ஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்
மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மட்டும் அகதிகள் வருவதில்லை. வியட்நாம் போரின் போது பல அமெரிக்கர்கள் சுவீடனில் அகதித் தஞ்சம் கோரினார்கள். சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அகதிகள் மேற்கு ஐரோப்பாவிற்குள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இலங்கை பொது நலவாய அமைப்பு நாடுகளில் ஒன்றாக இருந்ததால், பிரிட்டிஷ் விசா கிடைப்பதும் இலகுவாக இருந்தது. அந்தக் காலங்களில் இலங்கை பிரச்சினைக்குரிய, அல்லது யுத்தம் நடக்கும் நாடாக அறியப்படவில்லை. அதனால் எல்லா நாடுகளும் விசா நடைமுறைகளை தளர்த்தி இருந்தன. இலங்கையில் தமிழருக்கு கேட்ட உடனேயே விசா கிடைத்தது. பயணச் சீட்டு வாங்குவது மட்டுமே பாக்கி. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். மேற்குலக நாடுகளில் அகதிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதும், அதில் சிக்கனமாக செலவு செய்து மிகுதியை வீட்டுக்கு அனுப்புவதுமான விஷயம் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.
பெரும்பாலும் கொழும்பு நகரில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், யாழ்ப்பாணத்தில் பணக்கார விவசாயிகளின் பிள்ளைகள் போன்றவர்களே ஆரம்பத்தில் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள். இதனால் இப்போதும் சில ஐரோப்பிய நாடுகளில், குறிப்பிட்ட சில பிரதேசங்களில் இருந்து வந்த மக்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் ஒன்றில் பிரதேசவாரியாக, அல்லது சாதிரீதியாக, அல்லது உறவுக்காரர்களாக, இவ்வாறு ஏதாவதொரு ஒற்றுமையைக் கொண்டிருக்க காணப்படுவர். குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு சென்றால், அவர் பின்னர் இன்னொரு குடும்ப உறுப்பினரை அழைத்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இப்போதும் சிலர் தமது குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் வெளிநாடு வந்துவிட்டார்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வதை கேட்கலாம்.
புலம் பெயர்வது பல வழிகளில் சாத்தியமாகிற்று. ஒரு மேற்குலக நாட்டிற்கு நேரடியாக விசா எடுத்து சென்று பின்னர் அங்கேயே தஞ்சம் கோருவது இலகுவான வழி. இருப்பினும் ஒரு சிறு பிரிவினர், இந்தியா சென்று, அங்கிருந்து பாகிஸ்தான், ஈரான், துருக்கி என்று நாடு விட்டு நாடு போய், கடைசியாக மேற்கு ஐரோப்பா போய்ச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அந்தக் காலங்களில் தேசங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் குறைவு என்பதால், எல்லையில் வைத்தும் நுழைவு விசா கிடைத்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் விசா கிடைப்பது கடினம். அதனால் திருட்டுத்தனமாக ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது.
வெளிநாடு செல்வதென்றால், ஆங்கிலம் சரளமாகத் தெரிய வேண்டும் என்று அப்போதும் பலர் நினைத்தார்கள். ஆனால் இந்தியா முதல் போர்ச்சுக்கல் வரை அரைவாசி உலகை சுற்றி வந்த பலருக்கு ஆங்கிலம் மிகக் குறைவாகவே தெரிந்திருந்தது. அதிகம் படித்திருக்கவுமில்லை. ஆனால் வரைபடம் பார்த்து செல்லுமளவு பொது அறிவு இருந்தது. வாய் இருந்தால் வங்காளம் போகலாம் என்ற பழமொழிக்கேற்ப நடந்து கொண்டார்கள். அவ்வாறு அன்று துணிச்சலாக பயணம் செய்த சிலர் பின்னர் பிறரை தம்முடன் கூட்டிச் சென்றனர். அந்த வாய்க்காரர்கள், பிற அப்பாவித் தமிழர்களை பணத்திற்காகவேயன்றி, தர்மத்திற்காக அழைத்துச் செல்லவில்லை.
ஐரோப்பிய நாடுகளுக்கிடையே சிறந்த ரயில் போக்குவரத்து உள்ளது. தேசங்களுக்கிடையே ஓடும் ‘இன்டர் சிட்டி’ ரயில்களில் உறங்களிருக்கைப் பெட்டிகள் இருக்கும். இரவில் படுக்கையாக மாற்றப்படும் இருக்கைகளுக்கு கீழே ஒளிந்து கொள்வார்கள். அந்தப் பெட்டியில் இருக்கும் பயணிகள் பார்க்காத வரை, அல்லது காட்டிக்கொடுக்கா விட்டால் எல்லைகளில் தப்பி விடலாம். இன்னொரு வழி ரயில் பெட்டிகளில் இருக்கும் மல சல கூடம். கூரையில் இருக்கும் சிறிய கதவை கழற்றி விட்டு ஒரு ஆள் ஒளிந்து கொள்ளலாம். எல்லைகளில் சோதனைக்காக ரயில் நிற்கும் போது, மலசல கூடத்தில் யாரையும் இருக்க விடுவதில்லை. எங்காவது பிடி பட்டால் அந்த நாட்டிலேயே அகதித் தஞ்சம் கேட்டு விட வேண்டும்.
மேற்கு-கிழக்கு ஜெர்மனிகளின் பிரிவினையும் அகதிகளுக்கு உதவி செய்தது. முதலாளித்துவ ஜெர்மன் சமஷ்டிக் குடியரசும், சோஷலிச ஜெர்மன் ஜனநாயகக் குடியரசும் ஒன்றோடொன்று பகைமை பாராட்டிக் கொண்டிருந்தன. கிழக்கு ஜெர்மன் தூதுவராலயம் எந்தக் கேள்வியும் கேட்காமல் விசா வழங்கிக் கொண்டிருந்தது. கிழக்கு பெர்லின் விமான நிலையத்தில் வந்திறங்கிய உடனேயே, சில டாக்சிக் காரர்கள் தயாராக நிற்பார்கள். குறிப்பிட்ட தொகையை பேரம் பேசினால், மேற்கு பெர்லினுக்குள் கொண்டு போய் விடுவார்கள். இரண்டு பெர்லினுக்கும் இடையில் நிலக்கீழ் சுரங்க ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த சுரங்க ரயில் பாதையும் மேற்கு பெர்லினுக்குள் நுழையும் வழியாக இருந்தது.
அந்தக் காலத்தில், தமது நாட்டிற்குள் அகதிகள் வந்து குவிவதை கிழக்கு ஜெர்மன் அரசு நன்றாகவே அறிந்திருந்தது. ஆனால் வருபவர்கள் யாரும் தனது நாட்டினுள் தங்க மாட்டார்கள் என்பதையும், அனைவரும் மேற்கு ஜெர்மனிக்குள் நுழையவே விரும்புவர் என்பது தெரிந்த விடயம் தான். ஆகவே தனது எதிரியான மேற்கு ஜெர்மனிக்கு தலையிடி கொடுப்பதற்காக அகதிகளை அனுமதித்துக் கொண்டிருந்தது. மேற்கு ஜெர்மன் அரசோ, கம்யூனிசத்தில் வெறுப்புற்ற கிழக்கு ஜெர்மன் அகதிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்து எல்லைக்காவலை தளர்த்தி இருந்தது. இந்த சலுகையை மூன்றாம் உலக அகதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைத்திருக்கவில்லை. இன்று பிற ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்களில் பலர், அன்று பெர்லின் வழியாக வந்து சேர்ந்தவர்கள் தான். அதனால் ஜெர்மனிக்கு “பழசு” என்ற அடைமொழியும் உண்டு.
மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த அகதிகள் அனேகமாக தத்தமது மாஜி காலனியாதிக்க எஜமானர்களை நோக்கியே செல்வது வழக்கம். உதாரணமாக பிரான்ஸில் அல்ஜீரிய அகதிகள், போர்ச்சுகல்லில் அங்கோலா அகதிகள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக காலனியாதிக்க நாடுகளே தமது காலனிகளுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது, அங்கிருந்து எவராவது தனது நாட்டில் வந்து குடியேறினால் பிரஜாவுரிமை கொடுப்பார்கள். இந்தக் கவர்ச்சிக்கு மயங்கி பெருமளவு மக்கள் சென்று குடியேறும் வேளை, அந்த சட்டத்தை இரத்து செய்வார்கள். அதற்குப் பிறகு அகதியாக செல்வது தான், புதிய குடியேறிகளுக்கு முன்னால் இருக்கும் தெரிவு. இரண்டாவது காரணம் காலனிய மொழி. மூன்றாவதாக பல உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு காலனியாதிக்க நாடுகளின் தலையீடு காரணமாக உள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகள், முன்னாள் காலனிய எஜமானான பிரிட்டனுக்கு சென்ற போது, அகதி தஞ்சம் கொடுக்கா விட்டாலும், நாட்டினுள் இருந்து வேலை செய்ய அனுமதி கிடைத்தது. இது காலப்போக்கில் உழைப்பை சுரண்ட வழிவகுக்கும் வதிவிடப்பத்திரம் கொடுக்கும் சட்டம் கொண்டுவர உதவியது. இங்கிலாந்து அரசு ஆரம்பத்தில் மூன்றே மூன்று ஈழத் தமிழருக்கு மட்டுமே அகதி அந்தஸ்து வழங்கியது. அதில் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் காலஞ்சென்ற அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன். எழுபதுகளில் யாழ் நகரில் இடம்பெற்ற, மேயர் துரையப்பாவின் கொலை தான் தமிழீழ போராட்ட வரலாற்றின் முதலாவது அரசியல் கொலை. கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் நபர்கள் சிலரின் படங்களை போஸ்டராக அடித்து காவல்துறை நாடு முழுவதும் ஒட்டியிருந்தது. அதில் காண்டீபனின் பெயரும் இருந்தது. அந்த போஸ்டரை வைத்து தான், காண்டீபனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்தது.
ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள், இலங்கையில் அப்பாவி இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுவதையும், சித்திரவதை செய்யப்படுவதையும் எடுத்துக் காட்டியே தஞ்சம் கோருவது வழக்கம். சிலர் அரசியல் படுகொலையான துரையப்பா கொலையில் தேடப்படுவதாக சொன்னார்கள். பலருக்கு என்ன சொல்வதென்றே தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஒன்றில் அரசியல் பற்றி எதுவுமே தெரியாதவர்களாக இருப்பர், அல்லது அரச அடக்குமுறைக்கு முகம் கொடுக்காதவர்களாக இருந்திருப்பர். இனப்பிரச்சினை என்றால் என்னவென்றே அறிந்திருக்காத அவர்களின் ஒரே எண்ணம், மேற்குலக நாடொன்றில் அகதி என்று சொன்னால் மட்டும் போதும் என்பதாக இருந்தது.
அப்போதெல்லாம் இலங்கையில் நடக்கும் சிறு சிறு சம்பவங்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. இதனால் இங்கிலாந்து தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஈழத்தமிழரின் குழப்பகரமான தஞ்சக் கோரிக்கைகள் காரணமாக, பலர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவ்வாறு திரும்பி வந்தவர்களை கொழும்பு விமானநிலைய காவல்துறை கைது செய்து, சித்திரவதை செய்ததாக செய்திகள் வெளியாகின. இருந்தாலும் அப்போது கூட மேற்குல நாடுகள் இலங்கை அகதிகள் தொடர்பாக கரிசனை கொள்ளவில்லை. 1983 ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
psminaiyam
0 விமர்சனங்கள்:
Post a Comment