பன்றிக் காய்ச்சல் ஒன்றும் புதியதல்ல : 1918ஆம் ஆண்டிலிருந்தே தொற்றுவது!
இது ஒன்றும் புதிதல்ல! இருந்தும், இன்றும் தொடர்கிறது.
நாளுக்கு நாள் திணற வைக்கும் பொருளாதாரச் சுமை, அரசியல் குளறுபடிகள், வெப்பநிலை மாற்றம்.... இவை எல்லாவற்றையும் சமாளிக்க நாகரிகம் எனும் போர்வை. இவற்றுள் சிக்கித் தவிக்கும் மனித வாழ்க்கை..... இதற்கிடையில் இந்த நோய்த் தொற்று வேறு.
இன்று உலகளாவிய ரீதியில் மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது பன்றிக் காய்ச்சல். இது பன்றிகளின் சுவாசத் தொகுதியுடன் சம்பந்தப்பட்ட ஒரு வகை நோய். இக்காய்ச்சல் ஏஎச்1என்1 எனும் ஒரு வகை வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. சாதாரண வைரஸ் காய்ச்சல் போன்றே மனிதரின் சுவாசத் தொகுதியில் தொற்றை ஏற்படுத்தி, நிமோனியாவைத் தோற்றுவித்து
மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது.
இதனைச் சர்வதேச ரீதியில் பரவும் ஒரு தொற்று நோயாக உலக சுகாதார ஸ்தாபனம் ஜூன் 11ஆம் திகதி பிரகடனப்படுத்தியது.
சாதாரண காய்ச்சலுக்குக் கொடுக்கப்படும் தடுப்பு மருந்துகளால் இந்த வைரஸ் கிருமியை அழிக்க முடியாது. இவ்வைரஸ் கிருமிகள் அதன் உடலமைப்பை அடிக்கடி மாற்றுகின்றன். எனவேதான் அடிக்கடி மருந்துகளையும் மாற்ற வேண்டியுள்ளது. குறித்த தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்துவதில் சிரமமிருப்பதாகக் கூறி உலக சுகாதார ஸ்தாபனமும் கையை விரித்துவிட்டது.
இதனால் பன்றிக் காய்ச்சல் உலகளாவிய ரீதியில் மிகத் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.இன்றல்ல, நேற்றல்ல காலம் காலமாக பரவி வரும் இந்த ஸ்பானிய ஏஎச்1என்1 வைரஸ் காய்ச்சல் 1918 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் பரவ ஆரம்பித்தது. 50 முதல் 100 மில்லியன் வரை அந்நாளில் பேர் மரணமடைந்தனர்.
ஆசியாவில் 1957ஆம் ஆண்டு பரவிய பன்றிக் காய்ச்சலால் 45 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு 70,000 பேர் மரணமடைந்தனர். உலகளாவிய ரீதியில் 2 மில்லியன் மக்கள் மரணமடைந்தனர்.
ஹொங்கொங்கில் 1968 – 1969களில் ஏற்பட்ட பன்றிக் காய்ச்சலால் 50 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு 33,000 பேர் மரணமடைந்தனர். உலகளாவிய ரீதியில் ஒரு மில்லியன் பேர் மரணமடைந்தனர்.
மெக்சிகோ நகரில் இந்த ஆண்டு வைகாசி மாதம் இனங்காணப்பட்ட இக்காய்ச்சல் ஆசிய நாடுகளிலிருந்து சென்ற பயணிகள் மூலம் தொற்றியுள்ளது. இக்காய்ச்சல் காற்று மூலம் பரவுவதால் மிக இலகுவில் தொற்றிக் கொள்கிறது. ஒருவருக்குத் தொற்று ஏற்பட்ட 24 மணித்தியாலங்களில் நோயின் அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் தொடர்ச்சியாக 7 நாட்கள் நீடிக்கும்.
இலங்கையைப் பொறுத்த வரை, அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு சிறுவன் மூலமே நோய்த் தொற்று பரவ ஆரம்பித்தது. மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென்று தொற்றுநோய் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் இக்காய்ச்சல் தொற்றிய நோயாளர்களின் எண்ணிக்கை
ஒருமாத காலத்தில் 50 இற்கு மேல் அதிகரித்திருந்தது.இந்தியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த விமானப் பயணிகள் சிலர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டமை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் அறிய முடிந்தது.
பன்றிக்காய்ச்சல் எனும் இன்புளுவென்ஸா ஏஎச்1 என்1 நோய் காரணமாக இலங்கையின் பல பாடசாலைகள் உடனடியாக மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியவர்களான 5 வயதுக்குட்பட்ட சிறார்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா, நீரிழிவு, உடற் பருமன், இருதய, நுரையீரல் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை பெறுவோர், எயிட்ஸ் நோயாளர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள், போஷாக்குக் குறைபாடு உள்ளவர்கள், நீண்ட
காலமாக அஸ்பிரின் மருந்து பாவிக்கும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், வேறு நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவோர் போன்றோருக்கே இந்நோய் இலகுவில் தொற்றிக் கொள்கிறது.
காய்ச்சல், இருமல், தும்மல், மூக்கிலிருந்து தொடர்ச்சியாக சளி வழிதல், தலைவலி, நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் கஷ்டம், வாந்தி, தொண்டை அழற்சி, தொண்டை வலி, வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவை இந்நோயின் பொதுவான அறிகுறிகள். இவற்றுக்குத் தனியாக உடனடி சிகிச்சை பெறத் தேவையில்லை. இவை தானாகவே சில நாட்களில் அகன்றுவிடும்.
மாறாக, இந்த அறிகுறிகள் நீடித்தால் உதடுகள் மற்றும் தோல் நீல நிறமாக மாறுதல், நீரிழப்பு, விரைவான மூச்சு, அதிக நித்திரை, குமட்டல், வாந்தி, வயிற்றோட்டம், கண் வீக்கம் போன்ற அறிகுறிகள சிறுவர்களிடம் தென்படும்.
வயது வந்தோரிடம், மூச்சு விட சிரமம், நெஞ்சு வலி, வயிற்று வலி, மூட்டு வலி, உடல் வலி, திடீர் தலைசுற்றல், களைப்பு, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும்.
வயோதிபரிடம் காய்ச்சல், கடும் குளிர், குழப்பம் போன்ற அறிகுறிகள் தென்படும். மேற்குறிப்பிட்ட நோய்களையுடையோரும் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளையுடையோரும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும். அசட்டையாக இருந்தால் முற்றிய நிலையில் சுவாசத் தொகுதியில் நோய் மற்றும் நிமோனியா ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும்
அபாயம் உண்டு.
சாதாரண காய்ச்சல், தும்மல், இருமல் மூலம் பரவும். ஆனால் இவ்வைரஸ் கிருமி இருமும் போதும் தும்மும் போதும் சிறுதுளிகளில் கலந்து வெளிவந்து 6 அடி தூரம் வரை பயணம் செய்து கீழே விழும். இவை விழுந்த இடங்கள் மற்றும் பொருட்களைத் தொட்டுவிட்டு வாய், மூக்கு, கண் போன்றவற்றைத் தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும். இவை 48 மணித்தியாலத்தில் தொற்றை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தவை. மலம் மூலமும் தொற்று ஏற்படும்.
நோயாளியை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி தனி அறையில் வைக்க வேண்டும். அந்த அறைக்குள் போவோர் முகக் கவசம் அணிந்து கொண்டு போக வேண்டும். நோயாளிகள் அடிக்கடி சவர்க்காரம் கொண்டு சுடுநீரில் கைகளை நன்கு கழுவ வேணடும். துவாயினால் கைகளைத் துடைக்கக் கூடாது. மெல்லிய துணியைப் பாவிப்பது நல்லது.
இருமும் போதும் தும்மும் போதும் காகிதக் கைக்குட்டைகளை ஒருமுறை மட்டும் பாவித்து விட்டு உடனே அவற்றை அழித்துவிட வேண்டும். நோயாளியின் பக்கத்தில் இருப்போரும் மேற்கூறியவாறு அடிக்கடி கைகழுவ வேண்டும். கைகளைக் கழுவாமல் வாய், கண், மூக்கைத் தொடக்கூடாது.
நோயாளியின் பக்கத்தில் மிக நெருக்கமாகப் போகக் கூடாது. அவர்களைத் தொடக்கூடாது. தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
பன்றிக் காய்ச்சல் குறித்து என்ன தான் வேதனைப்பட்டாலும்., மாறி வரும் மனித வாழ்க்கையில் இதுவொன்றும் புதிதல்ல. பன்றிக் காய்ச்சல் போன்ற கொடிய நோய்கள் உலகுக்குப் புதியவையுமல்ல! எனினும் இவற்றிலிருந்து விலகி அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் இருப்பதே வேண்டற்பாலது.
-என்.ஜே.ஜீவராஜ்
0 விமர்சனங்கள்:
Post a Comment