மற்றொரு ஈழப் போராட்டத்துக்கு சில பிரிவினர் முயற்சிப்பதாக ஜனாதிபதி எச்சரிக்கை
ஒன்றுபட்ட இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆசியாவிலும் உலகிலும் இலங்கை முன்னணிக்கு கொண்டு செல்லப்படும் என்றும் உறுதிமொழிகள் அடங்கிய 14 அம்சங்கள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார்.
"வளமான எதிர்காலம்%27 என்ற தலைப்புடன் "மகிந்தவின் சிந்தனை தொலைநோக்கு%27 என்ற இந்த விஞ்ஞாபனத்தில் புதியதோர் இலங்கைக்கான திட்டங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.அபிவிருத்திக்கான புதிய இலக்குகள்,முதலீட்டுக்கான வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம் என்பனவற்றில் கவனம் செலுத்தி இலங்கையை மேம்பாடடையச் செய்வதை இலக்காகக் கொண்டதாக விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.
2010 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனமானது 2005 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனமாக "மகிந்த சிந்தனை%27யின் தூரநோக்கை விரிவுபடுத்தியதாக "மகிந்தவின் சிந்தனையாக%27 வெளியிடப்பட்டுள்ளது."நம்பிக்கையான மாற்றம்%27 என்ற தலைப்பில் எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவின் 10 அம்சத்திட்டங்களடங்கிய தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டு 5 நாட்களின் பின்னர் தனது வாக்குறுதிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று பகிரங்கப்படுத்தியுள்ளார். பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வின் போது உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷதனது முதலாவது பதவிக்காலத்தில் 4 ஆண்டுகளில் அநேகமான காலப்பகுதியை பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு செலவிட்டதாக குறிப்பிட்டார். உலகிலேயே மிக மோசமான பயங்கரவாத அமைப்பை அழிக்கும் முயற்சிகளுக்கு பல வெளிநாட்டு சக்திகள் தடையாக இருந்ததாகவும் ஏனைய முக்கியமான விடயங்களுக்கு தீர்வுகாண 6 மாதங்களே காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது அடுத்த பதவிக்காலத்தை இந்த விவகாரங்களை கவனிக்கவே அர்ப்பணிப்புடன் ஈடுபடப்போவதாகவும் இதன்மூலம் நாட்டை அபிவிருத்திக்கும் மேம்பாட்டுக்கும் இட்டுச்செல்ல முடியுமென்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.பயங்கரவாதம்,பாதாள உலகம் என்பவற்றுக்கு எதிராக முன்னெடுத்த அதே உறுதிப்பாட்டுடன் ஊழலுக்கு எதிரான போராட்டம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஊழலுக்கு எதிராக போராடி நாட்டுக்கு அபிவிருத்தியை தேடித்தரப்போவதாக சூளுரைத்த அவர்,வலுவான ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பபோவதாகவும் உறுதியளித்தார்.இலங்கை இப்போது ஒரே மக்கள் உள்ள தேசம் என்றும் வடக்கில் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்கள் தமது தேவைகளை நிவர்வகிப்பதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில், வவுனியாவில், கிழக்கில் வார இறுதியில் நான் இருந்தேன். தங்களுக்கு அபிவிருத்தி தேவையென்று அங்குள்ள மக்கள் புன்சிரிப்புடன் கூறினார்கள் எனவும் அவர் கூறினார்.தமிழிலும் உரையாற்றிய ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை கொண்டுவந்திருப்பதாகவும் மக்கள் நாட்டின் எந்தப்பகுதியிலும் இப்போது வாழமுடியும் என்றும் கூறியதுடன் தெற்கைப் போன்றே உரிய தருணத்தில் வடபகுதியும் அபிவிருத்தி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.அபிவிருத்தி பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி இலங்கையின் வரைபடத்தில் 5 புதிய துறைமுகங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறியதுடன் ஏற்கனவே பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்திருப்பதாகவும் அதன் பலாபலனை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
அடுத்த தசாப்தம் இலங்கையின் அபிவிருத்திக்கான தசாப்தமாக அமையும்.நாட்டின் இளைஞர்கள் போரில் தீர்க்கமான முறையில் போரிட்டு வெற்றியை ஈட்டித்தந்துள்ளனர்.அவர்கள் தங்கள் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக விளங்குவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.சர்வதேச அழுத்தத்துக்கு எதிராக நின்று தேசத்தை பாதுகாத்த தலைவர், தான் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி பயங்கரவாதத்துக்கு மீண்டும் இடமளிப்பதற்காக தற்போது ஒரு பிரிவினர் முயற்சிப்பதாக மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் எச்சரித்தார்.
"நாட்டில் மற்றொரு ஈழப் போராட்டத்தை ஏற்படுத்த இந்தக் குழுக்கள் முயற்சிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.இந்த நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மக்கள் இன்று மிகவும் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழ்கின்றனர். வெற்றிகொண்ட இந்த சுதந்திரத்தை பாதுகாக்கவும் அந்த சுதந்திரத்துக்காக மக்கள் செய்த உயிர்த் தியாகங்களை அர்த்தப்படுத்தவும் தேவையான அனைத்தையும் இந்தக் கொள்கைப் பிரகடனத்தில் (தேர்தல் விஞ்ஞாபனம்) உள்ளடக்கியுள்ளோம். எனவே, இந்த நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் காட்டிக்கொடுக்கும் ஒரு எழுத்தாவது இந்த பிரகடனத்தில் இல்லையென்பதை மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.
பயங்கரவாத பிரச்சினை, போர் நிறுத்த உடன்படிக்கை, யுத்தம் செய்ய முடியாதென உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தப்பட்ட இராணுவம், பயிர் செய்த நெல்லை விற்க முடியாது விவசாயிகள் விஷமருந்தும் நிலைமை என பல பிரச்சினைகள் இருந்த நிலைமையிலேயே நான் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி பதவிக்கு வந்தேன்.எனினும் இன்று நாம் அனைத்து சவால்களையும் வென்றுள்ளோம். கௌரவமான சமாதானத்துடன் கௌரவமான வாழ்க்கையையும் தாய் நாட்டுக்காக எமக்குக் கொண்டுவர முடிந்தது.
இன்று இலங்கை வரைபடமொன்றை எடுத்தால் அது புதிய வரைபடமாகவே இருக்கும். இன்று எல்லை கிராமங்கள் என்பது இலங்கை வரைபடத்தில் இல்லை. பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாம் இந்த நாட்டில் பாரிய பல மாற்றங்களை செய்துள்ளோம். எனவே, மேலும் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்பது யாரோ ஒருவரின் பழிவாங்கல் நோக்கத்திற்காக நாட்டைக் காட்டிக்கொடுப்பதல்ல.
விடுதலைப் புலிகள் உலகிலேயே பாரிய பயங்கரவாத அமைப்பாக இருந்தபோது கூட நான் அவர்களின் நிபந்தனைகளுக்கு அடிபணியவில்லை. சர்வதேச நாடுகளின் நிபந்தனைகளுக்கு நாம் அடிபணியவில்லை. தற்போது புலிகள் முடிந்துவிட்டனர்.எனினும் நாட்டின் மீது வைராக்கியம் கொண்டவர்கள் நாம். குணப்படுத்திய காயத்தை மீண்டும் புண்படுத்த முயற்சிக்கிறார்கள். இவர்கள் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தமானது மீண்டும் ஒருமுறை ஈழப் போராட்டத்திற்கு வழியேற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
அன்று நாம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்தபோது விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்களும் புலிகளின் விசுவாசிகளும் வெளிநாடுகளிலுள்ள புலித் தலைவர்களும் இன்று ஓர் அணியில் ஒன்று திரண்டுள்ளனர். மீண்டும் மீண்டும் இவர்களைத் தோற்கடிக்க நான் தயார். எனவே, வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கையும் தாய் நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க வழங்கும் வாக்கு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எவருக்கும் பாரபட்சம் காட்டாத சமுதாயமே எமக்குத்தேவை. இந்த நாட்டில் பிறந்த சகலருக்கும் இந்த தாய் பூமி உரித்துடையது. அவர்களுக்கு வாழ வேறு நாடுகள் இருக்கின்றன என்று கூறுவதற்கு மட்டுமல்லாது நினைத்துப்பார்க்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. அதேபோல் வடக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்தி ஜனநாயகம் பூரணமாக நிலைநாட்டப்படும். ஜனநாயகத்தின் கீழ் செயற்படும் அனைத்து தரப்பினருடனும் கலந்து பேசி தேசிய இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ளும் சபையொன்று ஏற்படுத்தப்படும்.
இந்த யுகத்தில் இனங்களுக்கிடையில் பெரிய பிளவொன்று ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் புரியும். எனவே,மக்களிடையே சுமுகமான நிலைமையொன்று உருவாகிவரும் இச்சந்தர்ப்பத்தை எமக்குத் தவறவிட முடியாது. இதேநேரம் எனது 4 வருட ஆட்சியில் 8 மாதங்களைத் தவிர ஏனைய முழுக்காலத்தையும் பயங்கரவாதத்துக்கு முகம் கொடுப்பதிலேயே செலவிட வேண்டியிருந்தது. இதனால் நாட்டின் சில முன்னணிகளுடன் போராடும் கால அவகாசம் எனக்கு இருக்கவில்லை.
எனினும் எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து எனது முழு காலமும் ஒரேயொரு நோக்கத்திற்காகவே செலவிடப்படும். ஊழல் மோசடியற்ற செயற்றிறன் மிக்க நாட்டைக் கட்டியெழுப்புவது இன்னுமொரு பாரிய போராட்டம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மோசடிக்காரர்களுடன் இன்னுமொரு மோசடிக்காரர் இணைந்து கொண்டு கோஷமிடுவதால் இந்த நாட்டிலிருந்து ஊழல்களை போக்கிவிட முடியாது. பாதாள உலகத்தினரையும் புலிகளையும் முடக்கிய வேகத்துடனேயே ஊழல் மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதிகள் முதலில் மகா சங்கத்தினருக்கும் ஏனைய மதத்தலைவர்களுக்கும் வழங்கப்பட்டன. தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு; இலங்கை ஆசியாவின் அதிசயமாக மிளிரும் சுபிட்சமான தேசம். சௌகரியமான, திருப்தியான வாழ்க்கை, வீதிக்கட்டமைப்பு, போக்குவரத்துத்துறை அபிவிருத்தி ஒழுக்கமானதும் சட்டத்திற்கு கீழ்ப் படிந்ததுமான சமூகம், பிரிக்க முடியாத ஒற்றையாட்சி, விழுமியங்கள் பேணப்படுதல், துரித அபிவிருத்தி, இறுதி சமாதானம், பசுமைத்தேசம் இளைஞர்களுக்கு முன்னுரிமை, நவீன கல்வித்துறையில் கவனம் செலுத்துதல், ஆரோக்கியமான சமூகம், உலகை வெற்றிகொள்ளும் தொழில் வல்லுநர்கள், கலைத்துறையில் மீள் விழிப்பு, மனிதர்கள் விட்டுச் செல்லும் நாடாக இல்லாது திரும்பி வரும் நாடு இவை விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment