அம்மா பகவான் சாயிபாபா எதிர்ப்புப் பிரசாரப் பாடல்
எனது ஊரான திருகோணமலையிலும் இங்கே கொழும்பிலும் இளைஞர்களைக் குறிவைத்து அதி வேகமாக ஒரு வியாதிபோல இந்த அம்மாபகவான் மதக்குழு பரவி வருகிறது. இளைஞர்களை மொத்தமாக மூளைச்சலவை செய்து அவர்களது பணத்தையும் சிந்திக்கும் ஆற்றலையும் இவ்வமைப்புச் சுரண்டி வருகிறது. கண்ணுக்கு முன்னால் நடக்கும் இந்த அநியாயத்தை சகித்துக்கொண்டு இருக்க முடியவில்லை.
பாசிச ஆட்சியைத் தான் எதிர்த்து ஒன்றும் செய்ய நாதியில்லை, ஆகக்குறைந்தது இந்த அநியாயத்தையாவது எதிர்த்து முடிந்ததைச்செய்வோம் என்று நண்பர்களோடு பல்வேறு செயற்பாடுகளைத் தொடக்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக, எந்த இளைஞர்களை இவ்வமைப்புக் குறிவைத்து விழுங்குகிறதோ, அந்த இளைஞர்கள் அதிகம் புழங்கும் இடங்களான இணையச் சமூக வலையமைப்புக்களில் நண்பர்கள் தொடர்ச்சியான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் முகமாக இப்பாடல் தயாரிக்கப்பட்டது.
அம்மா பகவான் பக்தர்களைக் கவரக்கூடிய மெட்டும் பாடலும் அவர்களுடைய பக்திப்பாடல்களைத்தவிர வேறெதுவாக இருக்கமுடியும்? எனவே அவர்களது பாடலொன்றின் மெட்டுக்கு இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.
(எனக்கு இசை தொழிலல்ல. சரியாகப் பாடவோ இசையமைக்கவோ வராது. இணையவழிப் பிரசார நோக்கத்துக்காக ஒரு பாடல் செய்ய வேண்டி இருந்தது. உடனடியாக எனக்கு இசைஞர்களின் உதவியைப்பெறும் வாய்ப்புக்களோ காசோ இல்லாததால் நானே செய்து முடிதேன். கேட்பதற்குக் கர்ண கடூரமாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.)
குரு என்கிறோம்
கல்கி இவர் என்கிறோம்
பரமாத்ம அவதாரம் இது என்கிறோம்
அவதாரம் நடமாடும் திருமண்ணிலே – அட
அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்?
பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே – பலர்
பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்?
எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு
வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான்
நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் – புத்தன்
தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன்
பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன்
பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம்
உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?
அம்மா பகவான்
-மு.மயூரன்-
1 விமர்சனங்கள்:
மிகவும் நல்ல முயற்சி. இப்படிப்பட்ட போலிகளை நம்பி பணத்தையும் நேரத்தையும் வீணாக்கி கடைசியில் கெட்டு குட்டிச்சுவராகும் எம் இளைய சமுதாயத்தைத் திருத்தி நல்வழிப் படுத்த அனைவரும் முன்வரவேண்டும்.
தொடரட்டும் இப்புனிதப் பணி!
இந்த இணைப்பையும் பாருங்கள்!!
http://vivikthan.blogspot.com/2009/12/face-book-part-5.html
-விவிக்தன்-
Post a Comment