யுத்தகாலத்தில் பொதுமக்களின் உயிர் இழப்புகளையிட்டு மனம் வருந்துகிறேன் யாழ்ப்பாணத்தில் ஜெனரல் பொன்சேகா
யுத்த காலத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் உயிரிழந்திருப்பதையிட்டு மிகவும் மனம் வருந்துவதாகத் தெரிவித்த எதிரணியின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகா, இராணுவ அதிகாரி என்ற ரீதியிலேயே தனது கடமையை மேற்கொண்டதாகக் கூறியதுடன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி சகல இன மக்களும் சமவுரிமையுடன் வாழ்வதை உறுதிப்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா வீரசிங்கம் மண்டபத்தில் குழுமியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது பல உறுதிமொழிகளை அளித்திருக்கிறார். பலாலியை சர்வதேச விமான நிலையமாக மாற்றுதல், பருத்தித்துறை துறைமுகத்தை சகல வசதிகளுடன் கூடிய துறைமுகமாக மாற்றுதல், குடா நாட்டின் உள்சார் கட்டமைப்பை சீரமைத்தல், அதி உயர் பாதுகாப்பு வலயத்தை படிப்படியாக நீக்கியும் அவசர காலச்சட்டத்தை உடனடியாக அகற்றியும் இயல்பு நிலையை ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக நம்பிக்கையூட்டும் விதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களுக்கான உடனடி ஏற்பாடுகள் சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்தல். இராணுவ மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி கிராம சேவகர் அலுவலகம் முதல் சகல அலுவலகங்களிலும் சிவில் நிர்வாகத்தை முழுமையாக ஏற்படுத்துதல். ஒவ்வொரு மாவட்ட செயலாளர் தலைமையிலும் (அரச அதிபர்) பின்வருவோர் அடங்கிய குழுவொன்றை நியமித்தல்.
ஜனாதிபதியின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள், இதர பிரதிநிதிகள் (குறித்த அலுவலகங்களின் பிரதிநிதிகள்), பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அவர்களது பிரதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் , நிதிச் சேவை உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் படையினர்/ கட்டளையிடும் அதிகாரிகள் வடக்கு, கிழக்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் செயற்றிட்டம் ஒன்றைத் தயாரித்தல், ஒரு மாதகாலத்திற்குள் முன்னேற்றம் பற்றிய மாதாந்த அறிக்கையை ஜனாதிபதிக்கும் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பித்தல்.
தேசிய பாதுகாப்பு மற்றும் உயர் பாதுகாப்பு வலயம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கேந்திர இடங்களில் மாத்திரம் பாதுகாப்புப் படையினரை நிலை நிறுத்தல், ஏனைய இடங்களிலிருந்து படிப்படியாக அவர்களைக் குறைத்தல்.
பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி சகலரும் சுதந்திரமாக நடமாடுவதற்கான உத்தரவாதத்தை வழங்கல்.
இயன்றளவில் தமிழ் மொழியில் புலமை மிகுந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் அமர்த்தல்.
சகல துறை இராணுவப் படையினர் மற்றும் ஆயுதக் குழுக்களை உடனடியாக தடை செய்தல்.
சிவில் நடவடிக்கைகள் இடம்பெறும் பிரதேசங்களில் ஆயுதமற்ற சூழல் கடைப்பிடிக்கப்படும்.
வெடி பொருட்கள், ஆயுதங்கள், பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்புப் படையினர் பொலிஸாரைத் தவிர்ந்த அனுமதிப்பத்திரம் வைத்திருப்போருக்கு மாத்திரமே ஆயுதங்களை வைத்திருக்க அனுமதித்தல்.
உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றலும் புனர்வாழ்வு அளித்தலும்.
கண்ணடிவெடி அகற்றும் பிரிவின் ஊடாக கண்ணிவெடிகளைத் துரிதமாக அகற்றுதல்.
இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அவ்வாறு அவர்களின் வீடுகள் சேதமடைந்திருப்பின் அவற்றுக்குப் பதிலாக மாற்று தங்குமிட வசதிகள் வழங்கப்படும். அத்தோடு அவர்கள் சுயமாக வீடுகள் கட்டிக் கொள்வதற்கும் உரிய உதவிகள் வழங்கப்படும்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், போக்குவரத்து போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் போன்றன உடனடியாகச் செய்து கொடுக்கப்படும்.
காணி மற்றும் விவசாயம்
தற்பொழுது பாதுகாப்புப் படையினர்/ பொலிஸார், அரசாங்க முகவர்கள், ஆகியோர் நிலைகொண்டுள்ள தனியார் காணி மற்றும் கட்டிடங்கள் அவற்றின் சட்ட ரீதியான உரிமையாளர்களுக்கு உடன் கையளிக்கப்படும்.
குறிப்பிட்ட குழு அவ்வாறான மீள் கையளிப்புகளை மேற்கொள்ளும்.
பாதுகாப்புப் படையினர்/ பொலிஸார்/ அரசாங்க முகவர்களுக்கு தனியார் காணிகள், தேவைப்படும் பட்சத்தில் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் சந்தைப் பெறுமதி வழங்கி அவை பெறப்படும்.
சேதமடைந்த கட்டிடங்கள் அனைத்திற்கும் நஷ்டஈடு வழங்கும் வகையில் செயற்றிட்டமொன்றைக் குழு சமர்ப்பிக்கும்.
காணிகளில் விவசாயம் செய்யும் வகையில் விவசாயம் நிவாரணப் பொதியொன்று மேற்கொள்ளப்படும்.
காணி உரிமை தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு விசேட சட்டமொன்று மேற்கொள்ளப்படும்.
கடற்றொழில்
முழுமையான கடற்றொழில் உரிமை வழங்கப்படும்.
பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான மீன் பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களது பிரதிநிதிகள் மற்றும் கடற்படையினர் உள்ளடங்கிய கூட்டுக்குழுவொன்று ஏற்படுத்தப்படும்.
வியாபாரமும் வர்த்தகமும்
பயணிகள் போக்குவரத்துப் பொருட்கள், விவசாயிகள் மற்றும் கடற்றொழில் உற்பத்திகள் தொடர்பான சகல தடைகளும் உடனடியாக அகற்றப்படும்.
எவரும் எந்தவித கொடுப்பனவும் (கப்பம்) அறவிட அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வாறானவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து
யாழ்.குடாநாட்டுக்கான புகையிரத சேவை எதுவித தாமதமுமின்றி ஆரம்பிக்கப்படும். ஆனையிறவிலிருந்து பருத்தித்துறை வரை ரயில் சேவை விஸ்தரிக்கப்படும்.
கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்துக்கான சீரான வசதிகள் மற்றும் குறைந்த செலவுகளை உள்ளடக்கியதாக இருப்பதுடன் கப்பல், விமான போக்குவரத்துக்கான சகல தடைகளும் நீக்கப்படும்.
தனியார் துறையினரின் பங்களிப்புடன் பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்குப் புதிய புகையிரதப் பாதையொன்று அமைக்கப்படும்.
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை புதிய ரயில் பாதை விஸ்தரிக்கப்படும்.
விசேட நிவாரணப் பொதி
யுத்தத்தால் உயிரிழந்த இராணுவ, பொலிஸ் மற்றும் பொதுமகளை நம்பி வாழ்ந்த சகலருக்கும் விசேட நிவாரணப் பொதி வழங்கப்படும்.
யுத்தத்தால் அங்கவீனமுற்ற சகலருக்கும் நிவாரணப் பொதி வழங்கப்படும்.
அவசரகால நிலைமை
அவசரகால நிலைமையும் அதன் ஒழுங்குகளும் உடன் நீக்கப்படும். போதிய சாட்சியங்கள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள சகலரும் ஒரு மாதகாலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள். அதனடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, அவர்களது எதிர்காலத்திற்குப் பாதகமாக அமையாது.
யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்படும்.
ஜனாதிபதி செயலணியை நியமிப்பது உட்பட மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை வசப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தியிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை யாழ்.குடாநாட்டில் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு சென்று நேற்றுக்காலை வழிபட்ட பொன்சேகா பின்னர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தினார். பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஜெனரல் பொன்சேகாவுடன் ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி.தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், ஐ.தே.க.எம்.பி.க்கள் ஜயலத் ஜயவர்தன, ரவிகருணாநாயக்கா, ஜே.வி.பி.எம்.பி.க்கள் அநுரகுமார திசாநாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட எதிர்கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment