விடுதலைப் புலிகளின் தலைவர்களை இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேற்ற அமெரிக்க முயற்சித்துள்ளது
தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை இரகசியமான முறையில் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை முதற்பக்க செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் புலித் தலைவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்கும் முனைப்புக்களில் அமெரிக்கா தீவிரம் காட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலம்பெயர் தமிழர்கள், தென் ஆபிரிக்கா மற்றும் சில தென் கிழக்காசிய நாடுகளின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா இந்த முனைப்புக்களை மேற்கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
எனினும், இலங்கை அரசாங்கம் மிக நுட்பமான ராஜதந்திர அணுகுமுறை ஒன்றைப் பின்பற்றி இந்த முயற்சிகளை முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவின் ஆலோசனையின்றி இவ்வாறு புலித் தலைவர்களை மீட்பதற்கு அனுமதிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிற்கு இரகசியமாக அறிவித்துள்ளதாக குறித்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலித்தலைவர்களை மீட்கும் நோக்கில் ஹாவாயிலிருந்து விமானமெர்று கொழும்பிற்கு வந்ததாகவும், சில கப்பல்களை அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்ட காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளை தாக்கி அழிப்பதற்கு மேலதிக கால அவகாசம் தேவைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவரை பாதுகாப்பதற்கு புலிகளின் கப்பல் ஒன்றை பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
எனினும் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என குறித்த செய்தி தெரிவிக்கின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment