இந்தக்கதை முற்றிலும் நம்பக்கூடிய மாதிரி இல்லை!!!!!
அதிரவைக்கும் இந்தியத் தமிழ்ப் பெண்கள்.... அலரும் அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள்
அமெரிக்காவாழ் இந்திய இளைஞர் அவர். யு.எஸ்.ஸுக்கு விமானமேறும் முன் அவசரமாக அவர் நம்மைப் பார்க்க விரும்பியதால், விமான நிலையத்தில் பிரசன்னமானோம்.
கண்ணில் ரேபான் குளிர்க்கண்ணாடி, ஆப்பிள் சிவப்பு நிறம், நெற்றியில் விழும் சுருள் முடி, சுருக்கமாகச் சொல்லப்போனால் இளவரசன் போல இருந்தார் அந்த இளைஞர்.
அப்படி என்ன பேசப்போகிறார்? சர்வதேச பயங்கரவாதம், பேரழிவு ஆயுதம், அணுசக்தி ஒப்பந்தம், டாலர் மதிப்பு உயர்வு பற்றி ஏதாவது பேசப்போகிறாரா என்றபடி அவரது முகத்தை நாம் ஏறிட்ட நேரம், அந்த இளைஞரின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர்.
‘‘விளக்கைப் பிடிச்சுக்கிட்டு கிணற்றில் விழுந்த கதை மாதிரி ஆயிட்டுது சார் என் வாழ்க்கை. என்னால் ஒரு பாவமும் அறியாத எழுபது வயதைத் தாண்டிய என் அப்பாவும், அம்மாவும் சிறைக்குப் போகப் போகிறார்கள் சார்!’’ என்று அரற்ற ஆரம்பித்தார் அவர். அது விமானநிலையம் என்பதை அவருக்கு நினைவூட்டி, ஆசுவாசப்படுத்தி பேச வைத்தோம். பெயர் வேண்டவே வேண்டாம் என்றபடி பேசத் தொடங்கினார் அவர்.
‘‘சென்னைதான் என் சொந்த ஊர். ஆசாரம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். இரண்டு அக்காள், இரண்டு அண்ணன்கள். நான் கடைக்குட்டி. அண்ணன்கள் இருவரும் கலி போர்னியா மாநிலத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களாக கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அக்காள்கள் திருமணமாகி டில்லியிலும், மும்பையிலும் வசிக்கிறார்கள். எங்களை ஆளாக்கிய அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா ஹவுஸ் ஒய்ப்.
அக்காள் இருவருக்கும் திருமணம் நடந்தபின் மூத்த அண்ணா திருமணம் செய்ய நினைத்திருந்ததால் அப்படியிப்படியென்று அவருக்கு 46 வயதாகி விட்டது. நம் கலாசாரத்துக்கு ஒத்துப் போகிற மாதிரி, குறைவாகப் படித்த, குடும்பப்பாங்கான பெண் வேண்டும் என்று அவர் விரும்பியதால் பட்டுக் கோட்டை பக்கம் ஒரு பெண்ணைப் பார்த்தோம்.
பட்டப்படிப்பு படித்திருந்த அவளை, அண்ணா வுக்குப் பிடித்துப்போனதால் திருமணம் நடந்தது. அண்ணனுடன் அமெரிக்கா போன அவள், போன ஒரே மாதத்தில் அண்ணாவிடம் வம்பு செய்ய ஆரம்பித்தாள். உறவுக்கு முயலும்போது ஹிஸ்டீரியா வந்த மாதிரி அவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறாள். ‘நீ கிழவன். உன்னுடன் வாழ்வது நரகம். என்னைத் தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று அவள் மிரட்ட, அண்ணா நொறுங்கிப் போனார். ‘என்னைப் பிடிக்கவில்லை என்றால் திருமணத்துக்கு நீ மறுத்திருக்கலாமே?’ என்று அண்ணா சொன்னபோது, ‘வீட்டில் என் விருப்பத்தை யார் கேட்டார்கள்? ‘அமெரிக்க மாப்பிள்ளையைக் கட்டிக் கொண்டால் நீ இஷ்டம் போல இஷ்டப்பட்டபடி வாழலாம். அவனைப் பிடிக்காவிட்டால் வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடுக்கலாம். நீ கேட்கிற பணத்தை அவன் கதறிக் கொண்டு உன் காலடியில் வைப்பான்’ என்றார்கள். அந்த யோசனை பிடித்திருந்ததால்தான் நான் திருமணத்துக்குச் சம்மதித்தேன்’ என்றிருக்கிறாள்.
அதிர்ந்து போன அண்ணா, ‘சீ! நீயும் ஒரு பெண்ணா?’ என்று திட்ட, அதற்காகவே காத்திருந்ததுபோல அவள், அமெரிக்க போலீஸாரிடம் போய், கணவர் தன்னை சூடு வைத்தும், மின்சாரம் பாய்ச்சியும் கொடுமைப்படுத்துவதாகப் புகார் கூறிவிட்டாள். ஆத்திரத்தில் அண்ணா அவளை கைநீட்டி அடித்துவிட, அண்ணா மீது வழக்கு விழுந்தது. அந்தப் பெண் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டாள்.
ஊருக்கு வந்த வேகத்தில் என் அப்பா, அம்மா, அண்ணன், அக்காள்கள் எல்லோர் மீதும் அவள் வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்து விட்டாள். ஜீவனாம்சமாக ஒரு கோடி ரூபாய் கேட்டாள். திருமணமாகி அவள் எங்கள் வீட்டில் இருந்ததே இரண்டு நாட்கள்தான். அந்த இரண்டு நாளில் நாங்கள் ஓராயிரம் கொடுமை செய்ததாக இருநூறு பக்கப் பட்டியல் தயார் செய்து கோர்ட்டில் கொடுத்து விட்டாள்.
இதனால் என் அப்பா, அம்மா, அக்காள்கள் இருவரும் 15 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவர வேண்டியதாயிற்று. அண்ணாவுக்கு வேலை போனது. வழக்குக்காக அவர் அமெரிக்காவில் இருந்து இங்குவந்து மீண்டும் அமெரிக்கா போய் புதுவேலை தேடுவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிட்டது. அண்ணாவின் மனைவி எங்கள்மேல் தொடர்ந்த பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில்தான் அடுத்த கொடுமையும் நிகழ்ந்தது’’ என்ற அந்த இளைஞர் தன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.
‘‘அண்ணாவுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து திருமணம் என்றாலே பதுங்க ஆரம்பித்த என் 2-வது அண்ணனுக்கும் வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கினார்கள். கும்பகோணத்தில், முதுகலை முடித்த ஒரு பெண் கிடைத்தாள். ‘அமெரிக்க மாப்பிள்ளை, மாதம் 40,000 யு.எஸ்.டாலர் சம்பளம்’ என்றதும் அவளது வீட்டார் குதிபோட்டு வந்தனர். ‘கல்யாணம் ஆனதும் பெண்ணை அமெரிக்காவுக்கு அழைச்சுண்டு போவீர்களா? அமெரிக்க பிரஜைக்கான கிரீன் கார்டு அவளுக்குக் கிடைக்குமா?’ என்பதில்தான் பெண்வீட்டார் அநியாய ஆர்வம் காட்டினார்கள்.
திருமணம் நடந்து அண்ணன் புதுமனைவியுடன் விமானமேறினார். அங்கு போனதும் அந்தப் பெண்ணுக்கு கால் ஒரு இடத்தில் பாவவில்லை. கண்டவர்களுடன் போனில் பேசுவது, ஆண் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு நைட்கிளப்களில் சுற்றி குடித்து, கூத்தடிப்பது என்று ஆரம்பித்து விட்டாள். ‘நீ இந்தியப் பெண்தானா?’ என்று அண்ணா எரிச்சல்பட்டுக் கேட்ட போது அவள் அளித்த பதில் ‘நான் உனக்குக் கழுத்தை நீட்டியதே இதற்காகத்தான் கண்ணா!’
தகராறு முற்றி, என் 2-வது அண்ணன் அந்தப் பெண்ணை கும்பகோணத்துக்குக் கொண்டுபோய் பிறந்த வீட்டில் விட்டுவிட்டார். அவர்கள் அமெரிக்க மாப்பிள்ளையைப் பிடித்ததே வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடுத்து கோடிக்கணக்கில் கறக்கத்தான் என்பது பின்னர்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. மூத்த அண்ணாவுக்கு நேர்ந்த கதி இளைய அண்ணாவுக்குத் தெரியும் என்பதால் அவர், அந்த கும்பகோணம் பெண்ணிடம் நஷ்டஈடாக ரூ.15 லட்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தார். அவளோ, ‘ரூ.2 கோடியை வை!’ என்று ஒற்றைக்காலில் நின்றாள்.
அண்ணன் அதற்கு மசியாத நிலையில், எங்கள் மேல் வழக்கு விழுந்தது. அனைவரும் சிறைக்குப் போய் முன்ஜாமீனில் வெளிவந்தோம். வழக்கு நடந்து வந்த வேளையில் இப்போது ஒரு புரோக்கர் மூலமாக அந்தப் பெண், ரூ.50 லட்சம் கேட்க, நாங்கள் ரூ.25 லட்சத்தில் நிற்கிறோம். இந்தப் பிரச்னையில் என் அக்காள்கள் இருவரும் கூட சிறை செல்ல நேரிட்டதால் எரிச்சலடைந்த என் அத்தான்கள் ‘வழக்கு முடியும் வரை இருவரும் பிறந்த வீட்டில் வாழாவெட்டியாக இருங்கள்’ என்று அவர்களை பிறந்தகத்துக்கு அனுப்பி விட்ட கொடுமையும் நடந்தது.
நான் விசாரித்தபோது, இப்படி ஜீவனாம்சம், வரதட்சணை வழக்குத் தொடர்ந்து பல கோடிகளைக் கறப்பதற்காகவே இந்தியாவில் பலர் அமெரிக்க மாப்பிள்ளைகளைத் தேடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதில் சிக்கிய அமெரிக்க மாப்பிள்ளைகள் பலர் வேலையை மட்டுமின்றி அமெரிக்கக் குடியுரிமையையும் இழந்திருக்கிறார்கள். என் அண்ணன்களுக்கும் இதுதான் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
இதற்குள் சூடுபட்ட பூனைபோல ஆகிவிட்ட நான், ‘இந்தியப் பெண்ணா? ஐயோ வேண்டாம்!’ என்று உஷாராகி, அமெரிக்காவில் ஒரு வெள்ளைக்கார பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டேன். ஒரு வருடம் மட்டுமே என்னுடன் வாழ்ந்த அவள் எக்காரணம் கொண்டும் எனக்கு பிள்ளை ஒன்றைப் பெற்றுத் தர மறுத்துவிட்டாள். ‘ஒரு கருப்பனுடன் என்ஜாய் பண்ணலாம். ஆனால் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது’ என்பது அவளது பாலிஸி.
அந்த அமெரிக்கப் பெண்ணுக்கு நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸ் இருந்ததால் அவளை டைவர்ஸ் செய்து விட்டேன். இனி என் வாழ்வில் திருமண பந்தமே கூடாது என்று ஒரு சன்னியாசி போல லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நானுண்டு என் வேலையுண்டு என்றிருந்தேன். ஆனாலும் விதி ‘இந்தியப் பெண்’ வடிவத்தில் வந்து என்னைப் டித்துக் கொண்டது’’ என்ற அந்த இளைஞர் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு சோகக் கதையைத் தொடர்ந்தார்.
‘‘என் வாழ்வில் இனி திருமணமே வேண்டாம் என்றிருந்த நிலையில், என்னுடன் பணிபுரிந்த நண்பர்கள், ‘ராஜகுமாரன் மாதிரி இருக்கும் நீ சும்மா இருப்பதா? உன் அந்தஸ்துக்குத் தக்கபடி ஒரு பெண்ணைப்பார். எந்தப் பிரச்னையும் வராது’ என்று ஆசை காட்டினார்கள். எனக்காக அவர்களே மேட்ரிமோனியல் விளம்பரம் செய்தார்கள்.
அந்தவகையில் என் இ-மெயிலுக்கு பெண்களின் பெற்றோர்கள் பலர் பயோடேட்டா அனுப்பினார்கள். ஆனால் ஒரு பெண் தன்னிச்சையாக அவளே அவளது பயோடேட்டாவை அனுப்பியிருந்தாள். புகைப்படத்தில் அப்சரஸ் மாதிரி அவள் அழகாக இருந்தாள். அவளை நான் தொடர்பு கொள்ளாத நிலையிலும் அவள் விடாமல் எனக்கு இ-மெயில் அனுப்பினாள். திடீரென ஒருநாள் சாட்டிங்கில் பேசினாள்.
‘‘நான் பேரழகி. என்னைத் துரத்தும் எந்த ஆண் மகனையும் எனக்குப் பிடிக்காது. நான் விரும்புகிற ஆணை நான்தான் துரத்தித் துரத்தி காதலிப்பேன் என்று என் ஜாதகம் சொல்கிறது. அவன் என்னைவிட வயதில் சின்னவன் என்றும் ஜாதகத்தில் இருக்கிறது. அதுபோல எனக்கு 32 வயது. உனக்கு 31 வயது. நான் தேடிய ஆண்மகன் நீதான்’’ என்று அவள் சாட்டிங்கில் பிதற்ற ஆரம்பித்தாள்.
அவள் பைத்தியமோ என்று நினைத்து தவிர்த்துப் பார்த்தேன். அவளோ போனில் வாய்விட்டுக் கதற ஆரம்பித்தாள். ஒருவேளை பணத்துக்காக வெளி நாட்டு மாப்பிள்ளைகளை வளைக்கும் மணப்பெண் கும்பலைச் சேர்ந்தவளோ என்ற சந்தேகத்தில், தமிழகத்தில் உள்ள என் நண்பர்களிடம் அவளைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரம்.
அவள் தமிழ்நாட்டின் முக்கிய நகரமொன்றில் வசிக்கும் கோடீஸ்வர வைர வியாபாரியின் மகள். முதுகலை முடித்தவள். வீட்டில் அவளுக்கு வேலை செய்ய மட்டுமே மூன்று வேலைக்காரிகள் இருக்கிறார்கள். அவளது பங்களாவில் மொத்தம் 9 கார்கள். அவளது அப்பா அவளுக்காக சிம்லா முதல் கன்னியாகுமரி வரை மாப்பிள்ளை தேடிவருகிறார். அவளோ அனைத்து வரன்களையும் தட்டிக் கழித்து வருகிறாள். ‘பேரழகி என்ற கர்வத்துடனேயே மகள் வயதாகி கிழவியாகி விடுவாளோ?’ என்ற பயத்தில் அவளது அப்பா இருக்கிறார். இவையே நான் தெரிந்து கொண்ட தகவல்கள்.
அந்தப் பெண் மீண்டுமொருமுறை என்னிடம் பேசியபோது, ‘இந்தியப் பெண்கள் எல்லோருமே பிளாக்மெயிலர்கள்’ என்ற நான், என் அண்ணன்களின் கதைகளைச் சொன்னேன். கோபப்பட்ட அவள், ‘என்னையும் அப்படி நினைத்து விட்டாயா?’ என்று பொங்கினாள். திடீரென ஒரு நாள் திடுதிப்பென அவள் டூரிஸ்ட் விசாவில் அமெரிக்கா வந்து, என்முன் நின்றபோது திகைத்துப் போய் விட்டேன்.
‘உன் மீது நான் உயிராய் இருக்கிறேன். உன் மேல் எந்த வழக்கும் போட மாட்டேன் என்று வெற்று பேப்பரில் நான் கையெழுத்துப் போட்டுத்தரத் தயார்’ என்று அவள் உருகினாள். ‘நான் ஏற்கெனவே திருமணமாகி டைவர்ஸ் பெற்றவன்’ என்ற உண்மையை அவளிடம் சொன்னேன். அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘உனக்கு எத்தனை கல்யாணம் ஆகியிருந்தால் என்ன? என் புருஷன் நீதான்’ என்று என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவளை ஊருக்கு அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
ஊருக்குப் போனபிறகும் போன்கால், சாட்டிங், இ-மெயில் தொடர்ந்தது. ஒருநாள் என் இல்லத்துக்கு ஒரு பார்சல் வந்தது. பிரித்தபோது அதில், அவள் கையெழுத்துப் போட்ட வெற்று ஸ்டாம்ப் பேப்பர்கள் இருந்தன. ‘இனியும் நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தால் என் பிணம்தான் வீட்டில் கிடக்கும்’ என்று அவள் மிரட்ட, உடனே ஊருக்கு விமானமேறினேன். அப்பா, அம்மாவிடம் பேசி, இரண்டே நாளில் பத்திரிகை அச்சடித்து, சுமார் 300 பேரை அழைத்து, ஒரு கோயிலில் என் திருமணம் நடந்தது. ஒரு வார காலத்துக்குப் பின் அவளுக்கு ஒரு மாதகாலம் தாற்காலிக விசா எடுத்துக¢கொண்டு அமெரிக்கா புறப்பட்டேன்’’ என்ற அந்த இளைஞர் மீண்டும் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு வேகமாகக் கதை சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ஒரு வாரம்தான் அவள் நல்லமாதிரி இருந்தாள். என் குடும்ப நண்பர்கள் இருவர் என் வீட்டுக்கு வந்த போது அவளும், நானும் சமையல் செய்து உணவு பரிமாறினோம். செக்ஸில் என்னைவிட அவள் ஆர்வமாக இருந்தாள். புதுப்புது வித்தைகளைச் சொல்லித் தந்தாள். ‘இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டபோது, ‘படித்துத் தெரிந்து கொண்டேன். ஃப்ரெண்ட்ஸ் சொல்லித் தந்தார்கள்’’ என்றாள்.
அப்பாவியாக அவள் சொன்னதை நம்பினேன். ஆணுறை பயன்படுத்தாமல் ஒருமுறைகூட அவள் என்னை நெருங்கவிடவில்லை. ‘கணவன், மனைவிக்குள் ஆணுறை எதற்கு?’ என்று நான்கேட்ட போது, ‘தாற்காலிக விசாவில்தானே என்னை இங்கே கூட்டி வந்திருக்கிறாய்? கிரீன்கார்டு வாங்கிக் கொடு. உனக்கு குழந்தையைச் சுமப்பது பற்றி அப்போது யோசிக்கிறேன்’ என்றாள்.
அதன்பின் ஊருக்குக் கிளம்பிய அவள், அங்கிருந்து போன் செய்தபோது கேட்ட முதல் கேள்வியே, ‘கிரீன் கார்டு எப்போது கிடைக்கும்?’ என்பதுதான். ‘ஒரு வருடம் என்னுடன் தங்கினால்தான் கிரீன் கார்டு கிடைக்கும். தாற்காலிக விசாவில் வந்து என்னுடன் தங்கு’ என்று நான் சொன்னபோது, தனக்கு குளிர்க் காய்ச்சல் என்று பினாத்திய அவள்,
‘உன்னிடம் ஒரு வாரத்தில் என்ன சுகம் கண்டேன்? உன் நண்பருக்கும் அவர் மனைவிக்காகவும் என்னை வெங்காயம், காய்கறி வெட்ட வைத்து விட்டாயே? நீ என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தாய். அதனால்தான் எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது’ என்றாள். ‘நான் எப்போது உன்னை செக்ஸ் டார்ச்சர் செய்தேன்?’ என்று கேட்டபோது, ‘என் மேல் அமர்ந்து நீ ஏதோ செய்ததில் என் தொடையில் ரத்தம் கன்றிப்போய் விட்டது’ என்று பச்சை பச்சையாக ஏதேதோ சொன்னாள்.
அவளுடன் செல்போனில் பேசிய அந்த நேரம் பீப்பீப் ஒலி எழுந்ததால் என் பேச்சை அவள் பதிவு செய்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். ‘இவள் யார்? ஏன் இப்படி நாடகமாடுகிறாள்?’ என்று அதிர்ச்சியாக இருந்தது. மீண்டுமொரு முறை தமிழக நண்பரை அழைத்து அவளைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். அப்போது கிடைத்த தகவல்கள் அதிர வைத்தன.
‘அவள் பல ஆண்களுடன் தொடர்புள்ளவள். பிடித்த ஆண் கிடைத்தால் அவனை அடைந்தே தீரும் ஒரு மாதிரியான சைக்கோ அவள். திருமணம், தாலி, குடும்பம் இதிலெல்லாம் அவளுக்கு நம்பிக்கையில்லை. திடீரென வெளிநாட்டு ஆண்கள் மேல் மோகம் முட்டியதால், ஒரு கிரீன் கார்டு வாங்கி அமெரிக்காவில் செட்டிலாகிவிடும் எண்ணத்தில் திருமணம் செய்திருக்கிறாள்.
‘கார்டு கிடைக்கத் தாமதமானால் கணவன் மீது அமெரிக்க போலீஸில் டார்ச்சர் புகார் கொடுத்து, இந்தியாவில் ஜீவனாம்ச வழக்குத் தொடுத்தால் அமெரிக்க கிரீன் கார்டு கிடைத்துவிடும்’ என்று சில வக்கீல்கள் அவளுக்கு யோசனை சொல்லியிருப்பதால் தற்போது அந்த முடிவில் அவள் இருக்கிறாள். அதனால்தான் செக்ஸ் டார்ச்சர் பற்றி போனில் பேசியபோது அதைப் பதிவு செய்திருக்கிறாள். இது போக ஒரு மருத்துவரிடம் போய், தனக்குத் தொடையில் காயம், மார்பில் காயம் என்று சர்டிஃபிக்கேட் தர முடியுமா? என்று கேட்டிருக்கிறாள். அதற்காக தன்னையே அந்த மருத்துவருக்குத் தந்திருக்கிறாள்.
திருமணத்துக்கு முன் டூரிஸ்ட் விசாவில் அவள் அமெரிக்கா வந்திருந்தாள் அல்லவா? அப்போது உடனடி பாஸ்போர்ட், விசாவுக்காக சம்பந்தப்பட்ட சிலருடன் அவள் சில இரவுகளைக் கழித்திருக்கிறாள். இதையெல்லாம் எனக்குத் தெரிவித்த நண்பர், ‘எழுபது வயதைத் தாண்டிவிட்ட உன் அப்பா, அம்மா மீதும் அவள் வழக்குத் தொடுக்கும் மூடில் இருப்பதால் உஷாராக இருந்து கொள்’ என்று எச்சரித்தார்.
அதிர்ந்து போன நான் அடுத்த விமானத்தில் சென்னை வந்தேன். அவளைச் சந்தித்தபோது, ‘ஓ! டார்லிங். ரொம்ப முடியலை’ என்று குலாவினாள். அவள் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் என்மீது புகார் தந்து என்னையும், என் வயதான பெற்றோரையும் சிறைக்கு அனுப்பப் போவது உறுதி. அதற்காக யாருடனும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அவள் தயங்க மாட்டாள். இனி என் கதி என்ன? அடிக்கடி நான் இங்கே வந்து அலைய வேண்டியிருக்குமா? கடவுளே! ஒன்றுமே புரியவில்லையே.
அந்த மனப்பாரத்தைச் சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன். இந்திய மணமகள்கள் என்றால் அமெரிக்க மாப்பிள்ளைகளை இனி எட்டியிருக்கச் சொல்லி உங்கள் பத்திரிகையில் எச்சரிக்கைக் கட்டுரை எழுதுங்கள்’’ என்று சொல்லிவிட்டு ரோலிங் சூட்கேசை இழுத்துக் கொண்டு விமானத்தை நோக்கி நகர்ந்தார் அந்த இளைஞர்.
அவர் சென்ற திசையையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
0 விமர்சனங்கள்:
Post a Comment