புதிய கிளிநொச்சி
கிளிநொச்சி என்றால் அனைவரது கண்முன்னே விரியும் செழுமை நவீனமும் தொன்மையும் கலந்த நகர், கோவில்கள், அழகிய வயல்வெளிகள் அழகான தமிழ்ப்பெயர்கள், என எண்ணற்றவற்றைக் கூறலாம். அத்தகைய கிளிநொச்சியின் தற்போது இருக்கும் நிலைதான் வேதனைக்குரியது.
கிளிநொச்சியின் பிரதான அதாவது ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் காணப்பட்ட பெருமளவான கட்டடங்கள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் பெருமளவான சிங்கள இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னர் கிளிநொச்சியில் செயற்பட்டு வந்த பேருந்து தரிப்பு நிலையம் இருந்த இடம் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ் மக்களது தொன்மையை வெளிப்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக டிப்போ சந்திப்பகுதியில் அமைக்கப்பட்டு வந்த அரும்பொருட்காட்சியகம், லெப்.கேணல் சந்திரன் பூங்கா, சேரன் மற்றும் பாண்டியன் சுவையூற்றுக்கள் தரைமட்டமாக்கப்பட்டதுடன், சந்திரன்பூங்கா அமைக்கப்பட்ட இடத்தில் பாரிய அளவிலான இராணுவ தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மாவட்ட நீதி மன்றக் கட்டடமும் முற்றாக இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. முன்னைய கிளிநொச்சியின் நினைவு யாருக்கும் வரக் கூடாது என்ற நோக்கிலான செயற்பாடுகளே அங்கு இடம்பெற்றுள்ளன.
கிளிநொச்சியின் மத்தியில் இருந்த கிறிஸ்தவத் தேவாலயமும் சிதைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிளிநொச்சி காவல்ப்பணிமனையினை இராணுவத்தினரின் உணவகமாக மாற்றியமைத்துள்ளனர். அதில் பணியாற்றும் எந்த இராணுவத்தினருக்கும் தமிழே தெரியாது என்பதுதான் அடுத்த விடயம். இதனை விடவும் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து ஏனைய மாவட்டங்களில் வசிக்கும் ஆசிரியர்களை கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு கட்டாயம் வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பி;ன் காரணமாக ஆசிரியர்கள் தொடர் பயணங்களை மேற்கொள்ளவேண்டிய அவல நிலையில் காணப்படுகின்றனர். இவர்களில் பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த ஆசிரியர்களின் நிலைப்பாடு என்பது வேதனை அளிப்பதாகவே உள்ளது.
இதே போன்று அரச செயலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது. முகாம்களில் இருந்து கிளிநொச்சிக்கு மீள் குடியமர்வுக்காக கொண்டு வரப்படுகின்ற மக்கள் ஒரு வாரகாலமாக பிரதான வீதியை அண்டிய பாடசாலைகளில் வைத்து மீண்டும் கடும் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேவேளை அவர்கள் அதன் பின்னர் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இராணுவ நிலைகளுக்கு அருகருகாக தகரங்கள் வழங்கப்பட்டு சிறிய கொட்டில்களில் வசிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மிகச் சிலரே தமது வீடுகளில் குடியமர அனுமதிக்கப்படுகின்றனர். பெருமளவான மக்கள் இராணுவ முகாம்கள் காரணமாக தமது சொந்த வீடுகளையோ, காணிகளையோ சென்று பார்வையிடக் கூட அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.
இராணுவத்தினர் தாமே தொலைத்தொடர்பு நிலையங்களை அமைத்துள்ளனர். கைத்தொலைபேசி பயன்படுத்துவோர் தமது பற்றறிகளை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு இராணுவத்தினருக்கு தலா 50ரூபா செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. கிளிநொச்சியில் குடியமர்த்தப்பட்ட எந்த ஒரு தனி நபருக்கும் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என்பது இராணுவத்தினரின் வியாபார நோக்கிலான செயற்பாட்டை பகிரங்கப்படுத்துவதாக அங்கிருக்கும் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
கனகபுரம், ஜெயந்திநகர், உதய நகர் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பிரதான வீதியான கனகபுரம் தெருவில் முன்னர் சந்தை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் இராணுவச் சோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதனூடாகச் செல்லும் ஒவ்வொருவரும் இராணுவ அனுமதி அட்டை வைத்திருக்க வேண்டும். வெளி இடங்களில் இருந்து தமது பகுதிகளுக்கோ உறவினர்களின் வீடுகளுக்கோ செல்வதாக இருந்தால் அங்கு மீளக் குடியமர்த்தப்பட்டவர்கள் அவர்களை பிணை எடுத்துச் செல்வதுடன் அவர்களை பிற்பகல் 4மணிக்கு முன்பாக வெளியேற்றிவிடவேண்டும். இதனால் தூர இடங்களில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் செல்வோர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
இதனை விடவும் கிளிநொச்சி திருநகர் வீதி முற்றாக மூடப்பட்டு அங்கு பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கட்டம் முழுமையாக பாரிய இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்படுகின்றது. கரடிப்போக்கு, பரந்தன் சந்திப்பகுதிகளில் உள்ள அரச மரங்களின் கீழ் பாரிய அளவிலான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை கிராமங்களின் உட்பகுதிகளிலும் அவ்வாறான விகாரைகள் காணப்படுவதாக பெயர் குறிப்பிடவிரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
மண்ணுக்காய் உயிர் துறந்த எந்த ஒரு மாவீரரது நினைவுச் சின்னங்களும் அங்கில்லை. அனைத்தும் அனைத்துலக நடைமுறைகளை மீறும் வகையில் அழிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தத்தில் சிங்களப் பெயர்ப்பலகைகளுடன் முற்றுமுழுதாய் இராணுவத்தினரால் சூழப்பட்ட மாறுபட்ட கிளிநொச்சியே அங்கு காணப்படுகின்றது.
- இராவணேசன்
0 விமர்சனங்கள்:
Post a Comment