தேர்தலைப் புறக்கணித்தல் என்னும் மந்திரச்சொல்
தேர்தலைப் புறக்கணித்தல் என்னும் மந்திரச்சொல் பொருத்தமானதா?
ஈழத் தமிழர் அரசியலில் தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு மந்திரக் கோல் போல பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
புறக்கணிப்பு, சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், சட்டமறுப்பு, கதவடைப்பு போன்ற போராட்ட முறைகள் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் இருந்து பெறப்பட்ட அம்சங்களாகும்.
சிறிய அளவிலான அந்நிய வெள்ளையின ஆட்சியாளருக்கு எதிராக, பிரமாண்டமான இந்திய மக்களின் இப்போராட்ட வழிமுறைகள் பல வெற்றியளித்தன.
ஆனால் 72 வீத சனத்தொகையைக் கொண்ட சிங்கள இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், சிறிய இனங்களின் போராட்டங்கள் தமது யதார்த்த சூழலுக்கு பொருந்த வேண்டியவையாய் அமைய வேண்டியது அவசியம்.
இந்த வகையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் சில போராட்ட வழிமுறைகள் சில வேளைகளில் பொருந்தக் கூடியனவாய் அமையலாம்; சில பொருந்த முடியாதவையாகவும் அமையலாம்.
தேர்தல் புறக்கணிப்பு எனும் போராட்ட முறையை ஈழத்தமிழ்த் தலைவர்கள் இந்தியப் போராட்ட வடிவங்களில் இருந்தே பெற்றுக் கொண்டனர்.
உன்னதமாகத் தோன்றும் சில விடயங்கள் நடைமுறையில் பயனற்றவையாயும், பாதகமானவையாயும் போய்விடலாம்.
எனவே உன்னதமான தோற்றத்தை விடவும், நடைமுறைக்குப் பயனளிக்கத்தக்க ஒன்றே சரியானதாகும்.
அதாவது உன்னதங்கள் எல்லாம் சரியானவை ஆகிவிடாது.
நடைமுறைக்குப் பயனுள்ளதையும், பொருத்தமானதையுமே தெரிவாக்கிக் கொள்ள வேண்டும்.
முதன்முறையாக, இலங்கையில் “தேர்தல் புறக்கணிப்பு” எனும் கொள்கையை 1931 ஆம் ஆண்டு யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் யாழ்குடாவில் கடைப்பிடித்தது.
இலங்கைக்கு “பூரண சுயாட்சி” தர டொனமூர் அரசியல் யாப்பு தவறிவிட்டதெனக் கூறி டொனமூர் யாப்பின் கீழான முதலாவது தேர்தலை மேற்படி யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் புறக்கணித்தது.
இடதுசாரித் தலைவர்கள் உட்பட பல முன்னோடிச் சிங்களத் தலைவர்கள் இப்புறக்கணிப்பைப் பாராட்டி வரவேற்றனர்.
ஆனால் அவ்வாறு பாராட்டிய சிங்களத் தலைவர்கள் தெற்கில் புறக்கணிப்பை மேற்கொள்ளாது விட்டதுடன், தாமே தேர்தலில் பங்கெடுத்து வெற்றியும் பெற்றனர்.
தேர்தல் புறக்கணிப்பு முதலில் வெற்றிகரமாக நிறைவேறியது.
ஆனால், பின்பு அது எவ்வித பயனுமின்றி இரண்டாண்டுகளின் பின் படுதோல்வி அடைந்து,
1934 ஆம் ஆண்டு குடாநாட்டுக்கான நான்கு தொகுதிகளிலும் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
இத்தோல்வியில் இருந்து எத்தகைய பாடங்களையும் பிற்காலத் தமிழ்த் தலைவர்கள் கற்றுக் கொண்டதாய் இல்லை.
ஒரு வகை தூய்மை வாதமாய் புறக்கணிப்பைத் தமிழ்த் தலைவர்கள் உச்சரிப்பது தெரிகின்றது.
அதிதூய்மைவாதி நடைமுறையில் சாத்தானின் சேவகன் ஆகிவிடுவான்.
தமிழர்களிடம் தேர்தல் புறக்கணிப்பு எனும் வரண்ட தூய்மைவாத கோட்பாடு இருப்பதை சிங்களத் தலைவர்கள் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
எனவே காலத்திற்கு ஏற்ப, தமது தேவைக்கு ஏற்ப இதனைப் பயன்படுத்துவதில் சிங்களத் தலைவர்கள் மிகவும் புத்திசாதுரியம் வாய்ந்தவர்கள்.
1982 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அப்போது அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கத்திடம் கோரினார்.
அரசறிவியல் பேராசிரியரும், தந்தை செல்வாவின் மருமகனுமான ஏ.ஜே.வில்சனின் துணையுடன் ஜே.ஆர் இம்முயற்சியை மேற்கொண்டார்.
ஏ.ஜே.வில்சன் எழுதிய Break - up of Srilanka என்ற நூலில் இந்தப் பேர நாடகம் பற்றிய விபரங்கள் உள்ளன.
அன்றைய காலச் சூழலில் ஜே.ஆர்.இன் அரசியல், இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான சிந்தனையைத் தமிழ் மக்கள் பரந்தளவு கொண்டிருந்தனர்.
தமிழ் மக்கள் அந்த அதிபர் தேர்தலில் கலந்து கொண்டால் திட்டவட்டமாக ஜே.ஆர்.க்கு எதிராகவே வாக்களித்திருப்பர் என்பது நிச்சயம்.
எனவே வாக்களிப்பைப் புறக்கணிப்பதன் மூலம் தனது வெற்றிக்கு வகை செய்யுமாறு அமிர்தலிங்கத்திடம் ஜே.ஆர். கோரினார்.
இதற்காக சில அரசியல் சலுகைகள் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் பின்பு ஜே.ஆர். ஏமாற்றிவிட்டார் என்று ஏ.ஜே.வில்சன் தனது நூலில் தொடர்ந்து கூறியுள்ளார்.
இந்த நூலில் பாவ மன்னிப்பு ஒப்புவிக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
ஜே.ஆரிடம் தாம் ஏமாந்து விட்டதாக இலங்கைக்கான இந்திய முன்னாள் தூதுவர் ஜே.என்.டிக்சிட் தனது பிரபலமான Assignment Colombo எனும் நூலில் ஓர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதாவது - “நான் பாவி, நான் மிகப் பெரும் பாவி” [ Culpa, mea culpa ] எனும் கத்தோலிக்க பாவ மன்னிப்பு பதத்தை இதற்காக அதில் அவர் பயன்படுத்தி எழுதியுள்ளார்.
அதாவது சிங்களத் தலைவர்களின் ஏமாற்றும் திறனை விளங்க இது போதுமானதொரு உதாரணமாகும்.
தமிழ்த் தலைவர்கள் காலத்திற்கு காலம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான புறக்கணிப்பு, அதிபர் தேர்தலுக்கான புறக்கணிப்பு என பல புறக்கணிப்புகளை மேற்கொள்வது வழக்கம்.
1982 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலும், 2005ஆம் ஆண்டு அதிபர் தேர்தலும் இந்த வகையில் புறக்கணிக்கப்பட்ட முக்கிய அதிபர் தேர்தல்களாகும்.
2005 ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் ராஜபக்ச முதல் சுற்றில் அதிபரானார்.
பிரித்தானியாவில் ஐரிஷ் விடுதலை இராணுவம் தமது தேவைக்கு பொருத்தமாக தேர்தலை எதிர்கொண்டு தமது தலைமைத்துவத்தையும், தமது நியாயத்தையும், தமக்கான அங்கிகாரத்தையும் நிலைநிறுத்திக் கொண்டது.
எனவே தேர்தலைப் புறக்கணிப்பது என்பது ஒரு மந்திரச் சொல்லாக இருக்க வேண்டியதில்லை.
சிங்கள யாப்பின் கீழ் அரச அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதாயின், சிங்கள யாப்பின் கீழான நாடாளுமன்றத் தேர்தலையும் கூடவே புறக்கணிக்க வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு போக நேரும்.
ஆனால், நடைமுறையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம்.
ஆதலால் பொருத்தமற்ற கோட்பாட்டு வகைப்படுத்தும் முடிவுகளுக்குப் போய்விடக்கூடாது.
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டு 22 ஆசனங்களை கைப்பற்றியதன் மூலம், தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தையும் அதற்கான போராட்டத்தையும் முதன்மைப்படுத்த முடிந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பாக போட்டியிட முடியாத ஒர் இக்கட்டு ஏற்பட்ட போது, சுயேட்சைக் குழுவில் நின்று போட்டியிட வேண்டிய அவலம் தோன்றியது.
அப்படிப் போட்டியிட்டால் மாகாண, தேசிய மட்டத்தில் கட்சிகளுக்கு கிடைக்கக் கூடிய ஆசனங்களை அது இழக்க நேரும்.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியில் நின்று போட்டியிடுவதற்கான ஒரு சமரச முடிவை அப்போது எடுத்ததன் மூலம், பல ஆசனங்களைக் கூடுதலாகப் பெறக்கூடியதாக இருந்தது.
நிலைமைக்கு பொருத்தமான நெகிழ்வும், முன்னேற்றத்திற்குப் பொருத்தமான நடைமுறையும் எப்போதும் அவசியமானவை என்பதை இது நிரூபித்துள்ளது.
காணப்படுவதில் இருந்து தான் நாம் எதனையும் படைக்க முடியும்.
காணப்படுவனவற்றை எமக்கு சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம் என ஆராய வேண்டியது அவசியம்.
எதிரிகளுக்கு இடையேயான முரண்பாடுகளைக் கையாளும் வித்தையைத் தான் நாம் ‘மெருகான இராஜதந்திரம்’ என்று கூறுகிறோம்.
எதிரிகளுக்கு இடையேயான முரண்பாடுகளைக் கையாள்வதும், எமக்கு சாதகமான தீர்மானங்களையே எடுக்கும் சூழலுக்குள் எதிரியைத் தள்ளி, அரசியல் நிர்பந்தத்தை எதிரிக்கு ஏற்படுத்துவதுமே சிறந்த இராஜதந்திர மார்க்கங்கள் ஆகும்.
எதிரியை எவன் ஒருவன் தனது திட்டங்களுக்கு அமைவாகச் செயற்பட வைக்கின்றானோ, அவனே சிறந்த இராஜதந்திரி ஆவான்.
இந்தத் தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் எதிரியை எமது திட்டங்களுக்குள் உட்படுத்த முடியுமாயின் அவ்வாறு சிந்திப்பதில் தவறேதுமில்லை.
சிறிய இனம் தனது பலமாக அதிகம் சூழ்ச்சித்திறனை பாவிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.
- புதினப்பார்வை, டிசம்பர் 11, 2009
0 விமர்சனங்கள்:
Post a Comment