சரத்பொன்சேகாவை ஆதரித்து த.தே.கூ பேச்சு [படங்கள் இணைப்பு]
தமிழ்மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் நேற்று திங்கள் மாலை வவுனியா வெளிவட்ட வீதியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது குறிப்பிட்டார்.
நாம் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்த விடயம் அறிவிக்கப்பட்ட பின்னர் மலையகத்திலும் தென்னிலங்கையில் வாழுகின்ற தமிழர் மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையினையும் அவர்கள் ஏற்றுள்ளனர். தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற நிலைப்பாடு எங்கும் காணப்படுகின்றது என குறிப்பிட்ட திரு சம்பந்தன், தமிழ்மக்களுடைய வாக்குதான் இந்த நாட்டில் ஜனாதிபதி யார் என்பதனை தீர்மாணிக்கப் போகின்றது என்றார்.
மாவை சேனாதிராசா பேசியபோது :
"தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தமிழர்கள் அங்கீகாரம் அளிக்ககூடாது இவர்களுடைய காலத்தில் தமிழர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தார்கள். யுத்தத்தினை நடத்தி வன்னி பிரதேசத்தை நாசமாக்கியவர்களுக்கு நாம் வாக்களிக்க முடியுமா?" என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் "வன்னியில் பெரும் இராணுவ மயமாக்கல் வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றது. எமது மண்ணில் பௌத்த சின்னங்கள் அமைக்கப்படுகின்றது. இதற்கு எல்லாம் நாம் அனுமதிக்கலாமா? அதனால்தான் நாம் ஏகோபித்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆட்சியாளர்களை மாற்றவேண்டும் என்பதாகும்.
ஆட்சிமாற்றத்திற்கு சக்தி படைத்தவர் ஜெனரல் சரத்பொன்சேகா. மாற்றம் வந்த பின்னர் புதியவர் என்ன செய்யப்போகின்றார் என்பதினையும் நாம் பார்க்கத்தான் போகின்றோம். எனது கோரிக்கைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் முன்வைத்துள்ளோம். புதிய அத்தியாயத்தில் காலடிவைத்துள்ளோம், இது ஒரு பரிசோதனை களம் என்றார்."
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் பேசுகையில்:
இந்த நாட்டில் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்படுவதன் மூலம்தான் தமிழ்மக்கள் தமது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளலாம். இந்த அரசாங்கம் எமது பிரதேசத்தினை ஆக்கிரமிப்பு செய்து இராணுவ மயமாக்கிவருகின்றது. இந்த திட்டங்களை இல்லாது ஒழிக்க ஆட்சி மாற்றம்வேண்டும்.
புதிய அரசு வரும்போது புதிய சிந்தனைகள், திட்டங்கள் ஏற்படும். நாம் சில காரியங்களை செய்யலாம். ஒரு எதிரியை வைத்து இன்னொரு எதிரியை முறியடிக்கவேண்டிய தேவை எமக்கு உள்ளது. அந்த தேவையைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம். தமிழ்மக்களுடைய அடிப்படை நலன்கள் என்னும் போது அதுதான் அந்ததேவையாகும். அரசு மாறவேண்டுமானால், நாம் அதற்குரிய வழிகள் பற்றி பார்க்கவேண்டும். மாற்றத்தை கொண்டுவரக்கூடிய சக்தியுள்ளவருக்கு வாக்களிப்பதன் மூலம்தான் மாற்றம் ஏற்படும். அந்தவகையில்தான் நாம் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிப்பதென தீர்மாணித்தோம் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்றினார்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment