குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதுதொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள், குழப்பங்கள், தன்னிச்சையான முடிவுகள், இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தனித்த முடிவு, அதனூடான அழுத்தங்கள், பல்வகைப்பட்ட விமர்சனங்கள் என பல நிகழ்வுகள் நடைபெற்று விட்டன.
நீண்ட குழப்பத்தின் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் ஏகோபித்த ஆட்சிமாற்றத் திற்கான முடிவை எட்டியது மட்டுமல்லாமல், இந்த தாமதத்தினூடாக சில அரசியல் அடைவுகளையும் நிகழ்த்தக்கூடிய தீர்மானத்தை அடைந்தமையானது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியது போன்றே கருத வேண்டியுள்ளது. அத்துடன் திரு. இரா.சம்பந்தர் அவர்கள் தனது அரசியல் சாணக்கியத்தையும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்தியதனூடாக தனது தலைமைத்துவ ஆளுமையை வெளிக்காட்டியமையானது தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விடயமே.
எனினும் இத்தீர்மானத்தை எடுக்கும் செயற்பாட்டின்போது அரசியலில் அவருக்குப் பூட்டப்பிள்ளைகளாகவும் கொப்பாட்டப் பிள்ளைகளாகவும் இருக்கும் சிலரின் ஆக்ரோசமான கருத்துக்களையும் எதிர்கொள்ளாமல் தீர்மானம் எட்டப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் நகைச்சுவையான விடயம் என்னவெனில், இந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவை ஆட்சிக்கு வர இடமளிக்காமல் செய்வதாயின் தமிழ்மக்கள் தமது வாக்குகளை சரத்பொன்சேகாவிற்கு அளித்தேயாக வேண்டும் என்பதில் மறுகருத்தில்லை. ராஜபக்ஷ அவர்களை ஆட்சியில் அமர இடமளிக்கக்கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இரண்டாவது தீர்மானமாக, இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களையும் ஆதரிக்கக்கூடாது என்று சில உறுப்பினர்கள் முன்மொழியப்பட்டதானது, ராஜபக்ஷ அவர்களைப் பதவிக்கு கொண்டுவரும் முயற்சிக்கான ஒருவகை அணுகுமுறையாகும் என்பது வெளிப்படையானது. ராஜபக்ஷ அவர்களை பதவிக்கு கொண்டு வர நேரடியாகவும் பின்னாலிருந்தும் உசுப்பேற்றிவிட்டு ஒன்றும் தெரியாது போன்று பாசாங்கு செய்யும் சில தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமிழ்மக்கள் அடையாளம் காணவேண்டும். சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தில் சரத் பொன்சேகாவை நல்லவர் என்றோ, தமிழ்மக்களுக்கு உரிமைகளைத் தந்துவிடுவார் என்றோ, அப்படிப்பட்ட கோரிக்கைக்கு உடன்படுவார் என்றோ, எதிர்பார்க்க முடியாது.
அதேவேளை சரத் பொன்சேகா அவர்களிற்கு வாக்களிக்க கோருவதனூடாக அவர் தமிழினத்திற்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கள், செய்த அநீதிகளை ஏற்று, அவர் செய்ததை மன்னிப்பது போன்று விளக்கம் கொடுக்கவும் கூடாது. அவலத்தையும் அழிவையும் தந்த முதல் எதிரியான ராஜபக்ஷ அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கு மட்டுமான தெரிவே சரத் பொன்சேகா என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.எது எப்படியோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழம்பித் தெளிந்துள்ளதானது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தெளிவான, உறுதியான அரசியல் ஆளுமையுள்ளவர்களையும், அரசியல் ஆளுமை இல்லாதவர்களையும் அடையாளம் காட்டியுள்ளது. இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாகவே அமையும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்தகால சில அரசியல் முடிவுகளின் போதும் சரி, உலக அரசியல் வரலாறுகளிலேயேயும் சரி, தேவைக்கேற்ப சிறுபான்மைக் கட்சிகள் தங்களது கொள்கையில் மாறுபடாது தீர்மானங்களை எடுப்பதனூடாக ஆட்சி மாற்றங்கள் தங்களுக்குச் சாதகமாக வருமாயின் அதற்காக புரிந்துணர்வுடன் கூடிய உறவை வைத்துக்கொள்வது அரசியல் சாணக்கியமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக 1989 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸா அவர்களுடன் உறவை வைத்து ஆயுதங்களையும் பெற்று, இந்திய இராணுவத்தை வெளியேற்றிவிட்டு, பின் அதே ஆயுதங்களைக் கொண்டு பிரேமதாஸா அவர்களின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகள் விடு தலைப்போரில் ஈடுபடவில்லையா?1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா அவர்கள் ஆட்சிக்குவர ஆதரவளிக்க வில்லையா? பின்னர் 2001 இல் சந்திரிகா பண்டாரா நாயக்காவை ஆட்சியிலிருந்து அகற்றி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க வெல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவில்லையா? பின்னர் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் அவர்கள் சர்வதேச வலைப் பின்னலுக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு சென்று சிதைத்துவிடுவார் என்று கூறி, ரணிலை ஆட்சிக்கு வராமல் செய்ய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெறுவதற்கு சூழல் அமைத்துக்கொடுக்க வில்லையா? இந்த அனைத்து தீர்மானங்களும் தமிழீழ விடுலைப்புலிகள் ஆயுதபோராட்ட பலம் இருந்த போது ஒரு விடுதலை இயக்கம் நடைமுறை அரசை நிறுவி நிர்வகித்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
அப்போதைய அரசியல் சூழல்களில் விடுதலைப்புலிகள் தமது ஆயுதப்போராட்ட வலுவை அடிப்படையாகக் கொண்டு தங்களுக்குப் பொருத்தமான எதிரியை தெரிவுசெய்வதற்காக வாக்குகளைப் பயன்படுத்தினார்கள்.
தற்போது உள்ள சூழலில் தமிழ்மக்களின் வாக்குகள் மட்டுமே அவர்களின் பலம் என்றிருக்கும் போது, தமிழ்மக்களுக்கான உரிமைகளை வழங்குவது தொடர்பில் அக்கறையில்லாமல் அவர்களை அழித்துக் கொடுமைப்படுத்திவிட்டு,தமிழ்த்தேசியத்தைத்
தகர்க்கவும் பதவிக்கதிரைகளைக் காட்டி விலைபேசவும் முயன்ற ராஜபக்ஷ அவர்களை வெளியேற்ற, குறிப்பாக தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்திற்கு வழிசமைப்பதற்காக சரத்பொன்சேகாவிற்கு சார்பாக என் வாக்குகளைப் பிரயோகிக்கக் கூடாது?தற்போதையஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நீடிப்பற்கான கோரிக்கையை நிராகரித்துத் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவை எட்டுவதற்காக, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பது என ஏகமனதான தீர்மானத்தை நோக்கி நகர்த்தியமையானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவரின் மதிநுட்பமான அனுபவ அரசியலின் வெளிப்பாடாகும். அத்துடன் சரத் பொன்சேகா அவர்களை ஆதரிக்கும் முடிவை தமிழ்த்தேசி யத்தை விட்டு விலகிப்போவதாக கருதுகோடல் கொள்ளக் கூடாது. எஞ்சியுள்ள கோவணம் பறிபோவதை தடுப்பதைப்பற்றி சிந்திக்காமல், கோட், சூட் போடுவதைப் பற்றிச் சிந்திப்பது காலத்திற்குப்பொருத்தமானதல்ல. எனவே தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி தீர்மானிக்க தற்போதைய யதார்த்த அக, புறநிலையை புரிந்து வெற்று வாய்சவடால்களைத் தவிர்க்க வேண்டும். மற்றும் சரியான மதிப்பீடும் ஆய்வும் தேவை.அதில் தமிழ்மக்களின் பலம், பலவீனம், இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள்,அதிலுள்ள நெருக்கடிகள் போன்றவற்றின் அடிப்படையில் சமகாலத்தில் செய்யப்படவேண்டிய அரசியல் நகர்வுகளைச் செய்யவேண்டும். இச்செயற்பாட்டினூடாக போடப்படும் அடித்தளங்களே எதிர்காலத்தல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை நிலைநாட்டுவதற்கான அடிப்படை. எனவே இதற்கு புரிதலும், தெளிதலும், வெளிப்படைத்தன்மையும், ஏற்றுக்கொள்ளும் மனநிலையுமேமுக்கியம்.
அத்துடன் நகர்வுப்பாதையைத் தீர்மானித்து அதற்கான சரியான அணுகுமுறையைக் கையாண்டு உறுதியாக நகர்தலே தமிழினத்தின் அரசியல் இறுதி அடைவிற்கு அவசியமானது. ***
-அபிஷேகா-
Uthayan
0 விமர்சனங்கள்:
Post a Comment