ஆந்திராவிலிருந்து பிரியப்போகும் தெலுங்கானா பற்றிய வரலாற்று உண்மை
தெலுங்கானா மாநிலம் இப்போது திடீரென்று உருவாகவில்லை. எப்போதுமே இருந்திருக்கிறது. சென்னை மாகாணத்தில் இருந்து 1953ல் பிரிக்கப்பட்ட ஆந்திரா 1956ல் தெலுங்கானாவுடன் சேர்ந்தது. அதன் மூலம் ஆந்திர பிரதேசம் என்ற பெயரை பெற்றது. அதில் வடக்கே பரவியுள்ள தெலுங்கானா மேடான வறண்ட பூமி. ஆனால் ஆந்திரா வளம் மிகுந்த சமவெளி. நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி என்பதால் தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகம். சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களை ஒட்டி இருப்பதால் இந்தி, மராத்தி கலப்பும் கணிசமானது. எனவே சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த ஆந்திர மக்களுக்கு அந்த மொழியை புரிந்து கொள்வதே சிரமம். ஆடை முதல் சாப்பாடு வரை எல்லாமே வேறு மாதிரி.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான், இரு பகுதிகளையும் இணைத்தால் சரிப்படாது என்று மொழிவாரி மாநில சீரமைப்பு குழு கருத்து சொன்னது. மத்திய அரசு அதை அப்போது ஏற்கவில்லை. ஆந்திரா & தெலுங்கானாவை ஒன்றாக்கியது. அன்று தொடங்கியது தெலுங்கானா போராட்டம். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வேறு திசையில் திரும்பி நின்று கொள்வது இக்கட்சிகளின் வாடிக்கையானது. இதனால் தெலுங்கானா மக்களுக்கு வெறுப்பு அதிகரித்தது. போராட்டம் தீவிரமானது. இதுவரை 400 உயிர்கள் பலியாகி உள்ளன. இதற்கு மேலும் வேடிக்கை பார்க்க முடியாது என்ற நிலையில் மத்திய அரசு சரியான முடிவை எடுத்திருக்கிறது. தவறை திருத்தும் நடவடிக்கை இது.
ஐதராபாத் நகரம் தெலுங்கானாவுக்கு கிடைப்பதால் குடி மூழ்கி விடாது. ஆந்திரா பிரிந்தபோது கர்நூல் தலைநகர். அப்புறம் முக்கிய நகராக விளங்கியது விஜயவாடா. ஐதராபாத் வளர்ச்சி சமீபகால சரித்திரம். அதை விட அழகான ஒரு தலைநகரை அனைத்து வசதிகளுடன் திட்டமிட்டு உருவாக்க ஆந்திராவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அல்லது கடலோர பெருநகரமான விசாகப்பட்டினத்தை சென்னைக்கு சவால் விடும் வகையில் மேம்படுத்தலாம். ஜார்கண்ட், உத்தர்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வராத நிலையில் தெலுங்கானாவை மட்டும் மற்ற பகுதி மக்கள் ஆட்சேபிப்பது குறுகிய பார்வையை காட்டுகிறது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உகந்தது அல்ல இந்த அணுகுமுறை என அரசியல் அவதானிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
93 எம்எல்ஏக்கள் ராஜினாமா
தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி வேறுபாடு இன்றி, 93 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திராவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் கடந்த 30ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து தெலுங்கானா பகுதியில் கலவரம் ஏற்பட்டது. ராவின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்தது, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா , ராணுவ அமைச்சர் அந்தோணி, அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகியோர் பங்கேற்ற உயர்நிலை குழு கூடி, தெலுங்கானா மாநிலம் அமைக்க முடிவு செய்தது.
‘
தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் ரோசய்யாவுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தெரிவித்தார்.இதையடுத்து, உண்ணாவிரதத்தை ராவ் முடித்தார். தெலுங்கானா பகுதி மக்கள், மாணவர்கள, டி.ஆர்.எஸ்.கட்சி தொண்டர்கள் நேற்று அதிகாலை முதலே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் பற்றி ஆந்திராவை சேர்ந்த எம்.பி.க்களின் கருத்தை கேட்காமல் முடிவு எடுத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. லகடாபாடி ராஜகோபால் நேற்று ராஜினாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து ராயலசீமா, கடலோர ஆந்திரா, வடக்கு ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்குதேசம், பிரஜா ராஜ்யம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்துள்ளவர்களில் 53 பேர் காங்கிரஸ். தெலுங்கு தேசம் 29, பிரஜா ராஜ்யம்11. மொத்தம் 93 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர், இதனால், ஆந்திர அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், ‘தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு இரவோடு இரவாக ஒப்புதல் அளித்தது தவறு. ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா, வடக்கு ஆந்திரா என் 4 மாநிலமாக ஆந்திராவை பிரிக்க வேண்டும். இல்லையேல், ஆந்திரா ஒரே மாநிலமாக இருக்கவேண்டும். இதை வலியுறுத்தி, கட்சிபாகுபாடு இன்றி ராஜினாமா செய்கிறோம்’ என்றனர். இதனிடையே தெலுங்கானா தவிர மற்ற பகுதிகளில் தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் தொடங்கியுள்ளது. தெலுங்கானா பகுதியில் கொண்டாட்டமும். மற்ற பகுதிகளில் எதிர்ப்பும் வலுப்பெற்றுள்ளது.
Tamilalai
0 விமர்சனங்கள்:
Post a Comment