நேரடி அனுபவம்: மீண்டும் ஒரு தரம் தாயகத்தில்… : வாசுதேவன்
எட்டு வருடங்களிற்கு பின் இந்த நத்தார் புதுவருட விடுமுறையில் மீண்டும் தாயகம் சென்று வர ஒரு வாய்ப்பு கிட்டியது. புலம்பெயர் ஊடகங்கள் பல குறிப்பாக தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் இலங்கையில் இன்னும் போர் முடியவில்லை! மக்கள் காணாமால் போகிறார்கள்! இராணுவம் ஆட்களை கடத்துகிறது. கட்டுநாயக்காவில் வெளிநாட்டவர்கள் மணிக்கணக்கில் விசாரிக்கப்படுகிறார்கள்! கொழும்பில் தமிழ் மக்கள் பயத்துடன் வாழ்கிறார்கள்! இதுபோல் பல மிரட்டல்கள் என் மனதில் பயங்கரமாக ஓடி விளையாடியது! போனால் உயிருடன் திரும்பி வருவேனா? கடத்தப்படுவேனா? காணாமல் போவேனா? என்ற அச்சசத்துடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கினேன். வானில் குடும்பத்துடன் ஏறி வெளியில் வருகையில் ஒரு சோதனைச்சாவடி. அதில் எமது பாஸ்போட்டுகளை பார்த்தது தான்! இலங்கை மீண்டும் தன் நிலைக்கு திரும்புகிறது என்பதை உணர முடிந்தது. தற்கொலை போராளிகள் தாக்குவார்கள் என்ற அச்சமின்றிய இராணுவ மற்றும் முப்படையினரும் மிகவும் மதிப்பாக அனைவரையும் நடாத்துவதை காண முடிந்தது! யாழ் குடாவில் இராணுவ பிரசன்னம் இருந்தாலும் அங்கு வீதி தடைகள் அகற்றப்பட்டு மக்கள் சுதந்திரமாக திரிய முடியும். ஆனால் கொழும்பில் சில இடங்களில் வீதி சோதனை சாவடிகள் இன்னமும் இயங்குகிறது!
இதை புரியாத சில புலம்பெயர் ஊடகங்கள் யாழ் குடா மக்கள் இன்னமும் திறந்தவெளி சிறைச்சாலையில் என்ற கருத்துப்பட எழுதுவது புலம்பெயர் மக்களை இன்னும் முட்டாள்களாக வைத்திருப்பதற்கே என்பதை என்னால் உணர முடிந்தது! இன்னுமொரு ஊடகமோ வன்னி முகாம்கள் இன்னமும் வதை முகாம்கள் என்ற தலைப்பில் செய்திகளை வெளியிடுகிறது. வன்னி முகாம் மக்கள் இன்று சுதந்திரமாக நடமாடுவது இவர்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா? முகாமில் வதியும் மக்கள் தமது தேவைக்கு அதிகமான கொடுப்பனவு பொருட்களை வெளிப்படையாக வவுனியாவில் வைத்து விற்கிறார்கள். வதை முகாம்களில் அப்படிச் செய்ய முடியுமா? வன்னி முகாமில் தற்போது எண்பதினாயிரம் மக்களே இருப்பதாக அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். அவர்களில் பலர் தற்போதைக்கு மீளக் குடியேறும் நோக்கத்தில் இல்லை என்பதே உண்மை. இதனை தேசம்நெற்றில் சில மாதங்களுக்கு முன்னரேயே முகாம் மக்கள் தெரிவித்து இருந்தனர். அவர்கள் தங்கள் முன்னைய வாழ்விடங்கள் முற்றாக கண்ணி வெடியகற்றப்படுவதுடன் தங்கள் தொழில் வாய்ப்பிற்கான சகல ஏற்பாடுகளையும் செய்த பின்னரே மீளக்குடியேற விரும்புகின்றனர்.
எனது முன்னைய கட்டுரை ஒன்றில் கிளிநொச்சி தரை மட்டமாகியது என்ற கருத்துபட சில வரிகளை எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக பலர் பின்னோட்டத்தில் என்னை கடித்து குதறியும் இருந்தார்கள். உண்மை தான்! கிளிநொச்சியில் பல கட்டடங்கள் இன்னும் தரை மட்டமாகவில்லை! ஆனால் கட்டடங்களில் கூரைகளையோ கதவுகள் யன்னல்களையோ காணவில்லை. இராணுவம் வர முன்னரே மக்களும் புலிகளும் இவற்றை தம்முடன் எடுத்து சென்று விட்டனர். விமான தாக்குதலில் சில கட்டங்கள் சேதமாகியிருக்கிறது. இன்று புலம்பெயர் நாடுகளில் இருந்து ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதும் பலர் தாம் கேள்விப்படுபவைகளும் தாயக ஊடகங்களில் வருவதை மட்டும் கருத்தில் எடுத்து தமது கருத்தை அதற்குள் திணித்து ஒரு கட்டுரையை வெளியிடுவார்கள். அதை பார்க்கும் புலம்பெயர் வாசகர்கள் தமது பாணிக்கு கற்பனை பண்ணி ஒரு தவறான நிலைப்பாட்டில் பின்னோட்டம் விடுவார்கள். குறிப்பாக ஊடகங்களின் தற்போதைய நிலைமை இது தான்! இதற்கு நானும் விதிவிலக்கல்ல! கிளிநொச்சி கூரை விடயத்தை நான் ஆராயத் தவறிவிட்டேன். ஆக மொத்தத்தில் இரு தரப்புமே யுத்ததில் அழிவுகளை தவிர்க்க முன்வரவில்லை என்பதே உண்மை.
மக்களின் மீள் குடியேற்றங்கள் அரசு கூறுவது போல் சுமுகமாக இல்லை என்பதில் உண்மைகள் இருந்தாலும் இந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவி செய்யும் அனைத்து வசததிகளையும் கொண்ட புலம்பெயர் மக்கள் அந்த மக்களிற்கு ஒரு குண்டுமணி கூட வழங்க தயாராக இல்லை! ”புலிகளிற்கு ஆயுதம் வாங்கி அள்ளிக்கொடுத்த இந்த வள்ளல்கள் இலங்கை பற்றியோ இலங்கை அரசியல் பற்றியோ கதைப்பதற்கே அருகதை அற்றவர்கள்.” இதை நான் கூறவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தம் வாயால் கூறுகிறார்கள். மீள் குடியேறும் மக்கள் கூரைகள் அற்ற வீடுகளிலும் தற்காலிக முகாம்களிலும் அல்லல் படுகிறார்கள். புலிகளால் கண்மூடி வன்னியெங்கும் விதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் தினமும் அகற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வன்னியிலிருந்து பின் வாங்கிய புலிகள் தாறுமாறாக கண்ணி வெடிகள் விதைத்ததை புலம்பெயர் நாடுகளில் இருந்தவர்களுக்கு தெரியாமால் போனாலும் இவர்கள் வாங்கி கொடுத்த இந்த கண்ணி வெடிகளே மீள் குடியேற்றத்திற்கு மிகுந்த தடையாக உள்ளது.
அரசு மீள்குடியேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்பது உண்மை! ஆனால் புலம்பெயர் மக்கள் அந்த கடமையை செய்ய அனைத்து வசதிகளும் கொண்டுள்ளார்கள். ஆனால் செய்வார்களா? இது தான் வன்னி மக்களின் அங்கலாய்ப்பும்! வன்னி மக்கள் புலம்பெயர் மக்களிடம் இருந்து கேட்பது நாடு கடந்த தமிழீழம் அல்ல! குறைந்த பட்சம் பானை சட்டி அல்லது அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்ல உதவும் ஒரு சிறு தொகையே! அவர்கள் பிச்சை கேட்கவில்லை. நாம் வாங்கி கொடுத்த அயுதங்களினால் அழிக்கப்பட்ட அவர்களின் வீடுகளையும் அவர்களின் தொழிலை கொண்டு செல்ல ஒரு சிறு தொகையையுமே அவர்கள் கேட்கிறார்கள். எம்மால் நடாத்தப்பட்ட யுத்தத்தில் இழந்தவற்றையே மீளக் கேட்கிறார்கள். இந்த மக்களை பொருளதார ரீதியாக உயர்த்துவதே புலம்பெயர் மக்கள் செய்ய கூடிய பேருதவியாக இருக்கும்.
வட்டுக்கோட்டை தீர்மானம் இந்த மக்களின் தலைவிதியை மாற்றப்போவதில்லை! வன்னி மக்களிற்கு வட்டுக்கோட்டை பிரகடணம் மரண சாசனம்! யாழ் மக்களிற்கு வட்டுக்கோட்டை தீர்மானம் வடிவேலு காமடி! தென் பகுதி தமிழர்களுக்கு வட்டுக்கோட்டையும் நாடு கடந்த தமிழீழமும் கவுண்டன் செந்தில் கலாட்டா!
யுத்ததின் பின் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் உணரும் ஒரு விடயம் இலங்கை என்ற நாட்டில் மூவினங்களும் ஒன்றாக வாழ முடியும் என்பதே! இலங்கையில் முஸ்லீம் மக்களின் வாழ்வியலை பார்த்து பல பாடங்களை தமிழர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர்கள் கற்க வேண்டும் என்ற கருத்து இன்று அந்த மக்களிடம் மேலோங்கியுள்ளது.
இலங்கை என்ற நாடு தற்போது புதிய ஒரு அத்தியாயதிற்குள் நுழைந்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ், முஸ்லீம்கள் தமது கடந்த கால காழ்ப்புணர்வுகளை மறந்து புதிய காலத்திற்குள் கால் பதிப்பதை பார்க்க முடிகிறது! மார்கழி 31ம் திகதி இரவு 9 மணிக்கு பெற்றா மெயின் வீதி கடைகளின் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் எந்த வித பாகுபாடுமின்றி சகஜமாக தமது புதுவருடப் பொருட்களை முண்டியடித்து வாங்குவதை பார்த்த போது நான் மீண்டும் 1983 முந்தைய இலங்கையில் இருக்கும் ஒரு உணர்வை பெறக் கூடியதாக இருந்தது.
யாழ் குடாவில் இராணுவத்தின் பிரசன்னம் காணப்பட்டாலும் சோதனைச் சாவடிகள் பெருமளவில் குறைந்துள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாட அனைத்து வசதிகளும் உள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்கள் மெதுவாக சுருங்கிக்கொண்டு வருவதை அவதானிக்க முடிந்தது. ஏ9 மீள திறந்த பின் அனைத்துப் பொருட்களும் மிக இலகுவாக பெறகூடியதாக இருக்கிறது. ஆனால் இலங்கை முழுவதும் பண வீக்கத்தின் பாதிப்பை நன்கே உணர முடிந்தது. இருப்பினும் யாழ் நகரில் பல பொருட்கள் கொழும்பு விலையை விட குறைவாகவே உள்ளது. வெளிநாட்டு பணத்தில் வாழும் மக்களை தவிர ஏனையவர்கள் தமது அன்றாட வாழ்விற்கு மிகவும் அவதியுறுகின்றனர். மக்கள் இதைப்பற்றியே அதிகமாக குறைப்பட்டனர்.
என்னுடன் உரையாடிய தமிழ் சிங்கள் முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒரு கருத்தில் ஒன்று பட்டார்கள். இலங்கை என்ற தேசத்தை அனைவரும் கட்டியெளுப்ப இது ஒரு அரிய சந்தர்ப்பம். இலங்கை மக்கள் தமக்குள் அடிபடுவதை நிறுத்தி நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு உழைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் இதைப் புரியாத புலம்பெயர் மக்கள் நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை என்ற பிரிவினை கோசங்களை வைப்பதை மீண்டும் பிரிவினையை தூண்டும் ஒரு ஆபத்தான சமிக்சையாகவே பார்க்கிறார்கள். தம்மை மீண்டும் பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடம் இருப்பதை உணர முடிந்தது.
மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாண ரீதியல் பரவலாக்கம் செய்வதுதான் ஒரே வழி என்பதை சிங்கள மக்களும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். யுத்த வெற்றியை சிங்கள மக்கள் கொண்டாடினாலும் தமிழ் மக்களின் மீது ஒரு பரிதாப உணர்வு வந்திருப்பதையும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் சிறுபான்மை இனத்தவர்கள் அனைவரும் இந்த நாட்டில் சரி சமமாக நடத்தப்படவில்லை. மீளவும் ஒரு யுத்தம் மீண்டும் வராது தடுக்க வேண்டியது சிங்கள் தலைமைகளின் தற்போதைய கடமை என்ற கருத்தை பல சிங்கள நண்பர்களிடம் காண முடிந்தது. சிங்கள மக்கள் சுயாதீனமாக தமிழ் பகுதிகளில் குடியேறுவதை தமிழர்கள் எதிர்க்கக் கூடாது என்ற கூறிய சிங்கள நண்பர் இதனை அரசு திட்டமிட்டு செய்வதை கண்டிக்கவும் தவறவில்லை. ஒரு தமிழனோ முஸ்லீமோ நாட்டின் எந்த பகுதியிலும் குடியேற உரிமையுள்ளது. அதே உரிமை சிங்கள் மக்களிற்கும் உள்ளது என்பதை தமிழர்கள் மதிக்க வேண்டும் என்ற அவரின் கூற்று எனக்கு நியாயமாகவே இருந்தது.
புதுவருட தினம் தொடர்ந்த பட்டாசு வான வெடியுடன் பிறந்த போது தமிழ் பேசும் கிறீஸ்தவர்கள் புத்தாண்டு பிரார்தனைகளை முடித்து விட்டு எந்தவித பயமுமின்றி அதிகாலை 1 மணிக்கு வீடு சென்றார்கள். இந்த நிலை தேர்தலுக்கு பின்னும் நீடிக்குமா என்ற சந்தேகம் தமிழர்கள் மனதில் இல்லாமல் இல்லை. நான் தாயகத்தில் தங்கி நின்ற காலப்பகுதியல் இரண்டு தமிழர்கள் கொழும்பில் கடத்தப்பட்டதாக ஒரு செய்தி வந்தது. ஆனால் பின்னர் அதைப் பற்றிய செய்திகள் வரவில்லை.
ஆனால் கொழும்பில் தற்போது தேர்தல் வன்முறைகள் ஆரம்பமாகியுள்ளது. ஆளும் கட்சி பழிவாங்கலாக பலரை கைது செய்கின்றார்கள். கடத்துகிறார்கள். மருதானையில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரரான கித்ஜஸிரி ராஜபக்ஷ கடத்தப்பட்ட போது அந்த பகுதி மக்கள் இன பேதமின்றி தெருவில் இறங்கி போராடியதை காண முடிந்தது. இந்த போராட்டத்தின் விளைவோ என்னவோ முகமூடி அணிந்தவர்களால் கடத்தப்பட்ட அந்த அமைப்பாளர் பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நபர் ஏற்கனவே பொலீசாரால் சமூக விரோத செயற்பாடுகளிற்காக எச்சரிக்கப்பட்டவர். கடந்த மே மாதத்திற்கு பின்னர் பாதாள உலக அமைப்பை சேர்ந்த பலர் இவ்வாறு முகமூடி அணிந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டு பின்னர் தெருக்களில் பிணமாக மீட்கப்பட்ட செய்திகளை பலர் இந்த நேரத்ததில் நினைவு கூர்ந்தனர். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதனால் இலங்கையில் ஜனநாயகம் தளைக்க மக்கள் அனைவரும் இன மத பாகுபாடின்றி போராட வேண்டிய தேவை இன்று மிகவும் அவசியமாக உள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு புதிய மாற்றம் ஒன்றை சகல இனத்தவர்களும் விரும்பினாலும் அதை நிறைவேற்றும் ஒருவர் இந்த தேர்தலில் நிற்கவில்லை என்ற கருத்தே பெரும்பான்மையாக உள்ளது. வடக்கில் உள்ள மக்கள் இந்த தேர்தல் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த தேர்தலை பாவித்து குறைந்தபட்சம் சில சலுகைகளையாவது தமிழ் கட்சிகள் தமக்கு பெற்று தர வேண்டும் என்ற கருத்தில் தமிழ் மக்கள் பலர் உடன்பட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாருக்கு ஆதரவளிப்பது என்ற முடிவுக்கு வர இழுத்தடித்தை குறையாக கூறிய மக்கள் தேர்தல் காலங்களில் என்னென்ன சலுகைகளை பெற முடியேமோ அவற்றை பெற வேண்டியதுதான் ஒரேவழி என்று கூறினர். முஸ்லீம்களை பொறுத்தவரை அவர்களின் வாக்குகள் பிரியும் நிலைப்பாடே உள்ளது. ஜேவீபியின் பிரசன்னம் சரத் பொன்சேகாவிற்கு போகும் முஸ்லீம் வாக்குகளை மகிந்த ராஜபக்சவிற்கு திருப்பியுள்ளது. மேலும் ஒரு இராணுவ தளபதியை நாட்டின் ஜனாதிபதியாக்குவது ஆபத்தானது என்ற கருத்தில் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அச்சம் தெரிவிப்பதும் மகிந்த மீதான ஆதரவை கூட்டியுள்ளது.
திரும்பும் பக்கமெல்லாம் கண்ணில்படும் மகிந்த ராஜபக்ஷவின் படங்கள் விளம்பரங்கள் சிலவேளை எதிர்மறையான விளம்பரமாக மாறலாம். இந்தியாவில் நான் பார்த்த கட்அவுட்டுகளை மிஞ்சும் அரசின் பிரச்சாரங்கள் நேர்மறையான தேர்தல் முடிவை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
யார் குத்தி என்றாலும் அரிசி வரட்டும் மக்கள் கஞ்சியாவது குடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம். இன்று பெரும்பான்மையான சிங்கள தமிழ் முஸ்லீம் மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஒன்றாகவே எனக்குப்படுகிறது. ஆனால் இந்தத் தேர்தல் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவரப் போவதில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வைக்கொண்டு வருவதற்கு இன மத பேதங்களுக்கு அப்பால் மக்கள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே தீர்வு கிட்டும்.
அந்த வகையில் தெருவில் காவல் கடைமையில் நின்ற ஒரு இராணுவ சிப்பாயின் “இந்த கிழட்டு அரசியல்வாதிகளை வீட்டுக்கனுப்பி விட்டு இளையவர்கள் பாராளுமன்றம் சென்று இந்த நாட்டை வளம்படுத்த வேண்டும்” என்ற அங்கலாய்ப்பு நியாயமானதாகவே இருந்தது.
இலங்கை சென்ற மற்றவர்களின் அனுபவம்:
புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்
புலம்பெயர்ந்த தமிழர் குழு - இலங்கை அரசு - கொழும்பு மாநாடு : ரி கொன்ஸ்ரன்ரைன்
Thesamnet
0 விமர்சனங்கள்:
Post a Comment