Saturday, December 19, 2009
புலம்பெயர்ந்து வாழும் எம்மினிய தமிழ் உறவுகளே!.......
எம்மினம் இழந்தவைகளே ஏராளம்! தாயக விடுதலைக்காக எமது இனம்
இதுவரை சிந்திய கண்ணீரிலும் குருதியிலும் குளிர் நாட்டில் இருந்து கொண்டு குளிர் காய்ந்த சுயநலன்கள் இனியும் இங்கு வேண்டாம் என்று உலகெங்கும் வாழும் எம் உறவுகளின் செவிகளில் நாம் உரத்து சொல்வோம்!
எம்மின மக்கள் வன்னிப்பெருநிலத்தில் செத்து மடிந்து கொண்டிருந்த அந்த
இறுதி நாட்களில் உலகம் எங்களை திரும்பி பார்க்கவில்லை.
ஏன்?... இந்தியா கூட ஏன் என்று கேட்கவில்லை. காரணம் எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்து சென்ற எங்கள் தலைமை
உள்ளூரில் மட்டுமன்றி உலகமெங்கும் பகைவர்களை தேடிக்கொண்டது.
பக்கத்து நாடு இந்தியா!... ஏன் இப்படி பாராமுகம் காட்டியது?.
நாம் இந்திய வல்லாதிக்க அரசை பகைத்து கொண்டது மட்டுமன்றி
எங்கள் தமிழ் நாட்டு உறவுகளையும் வேண்டப்படாத பரப்புரைகளால்
பகைத்துக்கொண்டோம்.
ஆனாலும், எம்மினம் செத்து மடியும் போது எமது உயிர்காக்கும் நோக்கில்
தமிழ் நாட்டு திரையுலகமே திரண்டெழுந்தது. எம் மீதான கடந்த கால
கசப்புணர்வுகளையும் மறந்து, விருப்புணர்வோடு எங்கள் தோள்களுக்கு வலிமைகொடுத்தது தமிழ் நாட்டு திரையுலகம்.
ஆனாலும் நடக்க கூடாதது இங்கு நடந்து முடிந்து விட்டது. எம்மினமும்
எம் இனத்தின் விடுதலைக்காக போராடி ஆகுதி ஆகிவிட்ட மாவீர வித்துக்களும்வெறுமனே இழந்து போன இழப்புக்கள் அல்ல!
இந்த இழப்புக்களில் இருந்து எஞ்சியுள்ள எமது இன மக்களுக்கு
எமது தாயக நிலத்தில் ஒரு சுயாட்சி அலகொன்றை பெற்றுக்கொள்வதற்காக புலம் பெயர்ந்து வாழும் எம்மின உறவுகள் யாவரும் ஒருமைப்பாட்டுடன் எழ வேண்டிய தருணம் இது.
அதற்காக நாம் இந்தியா முதற்கொண்டு உலக நாடுகள் வரை
எங்கள் வலிய கரங்களை நீட்டி உதவி கேட்க வேண்டிய காலம் இது!
இந்நிலையில், இந்தியாவையோ, அன்றி தமிழகத்திரையுலக சமூகத்தையோ, அன்றி உலக நாடுகளையோ நாம் தொடர்ந்தும் வலிந்து கட்டி பகமைக்கு இழுக்கும் அளவிற்கு நாம் வலிமை படைத்தவர்கள் அல்ல. விவேகம் அற்றவர்களும் அல்ல.
எங்கள் வலிமைகள் யாவும் எங்கள் தீராத யுத்த மோகத்தினாலும், அயலவர்கள், உலகத்தவர்கள் என்று பாராத பகமை உணர்வாலும் இழக்கப்பட்டு விட்டது.
எம் இன உறவுகளே சிந்தியுங்கள்!...
தமிழக திரைப்படங்கள் சிலவற்றை புலம்பெயர் நாடுகளில் தடை செய்ய வேண்டும் என்றும், அவற்றை நிராகரிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கின்றது.
இளையோர் அமைப்பு என்ற பேரில் விடப்பட்டிருக்கும் இந்த எச்சரிக்கை அறிக்கையானது எம் இனத்தின் மத்தியில் இழிவு தரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எமது மாவீர வித்துக்களையும், எமது இனத்தையும் காப்போம் என்று தெருவில் இறங்கி நின்று புலம் பெயர் நாட்டு காவல்துறையினரோடு வன்முறையில் ஈடுபட்ட இளையோர்கள்
தங்களது வன்முறைகளாலும்தான் எமது உயிர்களை காப்பாற்றும் பேரெழுச்சி´போராட்டங்கள் தோல்வியில் முடிந்தன என்பதை எண்ணிப்பார்க்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
நடந்த தவறுகள் ஏன் என்று தாமாக சிந்திப்பதற்கு முன்னர் மீண்டும்
ஒரு மோசடித்தவறை புரிவதற்கு இந்த இளையேர் அமைப்பு தயாராகி வருகின்றது.
தமிழக திரை நட்சத்திரங்கள் எந்த கட்சியிலும் எந்த நேரத்திலும் இணையலாம். இது அவர்களது உள்நாட்டு அரசியல் சுதந்திரம். அதை தடுப்பதற்கு நாம் யார்?..
நடிகர் விஐய் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் என்ன?.. பாரதீய ஐனதாவில் இணைந்தால் என்ன?... ஈழத்தமிழர்களாகிய எம்மினத்தவர்களே காலத்திற்கு காலம் கட்சி தாவியும், பதவி தேடி ஓடியும் தங்களது இருப்புக்காக அலையும் போது ஈழத்தமிழர்களுக்காக தமிழக திரை நட்சத்திரங்கள் தங்களது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைப்பது நியாயம்தானா?...
வேட்டைக்காரனை நிராகரித்து விடுவதால் சகலராலும் வேட்டையாடப்பட்ட எம் இனத்திற்கு விடிவு கிட்டுமா என்று இந்த இளையோர்கள் ஆதாரமாக சொல்வார்களா?.. இல்லையே…
இது சும்மா ஒரு புஸ்வாணம்!... இன்று கோவணத்துண்டுடனாவது நடுத்தெருவில் நிற்கும் எம் இனத்தை நிர்வாணமாக்கும் நீசச்செயல் இது என்று எம் உறவுகள் அனவருக்கும் இளைய சக்தியாக நாம் எழுந்து நின்று சொல்கின்றோம்.
நாங்களும் சிறு பிள்ளைகள்தான். ஆனாலும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று அடுத்தவர்கள் இழித்துரைக்க நாம் எதையும் ஆற்றிவிடப்போவதில்லை. எம் முன்னோர்கள் பெற்ற அனுபவங்களால் நாம் வலிமை பெற்று எம் இனத்தை பாதுகாக்க எழுவோம்!...
தமிழக திரையுலகம் முதற்கொண்டு தமிழக உறவுகள் வரைக்கும் எங்கள் கரங்களை நீட்டி நாங்கள் நேச சக்திகள் என்பதை அடையாளப்படுத்துவோம்! தமிழக உறவுகளை
பகைக்கும் விவேகமற்ற காரியங்களை வேண்டாம் என்று ஒதுக்குவோம்!
தமிழக உறவுகளுக்கும் எம் ஈழத்தமிழ் உறவுகளுக்கும் இடையில்
வேற்றுமை வளர்த்து ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதற்காக
புலம்பெயர் நாட்டு சட்ட திட்டங்களுக்கு மாறாக
செயற்படும் தீயவர்களை சட்டத்தின் முன்னால் நிறத்த தயங்க மாட்டோம்!
சொந்த நாடு சென்றுவர அச்சம்! வசந்த கால விடுமுறைக்கு தமிழகமே ஒரு வரப்பிரசாதம்! அதையும் கெடுத்து ஒட்டாண்டிகளாக நாம்
இங்கே மட்டும் முடங்கிக்கிடப்பதா?..
வாருங்கள் எல்லோரும் வேட்டைக்காரனையும் பார்ப்போம்!...
தமிழக உறவுகளுக்கு
நேசக்கரம் நீட்டும்
புலம்பெயர்ந்து வாழும் இளைய சக்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 விமர்சனங்கள்:
Post a Comment