சிறைக்குள் சிக்கித் தவிக்கும் அரசியல் கைதிகள்
நாள்கள், மாதங்கள், ஆண்டுகளாக அல்லாது தமது முழு வாழ்நாள்களையே சிறைகளில் கழிக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக மனிதாபிமான நடவடிக்கையொன்று அவசியமாகிறது என்று சாரப்பட அமைகிறது இக்கட்டுரை. சுரேக்கா சமரசேன என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை, டிசெம்பர் 27 ஆம் திகதிய "ராவய" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. அதன் தமிழ் வடிவமே இது.
2009 ஆம் ஆண்டின் மே 19 ஆம் திகதியென்பது இந்நாட்டில் நிலவிய யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட தினமாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையென்பது பயங்கரவாதம் வேருடன் களைந்தெறியப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பௌத்திரமானதொரு பூமி என்பதாகவும், இன்று இந்நாட்டில் பயங்கரவாதமென்ற அச்சுறுத்தல் நிலை இல்லையென்பதால் நாட்டின் பிரஜையொருவருக்குப் பயமின்றியும் "மகிழ்ச்சியுடனும்" "சுதந்திரமாகவும்" வாழ்க்கையைக் கொண்டுசெல்ல முடியுமென்பதாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்தோடு, சிங்களவர், தமிழரென்ற வேறுபாடற்று நாட்டின் அனைத்து மக்களும் ஒரு குடும்பமாக ஒத்து வாழவேண்டியுள்ளனர் என்பதும் புரியவைக்கப்பட்டது.
அதையடுத்து இந்த "ஆச்சரிய கருமத்தை" நிகழ்த்தி முடித்த "உண்மையான வீரர் யார்?" என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது தொடர்பான பிரச்சினை மட்டுமே எஞ்சியிருந்தது. வெகுவிரைவில் அந்த வினாவுக்கும் "தீர்ப்பொன்று" கிட்டக்கூடும். அது, ஜனவரி 26 ஆம் திகதியன்று நடத்தவிருக்கும் மக்கள் தீர்ப்புக்கு அமையவேயாகும். இதுவே, யுத்தத்தில் வெற்றியீட்டிக்கொண்ட தரப்பு வெற்றியை ஜீரணித்துக் கொண்டுள்ள விதமாகும்.
யுத்தத்தில் தோல்வியடைந்த தரப்பின் தலைமைத்துவம் நந்திக்கடல் என அழைக்கப்படும் குடாக்கடல் அல்லது கலப்புக்கடலில் உயிரிழந்து வீழும்போது, அன்றைய அளவிலும் அவர்களது போராட்டத்தைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு வெற்றிபெறும் தரப்புடன் இணைந்து கொண்டிருந்த கருணா அம்மான்கள், பிள்ளையான்கள் போன்றோர் அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும் உபசரிப்புகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர். இறுதிப் போருக்கு முன்னரான தினத்தில் இறுதிச் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரண டைந்த ஜோர்ஜ் மற்றும் தயா மாஸ்ரர்க ளும் கூடத் தொடர்ந்தும் புலிகளாக அல்லாது, செல்லப் பூனைக்குட்டிகளாக உருமாற்றம் பெற்றனர்.
திஸநாயகம்
இதற்கிடையில்,வான் பரப்பிலிருந்து விழும் குண்டுகளுக்கு இரையாகி நிராயுததாரிகளான வடபுலத்தின் அப்பாவிக் குடிமக்கள் மாண்டு போகின்றனர் என்றும், அவ்விதம் யுத்த மோதல்களுக்கு மத்தியில் சிக்குண்டு காயப்படும் குடிமக்களுக்கு மருந்து வகைகள் கிட்டுவதில்லையெனவும் குறிப்பிடும் இரு கருத்துகளை எழுதிய ஊடகவியலாளரான ஜே.எஸ்.திஸநாயகம் விடுதலைப்புலி உறுப்பினரென முத்திரை குத்தப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்பொன்றிலும் கூட, குற்றவாளியாக்கப்பட்டு, கடூழியச் சிறைவாசம் என்றவாறு இருபதாண்டுகால சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
திஸநாயகத்துக்கு எதிராக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஒருசிலர் எழுதுவதற்கு, கருத்து வெளிப்படுத்துவதற்கு மற்றும் வீதிப் போராட்டங்களில் இறங்க ஆரம்பித்தமைக்குக் காரணம், அவர் அரசியல் கைதி யொருவர் என்பதும் அவரை விடுவிப்பது தொடர்பாகப் போராட்டங் களை நடத்த வேண்டியுள்ளது என்பதையும் முன்னிலைப்படுத்திக் கொண்ட காரணத்தி னாலேயே யாகும். ஆனாலும், அப்போராட் டங்களும் கூடப் படிப்படியாகச் சூடு ஆறிப் போய் குளிர்ந்து வருவது தெரிகிறது.
"சந்தேக" நபர்கள்
அது எவ்வாறான போதிலும், திஸநாயகத்துக்காகப் போராடி நிற்பதற்கு ஒருசிலராவது முன்வரும்போது, தமக்காகப் போராடி நிற்பதற்கு குரல் எழுப்புவதற்கு, எவருமேயில்லாது, விசாரிக்கப்படும் வழக்கு ஒன்றோ, வழக்குகளுக்கான அறிகுறியொன்றோ கூடத் தென்படாத, குற்றச்சாட்டு எதுதானும் தாக்கல் செய்யப்படாதுள்ள, அரசினது/ இராணுவத்தினது அல்லது இரகசியப் பொலிஸாரின் சந்தேகத்துக்குப் பாத்திரமாகியுள்ளதால் மட்டுமே சிறைக்கூடங்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோராக ஏறத்தாழ ஆயிரத்துத் தொழாயிரம் பேர் வரையில் சந்தேக நபர்கள் என்ற முத்திரையின் கீழ் இன்றைய அளவில் வெலிக்கடை, யாழ்ப்பாணம், அநுராதபுரம், மட்டக்களப்பு, பூஸா மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
உள்நாட்டு, வெளிநாட்டுச் சட்ட நிபுணர்களுக்கு அமைய "காட்டுத் தர்பார் சட்டம்" என்பதாகக் குறிப்பிடப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நியமங்கள் மற்றும் "அவசரகாலச்சட் டத்தின்" கீழ் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்வதையும் விடுத்து, வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மற்றும் அந்தளவில் மட்டும் "புலிகளேயென" முத்திரை குத்தப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட சிறைக்கைதிகளுக்கு சிறைக்கூடங்களினுள்ளே ஏனைய சிறைக்கைதிகளுக்குச் சமமாகக் கிட்டும் கவனிப்புகள் கிட்டாததோடு, பலதரப்பட்ட துன்புறுத்தல்களுக்கும் அவர்கள் உள்ளாக நேர்வதும் இரகசியமொன்றல்ல.
சிறைச்சாலைகளின் உள்ளே...
மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் சிறைச்சாலைகளின் உள்ளே "புலிகள்" என அடையாளப்படுத்தப்படுவதோடு, சிறைச்சாலைகளின் உள்ளே சாதாரணமாக இடம்பெறும் வாய்த்தர்க்கங்கள் நீண்டு செல்லும்போது, புலிகள் மீது பகையுணர்வு கொண்டிருக்கும் "நாட்டுப்பற்று மிக்க" சிறைக்கைதிகளின் கடும் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர். அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் கூட, அத்தகையதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளதோடு, அச்சிறைச்சாலையின் "எல்" பிரிவில் இருந்த விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் அதை அண்டியிருந்த பிரிவுகளில் இருந்த சந்தேக நபர்களின் தாக்குதலுக்கு உள்ளானமை, வெளிவராது மூழ்குண்டு போனதொரு விடயமாகும்.
இந்த விடுதலைப்புலிச் சந்தேக நபர்களுக்கு அவர்களைக் கண்டு செல்லவரும் பார்வையாளர்களின் வருகை வரையறுக்கப்படுவதோடு, அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தொடர்ச்சியான ஆதங்கமாகியிருப்பது அவர்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்களோ, விபத்துகளோ அன்றியும் அவர்களை விடுவித்துக் கொள்வதற்கான கோரிக்கை வேண்டுதல்களோ அல்ல, அவர்களைச் சந்தித்து உரையாடுவதற்கு வாய்ப்பேற்படுத்தித் தருமாறு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் முன்னால் யாசித்து இரைஞ்சி நிற்க வேண்டியிருப்பதேயாகும்.
சட்டத்தின் புகலிடம்
முதற்கட்ட நடவடிக்கையாக நீதிவான் நீதிமன்றில் நிறுத்தப்படும் இச் சந்தேகநபர்கள் சம்பந்தமான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படு வதோடு, சட்டமா அதிபரின் கவனத்துக்கு உள்ளாகாத அந்த ஆவணங்கள், சட்டமா அதிபர் திணைக்களத்தில் குவிந்துள்ளன. அடுத்த கட்ட நடவடிக்கையாக அவர்கள் சிறைச்சாலையின் உள்ளே செயற்படும் விசேட நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்படு வதோடு அங்கு நிகழும் ஒரே நிகழ்வு, அவர்கள் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு அடுத்த தவணையொன்று வழங்கப்பட்டு, எந்தவொரு விசாரணைக்கும் உள்ளாக்கப்படாது காலத்தை இழுத்தடித்துச் செல்லப்படுவதாகும்.
அதுபோன்றே, உலகில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நீதிமன்ற சம்பிரதாய மரபுகள் கூட மீறப்படும் அந்த மன்றங்களில் சந்தேக நபர்கள் இரு கரங்கள் பிணைக்கப்பட்ட கைவிலங்குகளுடனேயே விசாரணைக் கூண்டினுள் நிறுத்தப்படுகின்றனர். அதுபோன்றே, அவர்களுக்கு சட்டத்தரணியொருவரின் அனுசரணையுடன் பகிரங்க நீதிமன்றத்தின் முன்னிலையில் எந்தவொரு கருத்தைத்தானும் வெளிப்படுத்துவதற்கு அவகாசம் அற்றுப்போவதும் கூட புதுமையான நீதிமன்றச் சம்பிரதாயமாகும். எவ்வாறானபோதிலும், "பகிரங்க நீதிமன்றம்" என்ற அடிப்படைக் கோட்பாட் டுக்காக முரண்பட்டதான இவ்விதமான நீதிமன்றங்களை அடையாளப்படுத்து வதற்கு சிறைக் கைதிகளின் இரண்டாந்தரக் கலாசாரப் பாஷையில் உருப்பெற்றுள்ள நாமம் "பாதாள நீதிமன்றம்" என்பதாகும்.
நியாயமற்றது
விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டப் பிரிவில் தலைமைத்துவம் வகித்த கருணா அம்மான் "குற்றமற்ற வராவது" சட்டத்தின் முன்னிலையில் அல்லவெனில், அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமை கிட்டியதால் அது அவ்வாறாகியிருக்கக் கூடும் எனக் கருதவேண்டியுள்ளது. பிள்ளையானுக்கும் கூட அது அவ்வாறே பொருந்தும். அதாவது, அவர் "குற்றமற்றவ"ராவது கிழக்கு மாகாணத்தை வென்றெடுத்து வழங்கியதே காரணமாகியிருக்க வேண்டியுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த மற்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து இனங்காணப்பட்டுள்ள விடுதலைப்புலிப் போராளிகள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு உதவி, ஒத்தாசைகளை வழங்கியுள்ளோரெனக் கருதப்படுவோர் போன்ற தரப்பினரைத் திறந்தவெளிப் புனர்வாழ்வு முகாம்களுக்கு உள்ளீர்த்துக் கொள்ளும் கருமத்தின் போது, "விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் சட்டப்படியல்லாத" அதாவது, "புறம்பான தண்டனைகளுக்கு" உள்ளாவதானது உண்மையில் "அநீதியொன்று" அல்லவெனில் வேறு எதுவாக இருக்கமுடியும்?
பொதுமன்னிப்பு
உலகளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்ட பலதரப்பட்ட கெரில்லாப் போராட்டங்களின் இறுதியில் மற்றும் கிளர்ச்சிகள் அடக்கப்பட்டதன் இறுதியில் "குற்ற விசாரணைச் சபைகள்" கூட்டப்பட்டு, சம்பவங்கள் விசாரிக்கப் பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் வழங்கப்படும் மற்றும் ஏனையோருக்குப் "பொதுமன்னிப்பு"(Amnesty) போன்ற சர்வதேசத்தின் (ஐ.நா.சபையும் கூட உள்ளடங்கிய) அங்கீகரிக்கப்பட்ட முறைமைகள் நிலவுகையில் இலங்கை யானது தனது சிவில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளபோதிலும் அத்தகைய முயற்சியைக்கூட இன்னமும் மேற்கொண்டிருக்கவில்லை.
1971 இல் ஜே.வி.பி. கிளர்ச்சி அடக்கப்பட்டதன் பின்னர், விரைந்து கூட்டப்பெற்ற குற்றவியல் நீதி விசாரணை ஆணைக்குழு மற்றும் ஆபிரிக்கா சிவில் யுத்தத்தின் முடிவில் உண்மை விளம்பல் ஆணைக்குழு (Truth Commission) போன்ற குற்ற விசாரணைச் சபைகள் கூட்டப்படுவது வழமை. எவ்வாறான போதிலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் உயர்மட்டத் தவைர்களுள் உயிருடன் பிடிக்கப்பட்ட ஒரே தலைவரான கே.பி. கூட இன்னமும் நீதிமன்றமொன்றின் முன்னிலையில் கொண்டுவரப்படாதுள்ளதொரு "சட்டப்படியல்லாத" நிலைப்பாடுகளின் மத்தியில், ஒரு விதத்தில் அத்தகைய "விசாரணைச் சபைகள்" அல்லது "பொதுமன்னிப்பொன்று" பெறுவது தொடர்பாகக் குரலெழுப்புவதே முக்கியத்துவம் பெறாதிருக்கக்கூடும்.
இருந்தபோதிலும், நாள்கள், மாதங்கள், ஆண்டுகளாக அல்லாது தமது வாழ்நாள் முழுவதும் வெறும் "சந்தேகம்" என்பதால் மட்டுமே தண்டனைகளை அனுபவிக்கும் சந்தேக நபர்கள் தொடர்பாக தேசிய மட்டத்தில் ஏதோ விதத்திலான தீர்வொன்று எட்டப்பட வேண்டியுள்ளது. அவ்வாறில்லாதபோது அரசு, கருணாவுக்கு, பிள்ளையானுக்கு மற்றும் திஸநாயகம் விடயத்தில் நடந்து கொள்ளும் இருவிதப் போக்குத் தொடர் பாக முரண்பாடொன்று தலைதூக்கு வதைத் தடுத்துநிறுத்த இயலாது. திஸநாயகம் சம்பந்தமாக அல்ல, மேலும் ஆயிரத்துத் தொழாயிரம் வரையி லான பயங்கரவாதத்தின் போர்வையில் சட்டத்தின் இரும்புப் பிடிக்குள் அகப்படுத்தி விடப்பட்டுள்ள தரப்பினருக்கு நியாயம் கிட்டும் விதத்தில் அரசு ஏதோ விதத்திலான மனிதாபிமான நடவடிக்கையொன்றை மேற்கொள்ளாதிருப்பது ஏன்? *
தமிழில் : சரா
Uthayan
0 விமர்சனங்கள்:
Post a Comment