'பிரபாகரனைக் கொன்றவன் நான்" - சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா அமெரிக்காவின் நோக்கத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கின்றார்.மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவும், கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராகவும் சாட்சியங்களைப் பெறுவதற்கு சரத் பொன்சேகா சரியான ஆள் என்று கணக்குப் போட்ட அமெரிக்கா, அவரிடமிருந்து சாட்சியத்தைப் பெற முயற்சித்தது. அவர் அமெரிக்காவிற்கு கடந்த மாதம் சென்றிருந்தபோது அவரிடம் சாட்சியத்தைப் பதிவுசெய்ய முயன்றது.
அவர் சாட்சியமளிக்காமலே அவசரம் அவசரமாக நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட்டார். ஒரு ஓய்வுபெற்ற ராணுவத் தளபதியாக மட்டும் இருந்துகொண்டு மகிந்த மீதான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதைவிட அவரது அரசியல் எதிரியாக- ஒரு அரசியல்வாதியாக இருந்துகொண்டு குற்றம்சுமத்துவது நல்லது என்று கணக்குப்போட்ட அமெரிக்கா, அவரை அரசியல்வாதியாக மாற்றியது.
இன்று அவர் மகிந்த மீது விடுக்கும் குற்றச்சாட்டுக்கள் ஒரு எதிர்தரப்பு அரசியல்வாதியாக இருந்துகொண்டு தொடுக்கும் அரசியல் குற்றச்சாட்டுக்களாகிவிடுகின்றன. யார் இந்த சரத் பொன்சேகா? சரத் பொன்சேகா பற்றியும், அவரது தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் குறித்தும் தெரியாத தமிழர்கள் இருக்கமுடியாது. யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு செம்மணி மயானப்பகுதியில் புதைக்கப்பட்ட வரலாற்றை தமிழ் மக்கள் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள்.
அறுநூறுக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை செம்மணியில் புதைத்த பெருமைக்குரிய சிங்கள படையதிகாரி வேறுயாருமல்ல, சாட்சாத் இந்த சரத் பொன்சேகாவேதான். அந்த ஒருயொரு தகுதிதான் அவரை இராணுவத்தளபதியாக மாற்றியது. புலிகளுக்கு எதிரான யுத்தம் தீவிரமடையும்போது அப்பாவி தமிழ் மக்களும் பலியாகவேண்டிவரும் என்பது அனைத்து தரப்பினருக்கும் புரிந்திருந்தது.
அவ்வாறு அப்பாவி தமிழ்மக்கள் பலியாகின்றபோது, யுத்தத்தை விழிநடத்துகின்ற தளபதி, யுத்தத்தை தொடர்வதற்கு தயக்கம்காட்டலாம். ஆனால் சரத் பொன்சேகா தளபதியாக இருந்தால், அப்பாவிகள் பலியாவது கண்டு அவர் சஞ்சலமடையப்போவதில்லை. இதனை நன்கு தெரிந்து வைத்திருந்ததால்தான் அவரை தளபதி ஆக்கினார் கோத்தபாய.
யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா தமிழ்மக்களை கொன்றுகுவித்த காலங்களில் சாதாரண மேஜர் தர அதிகாரியாக வடமராட்சியில் பணியாற்றிய கோத்தபாய, சரத் பொன்சேகா பற்றி தெரிந்து வைத்திருந்ததால் அவரை தளபதியாக்கினார்.
கடந்த ஜுலை மாதம் பத்தாம் திகதி யுத்த வெற்றிக்காக சரத் பொன்சேகாவுக்கு அம்பலாங்கொடையில் பாராட்டுவிழா நடாத்தப்பட்டது. அங்கு உரையாற்றிய அப்போதைய ராணுவத்தளபதி சரத் பொன்சேகா பின்வருமாறு கூறினார். நான் படை வீரர் என்ற வகையில் அவ்வப்போது தேவையான உத்தரவுகளை பிறப்பித்து யுத்தத்தை வெற்றிகொண்டேன்.
படை வீரர்களிடம் சரணடைய வரும் எவரையும் ஒன்றும் செய்ய வேண்டாம் என எனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. குளிர் அறையிலிருந்து சொல்பவர்களின் உத்தரவை நான் ஏற்கவில்லை என்றார். அதாவது, புலிகளின் முக்கிய தலைவர்களான நடேசன், புலித்தேவன் உட்பட்ட சில தலைவர்கள் தாம் சரணடைய விரும்புவதை நோர்வே ஊடாக பசில் ராஜபக்சவிற்கு தெரிவித்தனர். அவர்களை வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு வந்து படையினரிடம் சரணடையுமாறு பசில் கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு அவர்கள் சரணடைந்தபோது படையினர் அவர்களை சுட்டுக்கொன்றதாக அப்போது புலிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.அதாவது, குளிர் அறையிலிருந்து பசில் விடுத்த உத்தரவை சரத் பொன்சேகா ஏற்கவில்லை. அவர் தனது படைத் தளபதிக்கு அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தவிட்டிருந்தார்.
இதே சரத் பொன்சேகா கடந்த ஞாயிறன்று வெளியான ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் பாதுகாப்பு செயலர் கோத்ததபாயவின் உத்தரவின்பேரில் சவேந்தர் சில்வா என்ற அதிகாரியே புலித் தலைவர்களை சுட்டுக்கொன்றதாக கூறியிருக்கிறார்.
ராணுவத்தளபதியாக இருந்தபோது தானே சுட்டுக்கொன்றதாக கூறிய அவர், இப்போது அரசியல்வாதியாக மாறியபின்னர் இவ்வாறு கூறுவது ஏன்? ஒன்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக. மற்றயது அமெரிக்காவிற்கு வழங்கும் சாட்சியமாக..... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்த முனைகின்றார் சரத்.
யுத்தம் கடைசிக் கட்டத்தில் இருந்த மே 16ம் திகதியில் சரத் பொன்சேகா சீனாவில் இருந்தார். எனவே கடைசிக்கட்ட யுத்தத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று சிலர் அவர் மீது குற்றச்சாட்டை சுமத்தியபோது, அவர் தெளிவாக்க கூறினார்.நான் சீனாவுக்கு அப்போது போயிருக்காவிட்டாhல் நாட்டிற்கு பாரிய நட்டம் ஏற்பட்டிருக்கும். ஆனால் நான் சீனாவில் இருந்தபோதும் யுத்தத்தை நானே அங்கிருந்தவாறு வழிநடத்திக்கொண்டிருந்தேன்.
ஆக, நடேசன் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், சரத் பொன்சேகாதான் தனது படையினருக்கு உத்தரவுகளை விடுத்துக்கொண்டிருந்தார். தான் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பதற்காக கூட்டியிருந்த பத்திரிகையாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா மிகத் தெளிவாக ஒரு விடயத்தை கூறினார்.
2008ம் ஆண்டு மாவீரர் தின வைபவங்களின்போது நான் கூறினேன். அடுத்த மாவீரர் தின வைபவத்தில் கலந்துகொள்ள பிரபாகரன் இருக்கமாட்டார் என்று கூறியிருந்தேன். நான் கூறியவாறு 2009ம் ஆண்டு மாவீரர் தினத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பிரபாகரனைக் கொன்றுவிட்டேன். இது தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் வெளியிட்ட தகவல்.
ஆக, புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொன்றவர், நடேசன் போன்ற முக்கிய தலைவர்களை கொன்றவர் சரத் nhபன்சேகா.இன்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் என்னதான் கூறினாலும், தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல
- ஈழப்பிரியன்
Thenee web
0 விமர்சனங்கள்:
Post a Comment