தது.
துருக்கியின் அயல் நாடுகளான கிரீசும், சிரியாவும், பி.கே.கே. போராளிகளுக்கு அடைக்கலம் வழங்கின. துருக்கியுடன் எல்லையைக் கொண்டிருக்கும் இவ்விரு நாடுகளும் நீண்ட காலமாக பகைமை பாராட்டி வந்துள்ளன. “எதிரியின் எதிரி நண்பன்” என்ற தத்துவத்தின் படி, பி.கே.கே. தமது நாட்டில் தளம் அமைக்க உதவின. கிரீஸ் அரச ஆதரவுடன், பி.கே.கே. அரசியல் பிரிவு பகிரங்கமாகவே இயங்கி வந்தது. அதே நேரம், சிரியாவில் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் முகாம்கள் இருந்ததை இரகசியமாக வைத்திருந்தனர். பி.கே.கே. தலைவர் ஒச்சலானும் இலகுரக விமானமொன்றுடன் அங்கே தான் வசித்து வந்தார்.
1998 ம் ஆண்டு, “சிரியாவில் இருக்கும் பி.கே.கே. முகாம்களை மூடும் படியும், ஒச்சலானை தன்னிடம் ஒப்படைக்கும் படியும்” துருக்கி சிரிய அரசாங்கத்தை கேட்டது. தவறினால் படையெடுக்கப்படும் என மிரட்டியது. நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்த சிரிய அரசு, பி.கே.கே. முகாம்களை இழுத்து மூடி விட்டு, ஒச்சலானை வெளியேறுமாறு உத்தரவிட்டது. ஒச்சலானை ஏற்றுக் கொள்ள கிரீசும் மறுத்து விட்டது. சிரியாவும், கிரீசும், துருக்கியுடன் என்னதான் பகைமை பாராட்டிய போதிலும், அயல்நாட்டுடன் நல்லுறவைப் பேண விரும்பின.
ஆதரவற்ற ஒச்சலான் தனது இலகுரக விமானத்தில் ஏறி, நெதர்லாந்து சென்று தஞ்சம் புக நினைத்தார். நெதர்லாந்து அரசு விமானத்தை இறக்குவதற்கே அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இறுதியில் கென்யா தற்காலிகமாக தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கியது. தென் ஆப்பிரிக்க பிரதிநிதியொருவர் அங்கே வந்து பொறுப்பெடுத்து, ஒச்சலானுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சி.ஐ.ஏ., மொசாட் ஆகியன துருக்கியின் புலனாய்வுத் துறைக்கு நிமிஷத்திற்கு நிமிஷம் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தன. தென் ஆப்பிரிக்க பிரதிநிதி வருவதற்கிடையில், துருக்கிய புலனாய்வுத் துறையை சேர்ந்தவர்கள் கென்யா சென்று விட்டனர். (மேற்குலக சார்பு) கென்யா அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, ஒச்சலானை கடத்திச் சென்றனர்.
ஒச்சலான் கைது செய்யப்பட்ட பின்னர், குறிப்பிட்ட காலம் பி.கே.கே ஆயுதப் போராட்டத்தை இடைநிறுத்தி இருந்தது. பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தது. தனி நாட்டுக்கான கோரிக்கையை மறு பரிசீலனை செய்ய முன்வந்தது. அதற்குப் பின்னர் வெளியிடப்படும் பி.கே.கே. அறிக்கைகள் யாவும் “குர்திஸ்தான்” என்ற தனி நாட்டிற்காக போராடுவதாக அறிவிப்பதில்லை. குர்திய இன மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது மட்டுமே தமது உயரிய லட்சியம் என கூறி வருகின்றனர். இதே நேரம் தலைவர் இல்லாத பி.கே.கே. இரண்டாக பிரிந்து விட்டது. ஒரு பிரிவிற்கு ஒச்சலானின் சகோதரனும், மற்ற பிரிவுக்கு முன்னணி தளபதி ஒருவரும் தலமை தாங்குகின்றனர். ஒன்றை மற்றொன்று “துரோகக் குழு” என்று குற்றம் சுமத்தி வருகின்றது. இதைவிட சுயேட்சையாக இயங்கும் இரண்டு சிறு பிரிவுகளும் உள்ளன. முன்னாள் பி.கே.கே. தளபதி ஒருவர் துருக்கி அரசுடன் சேர்ந்து விட்டதால், அவரது பிரிவு இராணுவத்தின் துணைப்படையாக இயங்குகின்றது.
துருக்கி அரசுடன் சர்வதேசம் கொண்டுள்ள விசித்திரமான உறவு, இலங்கை அரசுடனும் தொடர்கின்றது. தொன்னூறுகளில் புகலிடத்தில் குர்திஸ்தான் பாராளுமன்றம் அமைப்பதற்கு நெதர்லாந்து இடம்கொடுத்தது. அதற்காக துருக்கியின் எதிர்ப்பையும் சம்பாதித்தது. அதே நேரம் ஜெர்மனி துருக்கியின் அரச படைகளுக்கு பயிற்சி கொடுப்பது முதல், குர்த்தியருக்கு எதிரான போருக்கு நேட்டோ ஆயுதங்கள் வழங்குவது வரை, மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதம் என்றென்றும் கிடைத்து வந்தது. இன்னொரு பக்கத்தில் இதே நாடுகள், துருக்கி மனித உரிமைகளை மீறி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றன. அவ்வப்போது துருக்கி அரசின் போர்க்கால குற்றங்களை விசாரிப்பது என்ற நகைச்சுவை நாடகம் ஐரோப்பிய யூனியனால் அரங்கேற்றப்படும். அந்த தருணங்களில் எல்லாம், மேற்குலக எதிர்ப்பு கோஷம் போடும் படி துருக்கியும் தனது மக்களை தூண்டி விடும். பின்னர் திரைமறைவில் இராஜதந்திர உறவுகள் மறுசீரமைக்கப்படும்.
இலங்கையின் விஷயத்திலும், மேற்குலக நாடுகள் அதே போன்ற அணுகுமுறையைத் தான் பின்பற்றுகின்றன. போர்க்கால குற்றங்களுக்காக இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த துடிக்கும் அதே பிரிட்டிஷ் அரசு,இறுதிப் போருக்கு ஆயுதங்களை வழங்கி வந்துள்ள விஷயம் அம்பலமாகியுள்ளது. ஐ.நா. சபையில் மனித உரிமை மீறல்களை விசாரிப்பது சம்பந்தமாக இலங்கை அரசுக்கு எதிராக வாக்களித்த ஐரோப்பிய நாடுகளும் இரட்டை வேஷம் போடுவதில் கில்லாடிகள் தான். பிரிட்டன், பிரான்ஸ், செக் குடியரசு, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து…. இப்படி தமிழின அழிப்பு போருக்கு ஆயுதம் வழங்கிய மேற்குலக நாடுகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது.
இருப்பினும் மேலைத்தேய நகரங்களில் மாதக்கணக்காக மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்திய, புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர் கூட, இந்த நாடுகளுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசவில்லை. பிரிட்டிஷ் அரசு தமது வரிப்பணத்தில் உற்பத்தி செய்த ஆயுதங்களை, வன்னியில் இருக்கும் தமிழ் சகோதரர்களை கொல்வதற்கு கொடுத்த போதும், இதுவரை யாருக்கும் அது பற்றிய பிரக்ஞை எழவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு விஷயத்தில் மட்டும், குர்தியரின் ஆர்ப்பாட்டங்கள் மாறுபட்டு நிற்கின்றன. பி.கே.கே. தலைவர் ஒச்சலான் கைது செய்யப்பட்ட அந்தக் கணமே, மேலைத்தேய நகரங்களில் ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான குர்த்தியர்கள் வெகுண்டெழுந்தனர். அன்று அந்த மக்கள் அனைவரதும் கோபாவேசம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு எதிராக திரும்பியிருந்தது. மேற்குலகின் இரட்டை வேஷத்தை ஆக்ரோஷத்துடன் அம்பலப்படுத்தினார்கள்.
நன்றி:
அ.மயூரன், லண்டன்,
வீரகேசரி வாரமலர்
(07.06.09) ஞயிறு.
3 விமர்சனங்கள்:
"துருக்கியில் தொடரும் “ஈழப் போர்” கட்டுரையை நான் தான் எழுதினேன். எனது வலைப்பூவில் ஏற்கனவே (7.6.09) பதிவிடப்பட்டது. அதற்கான சுட்டி இதோ: http://kalaiy.blogspot.com/2009/06/blog-post_07.html
இக்கட்டுரையை புதினம் இணையத்தளத்திலிருந்து பெறமுடிந்தது. அதன் இணைப்பை இத்துடன் இணைத்துவிடுகிறேன்.
http://www.puthinamnews.com/?p=2962
ஆமாம், நானும் பார்த்தேன். புதினம் நியூசில் மட்டுமல்ல, வேறு பல தளங்களிலும் எனது அனுமதியில்லாமல் தங்கள் பெயரில் மறுபிரசுரம் செய்திருக்கிறார்கள்.
புதினம் நியூஸ் http://www.puthinamnews.com/?p=2962&cpage=1#comment-285
பாரிஸ் தமிழ் http://www.paristamil.com/tamilnews/?p=14899
சுத்துமாத்துகள்
http://suthumaathukal.blogspot.com/2009/06/blog-post_132.html
இன்னும் எத்தனையோ?
Post a Comment