யாழ்பாணத்தில் தினகரன் விழா
யாழ்ப்பாணம் உட்பட இலங்கைத் திருநாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தென்னிந்தியக் கலைஞர்கள் பாராட்டு தெரிவித்தனர். “அமைதியும், சமாதானமும் நிலவுவதால் யாழ்ப்பாணம் மட்டுமல்ல இலங்கை முழுவதும், நாம் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக வந்து போவோம் இந்த நிலையை ஏற்படுத்திய ஜனாதிபதிக்கும் அரசுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்” என அவர்கள் கூறினர்.
‘தினகரன்’ பொங்கல் விழா யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதில் பங்குகொண்டனர். இந்த விழாவையொட்டி மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்ப ட்டிருந்தது. எம். மோகன் ராஜின் அப்சராஸ் இசைக் குழுவினருடன் தென்னிந்தியக் கலைஞர்கள் பங்குபற்றினர். பிரபல பாடகர்களான ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்ரீராம், பொப் இசைப் பாடகர் ஏ.ஈ. மனோகரன், மாணிக்க விநாயகம், மாலதி, ரோபோ சங்கர், அரவிந்த் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
‘யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியதை என்றுமே எங்களால் மறக்க முடியாது’. ‘30 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி நள்ளிரவு வரை ஒரு இசை நிகழ்ச்சி நடத்த கிடைத்தது மறக்க முடியாத நினைவாகவே நாங்கள் பார்க்கிறோம்’ என மேற்படி கலைஞர்கள் கூறினர். “யாழ்ப்பாணத்திலு ள்ள தமிழ் மக்கள் கலையையும் கலைஞர்களையும் நன்கு ரசிப்பவர்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். என்றாலும், இங்கு வந்து மேடையில் ஏறியதும், மெய்சிலிர்த்துப் போனேன்’ என்றார் மூத்த கலைஞரான மாணிக்க விநாயகம்.
“இலங்கையில் பிறந்து வளர்ந்த நான் யாழ்ப்பாணம் உட்பட இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். யாழ்ப்பாண மக்கள் கலையை நன்கு ரசிப்பவர்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். எனினும் காலத்தின் சூழ்நிலை எங்களை 1983க்குப் பின்னர் விலக்கி வைத்தது. இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திய சமாதானத்தால் மீண்டும் கலை நிகழ்ச்சி ஏற்படுத்த கிடைத்த சந்தர்ப்பம் பெரும் பாக்கியமாகும் என்றார் தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த நமது பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ. ஈ. மனோகரன்.
“நள்ளிரவையும் தாண்டி பாடல்களை கலாரசனையுடன் ரசித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை என்றுமே மறக்க முடியாது. மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் வந்து மிகப் பிரமாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தத் தயாராக இருக்கிறோம்” என்றார் ஸ்ரீலேகா பார்த்தசாரதி.
தினகரன் பொங்கல் விழா, இசை நிகழ்ச்சியில் பங்குகொள்ள வந்திருந்த மேற்படி கலைஞர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜ, லேக்ஹவுஸ் நிறுவன நிதிப் பணிப்பாளர் சான் சண்முகநாதன், தினகரன் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
ஏ-9 வீதி முழுமையாகத் திறக்கப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மிகப் பெரிய இசை நிகழ்ச்சி இதுவாகும். இசை நிகழ்ச்சியில் பங்குகொண்ட மக்களின் வசதி கருதி யாழ். இ.போ. ச. பஸ் டிப்போ விசேட பஸ் சேவையை நடத்தியது. ஏ. ஈ. மனோகரனின் ‘சின்னமாமி’ பாடல் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றது. நிகழ்ச்சியில் சிங்களப் பாடல்களும் இடம்பெற்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment