தமிழ் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். அவர்கள் தமது இருப்புக்காக உங்களை பயன்படுத்துகின்றார்கள். அவர்களுக்கு போரின் வலி தெரியாது. உயிரின் பெறுமதி தெரியாது.
நான்காம் கட்ட ஈழப் போல் தப்பிப்பிழைத்தவர்ளில் நானும் ஒருவன். 30 வருட தனி ஈழ போராட்ட வரலாற்றில் 25 வருடங்கள் வன்னியில் நான் இருந்தேன். கடைசியாக நான் அனுபவித்து வந்த
கொடுமையை சொல்ல முடியாது. முள்ளிவாய்க்காலில் என்ன கொடூரமான காட்சிகள் இறந்த எம் உறவுகளின் உடல்கள், உடற் பாகங்கள் எல்லாமே மனிதாபிமான இராணுவ நடவடிக்கை என்று அரசாங்கம் கூறியது. எது மனிதம் என்று இறுதிவரை எமக்கு விளங்கவில்லை.
சிங்கள ஆட்சியாளர்களை விடுங்கள். தமிழ் அரசியல்வாதிகள் எமக்கு என்ன செய்தார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு கிடைப்பது விருப்பம் இல்லை.
கடந்த காலங்களில் வன்னியில் எமது உறவுகள் பெரும் எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கையில் இவர்கள் என்ன செய்தார்கள்?
இவர்கள் தான் கடந்து வந்த அழிவுகளின் சூத்திரதாகள். இவர்களின் அரசியல் தவறுகள் தான் இந்த நிலைமைக்கு காரணம். இவர்களில் பலர் தமது மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளை என எல்லோரும் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் எல்லா வசதி வாய்ப்புகளையும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
தமிழ் அரசியல்வாதிகளில் சிலர் பல்வேறு குற்றச் செயல்களைச் செய்து கொண்டு தனித் தனி குழுக்களாக இயங்கிக் கொண்டு பின்னர் நாங்கள் தான் தமிழ் மக்களின் பிரதிநிதி எனக் கூறிக் கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள். இவர்களை நம்பி எம் மக்கள் ஏமாந்து விட்டார்கள். இனியும் ஏமாறப் போறார்கள்.
ஆரம்ப காலங்களில் அரசியல் தலைவர்கள் விட்ட தவறுகள் காரணமாகத் தான் ஆயுதப் போராளிகள் உருவாகினார்கள். அவர்களின் போராட்டத்தின் நிலைப்பாடு ஒரு பக்கம் இருக்கட்டும் , அது தனியே ஆராயப்பட வேண்டியவை.
தமிழ் அரசியல்வாதிகள் என்றவுடன் தமிழக முதல்வரும் நினைவுக்கு வருகின்றார். அவர் தனது அரசியல் நலன்களுக்காக எமது உறவுகளின் உயிர்களை பயன்படுத்தினார்.
ஏன் தான் இந்த வயதான கலைஞன் வக்கிர உணர்வோ தெரியவில்லை. தமிழகத்தில் உணர்வாளர்கள் உள்ளார்கள். அவர்களை மதிக்கின்றோம். ஆனால் எமது உயிரினை வைத்து அரசியல் பேரம் பேசியவர்களை மன்னிக்க முடியாது. தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும் எதையும் எளிதில் மறந்து விட மாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் போரின்ன் வடுக்கள் உள்ளன.
நாங்கள் எதை கேட்டோம்? எங்களை வாழ விடுங்கள் என்று தானே.
அதற்காக ஏன் இவ்வளவு உயிர் இழப்பு? அடிப்படையில் தமிழ் கல்விமான்கள், தமிழ் மாணவர்கள்,
தமிழ் உயர் நிலை கல்விக்கூடங்களில் உள்ளவர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் மிகவும் நிதானமாக செயற்படுங்கள். இல்லையேல் மீண்டும் இதை விட பெரும் அழிவு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும். எமது உரிமையை உரிய முறையில் சொல்லுங்கள்.
தமிழ் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். அவர்கள் தமது இருப்புக்காக உங்களை
பயன்படுத்துகின்றார்கள். அவர்களுக்கு போரின் வலி தெரியாது. உயிரின் பெறுமதி தெரியாது. அளவிட முடியாத அறிவு பொக்கிசங்களை கடந்த போரில் இழந்துவிட்டோம். இனியும் இழக்காமல் தடுப்போம்.
இனிவரும் தேர்தலில் தமிழ் மக்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். குறிப்பாக, வட மாகாணத்தில் உள்ளவர்கள் அரசாங்கம் சாந்தப்படுத்துகின்றது. அதற்கான வேலைத் திட்டங்களை செய்து வருகின்றது. அதுவும் தமிழ் அரசியல்வாதிகள் ஊடாக. ஆனால் எமதுஉறவுகளின் உயிரினை திரும்ப தர முடியுமா? எல்லாமே போலியை ஏற்படுத்துகின்ற உறுதி மொழிகள்.
தமிழ் அரசியல்வாதிகள் அரசியலுக்கு சரி வர மாட்டார்கள். அவர்கள் சிறு சிறு குழுக்களாக இயங்கிக் கொண்டு அதனை வழி நடத்தத்தான் முடியும். தமிழ் மக்களை வழி நடத்த முடியாது என்பதே உண்மை. மக்களின் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாதவர்கள் எப்படி உரிமையை தருவார்கள் அல்லது கேட்பார்கள்? தமிழ் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்று அதன் முலம் கிடைக்கும் சுக போகங்களை அனுபவிக்க மட்டும் தான் முடியும் இவர்களால்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தான் இனிவரும் காலங்களில் நடைறைக்கு சாத்தியமான அரசியலை நகர்த்தி செல்ல வேண்டும். இப்பொழுது அவர்களிடம் தான் இந்த பொறுப்பு உள்ளது. அவர்கள் தான் சர்வதேசத்துடன் எமது உரிமைக்கு வலுவான குரல் கொடுக்க உரியவர்கள்.
உள்நாட்டில் குரல் கொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே இதனை சரிவர எடுத்துச் செல்ல வேண்டி பொறுப்பு புலம் பெயர்ந்த தமிழர்களிடமே உள்ளது.
இங்கு உள்ள தமிழ் மக்கள் ஒன்றையும் மறக்க மாட்டார்கள் என்பதனை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் உரிய முறையில் எமது உரிமையை கேளுங்கள். தொடர்ந்து கேளுங்கள் கட்டாயம் மாற்றம் வரும், எல்லாமே மாறும்.
ம.சரவணன்
0 விமர்சனங்கள்:
Post a Comment