பிரபாகரன் தம்பி கண்ணீர் பேட்டி
இலங்கையில் அதிபர் தேர்தல் களைகட்டியுள்ளது. அதிபராக இருக்கும் ராஜபக்úஸயும், அவரை எதிர்க்கும் முன்னால் ராணுவத் தளபதி ஃபொன்சேகாவும் கடும் போட்டியில் இருக்கிறார்கள். இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மரணம் அடைந்ததாத திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நீண்ட நாட்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார் என்றும், அதனால் இறந்துவிட்டார் என்றும் இலங்கை அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. "அப்படிப்பட்ட மோசமான உடல்நிலையிலும் கூட ஏன் இலங்கை அரசு வேலுப்பிள்ளையை ராணுவ முகாமில் அடைத்து வைத்தது? மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு ஏன் சிறப்புச் சிகிச்சைகள் அளிக்கவில்லை?' என்ற கேள்வி எழுகிறது. அது மட்டுமின்றி வேலுப்பிள்ளை தமிழகம் திரும்ப ஆர்வமாக இருந்த நேரத்தில் இப்படியொரு செய்தி வந்தது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய பெற்றோருடன் உடன் பிறந்தோர் மற்றும் ரத்த சம்பந்த உறவினர்கள், மீடியாக்களிடம் பேசுவதை விரும்பத்தகாத செயலாக இதுவரை கருதி வந்தனர். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரின் நெருங்கிய உறவினர்கள் மீடியாக்களிடம் கொஞ்சம் வாய்திறக்க ஆரம்பித்துள்ளனர். வேலுப்பிள்ளை மரணம் குறித்து ஒவ்வொரு விதமாகச் செய்திகள் வந்து கொண்டிருக்க, நாம் திருச்சி மாவட்டம் முசிறியில் தங்கியுள்ள பிரபாகரனின் சித்தப்பா மகன் ராஜேந்திரனிடம் பேசினோம்.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை எவ்வளவு நாள் உங்களுடன் இருந்தார்?
எனது அப்பாவும், திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் உடன் பிறந்த சகோதரர்கள். எனக்கு வேலுப்பிள்ளை பெரியப்பா உறவு. 1980களில் புலம் பெயர்ந்து தமிழகம் வந்த நாங்கள் திருச்சி கே.கே.நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். பெரியப்பா குடும்பமும் எங்கள் குடும்பமும், ஒன்றாகவே தங்கியிருந்தது. அண்ணன் பிரபாகரன் அவ்வப்போது அங்கே வந்துவிட்டுப் போவார். பிறகு நாங்கள் முசிறிக்கு இடம் பெயர்ந்தோம். நான் ஒரு மெடிக்கல் கடையைத் துவக்கி நடத்தி வந்தேன். திருச்சியில் தங்கியிருந்த பெரியப்பா வேலுப்பிள்ளை, பெரியம்மா பார்வதி ஆகியோருக்கு சில அரசியல் பிரமுகர்களும், காவல்துறையினரும் பலவிதங்களில் நெருக்கடி கொடுத்தனர். அப்போது பெரியம்மா பக்கவாதத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் 2000ம் ஆண்டு வாக்கில் கே.கே.நகரிலிருந்து குடி பெயர்ந்து, முசிறி வந்து என்னுடன் தங்கினர். முசிறி பழைய பேருந்து நிலையமருகே நான் நடத்தி வந்த மெடிக்கல் ஷாப்பின் பின் பகுதியில்தான் என் வீடு. அங்கே தங்கி பெரியம்மா சிகிச்சை எடுத்துக் கொண்டார். பிறகு பெரியப்பாவும், பெரியம்மாவும் பிரபாகரனுடன் வசிக்கச் சென்றுவிட்டனர். அங்கேயிருந்து அவ்வப்போது என்னைத் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
எப்போது அவர்கள் ராணுவத்தின் பிடியில் சிக்கினார்கள்?
கடந்த வருடம், மே மாதம் பதினைந்தாம் தேதி வரை அண்ணனுடன் இருந்த பெரியப்பாவும், பெரியம்மாவும் முள்ளிவாய்க்கால் போரில் இலங்கைப் படை முன்னேறிய பிறகு அண்ணனை விட்டு வெளியேற்றி வைக்கப்பட்டனர். மக்களோடு மக்களாகக் கலந்து வெளியேறியவர்களை ராணுவம் பிடித்து சித்திரவதை செய்தது என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
வேலுப்பிள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததாக இலங்கை அரசு அறிவித்துள்ளதே?
பெரியப்பாவையும், பெரியம்மாவையும் ராணுவ முகாமில் அடைத்தார்கள். 86 வயதான பெரியப்பா வேலுப்பிள்ளை திடகாத்திரமானவர். அவருக்கு நோய், நொடி எதுவும் தாக்காது. எப்போதாவது ஜலதோஷம் பிடிக்கும். ஜலதோஷம் கடுமையாக இருந்தால் மட்டும் மாத்திரை சாப்பிடுவார். மற்றபடி அவர் எந்த நோய்க்காகவும் மாத்திரை சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவர் பக்க வாதத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக இலங்கை அரசு சொல்கிறது. இது சுத்தமான பொய். அவருக்குப் பக்கவாதம் எதுவுமில்லை.
இலங்கை அரசு இப்படியொரு பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லையே?
இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது பல அத்துமீறல்களை நடத்தியிருக்கிறது. மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்திருக்கிறது. இதனால் உலக நீதிமன்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வரப் போகிறது. அந்த விசாரணைக்கு முக்கியமான சாட்சியாக வேலுப்பிள்ளை இருந்துவிடக்கூடாதே என்பதற்காக இலங்கை அரசு அவரைக் கொன்றிருக்கலாம் என்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது.
இந்த சந்தேகம் உங்களுக்கு எப்படி வந்தது?
2009,மே மாதத்திலிருந்து,"பெரியப்பா வேலுப்பிள்ளையையும், பெரியம்மா பார்வதியையும் என்னுடன் சேர்ந்து வசிக்க இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள்' என்று இலங்கை அரசிற்கு ஏராளமான கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளேன். இந்திய அரசிற்கும் கோரிக்கை வைத்துள்ளேன். அவர்கள் கடைசிக் காலத்திலாவது நிம்மதியாக வாழட்டுமே என்பதற்காக நான் இது போன்ற முயற்சிகளை எடுத்தேன். ஆனாலும் பெரியப்பாவை கடைசிக் காலத்தில் நல்லபடியாக பார்த்துக் கொள்ள முடியவில்லை. இலங்கை அரசு ஏன் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பவில்லை? இப்போது பெரியப்பா இறந்துவிட்டார் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது?
எஞ்சியிருக்கும் பிரபாகரனின் தாயை தமிழகத்திற்கு அனுப்பி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிவாஜிலிங்கம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாரே?
"பெரியம்மாவையாவது என்னுடன் சேர்ந்து வசிக்க அனுப்பி வையுங்கள்' என இலங்கை அரசிடம் நானே கோரிக்கை வைத்துள்ளேன். பிரபாகரனின் தங்கையான கனடாவில் வசிக்கும் வினோதினி எனக்குக் கடிதம் எழுதி, "அம்மாவை அழைத்து உங்களுடன் வைத்து கவனித்துக் கொள்ளுங்கள்' எனக் கூறியுள்ளார். அம்மாவையாவது (பார்வதி) இறுதிக் காலத்தில் நிம்மதியாக எங்களோடு வாழ இலங்கை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசும், இந்திய அரசும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அ.சாதிக்பாட்சா
0 விமர்சனங்கள்:
Post a Comment