எஸ்.எம்.எஸ் திருமூர்த்திகள் ரி.என்.ஏ.யில் ஏகபோகம்: எம்.பி. தங்கேஸ்வரி
எஸ்.எம்.எஸ் [Sampanthar Mavai-senathirajah, Suresh-premachandran] திருமூர்த்திகள் ரி.என்.ஏ.யில் (Tamil National Alliance) ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி குற்றச்சாட்டியுள்ளார். யாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நான் விரும்பவில்லை. எதிர்காலத்தில் முகம் கொடுக்க வேண்டிய ஆபத்துகளில் தமிழ் மக்களின் பாதுகாப்பரனாக இருக்க கூடியது ஒரே அரசியல் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புதான். ஆகவே, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டுமென கூட்டமைப்பின் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தங்கேஸ்வரி தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பல கருத்துக்கள் நிலவிய போதிலும் இதுவரை இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.
இம்மாதம் 9ம் திகதி நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் 22 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் 7 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர். ஐந்து பேர் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர்.
ஏனைய ஐந்து பேர் பொறுத்திருப்போம் என்று கூறிய பொழுது, ஈ. பி. ஆர். எல். எப். அமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆட்சி மாற்றத்துக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார்.
கலந்து கொண்ட 17 பேரில் 2 பேர் பிரதான வேட்பாளர்கள் இருவரில் எவரையும் ஆதரிக்க முடியாது என்ற கருத்தை முன் வைத்தனர். அவர்களில் ஒரு சிலர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் இலங்கையில் உள்ள தொலைக்காட்சியில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி தெரிவித்திருந்தமை அனைத்து அரசியல் நோக்கர்களின் அவதானத்தை அதிகம் பெற்றுக்கொண்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment