வல்வெட்டித்துறையில் நாளை வேலுப்பிள்ளையின் தகனக் கிரியைகள்
பனாகொடை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை, மரணமடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் தகனக் கிரியைகள் நாளை வல்வெட்டித்துறையில் நடைபெறவிருக்கின்றன.
அன்னாருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது மனைவி பார்வதி வேலுப்பிள்ளையும் நேற்று விடுதலை செய்யப்பட்டார். திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலுடன் இவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.
காலஞ்சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் தொடர்பாக மரண விசாரனை நடைபெற வேண்டும் எனத் தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மரண விசாரனை நடைபெற்றதாகவும்,
பிரேதப் பரிசோதனை நடைபெற்று, சட்ட வைத்திய அறிக்கையின்படி இயற்கை மரணம் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அன்னாரின் பூதவுடல் கொழும்பில் நல்லடக்கம் செய்யப்படவிருந்த போதிலும், தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு அதனைப் பொறுப்பேற்று வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
"அன்னாரின் மனைவி பார்வதி வேலுப்பிள்ளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார். டென்மார்க், கனடா மற்றும் இந்தியாவிலுள்ள பிள்ளைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள வரவில்லை.அரசாங்கம் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தாலும் அவர்கள் அதனை நிராகரித்து விட்டனர்" என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் உட்பட 3 பிரமுகர்கள இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக் நேற்று நள்ளிரவு கொழும்பு வந்தடைந்து, இன்று தங்களுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்
0 விமர்சனங்கள்:
Post a Comment